இதுவரை: மந்திரீக தாய கட்டைகளிடம் தோற்று களங்கப் புகழடையும் பாண்டவர்களும் திரௌபதியும் பதின்மூன்று ஆண்டுகளுக்கு தங்கள் தேசத்தை விட்டு வெளியேற வேண்டியதாகிறது. தனக்கு நேர்ந்த அநீதியால் சீற்றமுறும் திரௌபதி, துச்சாதனனின் ரத்தத்தை பூசி கழுவும் வரை தன் கூந்தலை முடியமாட்டேன் என சபதமிடுகிறாள். இணையாக பீமன், துச்சாதனனின் ரத்தத்தை குடிப்பதாகவும், துரியோதனனின் தொடைகளை நொறுக்குவதாகவும் சபதமிடுகிறான். திரௌபதியிடம் கிருஷ்ணர், "சொர்க்கமே சீர் குலைந்தாலும், இமயம் சரிந்து தரைமட்டமானாலும், கடல்கள் இறந்தவனின் எலும்புகளாக காய்ந்து போனாலும், இந்த பூமித்தாய் தன்னையே தூள் தூளாக வெடித்துக் கொண்டாலும், நான் உனக்கு கொடுத்த வாக்கை காப்பேன். உனக்கு நிகழ்ந்த குற்றத்திற்கு பழி தீர்க்கும் விதமாக எல்லா போர்களையும் நிறுத்தும் வகையில் ஒரு யுத்தம் நிகழும்" என்று வாக்களிக்கிறார்.

சத்குரு: தாயம் விளையாடி முடித்ததும் பாண்டவர்கள் தங்கள் ராஜ்ஜியத்தை விட்டு வெளியேற வேண்டியதாகிறது. பரம்பரை சொத்தாக தங்களிடம் வந்து சேரந்ததை மட்டுமல்லாமல், அதுவரையில் தாங்கள் சேர்த்திருந்ததை, உருவாக்கியிருந்ததை என மொத்தமாக எல்லாவற்றையும் இழக்கிறார்கள் - வெறும் ஒன்றிரண்டு மணி நேரத்தில் - பெரும் போர் ஒன்றினாலோ, வேறெதோ காரணத்தினாலோ அவர்களது வாழ்க்கையில் ஏற்பட வேண்டியது, அசாதாரணமான ஒரு தாயக்கட்டையின் உருட்டலில் தடம் புரண்டு விட, வனவாசத்திற்கு அவர்கள் ஆயத்தமாகிறார்கள். ஒருவகையில், அதுவரை நிலவி வந்த நகர வாழ்வின் நாகரீகம் மற்றும் சௌகர்யங்களை இழந்து காட்டில் நிலவும் இயற்கையின் விதிமுறைக்கேற்ப தங்கள் வாழ்க்கை முறையை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. கானகத்தின் விதிமுறை ஒன்றுதான்: எது வலிமையானதோ, அது பிழைக்கும். எப்போதும் எல்லோரும் பேசும் வகுக்கப்பட்ட சரியான நெறிமுறைகளைப் பற்றி கேட்டுக்கொண்டே இருந்தவர்களின் வாழ்க்கை, வலிமையோடிருந்தால் பிழைக்கலாம் என்ற நிலைக்கு மாறுகிறது.

அவர்கள் காட்டுக்குள் செல்ல தயாரானதும், தங்களது அரச ஆடை அலங்காரங்களை துறந்து, ஒரு துறவிக்குரிய எளிய ஆடைகளை அணிகிறார்கள். ஹஸ்தினாபுர நகரை விட்டு அவர்கள் வெளியேறுகையில் மக்கள் வெள்ளமென திரண்டு கண்ணீர் சிந்தினார்கள். பெரும்பாலான மக்களுக்கு பாண்டவ சகோதரர்கள் மீது தனித்த ஒரு வாஞ்சை இருந்தாலும், ஐவரிலும் யுதிஷ்டிரன் மக்களின் அபிமானத்திற்கும், விருப்பத்திற்கும் உரியவனாக திகழ்ந்தான். ஏனென்றால் இதுவரை அவர்கள் பார்த்திராத அளவுக்கு நடுநிலையானவனாக, அனைவரையும் சமமாக பார்க்கும் அரசனாக யுதிஷ்டிரன் பெயர் பெற்றிருந்தான். எனவே பாண்டவர்களும் திரௌபதியும் நகரை நீங்கி வனவாசம் செல்கையில் மக்களில் பலரும் அவர்களுடனேயே சென்று காட்டில் வாழ கிளம்பினார்கள். நீங்கள் காட்டிற்குள் செல்கிறீர்கள் எனும்போது, உங்களுடன் மக்கள் பலரும் வருகிறார்கள் என்றால் அது உதவியாக இருக்காது, உபத்திரவமாகவே இருக்கும். இதை மக்களுக்கு புரிய வைத்து அவர்களை தடுத்து நிறுத்த‌ பெரும் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. பல மைல்கள் தூரத்திற்கு பாண்டவர்களை பின்தொடர்ந்து மக்கள் நடந்து வந்தனர். தங்கள் வாழ்க்கையில் சடங்குகளை நடத்தித்தரும் பொறுப்பேற்றிருந்த தௌம்யர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அந்தணர்கள் சுமார் பத்து பன்னிருவரைத் தவிர மற்ற அனைவரையும் பாண்டவர்கள் திருப்பி அனுப்பினார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
அனைவருமே கலக்கத்திலிருந்தார்கள் - யுதிஷ்டிரனைத் தவிர. வனப்பகுதியை சுற்றமுற்றும் பார்த்தபடி அப்படியே அந்த சூழ்நிலையை ரசிக்கத் துவங்கியிருந்தான் யுதிஷ்டிரன்.

அங்கிருந்து ஒரு நாள்‌ பயண தூரத்திலிருந்த காமாக்யா வனப்பகுதிக்கு பாண்டவர்கள் நகர்ந்தார்கள். அங்கு சென்று சேர்கையில் மாலைப் பொழுதாகவே அப்படியே ஒரு நதிக்கரையோரமாக தங்கினார்கள். அவர்களோடு பயணப்பட்டு உடன் வந்திருந்த பிராமணர்கள் குடும்பத்திற்கு ஆதரவான சடங்குகளையும் பிறவற்றையும் துவங்கினார்கள். யாரும் யாரிடமும் எதுவும் பேசவில்லை. அனைவருமே கலக்கத்திலிருந்தார்கள் - யுதிஷ்டிரனைத் தவிர. வனப்பகுதியை சுற்றமுற்றும் பார்த்தபடி அப்படியே அந்த சூழ்நிலையை ரசிக்கத் துவங்கியிருந்தான் யுதிஷ்டிரன். தங்களிடமிருந்த அனைத்தையும் இழந்து விட்டதில் மற்றவர்கள் சோக வயப்பட்டிருக்க, அங்கிருந்த பச்சை மணக்கும் காட்டு மரங்கள், எங்கிருந்தோ எழும் பறவைகளின் சிறு கீச்சு - எல்லாமே மிக அழகாக இருப்பதாக, அரண்மனையை விட மிக அழகாக இருப்பதாக தோன்றியது யுதிஷ்டிரனுக்கு. ஒவ்வொரு இடமாக பார்த்துக் கொண்டே சென்றதில் மெதுவாக அவனது முகத்திலும் ஒரு புன்னகைப் பூ அரும்பியிருந்தது. அவனது முகத்திலிருந்த புன்சிரிப்பை பார்த்து பீமனும், குறிப்பாக திரௌபதியும் தூண்டப்பட்டார்கள். ஏற்கனவே கோபத்திலிருந்த திரௌபதி, இப்போது அரண்மனையின் ஆடை அணிலகன்களை, சௌகர்யங்களை இழந்திருந்தாள். பொதுவாகவே, இது போன்ற பொருட்களின் மீது ஆணை விட ஒரு பெணே பெரிதும் சார்ந்திருப்பவளாக இருக்கிறாள், ஏனென்றால் அவள் அப்படித்தான் உருவாக்கப்பட்டிருக்கிறாள். ஒரு வீடு என்பது ஆண் தன்மையை விட பெண் தன்மைக்கு பெரிதும் முக்கியமானதாக இருக்கிறது. ஆணுக்கோ, ஒரு மரத்தின் கீழே கூட தூங்கிவிடலாம் என்று தோன்றும்.

திரௌபதி ஏற்கனவே துயரத்திலும், ஆவேசத்திலும், பழிவாங்கும் தாகத்தோடு துடித்துக் கொண்டிருந்தாள். பீமன் எப்போதும் அவளை எதிரொலிப்பவனாக இருந்தான். அவளுக்கு என்ன வேண்டுமென்றாலும் அது அவனது இலக்காக இருந்தது. மற்றவர்கள் அமைதியாக இருந்தார்கள். வாரக்கணக்கில் சகாதேவன் ஒரு வார்த்தையும் உச்சரிக்காமல் மௌனத்தில் இருந்தான். ஆனால் யுதிஷ்டிரனால் காட்டின் அழகை ரசித்து அனுபவிக்காமல் இருக்க முடியவில்லை. அடுத்த நாள் இன்னும் சற்று தூரம் காட்டுக்குள் சென்று தங்களுக்கான இருப்பிடத்தை அமைத்துக்கொள்ள முயற்சித்தார்கள். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அவர்களது கையிருப்பில் இருந்த தானியங்களும் உணவுப் பொருட்களும் தீர்ந்து போனது. ஷத்ரியர்களான அவர்களுக்கு ஒரு மானையோ, காட்டுப் பன்றியையோ வேட்டையாடி உண்பது எளிது தான், ஆனால் அவர்களுடன் வந்திருந்த பத்துக்கும் மேற்ப்பட்ட அந்தணர்களுக்கு உணவளிப்பது என்பது பெரும் சவாலாக இருந்தது. அவர்களுக்கு உணவளிக்க முடியவில்லை என்பதால் அவர்களை மீண்டும் நகரத்திற்கு சென்று விட கெஞ்சிக் கேட்டார்கள். குறிப்பாக திரௌபதி இதனால் பெரிதும் வலியடைந்தாள். அவர்கள் இந்திரபிரஸ்தத்தில் வாழ்ந்த போது மக்களுக்கு உணவளிப்பதையும், உணவு வழங்குவதையும் பெரிதும் விரும்பி செய்திருந்தாள். முடிந்த போதெல்லாம் நகருக்கு யார் வந்தாலும் அவர்களுக்கு உணவளித்து வந்திருந்தாள்.

இந்த கலாச்சாரத்தில், பண்டைய காலங்களில், நீங்கள் எங்கே செல்வதாக இருந்தாலும், அங்கே யாரோ ஒருவர் உங்களுக்கு உணவளிப்பார். உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை உண்ணலாம். நீங்கள் உணவகத்தை தேடிச் செல்ல வேண்டியிருந்ததில்லை. இன்றும்கூட பல கோவில்களில், குறிப்பாக தென்னிந்தியாவிலும், வட இந்தியாவின் சில கோவில்களிலும் கூட, எளிமையான, ஆனால் நல்ல உணவு கோவிலுக்கு யார் வந்தாலும் தினமும் வழங்கப்படுகிறது. உணவை மிக அடிப்படையானதாக, நீங்கள் யாருக்கும் மறுக்கக்கூடாது என்பதாக பார்த்தார்கள். எனவே திரௌபதி இந்த கலாச்சாரத்தை இந்திரபிரஸ்தத்தில் தொடர்ந்து கடைபிடித்து வந்தாள். ஆனால் இப்போது தங்களுக்கு உதவியாக வந்த பிராமணர்களுக்கு உணவளிக்க முடியவில்லை எனும்போது அவள்‌ மிகுந்த வேதனையடைந்தாள். அந்த நேரத்தில் அங்கு வந்த வியாச முனிவர் திரௌபதிடம் சூரிய கடவுளை வணங்க அறிவுறுத்தினார். ஏனென்றால், சூரியன் மூலமாக உணவை ஒருங்கிணைக்கும் ஒரு வாய்ப்பு இருந்தது.

முறையான சடங்குகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் பிறகு சூரிய கடவுள் தோன்ற, திரௌபதி, "நான் எனது ராஜ்ஜியத்தை திரும்ப கேட்கவில்லை. நான் அரசியாக இருந்தாலும், ஆடை அணிகலன்களோ வேறு பொருட்களையோ உங்களிடம் கேட்கவில்லை. நான் உங்களிடம் கேட்பது எல்லாம் எங்களிடம் விருந்தினர்களாக வரும் யாரும் பசியோடு திரும்பிச் செல்லக்கூடாது என்பதுதான். மக்கள் வந்தால், அவர்களுக்கு நாங்கள் வயிறார உணவளிக்க வேண்டும்" என்று வேண்டினாள். பாண்டவர்கள் என்பதற்காகவே அவர்களை பார்ப்பதற்கே மக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தார்கள். திரௌபதியிடம் ஒரு பாத்திரத்தை வழங்கிய சூரிய கடவுள், 'இந்த பாத்திரத்திலிருந்து‌ உங்களைத் தேடி யார் வந்தாலும் அவர்களுக்கு நீ விரும்பும் உணவை பரிமாறலாம். இந்த பாத்திரத்திலிருந்து எடுக்க எடுக்க உணவு வந்து கொண்டே இருக்கும். இதில் ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால், உணவை உண்ணும் கடைசி ஆளாக நீ இருக்க வேண்டும். நீ உணவை உண்டதும் பாத்திரத்திலிருந்து உணவு வருவது அப்போதைக்கு நின்றுவிடும். அடுத்த நாள் மீண்டும் உணவு வரத்துவங்கும்." என்றார்.

இந்த பாத்திரத்தால் ஆசிர்வதிக்கப்பட்ட பிறகு, அந்தணர்களுக்கும் மற்ற விருந்தினர்களுக்கும் உணவளிப்பது என்பது ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. மெதுவாக எல்லோருமே காட்டில் வாழும் வாழ்க்கையை‌ ரசிக்கத் துவங்கி இயற்கையோடு ஒரு பகுதியாக மாறத் துவங்கினார்கள். இயற்கையோடு இணைந்திருப்பதில் உள்ள சௌகர்யத்தையும் ஆனந்தத்தையும் உணர்வதற்கு வெவ்வேறு விதமான மனிதர்களுக்கு வெவ்வேறு கால அளவுகள் தேவைப்படுகிறது. மெதுவாக ஒவ்வொருவராக நிலைபெறத் துவங்கி, காட்டுக்குள் வாழ்வது, உணவு சேகரிக்க செல்வது, வாழிடத்தை சீரமைப்பது என அவரவரது செயல்களில் ரசித்து ஈடுபட துவங்கினார்கள். தேசத்தை நிர்வகிக்கும் சுமை, ஹஸ்தினாபுர அரண்மனை‌யின்‌ சூழ்ச்சிகள் பற்றிய சுமை, பங்காளிகளுடன் தொடரும் சச்சரவு என எந்த சுமையையும் சுமக்க வேண்டியதில்லை - வாழ்க்கை நன்றாகவே இருந்தது. வனப்பகுதியில் ஒரு அற்புதமான விடுமுறை கொண்டாட்டமாக வனவாச வாழ்க்கை அவர்களுக்கு மாறத் துவங்கியது.

காட்டின் வாழ்க்கை முறையில் பாண்டவர்கள் இலேசாகிக் கொண்டிருக்க, பல முனிவர்களும் சாதுக்களும் அவர்களை சந்திக்க வரத் துவங்கினார்கள். இப்போது அவர்களிடம் அள்ள அள்ளக் குறையாத உணவு இருந்ததால் யார் வந்தாலும் அனைவரையும் வரவேற்று உணவளிக்க முடிந்தது. முனிவர்களுடன் அளவளாவுவதிலும் அவர்களது ஞானத்தை அறிந்து கொள்வதிலும் பெருவிருப்பம் கொண்டிருந்தான் யுதிஷ்டிரன். இது வரை இப்படியொரு வாய்ப்பு அவனுக்கு கிடைக்காமலிருந்தது. சுமார் பதினைந்து - பதினாறு வயதில் ஹஸ்தினாபுரம் சென்றதிலிருந்து, போர்க் கருவிகளை‌ கையாள்வதிலும், நிர்வாக பயிற்சியில் ஈடுபடுவதிலுமே முழுக்கமுழுக்க ஈடுபட்டிருந்தான். அதன் பிறகு, அவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே தொடர்ந்து ஒரு பனிப்போர் இருந்தது. பிறகு புதிதாக ஒரு நகரை அவர்கள் நிர்மாணிக்க வேண்டியிருந்தது. இப்போது, காட்டில் வாழும் இந்த வாழ்கையை உண்மையாகவே ரசித்து அனுபவிக்க துவங்கியிருந்தான் யுதிஷ்டிரன். அவ்வளவு மகிழ்ச்சியாக அதுவரையில் யாரும் யுதிஷ்டிரனை பாரத்திருக்கவில்லை. நாட்கணக்கில், பகலிரவு என விருந்தினர்கள் மற்றும் முனிவர்களுடன் அமர்ந்திருந்து அவர்கள்‌ பேசுவதை கேட்பதிலும், அவர்களோடு கலந்துரையாடுவதிலும் ஈடுபட்டான். தாங்கள் எதனால் காட்டிற்கு வர நேர்ந்தது என்பதையும், இதற்கு பிறகு செய்ய வேண்டியது என்ன என்பதையும் கிட்டத்தட்ட மறந்தேவிட்டான் யுதிஷ்டிரன். அவர்கள் நாடு திரும்புவதற்கு இன்னும் பதின்மூன்று ஆண்டுகள் இருந்தாலும், மற்றவர்கள் யுதிஷ்டிரன் அளவுக்கதிகமாகவே தன்னை தளர்த்திக் கொள்கிறானோ என்று நினைத்து பயந்தார்கள். அந்த இடத்தில் வாழும்‌ ஆனந்தத்தை அளவுக்கதிகமாக ரசித்து அனுபவிக்க துவங்குகையில், ஒருவர் தான் அங்கே வந்ததற்கான உண்மையான நோக்கத்தையே முற்றிலும் கைவிட்டுவிடவும் கூடும்.

தானும் தன் கூட்டாளிகளும் சேர்ந்து அடைந்திருந்தவற்றில் மிக திருப்தியடைந்திருந்தான் துரியோதனன். ஆனால் பாண்டவர்களுக்குள் "இதென்ன கூத்து - இது நமது ராஜ்ஜியம். ஒரு தாயம் விளையாட்டில் தோற்றுவிட்டால் காட்டில் வாழ வேண்டுமா என்ன!?" என்ற மறுஎண்ணம் ஏதும் வந்துவிடுமோ என்று வருத்தமடைந்தான். எனவே பாண்டவர்களோடு பயணிக்க, அருகிலிருக்க, அங்கிருந்து துரியோதனனுக்கு தகவல் தெரிவிக்க உளவாளிகள் அனுப்பப்பட்டார்கள். "அவர்கள் எப்படியிருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? போதுமான அளவு சிரமப்படுகிறார்களா?" கடைசி கேள்வி மிக முக்கியமானதாக இருந்தது துரியோதனனுக்கு.

உளவாளிகளிடமிருந்து வனவாசத்தில் பாண்டவர்கள், குறிப்பாக யுதிஷ்டிரன் கானக வாழ்க்கையை மிகவும் ரசித்து அனுபவிக்கிறான் என்ற தகவல் வந்து சேர்ந்ததும் துரியோதனன் வருத்தமடைந்தான். "அவர்கள் ஆனந்தமாக இருக்கிறார்கள் என்றால் என்ன நடக்கிறது அங்கே? அவர்களது ராஜ்ஜியத்திற்காக பாஞ்சாலம் மற்றும் யாதவ சேனையை திரட்டிக் கொண்டு திரும்பி வருவார்களோ?" என்று நினைத்தான். எனவே இன்னும் சில உளவாளிகளை பாஞ்சால தேசத்திற்கும், துவாரகைக்கும் எதாவது கூட்டணி உருவாகிறதா என்று தகவலறிய அனுப்பினான். "அதிரடி தாக்குதல் ஏதும் நடத்துவார்களோ?" என்றும் எண்ணினான். ஏனென்றால் இப்போது எல்லா நெறிமுறைகளும் உடைக்கப்பட்டு விட்டதால் இப்போது தர்மத்தைப் பற்றிப் பேசுவார் எவருமில்லை.

உளவாளிகள் திரும்பி வந்து அப்படி கூட்டணியோ‌, அது போன்ற எதற்கான சுவடோ கூட தெரியவில்லை என்பதையும், பாண்டவர்கள் பதின்மூன்று ஆண்டுகள் வனவாசத்தில் ஈடுபடுவதை ஏற்றுக்கொண்டிருப்பதையும் தெரிவிக்க, சற்றே ஆசுவாசமானான் துரியோதனன். ஆனால் அவனுக்குள்‌, அவர்கள் காட்டிற்குள் அவ்வளவு ஆனந்தமாக இருக்க முடியுமென்றால், காட்டிற்குள்ளேயே அவர்களின் வாழ்க்கை முடிந்துவிட்டால் நன்றாகவே இருக்கும் என்று தோன்றியது. அதற்கு தன்னால் இயன்றதை செய்யவும் விரும்பினான் துரியோதனன்.

துரியோதனனும் கர்ணனும் உட்கார்ந்து பேசி ஒரு திட்டத்தை வகுத்தார்கள். பாண்டவர்கள் நிராயுதபாணிகளாக வனவாசம் மேற்கொள்ளும் அதே வனப்பகுதிக்கு வேட்டையாட‌ சென்று, அவர்களை வன விலங்குகளைப் போல் வேட்டையாடிவிடலாம் என்று நினைத்தார்கள். ஆனால் இதற்கு அவர்கள்‌ திருதராஷ்டிரனின் சம்மதத்தை பெற வேண்டியிருந்தது, கூடவே பீஷ்மரிடமும் அனுமதி‌ பெற வேண்டியிருந்தது. பீஷ்மருக்கும் விதுரருக்கும் காற்றுவாக்கில் இது பற்றி தெரியவந்ததும் திருதராஷ்டிரனிடம் "இதற்கு நீ சம்மதிக்கக் கூடாது. அவர்களுக்கு சொந்தமான அனைத்தையும் நாம் எடுத்துக்கொண்டு, அவர்களை எதுவுமற்றவர்களாக்கி காட்டுக்குள் அனுப்பிவிட்டோம். அவர்கள் அங்கேயாவது வாழட்டும். அங்கும் அவர்களை துரத்திக்கொண்டு செல்ல வேண்டியதில்லை" என்று எடுத்துக் கூறி அவன் மனதை மாற்ற முயற்சித்தார்கள். ஆனால் துரியோதனனும் கர்ணனும் வேட்டைக்கு செல்ல வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார்கள்.

தொடரும்...