சத்குரு: மகத தேச அரசனான ஜராசந்தன் கிருஷ்ணருக்கு நிரந்தர எதிரியாக இருந்தான். மதுரா நகரை ஜராசந்தன் எரித்ததால்தான் கிருஷ்ணர் துவாரகைக்கு இடம் மாறியிருந்தார். பாண்டவர்களின் ராஜசுய யாகத்தை சீர்குலைக்கும் விதமாகவும், தன்னை சக்கரவர்த்தியாக உயர்த்திக் கொள்ளவும் வேறொரு வகையான யாகத்தை - நூறு ஷத்ரிய அரசர்களை பலி கொடுக்கும் யாகத்தை நடத்தத் திட்டமிட்டான் ஜராசந்தன். ஏற்கனவே தொன்னூற்றி ஒன்பது அரசர்களை சிறைப்பிடித்திருந்த ஜராசந்தனுக்கு யாகத்தை நிகழ்த்த இன்னும் ஒரு ஷத்ரிய அரசனை சிறைப்பிடிக்க தேவையிருந்தது.

கிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம், "அந்த யாகம் நிகழ்ந்தால் ஒரே நேரத்தில் நூறு அரசர்கள் இறப்பார்கள், உனது ராஜசுய யாகமும் வெற்றி பெறாது. எப்படியும் ஜராசந்தன் உன்னை சக்கரவர்த்தியாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இப்போது நீ அவனை போரிட்டு வெல்லவும் முடியாது, ஏனென்றால் ஜராசந்தனின் படையுடன் போரிடுமளவிற்கு இன்னும் உன் படை பலமாகவில்லை. நாம் எந்த உபாயம் செய்தாவது அவனைக் கொல்ல வேண்டும். நான் அவனுக்கு தர வேண்டிய கடனாக அவனது மரணம் இருக்கிறது, அதை நிச்சயம் கொடுக்க வேண்டும். உனது ராஜசுய யாகம் வெற்றியடைய வேண்டுமென நீ விரும்பினால், ஜராசந்தனுக்கு நீ முடிவு கட்டவேண்டும்."

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஜராசந்தனின் பிரிந்த பிறப்பு

இப்போது கேள்வி என்னவென்றால், ஜராசந்தனை எப்படிக் கொல்வது? பலம் வாய்ந்த அரசனாகவும், வெல்ல முடியாத மனிதாகவும் அவன் இருந்தான். பீமன், அர்ஜுனன், கிருஷ்ணர் மூவரும் பிராமணர்களாக மாறுவேடமணிந்து மகத தேசம் சென்றனர். அன்றைய வழக்கப்படி, அவர்கள் பிராமணர்களாக இருந்தபடியால் நகரில் வரவேற்கப்பட்டனர். அவர்கள் அரசனை சந்திக்கவேண்டும் என்றனர். அரசன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தான்.

ஜராசந்தனின் தந்தையார், தனக்குப் பிறகு வாரிசு இல்லை என்பதால், ஒரு முனிவரிடம் சென்று ஆசி கேட்டார். ஒரு மாம்பழத்தை வழங்கிய முனிவர், "இந்த பழத்தை உன் மனைவியிடம் கொடு. உங்களுக்கு ஒரு மகன் பிறப்பான்" என்றார்.

அப்போது அவர்கள் ஜராசந்தனுடன் பீமன் மல்யுத்தம் செய்ய விரும்புவதாக கூறினார்கள். பெரும் மல்யுத்த வீரனாக அறியப்பட்டிருந்த ஜராசந்தனின் பிறப்பே அசாதாரணமான ஒன்றாக இருந்தது. ஜராசந்தனின் தந்தையார், தனக்குப் பிறகு வாரிசு இல்லை என்பதால், ஒரு முனிவரிடம் சென்று ஆசி கேட்டார். ஒரு மாம்பழத்தை வழங்கிய முனிவர், "இந்த பழத்தை உன் மனைவியிடம் கொடு. உங்களுக்கு ஒரு மகன் பிறப்பான்" என்றார். ஜராசந்தனின் தந்தைக்கு இரு மனைவிகள். இருவரையும் அவர் மிகவும் நேசித்ததால், திரும்பி வந்ததும் இருவரையும் ஒன்றாக சந்தித்தார். இருவரில் ஒருவருக்கு மட்டும் மாம்பழத்தை வழங்க விரும்பாமல், பழத்தை இரு துண்டுகளாக நறுக்கி மனைவியர் இருவருக்கும் தந்தார்.

பிரசவ காலத்தில், மனைவியர் இருவரும் ஆளுக்கு ஒரு பாதி குழந்தையை ஈன்றனர். இதைப் பார்த்ததும் அச்சமடைந்தார்கள். உடனடியாக இதை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று நினைத்தார்கள். ஏனென்றால், அரண்மனையில் இப்படி ஒரு கொடூரம் நடந்திருப்பது மக்களுக்கு தெரிய வேண்டாம் என்று எண்ணினார்கள். எனவே சிசுவின் இரு துண்டுகளையும் பணிப்பெண் மூலம் ரகசியமாக காட்டிற்குள் எடுத்துச் சென்று புதைத்துவிட ஏற்பாடு செய்தார்கள். காட்டிற்குள் சென்ற பணிப்பெண், இரு துண்டுகளையும் புதைப்பதற்கு பதிலாக, குழி தோண்ட சோம்பல் பட்டு, எப்படியும் வனவிலங்குகள் இதை உண்டுவிடும் என்று நினைத்து அப்படியே வீசியெறிந்தாள்.

நரமாமிசம் உண்ணும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஜரா எனும் பெண் அந்த வழியாக வர நேர்ந்தது. இரு மாமிசத் துண்டுகளை கண்டதும், அதை இன்னும் அடர்ந்த வனப் பகுதிக்குள் சென்று உண்ண நினைத்து, தனது ஆடையில் சுற்றி எடுத்துக்கொண்டு நடந்தாள். ஆனால், துணியில் சுற்றப்பட்டதுமே குழந்தையின் இரு உடல் துண்டுகளும் ஒன்றாக ஒட்டிக்கொள்ள, சட்டென குழந்தை அழத்துவங்கியது. இதுவரையில் இப்படி ஒரு மெல்லிய உயிர் வடிவை ஜரா பார்த்திருக்கவில்லை. ஆதரவின்றி கிடந்த சின்னஞ்சிறு சிசுவை தின்ன விடவில்லை ஜராவின் தாயுள்ளம். குழந்தையை நன்றாகப் பார்த்த ஜரா, இது அரண்மனையைச் சேர்ந்தது என்பதை உணர்ந்ததும் குழந்தையை‌ மீண்டும் அரசரிடம் சேர்ப்பிக்க ஒருவர் மூலம் அனுப்பி வைத்தாள்.

இரு சதைத்துண்டுகளாக சென்று அற்புதமான ஆண் குழந்தையாக வீட்டிற்கு திரும்பி வந்த தன் மகனைக் கண்டு மிகவும் மகிழ்ந்த அரசர், அந்த பழங்குடியினப் பெண் நினைவாக ஜராசந்தன் - ஜராவால் ஒன்றாக சேர்க்கப்பட்டவன் என பெயரிட்டார். ஜராசந்தன் பெரும் அரசனானான். ஆற்றல், திறன், வலிமை என எல்லாமும் நிறைந்தவனாகவும் இருந்தான். ஆனால் அவன் கிருஷ்ணரை வெறுத்தான், ஆகவே கதையில் அவன் தவறான பக்கத்தில் நின்றான்.

தொடரும்...