காய்த்த மரமே கல்லடி படும்!
"காய்த்த மரமே கல்லடி படும்!", "விடியா மூஞ்சி வேலைக்குப் போனால், வேலை கிடைத்தாலும், கூலி கிடைக்காது!" என்ற பழமொழிகளை தனக்கே உரிய பாணியில் விளக்குகிறார் சத்குரு.
"காய்த்த மரமே கல்லடி படும்!", "விடியா மூஞ்சி வேலைக்குப் போனால், வேலை கிடைத்தாலும், கூலி கிடைக்காது!" என்ற பழமொழிகளை தனக்கே உரிய பாணியில் விளக்குகிறார் சத்குரு.
சத்குரு:
"காய்த்த மரமே கல்லடி படும்!"
கனிகள் தொங்கும் மரத்தின் மீதுதான் கல்லெறியப்படும்.
மற்றவர்களைவிட இதை அதிகமாகவே அனுபவித்தவன் நான்.
அதற்காக மரம் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டுமா என்ன? கல்லடி படக்கூடாது என்பதற்காகக் கனிகள் கொடுக்காமல் இருக்க முடியுமா? அது வாழ்க்கையின் பேரிழப்பாக ஆகிவிடும். கல்லடி படுவதைவிட, கனி சுமப்பதுதான் முக்கியமானது.
கனியின் ருசியை அறிந்து கொண்டவர்கள் தானே, அக்கனிகளைத் தேடி வருகிறார்கள்? அதைத் தட்டிப் பறித்துவிட கற்களை வீசுகிறார்கள்? யாருக்கும் கொடுக்கப்படாமல் வீணாகிப் போகவா கனிகள் பிறந்தன?
Subscribe
கனி சுமக்கும் மரம் கற்களை மட்டும்தான் சந்திக்கிறது என்று ஏன் தவறாக மதிப்பிட வேண்டும்?
அந்த மரத்திற்குத்தான் தேனீக்கள் வரும்; பட்டாம்பூச்சிகள் வரும்; பறவைகள் வரும்; அணில்கள் வரும்; குழந்தைகள் வரும்; அந்த மரத்தைச் சுற்றித்தான் உயிர்ப்பு இருக்கும். காய்ந்து வீணான மரமாக இருந்தால், அதைத் தேடி யார் வரப் போகிறார்கள்?
கனி கொடுக்காத மரம் கற்களை சந்திக்காது; கோடலியை சந்திக்கும். ஆம்... பயனற்றுப் போனால், மொத்தமாக வெட்டுப்பட்டு சரியும்.
கனிகள் வேண்டி மரத்தடிக்கு வருபவர்கள், கற்களைத் தேடிக் குனியும்போது அங்கே கேட்காமலேயே கனிகள் கிடந்தால், கற்களை விட்டுவிட்டு கனிகளை அல்லவா அவர்கள் பொறுக்கி எடுப்பார்கள்?
உங்கள் மீது கல்லெறிய வருபவர்களுக்கு நீங்கள் கனிகளை முதலிலேயே வழங்கிவிடுங்கள், அவ்வளவுதானே?
"விடியா மூஞ்சி வேலைக்குப் போனால்,
வேலை கிடைத்தாலும், கூலி கிடைக்காது!"
விடியாமூஞ்சி என்றால், அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று நான் எடுத்துக்கொள்ளவில்லை. விடியாத முகம் என்றால், அங்கே ஒரு புன்னகைகூட விடியவில்லை என்றுதான் எடுத்துக் கொள்கிறேன்.
வாசனையுள்ள பூக்களைத் தேடித்தான் வண்டுகள் போகும். மலரவே மலராத முகத்தை ஒருவன் வைத்துக் கொண்டிருந்தால், அவனுக்கு உற்சாகம் என்றால் என்னவென்று தெரியாது என்றுதானே தீர்மானிப்பீர்கள்? உற்சாகமற்றவன் ஊக்கத்துடன் பணிபுரிவான் என்று எப்படி நம்பிக்கை வரும்? அவனுக்கு யார் வேலை கொடுப்பார்கள்? வேறு வழியின்றி வேலை கொடுத்தாலும், அவனை ஒரு பொருட்டாக மதித்து அடுத்த கட்டத்துக்கு உயர்த்த நினைப்பார்களா?
நாம் எல்லோருமே ஒரே காற்றைத்தான் சுவாசிக்கிறோம். ஆனால், என் மூச்சில் எனக்குக் கிடைக்கும் உயிர்வாயுவின் அளவும், உங்கள் மூச்சில் உங்களுக்குக் கிடைக்கும் அளவும் நாம் சுவாசிக்கும் திறனைப் பொறுத்து வேறுபடும்.
ஆனந்தமானவனுடன் இயங்க நூறுபேர் வருவார்கள். உற்சாகமற்ற சிடுமூஞ்சியுடன் இயங்க ஒருவர்கூட முன்வரமாட்டார்கள்.
உற்சாகம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் இப்படித்தான் ஏதோ ஒருவிதத்தில் ஓரம் கட்டப்படுகிறார்கள். சோகமாக இருப்பவர்களை மேற்கொண்டு சோகம்தான் தேடி வரும். அதனால்தான் அவர்களால் பெரிய அளவுக்கு முன்னேற முடியாமல் போகிறது.
இதற்கும் அதிர்ஷ்டத்துக்கும் முடிச்சு போடுவது தவறு.
வேலையோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாதீர்கள். வாழ்க்கையே அப்படித்தான். சந்தோஷமான முகத்துடன் உற்சாகமாக இருப்பவர்களுக்குத்தான் இந்த உலகம்.
குறிப்பு:
மேலும் பல தமிழ் பழமொழிகள் உண்மையில் சொல்ல வருவது என்ன? சத்குருவின் ஆழமான விளக்கத்தை இந்தப் பதிவின் மூலம் படித்து அறியுங்கள்!