குழந்தைகள்... சில உண்மைகள்! பகுதி 4

கடந்த வாரம், ஈஷா ஹோம் ஸ்கூலில் எந்தவிதமான கல்விமுறை கடைப்பிடிக்கப்படுகிறது என்பதைப் பார்த்தோம். பண்டைய குருகுலக் கல்விமுறையும் தற்போதைய கல்விமுறையும் எவ்வாறு வேறுபடுகிறது என்பதை இந்த வாரம் விளக்குகிறார் சத்குரு...

Question: சத்குரு, நீங்கள் ஈஷா ஹோம் ஸ்கூலைப் பற்றியும், கல்வியைப் பற்றியும் கூறியவை புதுமையானவை. மேலும், தற்போதுள்ள நடைமுறைக்கு ஏற்றவை. ஆனால் பண்டைக்கால பள்ளிக்கூடங்களும், பழைய குருகுலங்களும் மிகச்சிறந்த மனிதர்களை உருவாக்குவதில் திறமையற்று இருந்தனவா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

குருவின் அடிப்படை வேலையே, அவரது முக்கிய நோக்கமே, நீங்கள் எதையெல்லாம் உண்மையென்று நம்பி வைத்திருக்கிறீர்களோ, அவையனைத்தையும் அழிப்பது தான்.

பண்டைய குருகுலங்கள் முற்றிலும் ஈஷா ஹோம் ஸ்கூலைப் போலத்தான் இருந்தன. நான் பேசுவது போலத்தான் 100% குருகுலங்கள் இருந்தன. குருவின் அடிப்படை வேலையே, அவரது முக்கிய நோக்கமே, நீங்கள் எதையெல்லாம் உண்மையென்று நம்பி வைத்திருக்கிறீர்களோ, அவையனைத்தையும் அழிப்பது தான். ஆனால் இப்போதுள்ள கல்வியில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒரு மனிதன், சம்பாதிப்பதற்கு தன்னைத் தயார் செய்வது எப்படி? இவ்வுலகில் வாழ்வதற்கு தன்னைத் தயார் செய்வது எப்படி? என்பதுதான் அவை. எனவே நம்மிடம் இந்த இரண்டு சவால்களும் உள்ளன. பண்டைக்காலத்தில் குழந்தைக்கு திறமையை வளர்ப்பது எப்படியென, குரு அவனுக்கு கற்றுத்தர முயற்சிக்கவில்லை. ஏனெனில், உங்கள் தந்தை ஒரு செருப்புத் தைப்பவராக இருந்தால், இயல்பாகவே நீங்களும் செருப்புத் தைப்பவராகத்தான் இருப்பீர்கள். உங்கள் தந்தை ஒரு அரசராக இருந்தால், நீங்களும் அரசராவீர்கள். உங்கள் தந்தை எதுவாக இருக்கிறாரோ, நீங்களும் அவர் தொழிலையே மேற்கொள்வீர்கள். பண்டைக்காலங்களில் வாழ்வதற்கு வேறு விதங்களில் உங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு பரிமாணம் நோக்கியது அது. ஆனால் இப்போது அப்படியில்லை, இரண்டுமே நடந்தாக வேண்டும். நாம் குழந்தையை இந்த நவீன உலகில் வாழ்வதற்கு ஏற்ப தயார் செய்தாக வேண்டும். அதே நேரத்தில் புதுமை என்கிற பெயரில் நடக்கும் முட்டாள்தனத்திலும் அவன் சிக்கிப்போகக் கூடாது. எனவே பண்டைக்காலத்தில் இருந்ததை விட இப்பொழுது இது ஒரு பெரிய சவாலாக இருக்கிறது.

பண்டைக்காலத்தில், ஒருமுறை குருவிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டால், அவ்வளவுதான். பெற்றோர்கள் அவரது முழுப் பாதுகாப்பில் குழந்தையை விட்டு விடுவார்கள். இன்றுபோல் அதிகப்படியான தலையீடுகள் இல்லை, தெரியுமா? இப்பொழுது குழந்தையை முழுமையாய் விடுவதில்லை. தொடர்ந்து தலையிடவே விரும்புகிறார்கள். எனவே பண்டைய குருகுலங்களில் இருந்ததைவிட இப்போது அதிக சிக்கல்கள் உள்ளன.

அன்றைய குருகுலங்களில், எப்படி இருப்பது, எப்படி வாழ்வது, எப்படி மற்றவருடன் இருப்பது, எப்படி தன்னுடன் இருப்பது என்பது பற்றி மட்டும்தான் கற்றுக் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரு நவீன பல்கலைக்கழகத்திற்காக ஒருவரை தயார் செய்ய முயற்சிக்கவில்லை. அந்தக் காலக்கட்டத்தில் கல்வியில் ஆர்வமுள்ள, அதில் திறமை மிக்க ஒரு சில குழந்தைகள் மட்டுமே கல்விப் பயிற்சி பெற்றனர். மற்ற குழந்தைகள் எல்லாம் இயல்பாகவே தங்கள் தந்தையின் தொழில் எதுவாக இருந்தாலும் அதில் ஒன்றிவிடுவர். ஆனால் இப்பொழுது அப்படியில்லை. தந்தை ஒரு செருப்புத் தொழிலாளியாக இருந்தால் கூட, அவர் தன் மகன் ஒரு பேராசிரியராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். இதுதான் இன்றைய உலகின் தற்போதைய நிலை, இல்லையா?

அடுத்த வாரம்...

ஈஷா ஹோம் ஸ்கூல் ஆன்மீகம் சார்ந்ததா? எப்போது ஒரு குழந்தை தனக்கு தேவையானதை தானே தேர்வு செய்துகொள்ளும்? இதுபோன்ற கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது அடுத்த வாரப் பகுதி...

குழந்தைகள்... சில உண்மைகள்! தொடரின் பிற பதிவுகள்