தியானலிங்கம் - சத்குரு மூலம் பலித்த யோகி சுநீராவின் ஆரூடம்!
பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர், சுநீரா என்றொரு யோகி இருந்தார். சிவனிடம் நேரடி தீட்சை பெற்ற சப்தரிஷிகளுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர் இவர் என நம்பப்படுகிறது. தற்சமயம் நேபாள தேசத்தில் உள்ள ஒரு மலைத்தொடரில் மனிதர்களால் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க இயலாத ஒரு பிரம்மாண்ட திட்டத்தினை தீட்டிக் கொண்டிருந்தார்.
 
 

சத்குரு:

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர், சுநீரா என்றொரு யோகி இருந்தார். சிவனிடம் நேரடி தீட்சை பெற்ற சப்தரிஷிகளுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர் இவர் என நம்பப்படுகிறது. தற்சமயம் நேபாள தேசத்தில் உள்ள ஒரு மலைத்தொடரில் மனிதர்களால் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க இயலாத ஒரு பிரம்மாண்ட திட்டத்தினை தீட்டிக் கொண்டிருந்தார். அவர் ஈடுயிணையில்லா ஒரு குரு, ஆனால் தன் மீதே திருப்தி இல்லாமல் இருந்தார். பிழையில்லாத "உன்னத உயிர்" - அதை உருவாக்குவதுதான் சுநீராவின் அசாத்திய திட்டம்.

"நான் தொடங்கி இருக்கும் இந்தப் பணி நிச்சயம் நடந்தேறும். ஆனால், இப்போதல்ல, பல ஆயிரம் வருடங்களுக்கு பின், பசுமை போர்த்திய தென்னக மலைகளில் இது நடக்கும்," என தன் தீர்க்க தரிசனத்தை அறிவித்தார்.

மனிதகுலத்தை காக்க வருபவராய், இந்த உன்னத உயிர் இருக்க வேண்டுமென நினைத்தார். நாம் என்னென்ன குணங்களை எல்லாம் கற்பனை செய்ய முடியுமோ அத்தனை குணங்களையும் ஒரே உயிருக்குள் ஒருங்கிணைக்கும் தன் திட்டத்திற்கு மெல்ல செயல்வடிவம் கொடுக்கத் துவங்கினார் சுநீரா. ஏனெனில், ஆதியோகியை இரத்தமும் சதையுமாய் பார்த்த தலைமுறையை சேர்ந்தவரல்லவா! ஆதியோகியை கண்டவருக்கு அவரைப் போலவே ஒரு உயிர் நம்முடன் உலவ வேண்டும் என்ற ஆசை.

தன் வாழ்நாளினை இந்தத் திட்டத்திற்காகவே செலவு செய்தார் சுநீரா. ஆனால், தன் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் தன் கனவு நிறைவேறப் போவதில்லை என்பதை உணர்ந்தார், தன் கனவு பலிப்பதற்கான சாத்தியங்களை ஆரூடம் சொல்லிவிட்டு சென்றார். "நான் தொடங்கி இருக்கும் இந்தப் பணி நிச்சயம் நடந்தேறும். ஆனால், இப்போதல்ல, பல ஆயிரம் வருடங்களுக்கு பின், பசுமை போர்த்திய தென்னக மலைகளில் இது நடக்கும்," என தன் தீர்க்க தரிசனத்தை அறிவித்தார்.

இதனால், தலைமுறை தலைமுறையாய் பல யோகிகள் இந்தத் திட்டத்தை தங்கள் கைகளில் எடுத்து செயல்படுத்த துடித்தனர். சுநீராவின் இந்தத் திட்டம் குறித்த விழிப்புணர்வு யோகிகளிடம் எப்போதுமே இருந்து வருகிறது. கடந்த நூற்றாண்டில், இத்திட்டம் மறுமுறை உச்சத்தை எட்டியது.

அன்னி பெசன்ட், லீட்பீட்டர், மேடம் ப்ளாவட்ஸகி - இத்திட்டத்தை தங்கள் கைகளில் எடுத்தனர். இதை நிகழ்த்தியே தீருவோம் என்று உறுதிகொண்டனர். மந்திர-தந்திர வித்தைகளை பற்றிய தகவல்களை பிரம்மாண்ட அளவில் சேகரித்தனர். கடந்த சிலநூறு ஆண்டுகளை கணக்கில் கொள்ளும்போது, பாரம்பரிய வழியில் அல்லாது, இத்திட்டத்தை செயல்படுத்தும் பெருமுயற்சியில் இறங்கியவர்கள் இவர்கள். உன்னதமான அந்த உயிரை கண்டறிவதே அவர்களது நோக்கம். ஏதோ கொஞ்சம் வேலை நடந்தது, ஆனால் பணி முற்றுபெறவில்லை.

அவர்களிடம் அறிவு இருந்தது, தகவல்கள் இருந்தது, ஆனால் திட்டத்தை நிறைவேற்ற தேவையான திறன் இல்லை. அதனால், அந்த உன்னதமான உயிரை கண்டுபிடித்துவிட்டோம் என்று பிரகடனப்படுத்த சில செயல்களையும் செய்தனர். இருமுறை முயற்சித்தும் அது தோல்வியில் முடிந்தது.

அதே சமயத்தில், குறிப்பிட்ட சில யோகிகளும் இத்திட்டத்திற்கு உயிரூட்டும் முயற்சியில் இறங்கியிருந்தனர். அவர்களுக்கு சுநீராவின் நிறைவேறாத அந்தத் திட்டம் பற்றி தெரியும். முற்றிலும் வித்தியாசமான ஒரு புரிதலுடன் அவர்களும் இத்திட்டத்தை அணுகத் துவங்கினர். அதற்கு பலன் கிடைத்தது. உடலுடன் உலவும் "உன்னத உயிராய்" அல்லாமல், தியானலிங்க வடிவில் அத்திட்டம் தன் நிறைவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

மனித உடலிற்குள் அத்தனை பிரம்மாண்டமான சாத்தியத்தை கொண்டு வருவது சுலபமல்ல. அந்த மனிதன், அதனை தனக்குள் தக்கவைத்துக் கொள்ள அவனுக்குள் தேவையான வாய்மை குணம் மிக மிக அவசியம். நான் பலமுறை சொல்லி இருக்கிறேன், அப்படியொரு "உன்னதமான உயிர்" உருவாக்கத் தேவையான அத்தனை உட்பொருட்களும் தியானலிங்கத்தில் இருக்கின்றன. அந்த உயிருக்கு தேவையான மிகக் கச்சிதமான சக்தி உடல் தியானலிங்கத்திற்கு இருக்கிறது.

கோட்பாடு அளவில் நாம் தியானலிங்கத்திற்கு உடல் கொடுக்கலாம். இரத்தமும் சதையும் சேர்த்து அவரை நடக்கச் செய்யலாம். அவர் நடக்கத் துவங்கும்போது, அவருக்கு உணவு, உடை, உறக்கம் தேவைப்படும். உண்டதை வெளியேற்றும் தேவையும் உண்டாகும். நம்மைப் போலவே உறங்கி காலையில் எழுந்து கண்களை கசக்கி... மக்கள் அவர்மீது குறை கண்டுபிடித்து...!

இதோ... சுநீராவின் ஆரூடம் பலித்துவிட்டது. ஆனால், அவர் நினைத்தது போல் இல்லை. தியானலிங்கம் உருவாகி 15 ஆண்டுகளுக்கு பின், அவர் முன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம், இதுவொரு பாக்கியம். பல நிலைகளில் பார்த்தால் தியானலிங்கம், மிகச் சிறந்த குருவாய் இருக்கிறார். என்னைப் போல் அவர் உங்களை தொந்தரவு செய்வதில்லை. நீங்கள் அவருடன் இருந்தால், தன்னை முழுதாய் வழங்குவார். நீங்கள் விருப்பத்துடன் இல்லாவிட்டால், அவரும் அங்கு இருப்பதில்லை.

தியானலிங்கம் ஓர் உயிருள்ள குருவாக பெரும் சக்தி மையமாக ஞானத்திற்கும் விடுதலைக்கும் வழியாக விளங்குகிறார்.

‘‘தியானலிங்கத்தின் சக்தி வளையத்திற்குள் வரும்
அனைவருக்குமே விடுதலைக்கான ஆன்மீக விதை விதைக்கப்படுகிறது’’ -சத்குரு

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1