புத்திசாலிகளுக்கு வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியுமா?

இளைஞரும் உண்மையும் உரையாடலின்போது புத்திக்கூர்மைக்கும் சந்தோஷத்திற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஒரு மாணவர் சத்குருவிடம் கேட்கிறார். இதற்கு சத்குரு, புத்தியின் நுட்பமும் இன்பத்தின் பிற பரிமாணங்கள் குறித்தும் விளக்கி, சந்தோஷம் என நீங்கள் கருதுவதை அவர்கள் செய்யாததால் அவர்கள் வாழ்க்கையை அனுபவிக்காமலில்லை என்கிறார்.
Sadhguru plays chess in Russia | Do Intelligent People Know How to Have Fun?
 

கேள்வி : சத்குரு என்னுடைய பள்ளி நாட்களிலும் கல்லூரி நாட்களிலும் நிறைய புத்திக்கூர்மையான சக மாணவர்கள் தனியாகவே இருப்பதை கவனித்திருக்கிறேன். சாதாரணமாக சந்தோஷத்திற்காக நாங்கள் செய்யும் செயல்களில் அவர்கள் ஈடுபடுவதில்லை. அவர்கள் வெளியே செல்வதில்லை, பார்ட்டிக்குச் செல்வதில்லை, தங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் புத்திக்கூர்மைக்கும் சந்தோஷத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?

சத்குரு : வாழ்க்கையில் பல்வேறு விதமான இன்பங்கள் உள்ளன - பொருள் இன்பம், உடல் இன்பம், புத்திக்கூர்மையின் இன்பம், ஆழ்ந்த புத்திசாலித்தனத்தின் இன்பம், உணர்வுகளின் இன்பம், அதோடு உள்ளத்தின் பேரின்பம் உள்ளது. புத்திசாலித்தனத்தின் இன்பத்தை ரசிக்கும் ஒருவருக்கு, சந்தோஷமென நீங்கள் கருதும் பார்ட்டியும் வேறெதுவும் அர்த்தமற்றதாக இருக்கிறது, ஏனென்றால் அவர்கள் வேறு எதையோ ரசிக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் ஈடுபடும் இன்பங்கள் வேறுபடக்கூடும், வேறுபடவும் வேண்டும். அனைவரும் அதே செயல்களில் ஈடுபட்டால், அது முட்டாள்தனமான சமுதாயமாக இருக்கும்.

மற்ற உயிரினங்கள் அனைத்திற்கும், அவர்களுடைய உடல்தான் அவர்கள் வாழ்க்கையின் ஆதிக்கமான அம்சமாக இருக்கிறது. ஆனால் இங்கு நீங்கள் மனிதராக வந்துவிட்டால், உங்கள் உடல் உங்கள் வாழ்க்கையில் முன்னோடியாக இருப்பதில்லை. நீங்கள் 18 அல்லது 20 வயதாக இருக்கும்போது வேண்டுமானால் உடல்தான் பிரதானமென நினைக்கலாம், ஆனால் அப்படியில்லை என்று வெகுவிரைவில் உணர்வீர்கள். மனிதராக வந்துவிட்டால் அபாரமான புத்தியின் ஆற்றல் உங்களுக்கு இருக்கிறது. புத்தியின் பிற பரிமாணங்கள், உணர்வுகள் மற்றும் உள்ளம் பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது. சிலரால் பொருள்தன்மையை மட்டுமே ரசிக்கமுடியும். சிலரிடம் புத்தியின் நுட்பமும் இன்பத்தின் பிற பரிமாணங்களும் உள்ளது.

சந்தோஷம் என நீங்கள் கருதுவதை அவர்கள் செய்யாத ஒரே காரணத்தால் அவர்கள் வாழ்க்கையை அனுபவிக்கவில்லை என்று அர்த்தமில்லை. நீங்கள் சதுரங்கம் விளையாடுகிறீர்கள். இதை வேறொருவர், “எப்போதும் காய்களை நகர்த்திக்கொண்டே இருப்பது என்னவொரு அபத்தம்” என்று நினைக்கக்கூடும். நிச்சயமாக நிறைய பேர் அப்படி நினைக்கிறார்கள். ஆனால் ஒரு காயை அற்புதமாக நகர்த்துவதிலேயே உங்களுக்கு மிகத்தீவிரமான இன்பம் ஏற்படக்கூடும். எனவே ஒவ்வொருவரும் ஈடுபடும் இன்பங்கள் வேறுபடக்கூடும், வேறுபடவும் வேண்டும். அனைவரும் அதே செயல்களில் ஈடுபட்டால், அது முட்டாள்தனமான சமுதாயமாக இருக்கும்.

ஆசிரியர் குறிப்பு: சர்ச்சைக்குரிய சிந்தனையா, பேசினால் பிறர் தூற்றக்கூடிய விஷயம் பற்றி குழப்பமா, எவரும் பதில் சொல்ல விரும்பாததால் உங்களைத் துளைக்கும் கேள்வியா, கேட்பதற்கு இதுதான் நேரம்! சத்குருவிடம் நீங்கள் கேட்க விரும்புவதை UnplugWithSadhguru.org வலைதளத்தில் பதிந்திடுங்கள்!