அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி; ஓடிப் போனவனுக்கு ஒன்பதாமிடத்தில் குரு!
அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி; ஓடிப் போனவனுக்கு ஒன்பதாமிடத்தில் குரு - இந்த பழமொழி எந்த அளவிற்கு உண்மை? சத்குருவிடம் இதைப் பற்றி கேட்டபோது..
 
 

அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி; ஓடிப் போனவனுக்கு ஒன்பதாமிடத்தில் குரு - இந்த பழமொழி எந்த அளவிற்கு உண்மை? சத்குருவிடம் இதைப் பற்றி கேட்டபோது..

சத்குரு:

'பொறுப்பேற்றுக் கொண்டவர்களுக்கு துரதிர்ஷ்டம், துன்பங்களுக்கு ஆளாகிறார்கள். தட்டிக் கழித்துவிட்டுப் போனவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள். சுகமாயிருக்கிறார்கள்' என்பதுபோல இதைப் புரிந்து கொள்வது முற்றிலும் தவறு.

அயர்ந்து போய் அகப்பட்டவராக இருக்காதீர்கள். பல திசைகளில் உற்சாகத்துடன் ஓடத் தயாராக இருங்கள்.

துன்பமோ, ஆனந்தமோ, அது சூழ்நிலைகளை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதில்தான் முடிவாகிறது.

சனி, குரு என்று கிரகங்களை எதற்காக வம்புக்கு இழுக்க வேண்டும்? உங்களை மாற்றிக் கொள்ள நீங்களே தயாராக இல்லாதபோது பல நூறு லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிரகங்கள் எப்படி உங்களை மாற்றப் போகின்றன?

அகப்பட்டவன் என்று யாரைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்?

புதிய முயற்சிகள் செய்யத் துணிவின்றி, பாதுகாப்பு என்று கருதி இருக்கும் இடத்திலேயே அகப்பட்டுக் கொண்டவன் எந்த வளர்ச்சியும் காண்பதில்லை. செய்வதை விரும்பிச் செய்யாமல், தன்னை அதிர்ஷ்டமற்றவனாக நினைத்து, அயர்ச்சியுடன் செயலாற்றுபவன் மேல்நிலைக்குப் போவதில்லை. சூழ்நிலைகளால் சிறைப்பட்டு சிக்கிக் கொண்டவனுக்கு எந்த எதிர்காலமும் இல்லை.

மாறாக, ஓடிப்போனவன் யார்?

இருக்கும் இடத்திலேயே அகப்பட்டுக் கொள்ளாமல், துணிச்சலுடன் புதியனவற்றைத் தேடி வெளியே அடியெடுத்து வைப்பவன். அவன் புதிய அனுபவங்களைப் பெறும் அதிர்ஷ்டசாலியாகிறான்.

யார் மீதும் குற்றம் சுமத்தாமல், முழுப் பொறுப்புடன் அவன் செயலாற்றும்போது, உற்சாகமும், ஒளிவீசும் எதிர்காலமும் அவனோடு கைகோர்த்துக் கொள்கின்றன. விரும்பியதைப் பெறும் புத்திசாலித்தனமே அவனுடைய அதிர்ஷ்டமாகிறது.

எனவே...

அயர்ந்து போய் அகப்பட்டவராக இருக்காதீர்கள். பல திசைகளில் உற்சாகத்துடன் ஓடத் தயாராக இருங்கள்.

 
 
 
 
 
 
Login / to join the conversation1
 
 
2 வருடங்கள் 9 மாதங்கள் க்கு முன்னர்

இந்த பழமொழிக்கு உண்மையான பொருளை இப்போது தான் புரிந்து கொண்டோம் சத்குரு..மிக்க நன்றி