ஆதிசங்கரர் ஒரு அரசனின் இறந்துபோன உடலிற்குள் எப்படிப் புகுந்தார்?

கூடுவிட்டுக் கூடு பாய்வது சாத்தியம்தானா? அது எப்படி நிகழ்கிறது? ஆதிசங்கரர் ஒரு விவாதத்தை ஜெயிப்பதற்கு, இன்னொருவருடைய உடலுக்குள் புகுந்த ஒரு சம்பவத்தை சத்குரு அவர்கள் விவரிக்கின்றார்.
কীভাবে আদি শংকরাচার্য এক মৃত রাজার দেহে প্রবেশ করেছিলেন ?
 

கேள்வி: ஆதிசங்கரர் ஒரு அரசனின் உடலுக்குள் புகுந்ததுடன், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அதில் வசித்தார் என்று கூறப்படுகிறது. இது உண்மையிலேயே சாத்தியம்தானா? அப்படியென்றால், எப்படி சாத்தியம்? இப்படிப்பட்ட ஒரு வித்தையை எந்தவிதமான யோக ஆளுமை சாத்தியமாக்குகிறது?  

சத்குரு: ஆதிசங்கரர் விவாதத்தில் ஒருவரை வெற்றிகொண்டார். அதன்பிறகு, அந்த மனிதரின் மனைவியானவள் தொடர்ந்து விவாதத்தில் பங்கேற்றாள். ஆதிசங்கரர் தர்க்கத்தின் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருப்பவர் – அப்படிப்பட்ட ஒருவருடன் விவாதம் செய்யக்கூடாது. ஆனால் அந்தப்பெண் தானாகவே முன்வந்து விவாதத்தில் கலந்துகொண்டாள். அதற்கு அவள், ‘நீங்கள் என் கணவரைத் தோற்கடித்தீர்கள், ஆனால் அவர் முழுமையானவரல்ல. நாங்கள் இருவரும் சரிபாதியானவர்கள். ஆகவே, நீங்கள் என்னுடனும்கூட விவாதிக்கவேண்டும்,” என்று காரணம் கற்பித்தாள். இந்தத் தர்க்கத்தை நீங்கள் எப்படித் தோற்கடிக்க முடியும்? ஆகவே, அந்தப் பெண்ணுடன் விவாதங்கள் தொடர்ந்தன. இந்த விவாதத்தில் அவள் சங்கரரிடம் தோற்றுக்கொண்டிருப்பதை உணர்ந்ததால், அவள் மனித பாலுறவு குறித்த கேள்விகளை அவரிடம் கேட்கத் தொடங்கினாள். சங்கரர் தாம் அறிந்திருந்த அனைத்தையும் கூறினார். அப்போது அவள் மேலும் நுணுக்கமாகச் சென்று, “அனுபவத்தில் உங்களுக்கு என்ன தெரியும்?” என்று கேட்டாள். சங்கரர் ஒரு பிரம்மச்சாரி. இது அவரைத் தோற்கடிக்கும் தந்திரம் என்பதை அறிந்துகொண்டார். ஆகவே அவர், “எனக்கு ஒரு மாத அவகாசம் தேவை. ஒரு மாதம் கழித்து, நாம் விவாதத்தை நிறுத்திய இடத்திலிருந்து தொடங்குவோம்,” என்று கூறினார்.

பிறகு ஒரு குகைக்குள் சென்ற சங்கரர், தன் சீடர்களிடம், “என்ன நிகழ்ந்தாலும் இந்தக் குகைக்குள் யாரையும் அனுமதிக்காதீர்கள். ஏனென்றால் நான் எனது உடலைத் துறந்துவிட்டு, சிறிது காலத்திற்கு வேறொரு சாத்தியத்தைத் தேடப்போகிறேன்,” என்று கூறினார்.

உயிர் சக்திகள் அல்லது பிராண சக்திகள் ஐந்து பரிமாணங்களில் வெளிப்படுகின்றது: பிராணவாயு, சமானவாயு, அபானவாயு, உதானவாயு மற்றும் வியானவாயு ஆகியன. பிராணசக்தியின் இந்த ஐந்து பரிமாணங்களும் வெவ்வேறு செயல்பாடுகளைக் கொண்டுள்ளன. பிராணவாயுவானது சுவாசச் செயல்பாடு, எண்ணவோட்டம் மற்றும் தொடு உணர்வு ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்கிறது. ஒருவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்பதை எப்படிப் பரிசோதிக்கிறீர்கள்? அவரது சுவாசம் நின்றுபோயிருந்தால் அவர் இறந்துவிட்டார் என்று கூறுகிறீர்கள். பிராணவாயு வெளியேறத் தொடங்கிவிட்ட காரணத்தால், சுவாசம் நின்றுபோயுள்ளது. பிராணவாயு முழுவதுமாக வெளியேறுவதற்கு ஒன்றரை மணி நேரம் வரை எடுத்துக்கொள்ளும்.

இந்தக் காரணத்தினால்தான், சுவாசம் நின்றபிறகு ஒருவரை எரியூட்டுவதற்கு முன்பு குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரங்கள் காத்திருக்கவேண்டும் என்ற பாரம்பரியம் அமைக்கப்பட்டது – ஏனென்றால், பல்வேறு பிற அம்சங்களில் அவர் இன்னமும் உயிருடன் இருக்கிறார். ஒன்றரை மணி நேரங்கள் நாம் காத்திருப்பதால், அவரது எண்ணத்தின் செயல்பாடு, அவருடைய சுவாச செயல்பாடு மற்றும் அவரின் உணர்வுகள் மறைந்துவிடும் காரணத்தால், அவர் எரியூட்டலை உணரமாட்டார். இப்போதும் பிராணசக்தியின் மீதமுள்ள பகுதி இன்னமும் அங்கே இருக்கும். பிராணசக்தியின் கடைசி பரிமாணமாகிய வியானவாயு பன்னிரண்டிலிருந்து பதினான்கு தினங்கள் வரை நீடித்திருக்கக்கூடும். உடல் அழிந்துவிடாமல் பாதுகாப்பாகவும், சிதையாமலும் இருப்பதில், பெருமளவுக்கு வியானவாயுவின் செயல்பாடு காரணமாக இருக்கிறது. ஆகவே, சங்கரர் தனது உடலைத் துறந்தபோது, அவரது உடல் பாதுகாக்கப்படுவதற்காக, தனது வியான வாயுவை உடலிலேயே விட்டுச் சென்றார்.

ஒரு அரசர் கருநாகத்தினால் கடிக்கப்பட்டு இறந்துவிட்டார். கருநாகத்தின் விஷம் உடலில் ஏறியதும், இரத்தமானது இறுகத்தொடங்குவதுடன் மூச்சு விடுவது கடினமாகிவிடுகிறது. ஏனென்றால், இரத்த ஓட்டம் தடைபடும்போது, சுவாசிப்பது கடினமாகிறது. உடலிலிருந்து பிராணவாயு வெளியேறுவதற்கு மிகவும் முன்னதாகவே சுவாசம் நின்றுவிடும். பல வழிகளிலும், அந்த உடலுக்குள் நுழைவதற்கு விரும்பும் ஒருவருக்கு இது ஒரு நல்ல நிலை. இதற்கு சாதாரணமாக, ஒரு உடல் ஒன்றரை மணி நேர அவகாசம் மட்டுமே அளிக்கும். ஆனால் அந்த நபருடைய உடலில் கருநாகத்தின் விஷம் ஏறியிருந்தால், அது நான்கரை மணி நேர அவகாசம் அளிக்கும்.

சங்கரருக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததில் அவர் மிகவும் எளிதாக அரசரின் உடலில் புகுந்தார். விவாதத்தின்போது அப்பெண்மணி கேட்ட கேள்விகளுக்கு அனுபவபூர்வமாகப் பதிலளிக்கும் வகையில் அவர் அதற்கான செயல்முறைகளில் ஈடுபட்டார். அந்த அரசரின் நெருங்கிய வட்டத்தினருள் சில மதியூகிகள் இருந்தனர். இறந்துபோனதாக அவர்களால் அறிவிக்கப்பட்ட ஒரு மனிதர் திடீரென்று சக்தி நிரம்பியவராக எழுந்து உட்கார்ந்ததை அவர்கள் பார்த்தபோது, அவருடைய நடவடிக்கைகளால் அது பழைய நபர் இல்லை, ஆனால் அதே உடலில் வேறு யாரோ ஒருவர் இருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது. ஆகவே அவர்கள் நகரமெங்கும் வீரர்களை அனுப்பி, எங்கெல்லாம் இறந்த உடல் கிடப்பதை அவர்கள் பார்த்தாலும், அவற்றை உடனடியாக எரிக்குமாறு கூறினார்கள். ஏனென்றால், அரசரின் உடலுக்குள் வந்திருக்கும் நபரின் உடல் எரிக்கப்படும்பட்சத்தில், இவரால் அரசரின் உடலை விட்டுத் திரும்பிச் செல்லமுடியாது. இப்போது அரசர் உயிர் பெற்றுவிட்ட காரணத்தால் – வேறு ஒரு நபர்தான், ஆனாலும் அவர் அரசராகவே தோன்றுகிறார், அதனால் என்ன? என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் அவர்களது திட்டம் வெற்றிபெறவில்லை. சங்கரர் திரும்பிச் சென்றுவிட்டார்.

ஆகவே இப்படிப்பட்ட ஒரு விஷயம் சாத்தியம்தானா? ஆமாம், மிக சாத்தியம்தான். அது ஒரு வித்தையா? அது உண்மையில் அவ்வளவு பெரிய வித்தை அல்ல. உங்களுக்குள் உயிர் எப்படி நிகழ்கிறது என்ற தொழில்நுட்பம் குறித்த சிறிதளவு புரிதல் மட்டுமே அதற்குத் தேவைப்படுகிறது. உயிருடன் இருக்கும் யாரோ ஒருவருடைய உடலுக்குள் செல்ல ஒருவர் விரும்பினால், அதற்கு மிக அதிகளவு திறன் தேவைப்படும். ஆனால், அப்போதுதான் வெளியேறியிருக்கும் ஒருவரது உடலுக்குள் நுழைவது மிகவும் எளிமையான ஒன்று. முதல் ஒன்றரை மணி நேரத்துக்குள் நுழைவது என்பது மிகச் சரியானது. ஏனென்றால், அதற்குத் தேவையான வெற்றிடம் அந்த உடலில் நிகழ்ந்திருக்கிறது. அதேநேரத்தில் மற்ற பரிமாணங்களும் உயிர்ப்புடன் இருக்கின்றன. இந்தக் காரணத்தினால்தான் இந்தியாவில், யாருடைய சுவாசமாவது குறையத் தொடங்கினாலும், அந்த நபரை வீட்டிற்கு வெளியில் கிடத்திவிடுவார்கள். சாம்பிராணிப் புகை இடுவதுடன் ஏதோ ஒரு உட்சாடணையும் செய்வார்கள். இது பிரிந்து சென்றுகொண்டிருப்பவரை ஆற்றுப்படுத்தவும், மேலும் யாரோ வேறொருவர் இந்த உடலை ஆக்கிரமிக்காமல் இருப்பதற்காகவும் செய்யப்படுகிறது.

ஆகவே, இப்படிப்பட்ட விஷயங்கள் நிகழாமல் இருப்பதற்காக பல வழிமுறைகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் உருவாக்கப்பட்டன. ஆனால், இன்றைக்கு அதனை ஒரு வித்தை என்று இப்போது மக்கள் குறிப்பிடும்படி, அது ஒரு மிக அரிய நிகழ்வாக ஆகிவிட்டது.

 

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1