ஆதி சங்கரர், அறிவில் மலைபோலவும், மொழித்திறனில் அதிமேதாவியாகவும், அனைத்திற்கும் மேலாக, ஆன்மீக ஒளியாகவும், இந்தியாவின் பெருமையாகவும் விளங்கியவர். மிகச் சிறிய வயதிலிருந்தே அவர் காட்டிய விவேகத்திலும் அறிவிலும், அவர் மனிதகுலத்திற்கு பிரகாசமான ஒளி விளக்காக இருந்தார். இப்படியொரு மகத்தான மனிதரை எப்படி உருவாக்குவது? தன் வாழ்நாளில் மிகக்குறுகிய காலகட்டத்தில், அவர் தேசத்தின் குறுக்கும் நெடுக்கும் நடந்தே பயணித்தார். இந்தியாவின் தென்முனையிலிருந்து தேசத்தின் மையப்பகுதிக்கு நடந்தார், பிறகு வடதிசையில் சிறிது தூரம் சென்றார், பிறகு கிழக்கும் மேற்கும் சென்றார். இப்படிப்பட்ட சக்தியும், துடிப்பும், விவேகமும் எங்கிருந்து வந்தது? இதை குறிப்பால் உணர்த்தும் ஒரு முக்கிய அம்சம் இருக்கிறது, இன்று ஒரு சிறு ஊராக இருக்கும் 'காலடி' எனும் கிராமத்திலிருந்துதான் சங்கரர் வந்தார். "காலடி" என்பதன் அர்த்தம் உங்களுக்கு தெரிந்ததுதான். தெற்கில் நாம் பாரதத்தாயின் காலடியில்தான் என்றும் இருக்கிறோம், இது பலவிதங்களில் நமக்கு பலன்கள் தந்துள்ளது.

மஹாபாரதத்தில் வரும் இந்த அழகிய கதையை, உங்களில் பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கக்கூடும். அர்ஜுனனும் துரியோதனனும் குருக்ஷேத்திரப் போருக்கு கிருஷ்ணனின் உதவியை நாடிச் சென்றபோது, ஒருவர் கிருஷ்ணரின் தலைமாட்டில் அமர்ந்தார், இன்னொருவர் அவரின் காலடியில் அமர்ந்தார். அதுதான் போரின் போக்கையே முடிவுசெய்தது. ஒரு மதிய வேளையில், கிருஷ்ணனின் காலடியில் நின்றபோதுதான் அர்ஜுனர் போரில் வெற்றிபெற்றார். இதுதான் நம் தேசம் மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படைத்தன்மை, நாம் எல்லாவற்றுக்கும் தலைவணங்குவதால் உயர்கிறோம். நாம் பிறரை நெட்டித்தள்ளி முன்னுக்குச் செல்வதால் உயர்வதில்லை, நாம் தலைவணங்குவதால் உயர்கிறோம்.

பாரதம் என்றாலே, தெய்வீகத்தின் காலடியில் எப்படி இருப்பது என்று நாம் எப்போதும் கற்றுக்கொண்டோம். இது மிகுதியான ஆடம்பரத்தால் ஆர்ப்பரிக்கும் கலாச்சாரமல்ல, இயற்கையாகவே பக்தி நிறைந்த கலாச்சாரம். கடவுளாக இருந்தாலும், ஆண், பெண், குழந்தை, விலங்கு, மரம், பாறை என்று எதுவாக இருந்தாலும், நாம் எல்லாவற்றுக்கும் தலைவணங்கக் கற்றுக்கொண்டோம். இந்த ஒரு அம்சத்தை வைத்துக்கொண்டு நம்மால் அற்புதமான உயிர்களை உருவாக்க முடிந்தது. தெய்வீகத்தின் காலடியில் இருந்ததன் மூலம் நாம் கற்றோம், பரிணமித்து வளர்ந்தோம், மலர்ந்தோம், நீண்ட காலத்திற்கு உலகிற்கான கலங்கரை விளக்காகவும் ஒளிவீசினோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ஆதிசங்கரர் இதை சொல்வதற்கு முன்பே, ஆதியோகியில் துவங்கி, பல யோகிகள், ரிஷிகள், மற்றும் முனிவர்கள் இதைத்தான் பலவிதங்களில் கூறினார்கள். சங்கரரை தனித்துவமாக எடுத்துக்காட்டியிருப்பது, அவர் அறிவார்ந்த தெளிவுடன் இதை வெளிப்படுத்திய விதமும், தேசம் முழுவதும் உற்சாகத்துடனும் சக்தியாகவும் இதை பரப்பிய விதமும்தான். இன்றைய உலகில் மிக முக்கியத்துவமானதாய் விளங்கும் ஒரு அம்சம், இந்த ஞானம் முழுவதும் விசுவாசத்தாலோ நம்பிக்கையாலோ வரவில்லை, அனுபவத்தில் உணர்ந்ததால் வந்தது என்பதுதான். ஆன்மீக செயல்முறை என்பது, அடிப்படையான மனித தர்க்கத்திற்கும் தற்கால அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் ஏதோவொரு விதத்தில் ஒத்திசைவாக இல்லாவிட்டால், மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள். தர்க்கரீதியாக அர்த்தமுள்ளதாகத் தோன்றாத எதையும், அறிவியல்பூர்வமாக சரியாக இல்லாத எதையும், எதிர்கால தலைமுறையினர் நிராகரித்து விடுவார்கள்.

இந்த அர்த்தத்தில், சங்கரர் கூறியது இன்றும் மகத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது. அவர் சொன்னது இன்று சற்று தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. இதில் ஒரு விஷயத்தையாவது அவருக்காக நாம் தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம். இன்று நிறைய மக்கள், "அவர் 'எல்லாம் மாயை' என்று சொன்னது அபத்தம். மாயை என்றால் எதுவுமில்லையா?" என்கிறார்கள். மக்கள் எல்லாவற்றையும் (தவறாக) கிரகித்துக்கொள்ளும் விதம்தான் மாயை, மாயை என்றால் எதுவும் இல்லை என்றில்லை. மாயை என்றால் தவறாகப் புரிந்துகொள்வது, அதாவது உள்ளதை உள்ளபடி நீங்கள் பார்க்கவில்லை. நீங்கள் திடப்பொருளாக இருப்பதாய்க் கருதும் இந்த உடலுடன் இருக்கிறீர்கள். ஆனால் உண்ணும் உணவாலும், பருகும் தண்ணீராலும், சுவாசிக்கும் காற்றாலும், உங்கள் உடலின் செல்கள் தினசரியளவில் மாற்றப்படுகின்றன. செல்களின் தன்மையைப் பொறுத்து, சிலநாட்கள் முதல் சிலவருட காலத்தில், உங்கள் உடலின் திசுக்களும் உறுப்புகளும் முழுவதும் புதுப்பிக்கப்படுகின்றன. இதற்கு அர்த்தம் என்னவென்றால், சிலகாலத்திற்குப் பிறகு, உங்களிடம் முற்றிலும் புதியதொரு உடல் இருக்கும். ஆனால் உங்கள் அனுபவத்தில் இது அதே உடல்போலத் தெரிகிறது - இதுதான் மாயை.

அதேபோல, பிரபஞ்சத்தை நீங்கள் கிரகித்துக்கொள்ளும் விதம், உலகை உங்கள் ஐம்புலன்கள் மூலம் உள்வாங்கிக்கொள்ளும் விதம், இவை முற்றிலும் தவறுதலாய் இருக்கின்றன - இதுதான் மாயை. இது கானல்நீர் போன்றது. நீங்கள் நெடுஞ்சாலையில் வண்டி ஓட்டிச்சென்றால், சிலசமயம் தூரத்தில் தண்ணீர் தெரிவதுபோலத் தெரியும். ஆனால் அருகில் சென்றால் தண்ணீரின் சுவடே இருக்காது. அப்படியானால் அங்கு ஆரம்பத்திலிருந்தே எதுவும் இருக்கவில்லை என்று அர்த்தமில்லை. ஒளிக்கதிர்களின் ஒளிவிலகல் நடந்ததால் இந்த மாயையான தோற்றம் உருவாகியுள்ளது. அதாவது ஒன்று, வேறொன்றாகத் தெரிகிறது. "நான்" என்று நீங்கள் நினைப்பது எல்லாமாகவும் இருக்கிறது, இதுதான் மாயை. "மற்றொன்று" என்று நீங்கள் நினைப்பதும் உண்மையில் நீங்கள்தான். எல்லாம் என்று நீங்கள் நினைப்பது ஒன்றுமில்லாததாகவும் இருக்கிறது. சங்கரர் குறிப்பிடுவது இந்த மாயையைப் பற்றித்தான். மனித உடலமைப்பை அறிவதன்மூலம், ஒருவர் பிரபஞ்சம் முழுவதையும் அறிந்துகொள்ள முடியும் என்றும் சங்கரர் கூறினார். பிரபஞ்சம் முழுவதும் ஒரே சக்திதான் என்று நவீன இயற்பியல் இன்று சொல்கிறது. அதேபோல, சங்கரர், படைப்பும் படைத்தவனும் ஒன்றுதான் என்றார். இன்று நெடுங்காலத்திற்குப் பிறகு, சங்கரரும் அவருக்கு முந்தைய முனிவர்கள் பலரும் தெள்ளத் தெளிவாக பறைசாற்றிய விஷயங்களுக்கு இணையாக நவீன அறிவியல் வந்துள்ளது.

இந்த ஆன்மீக அறிவு, மலைகளிலிருந்து நகரங்களுக்கும், ஊருக்குள்ளும், கிராமங்களுக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் மனங்களுக்கும் இதயங்களுக்கும் வரவேண்டும். நமக்கு அளப்பரிய நன்மைகளைத் தந்துள்ள இந்த கலாச்சாரம், பக்தி மற்றும் பணிவு உணர்வை நாம் திரும்பக் கொண்டுவரும் நேரம் வந்துவிட்டது - நாம் தலைவணங்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் நம் பலமாக இருந்துள்ளது, இதுதான் நம் வழியாக இருந்துள்ளது, நம் பரிணாம வளர்ச்சிக்கும் உணர்தலுக்கும் இதுதான் வழிமுறையாக இருந்துள்ளது. இதுதான் மிகப்பெரிய பொக்கிஷமாக இருக்கப்போகிறது - இதுதான் நம் தேசத்தின் எதிர்காலமாக இருக்கப்போகிறது. இந்த ஒரு விஷயத்தை நாம் செய்தால், உலகம் முழுவதும் நம் வழிகாட்டுதலை நாடிவரும். இந்த தேசத்திலும், உலகிலும், சங்கரரின் உத்வேகத்திற்கு நாம் மீண்டும் ஒளியேற்றுவோம். 

அன்பும் அருளும்,