"மூல நட்சத்திரப் பெண்ணா? வேண்டவே வேண்டாம்! மூல நட்சத்திரம் உள்ள பெண்ணை திருமணம் செய்தால் மணமகன் தன் தாயையோ, தந்தையையோ இழக்க நேரிடும்." என்று நட்சத்திரத்தைப் பார்த்ததுமே அவர்களின் ஜாதகத்தை ஒதுக்கித் தள்ளும் வேதனையான பழக்கம் இன்றும் தொடர்கிறது. ஆண்டாண்டு காலமாக மக்கள் மத்தியில் நிலவிவரும் தவறான நம்பிக்கைகளில் இதுவும் ஒன்றுதான். இதைப் பற்றிய சத்குருவின் பார்வை இங்கே...

சத்குரு:

ஆண் மூலம் அரசாண்டு விட்டுப் போகட்டும். எதற்காகப் பெண் மூலம் நிர்மூலமாக வேண்டும்?

எதையாவது சொல்லி வைக்கலாம் என்று பொறுப்பில்லாமல், நட்சத்திரங்கள் பற்றி ஏதேதோ சொல்லி வைத்திருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர், தன்னைத் தாழ்வாக உணர வழி வகுக்கும். இது போன்ற பிதற்றல்களில் எந்த உண்மையும் இல்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
மூலம் என்றால் அடிப்படை; மூலம் என்றால் அஸ்திவாரம். மூலத்தில் பிறந்த பெண்கள் உங்கள் வாழ்க்கைக்கு வேர் போன்றவர்கள்.

ஜோசியர்கள் கணக்குப்படி, இருபத்தேழு நாட்களுக்கு ஒருமுறை மூல நட்சத்திரம் வருகிறது. இதுவரை எத்தனைக் கோடிமுறை வந்திருக்கும்? அந்த நாளில் உலகெங்கும் எத்தனை கோடி பெண்கள் பிறந்திருப்பார்கள்? அவர்களால் நிர்மூலம் என்றால், எத்தனைக் கோடி தடவை இந்த உலகம் அழிந்திருக்க வேண்டும்?

இம்மாதிரியான அறிவிப்புகள் பெண்களை மட்டுமல்ல; மனித குலத்தையே கேவலப்படுத்துவதாக இருக்கிறது. இப்படிப்பட்ட வாசகங்களைச் சொல்லிக் கொண்டு அலையும் ஜோசியர்களைப் பிடித்து சிறையில் அடைப்பதற்கு சட்டமே எழுத வேண்டும்.

எந்த நாளில் பிறந்தால் என்ன? எந்த நாட்டில் பிறந்தால் என்ன? வாழ்க்கையை எப்படி புத்திசாலித்தனமாக மேம்படுத்திக் கொள்வது என்று திட்டமிட்டால், எந்த நட்சத்திரமும் ஒன்றும் செய்யாது.

வேறு நட்சத்திரத்தில் பிறந்து, திறமையற்றவராக இருப்பவரைவிட மூல நட்சத்திரத்தில் பிறந்து, திறமை கொண்டவராக இருப்பவருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம்.

என்னைக் கேட்டால், மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணைத் தேடி திருமணம் செய்யுங்கள் என்பேன். அவளால் உங்கள் அர்த்தமற்ற மூட நம்பிக்கை நிர்மூலமாகட்டும்; அறிவீனம் அழிந்து போகட்டும்.

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். மூலம் என்றால் அடிப்படை; மூலம் என்றால் அஸ்திவாரம். மூலத்தில் பிறந்த பெண்கள் உங்கள் வாழ்க்கைக்கு வேர் போன்றவர்கள்.

குறிப்பு:

மேலும் பல தமிழ் பழமொழிகள் உண்மையில் சொல்ல வருவது என்ன? சத்குருவின் ஆழமான விளக்கத்தை இந்தப் பதிவின் மூலம் படித்து அறியுங்கள்!