#1 நன்றி தெரிவிக்கும் ஒரு வலிமையான எண்ணத்தை உருவாக்குங்கள்

சத்குரு: நமது தேசத்தில் எப்போதுமே, பாராட்டத் தகுதியான மக்களை அங்கீகரிக்கும் திறன் நமக்குக் குறைவாக இருப்பதாகவே நான் எண்ணுகிறேன். துரதிருஷ்டவசமாக, விமர்சனத்தாலேயே எல்லாவற்றுக்கும் தீர்வு கண்டுவிட முடியும் என்று எண்ணுகிறோம். இந்த என்ணம் மாறவேண்டும். மனிதர்கள் செய்யும் அற்புதமான விஷயங்களை நாம் பாராட்டவேண்டும்.

ஒரு பேருந்தில் ஏறும்போது, எத்தனை பேர் நடத்துனர் மற்றும் ஓட்டுனரைப் பார்த்து, "நன்றி", என்று கூறுகின்றனர் அல்லது குறைந்தபட்சம் நமஸ்காரம் செய்கின்றனர்? பெரும்பாலான மக்களிடம் இதைக் காணமுடிவதில்லை. முன்பு ஒரு காலத்தில், நமக்குக் கிடைத்த ஒவ்வொரு விஷயத்துக்கும், நாம் எப்போதும் ஒருவருக்கொருவர் தலை வணங்கிய ஒரு கலாச்சாரமாக இருந்தோம். ஆனால், துரதிருஷ்டவசமாக, இது மறைந்துவிட்டிருக்கிறது. தற்போது, அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் மருத்துவப் பணியாளர்கள், காவல் பணி செய்பவர்கள் மற்றும் இது சார்ந்த பல்வேறு மக்களும் தங்களது உயிரையும், தங்கள் குடும்பத்தினரது உயிரையும் பணயம் வைக்கின்றனர். அவர்கள் ஒரு மருத்துவமனைப் பணியில் இருக்கும் காரணத்தால், பணி முடிந்து வீடு திரும்பும்போது, மரணத்தைத் தங்களுடன் வீட்டுக்கு அழைத்துச் செல்ல நேரலாம். இப்படிப்பட்ட ஒரு சேவையை செய்யும்போது, அவர்களை நாம் பாராட்டாமல் இருப்பது மிகவும் மோசமானது.

அடுத்த ஆறு மாதங்களுக்கு, குறைந்தபட்சம் இந்தக் காலகட்டம் கடந்து செல்லும் வரை, தினமும் காலையில் நீங்கள் எழும்போது, நமக்காக தங்களது உயிரைப் பணயம் வைக்கும் எல்லா மக்களுக்கும் நாம் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்ற ஒரு எண்ணத்தை உங்கள் மனதில் உருவாக்குங்கள்.

#2 உங்களது நுரையீரலின் ஆரோக்கியத்தை வீட்டிலேயே சோதிக்கும் பொருட்டு, சிம்ம கிரியா செய்யுங்கள்

சத்குரு: சிம்ம கிரியா ஒரு எளிமையான பயிற்சி. சக்தி சலன கிரியா போன்ற சக்தி வாய்ந்த செயல்முறைகளை அறியாத மற்றவர்களுக்கு, இது உதவியாக இருக்கும். இது உங்களுடைய நுரையீரல் திறனை மேம்படுத்துவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. எல்லாவற்றையும் விட, தொடர்ந்து ஐந்து நாட்கள் அதைச் செய்தபிறகு, திடீரென்று ஒரு நாள் அதை உங்களால் செய்யமுடியவில்லை என்றால், அதன் பொருள் உங்களுக்கு ஏதோ சுவாசப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று புரிந்துகொள்ளலாம். அந்தப் பிரச்சனை எதுவாகவும் இருக்கலாம், கொரோனா வைரஸாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அது என்ன என்பது பொருட்டில்லை; திடீரென்று உங்களால் அதைச் செய்ய முடியாமல் போனால், உங்களையே நீங்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். குறிப்பாக மருத்துவர்கள், காவல்துறையினர் அல்லது கிருமி பாதித்தவர்களுக்கு அருகில் இருந்து பணியாற்றக்கூடிய மற்றவர்கள், தயவு செய்து இந்தப் பயிற்சியைக் கட்டாயம் செய்யுங்கள். இது உங்களுக்குப் பெரிய அளவில் வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

 

#3 “Death” புத்தகத்தை ஒரே மூச்சில் படித்துமுடியுங்கள்

சத்குரு: இன்றைக்குப் பல வழிகளிலும், ஒட்டுமொத்த உலகத்தின் மக்களும் அவர்களது நிலையற்ற தன்மை குறித்து வலிமையாக நினைவூட்டப்படுகின்றனர். ஆனால் நிலையாமை என்பது எப்போதும் நமது கூடவே இருக்கும் கூட்டாளிதான். ஆகவே, இது இறந்து போகக்கூடியவர்களுக்கான ஒரு புத்தகம் – நமது வாழ்வின் இந்த மிக முக்கியமான பரிமாணத்தைக் குறித்து, கலப்படமில்லாத ஒரு புரிதலைக் கொண்டு வருவதற்கானது. சாதாரணமாக, யாராவது இறந்துவிடும்போது, அவர்கள் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டதாக மக்கள் உங்களுக்குக் கூறுகின்றனர் – இது பொய் கலப்படமானது. வாழ்வின் ஒரு பாகமாக மரணத்தை ஏற்றுக்கொண்டு நீங்கள் விழிப்புடன் மரணிக்க வேண்டும் – நீங்கள் சொர்க்கத்துக்குச் செல்லும் எண்ணத்தில் அதை வரவேற்கக்கூடாது. நீங்கள் சொர்க்கத்துக்குச் செல்வதாக எண்ணினால், மரணம் குறித்து நீங்கள் பேராவலாக இருக்கலாம், இது நல்லதல்ல. பேராவல் வாழ்க்கைக்கானது. சமநிலையின் அமைதியுடன் நீங்கள் மரணத்தைக் கையாளவேண்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மரணத்தை உள்ளது உள்ளபடியே, அதன் பல பரிமாணங்களிலும் பார்க்கும் விதமாக புத்தகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. வாசிப்பவர்கள், அதன் கடைசி பக்கத்திற்கு வருவதற்குள், ஓரளவுக்கு, அவர்கள் மரணம் குறித்து சற்றுக் கூடுதலான சம நிலையில் இருக்கவேண்டும்.

முப்பது நாட்களுக்கு சிறிது சிறிதாக நீங்கள் வாசித்தால், அது என்ன என்பதையே நீங்கள் உணராமல் போகக்கூடிய ஒரு வகையான புத்தகம் இது. இயன்றவரை ஒரே மூச்சில் நீங்கள் வாசித்துவிட வேண்டும், உங்களுக்குள் அது இறங்கி, ஒரு உருண்டைபோல் உங்களில் இடம்பிடிக்கிறது; பிறகு அதை நீங்கள் மெதுவாக ஜீரணிக்கிறீர்கள். உட்கார்ந்து படிப்பதற்காகவே என்று இடையூறில்லாத 2-3 வாரங்கள் உங்களுக்கு எப்போது கிடைக்கப்போகிறது? அதற்கான மிக நல்ல நேரம் இதுவே. நிலையாமை நம் முகத்திற்கு நேராக நின்றுகொண்டிருக்கிறது.

#4 சமூக ஊடகங்களைப் பொறுப்புடன் பயன்படுத்துங்கள்

சத்குரு: இந்த லாக் டௌன் காலகட்டத்தில், நாம் ஒருவருக்கொருவர் விஷம் கக்கிக்கொள்ளாமல், சமூக ஊடகத்தை அதிக பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதற்கு கற்றுக்கொள்ள முடியும். இது நீங்கள் செய்யக்கூடிய ஒரு விஷயம், ஏனென்றால் தற்போது வைரஸ் நமக்கு மரணத்தை அளித்துக்கொண்டிருக்கிறது; நீங்கள் எல்லா நேரமும் யாரையாவது நோக்கி இரண்டு முனையிலும் கூரான வாள் வீசிக்கொண்டிருக்க வேண்டாம். இந்த நாட்களில், மக்களுடன் உடல்ரீதியான தொடர்பைத் தவிர்த்து, எந்தவிதமான தொடர்பு நிலையில் இருந்தாலும், நமது அன்பை, கருணையை, மென்மையை மற்றும் நமது மனிதத்தன்மையை வெளிப்படுத்துவதற்கு அந்தத் தொடர்பைப் பயன்படுத்துவோம். தேசமெங்கும், மருத்துவ அமைப்பு, அரசாங்கம் மற்றும் நிர்வாகத்தின் சிறு ஓட்டைகளைக் கண்டுபிடிப்பதில் பலரும் மும்முரமாக இருப்பதை நான் பார்க்கிறேன். சரி, இப்படிப்பட்ட விஷயங்கள் முக்கியம்தான், ஆனால் அதை செய்வதற்கான நேரம் இது அல்ல. நிகழ்ந்துகொண்டிருக்கும் செயல்பாடுகளைப் பாராட்டுவதற்கும், மதிப்பதற்குமான நேரம் இது.

#5 வீட்டிலும் கூட விலகி இருங்கள்

சத்குரு: மனித சமூகங்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வதற்கும், தனிமனிதர்களுக்கு இடையில் இடைவெளியைக் கடைபிடிப்பதற்குமான நேரம் இது. இதனால் வெளி உலகத்துடன் நாம் சமூக விலகலைக் கடைபிடித்து, ஆனால் நமது அறையிலோ அல்லது நமது வீட்டிலோ கூடிக்கொண்டாடலாம் என்பது பொருள் அல்ல. நாம் அனைவரிடமிருந்தும் உடலளவில் இடைவெளியைக் கடைபிடிக்கவேண்டும். குறிப்பாக நமது சமூகத்தின் பாதிப்படையக்கூடிய மக்கள் மற்றும் நமது வீடுகளிலும், குடும்பங்களிலும் - நமது பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டிகள் – அவர்களுக்கு இரண்டு மீட்டர் சமீபத்தில் ஒருவரும் வராமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதனை நீங்கள் செயல்படுத்தினால், குறைந்தபட்ச இழப்புகளுடன் இந்த சூழ்நிலையை நாம் நடத்திக்கொள்வோம்.

#6 உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துங்கள்

சத்குரு: தற்போது, எப்படியாவது நோய் எதிர்ப்பு அமைப்பை சிறிது பலப்படுத்துவது முக்கியமானது. ஏனென்றால், இந்த வைரஸ் உயிரைப் போக்குமா அல்லது உங்களுக்கு தீவிரமான பாதிப்பு ஏற்படுத்துமா அல்லது இலேசான அறிகுறிகளுடன் உங்களைக் கடந்து செல்லுமா என்பதை உங்கள் நோய் எதிர்ப்பு சக்திதான் முடிவு செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதற்கு, நீங்கள் பல விஷயங்களைச் செய்யமுடியும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்குரு வழங்கும் டிப்ஸ்

#7 எப்படி இருப்பது என்று கற்றுக்கொள்ளுங்கள்

சத்குரு: நாம்தான் வைரஸ் கடத்திகளாக இருக்கிறோம். இதுதான் பிரச்சனை, ஆனால் இது ஒரு பெரிய சாதகமாகவும் இருக்கிறது, ஏனென்றால் நாம் மனிதர்களாக இருக்கிறோம். இப்போது, நம்மை நாம் கேள்விக்கு உட்படுத்த வேண்டியுள்ளது, நாம் மனிதர்களாக இருக்கிறோமா அல்லது நாம் மனிதப் படைப்புகளாக இருக்கிறோமா? நாம் மனிதர்களாக இருந்தால், எப்படி இருப்பது என்பதை நாம் அறிந்திருக்கவேண்டும். எப்படி இருக்கவேண்டும் என்பதை நாம் அறிந்திருந்தால், வைரஸை அடுத்த நபருக்கு, மேலும் அடுத்த நபருக்கு கடத்தாமல் இருப்பதற்கான எளிமையான விதிகளைப் பின்பற்றுவது மிகவும் சாத்தியமானது. எப்படி இருப்பது என்பது உங்களுக்குத் தெரிந்தால், அப்போது சமூகத் தொடர்பானது, உங்கள் தேர்வுக்கு உட்பட்டதாகத்தான் இருக்கிறது. அது தேவையில்லை என்றால், நீங்கள் விலகி இருக்க முடியும். வைரஸ் பரப்பக்கூடிய எதையும் நீங்கள் செய்யாமல் இருப்பதன் மூலம், இந்த உலகத்துக்கு அற்புதமான ஒன்றை நீங்கள் செய்துள்ளீர்கள் என்று பெருமளவு திருப்தி அடைந்துகொள்ள முடியும்.

பிரத்தியாஹாரா என்பது யோகத்தின் ஒரு அங்கமாக இருக்கிறது. அதாவது, உலகத்துடனான உங்கள் ஐம்புலன் தொடர்பை விலக்கிக்கொண்டு, உள்முகமாகத் திரும்புவது என்பது பொருள். இதை நீங்கள் சோதித்துப் பார்ப்பதற்கான நல்லதொரு நேரம் இது. இதற்கு உங்களுக்கு எந்தப் பயிற்சியும் தேவையில்லை. கண்களை மூடி வெறுமனே அமர்ந்திருங்கள். உங்களால் முடிந்த அளவுக்கு எத்தனை மணி நேரங்களாக இருந்தாலும், வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளாதீர்கள். ஆரம்பத்தில், உங்கள் மனம் எல்லாப் பக்கமும் தாவிச் செல்லும். அது பரவாயில்லை, அதைக் கட்டுப்படுத்த முயற்சிக்காதீர்கள்; அது எங்கு விரும்பினாலும் செல்லட்டும். கண்களை மட்டும் மூடியவாறு, எதையும் பார்க்காமல் இருங்கள். ஒரு மணி நேரத்தில் ஆரம்பித்து, ஒரு நாளைக்கு ஆறிலிருந்து பன்னிரண்டு மணி நேரங்களுக்கு அதிகமாக்குங்கள். நீங்கள் சிகரங்களை எட்டுவதற்குத் தேவையான சக்தியை பெறுவதை, நீங்கள் காண்பீர்கள்.

#8 தினமும் ஒரு சிறிதளவு உங்களையே வளர்த்துக்கொள்ளுங்கள்

சத்குரு: அடுத்த சில வாரங்களுக்கு உடல்ரீதியாக, உங்களுக்கு நீங்களே சிறிய இலக்குகளை முடிவு செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு பதினெட்டு வயதாக இருந்தபோது, நீங்கள் கீழ்நோக்கி வளைந்தால், எவ்வளவு தூரம் வளைந்திருப்பீர்கள்? அந்த நேரத்தில், ஒருவேளை உங்கள் கைகள் தரையைத் தொட்டிருக்கலாம், ஆனால் இன்றைக்கு, முழங்கால் வரைக்கும்தான் தொடக்கூடும். மேலும் ஆறு அங்குலங்கள் கீழ்நோக்கி வளைய முடியுமா என்று பயிற்சி செய்து பாருங்கள்.

நீங்கள் பதினெட்டு வயதாக இருந்தபோது, எவ்வளவு வேகமாக மாடிப்படி ஏறினீர்கள், இன்றைக்கு மாடிப்படி ஏறுவதற்கு எவ்வளவு சிரமப்படுகிறீர்கள்? அடுத்த இரண்டு வாரங்களில் பத்திலிருந்து இருபது சதவிகிதம் உங்களால் அதை முன்னேற்ற முடியுமா என்று பாருங்கள்.

நீங்கள் பதினெட்டு வயது அல்லது அதற்கும் குறைவாக இருந்தபோது எடுத்த உங்கள் புகைப்படத்தை எடுத்துப் பாருங்கள், எவ்வளவு நிமிர்ந்து நின்றீர்கள், இப்போது உங்கள் முதுகு சற்று வளைந்திருந்தால், உங்களையே சிறிது நேராக்கிக்கொள்ளுங்கள்.

மேலும் பின்னோக்கிப் பாருங்கள் – நீங்கள் ஆறு, எட்டு அல்லது பத்து வயதாக இருந்தபோது எப்படி சிரித்துக்கொண்டிருந்தீர்கள். அதில் ஐம்பது சதவிகித சிரிப்பை உங்கள் முகத்தில் மீண்டும் எப்போதும் பெறமுடியுமா என்று பாருங்கள். அது வெறுமனே ஒரு செயற்கைத்தனமான சிரிப்பாக இல்லாமல், உங்களுக்குள் மீண்டும் அந்த மாயாஜாலத்தைக் கொண்டுவருவதன் வாயிலாக சிரிப்பு மலரவேண்டும்.

இந்த பூமியில் அற்புதமான ஏதோ ஒன்றை உங்களால் செய்ய முடியவில்லையென்றால், குறைந்தபட்சம் நீங்கள் ஒரு இனிமையான உயிராக இருக்கவேண்டும். உங்களுக்கும், உங்களைச் சுற்றி வாழும் ஒவ்வொருவருக்கும் இதைச் செய்வதற்கு நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்கே உரித்தான விதத்தில் நீங்கள் இதற்கான இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ள முடியும்.

#9 உங்கள் அருகாமையில் உதவி தேவைப்படும் நிலையில் உள்ள குறைந்தபட்சம் இரண்டு பேருக்கு ஆதரவளியுங்கள்

சத்குரு: இந்தியாவில் இந்த வைரஸ் ஏற்படுத்தும் தாக்கங்களுக்குள் ஏழையிலும் ஏழையான, தினக்கூலித் தொழிலாளர்கள் குறித்து கவனம் கொள்வது மிக முக்கியமான ஒன்று. அதிர்ஷ்டவசமாக, விவசாயிகள், தினக்கூலிகள் மற்றும் கட்டிடத் தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கான விரிவானதொரு திட்டத்தை மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதனால், குறைந்தபட்சம் இந்த வட்டத்தில் இருக்கும் மக்கள் பட்டினியை நோக்கித் தள்ளப்படுவது தவிர்க்கப்படுகிறது.

இருப்பினும், சமுதாய அடுக்கின் இடைவெளிகளில் தடுமாறி விழக்கூடிய மக்கள் இருக்கலாம். அவர்களுக்கு உதவி செய்வதற்கு, கூடியுள்ள சமூகம்தான் முன் வரமுடியும். நீங்கள் எங்கிருந்தாலும் ஒவ்வொருவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்: பட்டினியின் அடிப்படையில் துயரமும், மரணங்களும் நிகழ நாம் அனுமதிக்க மாட்டோம் என்ற ஒரு உறுதிமொழியை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். யாராவது ஒருவர் அதை நோக்கித் தள்ளப்படுவதை நாம் பார்த்தால், நமது சொந்த செலவில் அவர்களுக்கு எப்படி உதவுவது என்று நாம் பார்க்கவேண்டும் அல்லது அது சம்பந்தப்பட்ட யாருடைய கவனத்துக்காவது எடுத்துச் செல்லவேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலைகள் நிகழ்ந்தால், ஒவ்வொரு தன்னார்வலரும் குறைந்தபட்சம் இரண்டு நபரைக் கவனித்துப் பராமரிக்க வேண்டும் என்பதே எனது ஆவல். முதல் இரண்டு வாரங்களுக்கு நிலைமை ஓரளவு சரியாக இருக்கலாம், ஆனால் மூன்றாவது வாரத்தில் மக்கள் துன்பப்படத் தொடங்கக்கூடும். நாம் அவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

#10 அழுத்தத்துடன் இல்லாமல், உற்சாகத்துடன் இருப்பது

சத்குரு: மனித வாழ்வு எவ்வளவு பலவீனமானது என்பதை கொரோனா உங்களுக்கு மிகத் தெளிவாக்குகிறது – அதாவது கண்ணுக்குப் புலப்படாத ஒரு உயிரி நம்முடைய வாழ்க்கையையும், நாம் கட்டி எழுப்பியுள்ள அனைத்தையும் அழித்துவிட முடியும். ஏற்கனவே வெளியில் போதுமான தொல்லைகள் இருக்கின்றன, நமது வாழ்வை நாம் துன்பமாக்கிக்கொள்ளாமல் இருப்போம். தொந்தரவுக்கான மூலமாக நாம் இல்லாமல் இருப்போம். ஆனந்தமாக, உற்சாகமாக இருப்பதும், நம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும் உறுதுணையாக இருப்பதும் இப்போது மிகவும் முக்கியமானது.