கிரண் மஸூம்தார் ஷா : சில மாதங்களுக்கு முன், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நமது நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் பேசும்போது வரும் 2025ம் ஆண்டில் நமது நாட்டின் பொருளாதாரம் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிற்கு வளர்ந்திருக்கும் என்று தெரிவித்திருந்தார். இது நிச்சயமாக நல்ல செய்தி தான். இதற்கு அர்த்தம், அதிகரிக்கும் வளர்ச்சி வாய்ப்புகள், அதிக வேலை வாய்ப்புகள் மற்றும் மேம்பட்ட வாழ்க்கை தரம்..

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா, 16.8 கோடி மக்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டிருப்பதாகவும் நிதியமைச்சர் தமது பேச்சில் குறிப்பிட்டார். நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய சாதனை இது. நமது தேசத்தின் வளர்ச்சி வரலாற்றில் விவசாயிகளையும் இணைத்துக்கொண்டு, அவர்களின் வருமானத்தை இரு மடங்காக பெருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதை நாம் சாதித்து விட்டோம் என்றால், இது சரித்திரத்தில் சாதாரணமானதாக இடம் பெறாது, உலக வரலாற்றில் பொன்னெழுத்தில் பதியப்படும்‌ சகாப்தமாக இது இருக்கும். இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 17% பங்களிப்பும், 50 % வேலைவாய்ப்பையும் வழங்கிவரும் விவசாயத் துறையில் நாம் முயற்சி எடுக்கும் மாற்றங்கள் பலனளிக்க துவங்கும்போது, நமது ஒட்டுமொத்த பொருளாதாரமும் உயர்ந்து, உலகின் முதல் மூன்று பொருளாதார வலிமைமிக்க நாடுகளில் நாமும் இருப்போம்.

வேளாண் காடுகள் வளர்ப்பு என்பது ஏதோ தனித்துவமானதோ அல்லது புதுமையான ஒரு திட்டமோ அல்ல. சில நூறு ஆண்டுகளுக்கு முன் வரையிலும் நமது விவசாயிகள் வேளாண் காடு வளர்ப்பை மேற்கொண்டு உலகமே நம்முடன் வணிகம் செய்ய போட்டியிட்டு வரும் செல்வச் செழிப்பான நாடாக மாற்றி இருந்தார்கள். பல்பயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் வேளாண் காடுகள் திட்டம் எனும் விஞ்ஞானம் ஒரே நிலப்பரப்பில் மரங்கள், தாவரங்கள், மூலிகை செடிகள், புதர் வகைகளை வளர்ப்பதை ஊக்குவித்து மண்ணை வளமுடனும் நீராதாரங்களை நிறைவாகவும் நிலைநிறுத்தியது. இது, பொருளாதாரம் - சூழலியல் இரண்டுமே கைகோர்த்து இணைந்து வளர உதவியது. வளங்குன்றா வளர்ச்சி என்பது வாழ்க்கை முறையாகவே இருந்தது. நீண்ட கால அடிப்படையில் நிலைத்து நீடித்த பலன் தருவதே இந்த முறையின் தனிச்சிறப்பு. நமது விவசாயிகள் வேளாண் காடுகள் திட்டத்தை மீண்டும் முன்னெடுக்க நாம் உதவும்போது, நமது நாட்டின் விவசாயத் துறையிலும் மற்றும் நாட்டின் பொருளாதாரத்திலும் ஒரு மாபெரும் புரட்சி வெடியின் நெருப்பு திரியை பற்ற வைக்கிறோம்.

2017ம் ஆண்டில் சத்குரு அவர்கள் துவங்கிய நதிகளை மீட்போம் இயக்கத்தின் பரிந்துரைகளை மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு நாடு முழுவதும் அமல்படுத்த பரிந்துரைத்துள்ளது. தங்களது வழக்கமான விவசாயத்துடன் ஒரு பகுதியாக வேளாண் காடுகள் வளர்ப்பையும் மேற்கொள்ள ஊக்குவித்து, விவசாயிகள் சந்தித்து வரும் பல்வேறு இன்னல்களில் இருந்தும் அவர்களை விடுவித்து, அவர்களின் வளர்ச்சிக்கு ஒரு தெளிவான பாதையையும் வகுத்து தருகிறது வேளாண் காடுகள் திட்டம். இதில், குறைந்து வரும் மண் வளம், போதுமான நீராதாரங்கள் இல்லாமை, பாசன வசதிகள் மற்றும் தரம் குறைந்த பயிர், நிலையற்ற சந்தை நிலவரம், மாறிவரும் பருவ காலங்கள் மற்றும் தற்போதைய கடன் சுமை போன்ற விவசாயிகளை பாதிக்கும் அனைத்தும் அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
நமது உள்ளூரிலேயே நமது விவசாயிகளை மரம் வளர்க்க அனுமதித்து, அவர்களிடமிருந்து நாமே விலை கொடுத்து வாங்கி கொள்வதை விட்டுவிட்டு நாம் ஏன் சட்டவிரோதமாக வெட்டப்படும் மரங்களை இறக்குமதி செய்ய வேண்டும்?

நதிகளை மீட்போம் இயக்கம் முன்வைக்கும் வேளாண் காடுகள் திட்டம் உள்ளுரில் நிலவும் விவசாய தட்பவெப்பநிலை, மண்ணின் ஆரோக்கியம், சந்தையில் தேவை, மாற்று நீர்ப்பாசன முறைகள் என அனைத்தையும் கவனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பல் பயிர் சாகுபடி முறையை ஊக்குவிக்கும் வேளாண் காடுகள் திட்டத்தின் மூலம், விலை மதிப்புமிக்க மரப் பயிர்களை ஆரோக்கியமான லாபத்துடன் விவசாயிகள் சாகுபடி செய்ய முடியும். இதில் முக்கியமான அம்சம் நமது உள்நாட்டிலேயே வேளாண் பொருட்களுக்கு தேவை அதிகமாக இருக்கிறது என்பதுதான். அதிலும் குறிப்பாக மரம் மற்றும் மரப் பொருட்களுக்கான தேவை மிக அதிகம். மகாராஷ்டிரா, ஒடிசா, ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்கள் வேளாண் காடுகள் திட்டத்தை மிகத் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன.

சர்வதேச வன ஆராய்ச்சி அமைப்புகளின் கூட்டமைப்பு (International Union of forest research organisations) கடந்த 2016- 2017ம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையின்படி சட்டவிரோதமாக வெட்டப்படும் மரங்களை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இதற்காக நாம் கொடுத்துள்ள விலையும் மிகமிக அதிகம். கடந்த 2010 முதல் 2018 வரை 38,800 கோடி அளவுக்கு இந்தியா மரங்கள் மற்றும் மரப் பொருட்களை இறக்குமதி செய்திருக்கிறது. உலகவங்கியின் அளவீட்டின்படி இது சுமார் 20 சதவீதம் அளவில் அடுத்த சில ஆண்டுகளுக்கு தொடர்ந்து வளர இருக்கிறது.

இத்தகைய ஒரு சந்தை வாய்ப்பு நம்மிடமே இருக்கும்போது, பொருளாதார ரீதியாகவும் சுற்றுச்சூழல் ரீதியாகவும் பலன் தரும் வேளாண் காடுகள் திட்டமானது நமது விவசாயிகளுக்கு கிடைத்துள்ள ஒரு பொன்னான வாய்ப்பு. நமது உள்ளூரிலேயே நமது விவசாயிகளை மரம் வளர்க்க அனுமதித்து, அவர்களிடமிருந்து நாமே விலை கொடுத்து வாங்கி கொள்வதை விட்டுவிட்டு நாம் ஏன் சட்டவிரோதமாக வெட்டப்படும் மரங்களை இறக்குமதி செய்ய வேண்டும்? இது நமது நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நாட்டிற்கு மட்டுமல்ல, விவசாயின் வாழ்வில் ஒரு அவசர சூழல் ஏற்படும்போது, அதிக வட்டிக்கு கடன் வாங்கி அதைத் திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை நோக்கி தள்ளப்படும் நிலையில் இருந்து விவசாயிகளை காக்கும் ஒரு இன்ஷூரன்ஸ் போல, ஆபத்பாந்தவனாகவும் மரங்கள் மண்ணில் எப்போதும் விவசாயிகளுக்கு துணை நிற்கும்.

இந்த நோக்கத்தில், நமது மண்வளம் மற்றும் நீர்வளம் குறித்து நிலவும் சிக்கலான சூழ்நிலைக்கு எவ்வளவு பெரிய அளவில் வேண்டுமானாலும் செயல்படுத்தக் கூடிய ஒரு முன்மாதிரி திட்டமாக, தொலைநோக்கு பார்வையுடன் வேளாண் காடுகள் திட்டத்தை முன்வைக்கிறது காவேரி கூக்குரல் இயக்கம். கடந்த 50 ஆண்டுகளில், காவேரி நதியின் நீர் வரத்து 40% குறைந்திருப்பதுடன், காவேரி வடிநிலப்பகுதிகளில் சுமார் 87 சதவீத நிலப்பரப்பு பசுமை போர்வையையும் இழந்திருக்கிறது. இதனால் மண்ணில் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்பட்டு, 30 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு மண் தன் வளத்தை இழந்திருக்கிறது. இதனால் அதிகமான பாதிப்பை யார் சந்திக்க வேண்டியிருக்கிறது..? இந்தியாவின் விவசாயிகள் தான். கடந்த பத்து ஆண்டுகளுக்கு சற்று அதிகமான காலத்தில் சுமார் 47,000 விவசாயிகள் காவேரி வடிநிலப்பகுதிகளில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

காவேரி கூக்குரல் இயக்கம் பொருளாதாரா ரீதியாகவும் பலன் தரக்கூடிய ஒரு சுற்றுச்சூழல் திட்டமாக, நீர் வளம், மண் வளம், விவசாயிகள் பொருளாதாரம், பல்லுயிர் பெருக்கத்திற்கு புத்துயிரூட்டுவது என அனைத்து சிக்கல்களுக்கும் ஒரே வீச்சில் தீர்வு தரும் வேளாண் காடுகளை முன்னெடுக்க பரிந்துரைக்கிறது.

விவசாயிகளின் பொருளாதாரம், நமது சுற்றுச்சூழல், மாநிலம் மற்றும் தேசத்தின் பொருளாதார மேம்பாடு என அனைத்து நிலைகளிலும் வேலை செய்யும் ஒரு மாபெரும் மாற்று திட்டமாக வேளாண் காடு வளர்ப்பை விவசாயிகளுக்கு வழங்குகிறது காவேரி கூக்குரல் இயக்கம். சந்தையில் தேவை உள்ள விலை மதிப்புமிக்க மரங்களை தங்களின் நிலத்தின் ஒரு பகுதியில், வழக்கமான பயிர்களுடன் சேர்த்து வளர்ப்பதன் மூலம், நல்ல ஒரு வருமானத்தை கூடுதலாக விவசாயிகள் ஈட்ட முடியும். மேலும், சரியான இடத்தில், சரியான நேரத்தில் விவசாயிகள் மீண்டும் மரங்களை கொண்டு வரவிருக்கிறார்கள். நாம் எங்கே மரங்களை இழந்தோமோ, அதே இடத்தில், காவேரி வடிநிலப்பகுதிகளில் மீண்டும் மரங்களின் பசுமைப் போர்வையை விவசாய நிலங்களில் மரம் நடுவதன் மூலம் நாம் கொண்டு வரப் போகிறோம்.

பொருளாதார ரீதியாக பலன்‌ இருந்தால் விவசாயிகள் மரம் நடுவதற்கு ஏன் யோசிக்க போகிறார்கள்? தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்வதே இன்றைய‌ நிலையில் விவசாயிகளுக்கு பெரும் போராட்டமாக இருக்கும்போது, காவேரி நதியையும் அவர்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது கொடுமை அல்லவா? எனவேதான் காவேரி கூக்குரல் இயக்கம் பொருளாதாரா ரீதியாகவும் பலன் தரக்கூடிய ஒரு சுற்றுச்சூழல் திட்டமாக, நீர் வளம், மண் வளம், விவசாயிகள் பொருளாதாரம், பல்லுயிர் பெருக்கத்திற்கு புத்துயிரூட்டுவது என அனைத்து சிக்கல்களுக்கும் ஒரே வீச்சில் தீர்வு தரும் வேளாண் காடுகளை முன்னெடுக்க பரிந்துரைக்கிறது. நமது நிலையில் இருந்து மேலெழுந்து வந்து, காவேரியின் குரலும், இந்த தேசத்தின்‌ 130 கோடி மக்களுக்கும் உணவளிக்கும் விவசாயிகளின் குரலும் நமக்கு கேட்டுவிட்டது என நமது பங்களிப்பை உறுதிசெய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. "லாபகரமானது" என்றாலே அது சுற்றுச்சூழலின் எதிரி என்ற நிலையை‌ மாற்றும் முன்னுதாரணமாக இருக்கிறது காவேரி கூக்குரல் இயக்கம் - சுற்றுச்சூழலியலும் லாபகரமானதாக இருந்தால்தான் நீண்டகால நோக்கில் நிலைத்திருக்க முடியும். வேளாண் காடுகள் திட்டம் இந்த வாய்ப்பை வழங்குகிறது.

நமது நதிகளை காத்திட வேளாண் காடுகள் திட்டத்தை தீர்வாக எடுத்துவரும் நதிகளை மீட்போம் இயக்கத்துடன் தண்ணீரை பயன்படுத்தும் ஒல்வொருவருமே நதிகளை மீட்க இணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றே நான் நம்புகிறேன். ஆனால் காவேரி கூக்குரல் என்பது நமது தேசத்தின் நதிகளை மீட்கும் முயற்சியின் ஒரு சிறு துவக்கப் புள்ளிதான். சுற்றுச்சூழல் சமநிலை பற்றி நாம் அக்கறை கொண்டிருந்தால் நாடு முழுவதும் இதுபோன்ற இயக்கங்களை துவக்க வேண்டும். நாம் சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கும் முழுமையான தீர்வை வழங்கும் வேளாண் காடுகள் திட்டம், நம் தேசத்தின் வளர்ச்சியுடன் அனைத்து தரப்பு மக்களையும் இணைத்து வைக்கிறது.

ஆசிரியர் குறிப்பு: டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம் இது.