நதிகள் புத்துணர்வுக்கு நிதி ஆயோக் வகுத்த செயலுக்கான திட்டம்

நதிகள் புத்துணர்வுக்கு நிதி ஆயோக் வகுத்த செயலுக்கான திட்டம்

நவம்பர் 2017ல், நதிகள் மீட்பு இயக்கத்தின் வரைவுத்திட்ட பரிந்துரைகளை ஆராய, நிதி ஆயோக் தலைமைச் செயலர் திரு. அமிதாப் காந்த் அவர்களின் தலைமையின்கீழ் ஒரு நிபுணர்கள் குழுவை பிரதமர் அலுவலகம் அமைத்தது. ஆறு மாதங்களுக்குப் பிறகு, அக்குழு, நதிகளுக்கு புத்துயிரூட்டுவதற்கான பரிந்துரைகளை எப்படி களத்தில் செயல்படுத்துவது என விளக்கும் செயலுக்கான திட்டமொன்றை தயார்செய்திருந்தது. செயலுக்கான இத்திட்டத்தை கிராமிய மேம்பாட்டுத் துறை தயார்செய்தது.

நிதி ஆயோக் தலைவர் திரு.அமிதாப் காந்த் அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் எழுதிய கடிதத்தில், “கலந்தாய்வுகளின் அடிப்படையில், நதிகளுக்கு புத்துயிரூட்ட அரசு திட்டங்களுடன் சமூக முனைப்புகளை உள்ளடக்கிய ஒரு மாபெரும் திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது” என்றார். 2018 ஜூன் 6ம் தேதியன்று எழுதப்பட்டிருந்த இக்கடிதம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர் மற்றும் நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டது. அதன் நகல் கிராம மேம்பாடு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம், நீர்வளம், குடிநீர் மற்றும் சுகாதாரம், வேளாண்மை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, பஞ்சாயத் ராஜ் மற்றும் நிலவளத்துறை அமைச்சகங்களின் செயலர்களுக்கு அனுப்பப்பட்டது. பிரதமரின் தலைமைச் செயலருக்கும் தகவல் அனுப்பப்பட்டது.

திரு.அமிதாப் காந்த் தனது கடிதத்துடன் செயலுக்கான திட்டத்தின் நகலையும் இணைத்து, “கிராம மேம்பாட்டுத் துறையின் செயலுக்கான திட்டத்தின் நகலை உங்கள் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கிறேன். உங்கள் மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரின் ஈடுபாட்டுடனும் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசின் திட்டங்களை ஒருங்கிணைத்து ஒருசில மாதிரித் திட்டங்களை செயல்படுத்துவதை நான் பரிந்துரைக்கிறேன்” என்றார்.

செயல்திட்டத்தை அமல்படுத்தும்போது சம்பந்தப்பட்டவர்களுக்கு குறிப்பிட்ட பொறுப்புகளை செயலுக்கான திட்டம் விவரிக்கிறது. மாவட்ட, மாநில மற்றும் மத்திய அளவில் நதிகள் புத்துணர்வு செயல்படுத்தப்படத் தேவையான செயல் அமைப்பு மற்றும் பல்வேறு திட்டங்களையும் அது வரையறுத்துள்ளது.

x