கேள்வியாளர்: சத்குரு, பன்னாட்டு நிறுவனச் சூழலில், உலகம் முழுக்கப் பரவியுள்ள வெவ்வேறு கலாச்சாரம் மற்றும் பலவிதமான பின்புலங்களிலிருந்து வரும் ஒவ்வொருவருடனும், குழுவாக இணைந்து எப்படி பணிபுரிவது?

சத்குரு: உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பில் நான் இருந்தபொழுது, தேர்ந்தெடுத்த மிகச் சிலர் அடங்கிய குழுவுடன், காலை நேர உணவுக்காகக் கூடியிருந்தேன். அப்பொழுது, நிறுவனங்களின் பன்முகக் கலாச்சாரத் தலைமை பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். இன்றைக்கு நீங்கள் ஒரு ஐரோப்பிய நிறுவனத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஆனால் உங்களுக்கு ஒரு சீன நாட்டவர் தலைமை அதிகாரியாக இருக்கலாம். நீங்கள் அமெரிக்க நிறுவனத்தவராக இருக்கலாம். ஆனால் உங்களுக்கு ஒரு இந்திய தலைமை அதிகாரி இருக்கக்கூடும். நீங்கள் ஒரு இந்திய நிறுவனத்தவராக இருக்கலாம். ஆனால் உங்களுக்கு ஒரு அமெரிக்க தலைமை அதிகாரி இருக்கக்கூடும். அந்த விதமாகத்தான் பன்னாட்டு நிறுவன உலகம் இப்போது மாறியுள்ளது. நீங்கள் எங்கே தலைமை வகிக்கிறீர்கள் என்பது உங்களது திறமையைப் பொறுத்து இருக்கிறதே தவிர, உங்களது தேசத்தின் அடையாளத்தைப் பொறுத்து இல்லை. தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு விஷயங்கள் தெளிவாக உள்ள காரணத்தினால் உலகத்தில் தேசிய அடையாளங்கள் தளர்ந்து கொண்டிருக்கின்றன.

ஒரு நூறு அல்லது இருநூறு வருடங்களுக்கு முன்னால், இந்தப் பூமியில் பல நாடுகள் இல்லை. மிகச் சில நாடுகள் மட்டுமே ஒரு வலிமையான அடையாளம் கொண்டிருந்தன. மற்ற ஜனத்தொகையினர், இனம் மற்றும் மதத்தின் அடையாளங்களைக் கொண்டிருந்தனர். கடந்த 150 வருடங்களில், தேசிய அடையாளத்தை மிகப்பெரிய விஷயமாக்குவதற்கு நாம் பெருமுயற்சி செய்துள்ளோம். ஆனால் இப்போது உங்களது இனம் அல்லது மதம் என்னவாக இருந்தாலும், நீங்கள், “நான் ஒரு அமெரிக்கன்” என்றோ அல்லது “நான் ஒரு இந்தியன்” என்றோதான் கூறுகிறீர்கள். கடந்த 150 வருடங்களில்தான் அதுவும் குறிப்பாக கடந்த 100 வருடங்களில்தான் தேசிய அடையாளங்கள் அதிகமான முக்கியத்துவம் அடைந்திருக்கின்றன. ஆனால் இப்போது அது அர்த்தமற்றதாக ஆகிக்கொண்டிருக்கிறது. ஏனென்றால், மக்களை ஒரு தேசத்தின் எல்லைக்குள் உங்களால் அடக்க முடியாது. தொழில்நுட்பத்தின் காரணத்தால், இந்திய இளைஞர்கள் பாகிஸ்தானிய பெண்களிடம் இணையதளத்தில், காதலில் விழுகின்றனர், இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு இருந்தாலும்!

நீங்கள் தலைவராக இருப்பதன் பொருள் என்னவென்றால், தெரிந்தோ, தெரியாமலோ சிலரது தலைவிதியை நீங்கள் உங்கள் கைகளில் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

நாட்டு எல்லைகளைத் தொழில்நுட்பமானது மிகவும் தளர்வாக்கிவிட்ட காரணத்தால், நீங்கள் தற்போது மக்களைத் தடுத்துவிட முடியாது. நீங்கள் பாகிஸ்தானில் ஒரு போரை நிகழ்த்திக் கொண்டிருக்கலாம். ஆனால் இணையதளத்தில் நீங்கள் அங்குள்ள யாருடனாவது நெருங்கிய உறவுநிலையில் இருக்கலாம். குறிப்பாக பன்னாட்டு நிறுவனச் சூழலில் தேசிய எல்லைகள் அல்லது தேசிய அடையாளங்கள் மிகவும் தளர்வடைந்து கொண்டிருக்கின்றன. பெரு நிறுவனங்கள், குறைந்தபட்சம், 30, 40 நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களை தங்களது உயர்மட்ட நிர்வாகத்தில் அமர்த்தியிருக்கின்றன.

கலாச்சாரம் மற்றும் பலதரப்பட்ட வித்தியாசங்களின் காரணத்தால் நீங்கள் உணவு உட்கொள்வது, உடுத்துவது மற்றும் செயலாற்றும் விதமே வெகுவாக மாறுபடுகிறது. எனவே, அனைவரும் ஒரு குழுவாக இயங்கி, இலக்கை அடைவது மிகுந்த சவாலாக இருக்கக்கூடும். ஒரு பன்முகக் கலாச்சாரக் குழுவை எப்படி நீங்கள் வழிநடத்திச் செல்கிறீர்கள்? இதுதான் அன்றைய விவாதத்தின் மையக் கருவாக இருந்தது. நாம் அனைவரும் ஒரே கலாச்சாரத்திலிருந்து வந்தபொழுது, ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வது எளிதாக இருந்தது. இப்போது அவர்கள் வெவ்வேறு இடங்களிலிருந்தும், பின்புலங்களிலிருந்தும் வருகின்றனர். உங்களுக்குத் தேவையானதைப் பெற அவர்கள் அனைவரையும் இணைத்து எவ்விதம் வேலை வாங்கப் போகிறீர்கள்?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அங்கே ஒரு சிறிய குழுவுக்கு நான் தலைமையேற்று நடத்தினேன். அவர்களிடம் நான் கேட்டேன், “ஒவ்வொரு முறை நான் அமெரிக்கா செல்லும்போதும் அவர்கள் “ரெசிடென்ட் ஏலியன்” (Resident Alien) என்று கூறும் ஒரு வரிசையில் என்னை நிற்க வைக்கின்றனர். நான் சுற்றும் முற்றும் பார்க்கும்போது, அந்த வர்ணனைக்கு ஒருவரும் அங்கே பொருத்தமாக இருப்பதில்லை, என்னைத்தவிர! மற்ற அனைவரும் சாதாரணமாகத் தோற்றமளிக்கின்றனர். அந்த விளக்கத்துக்குப் பொருந்தக்கூடியதாக நான் மட்டும்தான் இருக்கிறேன். ஒருவேளை, என்னை விரும்பிய யாரோ ஒருவர் உங்களது நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக (CEO) நியமிக்க விரும்பினால், என்னை நீங்கள் எடுத்துக்கொள்வீர்களா? அல்லது என் தோற்றத்தின் காரணத்தினாலேயே, ஏதோ ஒருவகையில் என்னிடம் பாரபட்சமாக இருப்பீர்களா?”

உங்கள் தலைவிதியை, உங்கள் கரங்களில் எடுத்துக் கொள்வதை நீங்கள் தேர்வு செய்தாலே நீங்கள் ஒரு தலைவர் தான்.

ஒரு நபரை நீங்கள் பார்க்கின்ற கணத்திலேயே, அவர் தோற்றமளிக்கும் விதம், அவரது தோலின் நிறம் மற்றும் அவரது நடை உடை பாவனை (mannerism) போன்றவை குறித்து, உங்களுக்குள் ஒரு அபிப்ராயம் உருவாக்குகிறீர்கள். அவர் உண்மையில் யார், அவரது தன்மை என்ன? என்றெல்லாம் நீங்கள் மதிப்பீடு செய்வதில்லை. நான் இப்போது சொல்வது மற்ற இடங்களில் அவ்வளவாக நடப்பதில்லை. ஆனால் வாஷிங்டன் டிசி (DC) விமான நிலையத்திற்குள் வரும்போது, எல்லா பாதுகாப்பு அதிகாரிகளும் மற்றும் அங்கு பணிபுரிபவர்களும், அங்கு சென்று குடியேறிய மக்களும்கூட, என்னுடன் சைகை மொழியில் பேச முயற்சிக்கின்றனர்! என் முகத்தில் ஆங்கிலம் எழுதப்பட்டிருக்கவில்லை என்பதில் அவர்கள் 100% நிச்சயமாக உள்ளனர். உங்கள் மனதில் பல விதங்களிலும் நீங்கள் இந்த மாதிரி ஒரு கட்டம் கட்டி அடைக்கும்பொழுது, உங்களால் எப்படி தலைமையேற்று வழிநடத்த முடியும்? உங்களது தலைமையேற்பு என்பது தற்செயலானதாக இருக்குமே தவிர, மற்றபடி அது எந்த ஒரு மகத்தான தொலைநோக்கினாலோ அல்லது திறமையினாலோ இருக்காது. ஒரு தலைவரே இல்லாமல்கூட, குறிப்பிடத்தக்க ஏதோ ஒன்றை மக்கள் உருவாக்கும் சாத்தியம் அதிகம் உண்டு. ஒரு முட்டாள்தனமான தலைவர் பெருமளவில் கேடுகள் நிகழ்த்திவிட முடியும். அதைவிட ஒரு தலைவர் இல்லாமலே - சிறிதளவு குழப்பம் உண்டாக்கினாலும் - மக்கள் இன்னமும் மேம்பட்ட செயல்களை செய்யக்கூடும்.

முக்கியமாக, நீங்கள் தலைவராக இருப்பதன் பொருள் என்னவென்றால், தெரிந்தோ, தெரியாமலோ சிலரது தலைவிதியை நீங்கள் உங்கள் கைகளில் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.அந்தப் பொறுப்பை நீங்கள் எடுத்துக் கொண்டுவிட்டீர்கள். ஒரு தலைவர் கட்டாயம் ஒரு தேசத்தின் தலைவராகவோ அல்லது பெருந்திரளான மக்களின் தலைவராகவோ தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு குடும்பத்தை நடத்தினாலும் நீங்கள் ஒரு தலைவர் தான். ஏதோ ஒருவிதத்தில், யாரோ சிலருடைய வாழ்வின் தலைவிதியை நீங்கள் உங்கள் கைகளில் எடுத்துள்ளீர்கள். இன்னொரு உயிருக்காக பொறுப்பேற்க விரும்பும் எந்த ஒருவரும் தலைவராகவே இருக்கிறார். அதன் அளவு மட்டும்தான் கேள்வியாக இருக்கிறது. ஒருவரது திறன்களைப் பொறுத்து, தலைமையின் அளவை மக்கள் தேர்வு செய்வார்கள். ஆனால் ஏதோ ஒருவிதத்தில் ஒவ்வொருவரும் தலைவராக இருக்கிறார். குறைந்தபட்சம், உங்கள் தலைவிதியை, உங்கள் கரங்களில் எடுத்துக் கொள்வதை நீங்கள் தேர்வு செய்தாலே நீங்கள் ஒரு தலைவர் தான். நீங்கள் கையேந்துபவர் என்றால் மட்டும் தான், ஒரு தலைவராக நீங்கள் இருப்பதில்லை.

ஒரு நகைச்சுவை கூறுகிறேன். ஒரு அமெரிக்க சுற்றுலாப்பயணி இங்கிலாந்துக்குச் சென்றார். ஒரு உள்ளூர்வாசி அவருக்கு எல்லா இடங்களையும் சுற்றிக் காட்டினார். ஒரு குறிப்பிட்ட பண்ணையைக் காட்டியவாறு, “இங்கே ஒரு அரிஸ்டோக்ரேட் (aristocrat) வாழ்கிறார்” என்றார்.

குழம்பிப்போன அமெரிக்கர், “அப்படி என்றால் என்ன? அஸ்ட்ரோனட்? (astronaut - விண்வெளி வீரர்)” என்று கேட்டார்.

மறுபடியும் உள்ளூர்வாசி, “இல்லையில்லை, இவர் ஒரு அரிஸ்டோக்ரேட்” என்றார்.

“அப்படியென்றால் என்ன?” அமெரிக்கர் கேட்டார்.

அரிஸ்டோக்ரேட் என்றால் என்னவென்று தெரியாத ஒரு மனிதன் இருக்கமுடியுமா என்பதை உள்ளூர் ஆங்கிலேயரால் நம்பவே முடியவில்லை. ஆகவே விளக்கினார், “ஒரு அரிஸ்டோக்ரேட் என்றால் உங்களுக்குத் தெரியாதா? அரிஸ்டோக்ரேட் என்றால், அவர் எந்த வேலையும் செய்யத் தேவையில்லை. எல்லாமே அவருக்கு எப்படியாவது கிடைத்துவிடும். அவருக்கென்று எப்போதும் ஒரு நல்ல இடம் எங்கேயும் கிடைக்கும். அவர் எங்கு சென்றாலும் முதல் இருக்கை கிடைக்கும் என்பதுடன், அவர் வேலை எதுவும் செய்வதில்லை; மற்றவர்களிடமிருந்து தனித்து வாழ்கிறார்.” அதற்கு அமெரிக்கர், “ஓ, அதுவா, அமெரிக்காவில் அவர்களை நாங்கள் நாடோடிகள் என்றழைக்கிறோம்!” என்றார்.

ஆகவே, நீங்கள் நாடோடியாக இருந்தால் தவிர, ஏதோ ஒரு அளவில், நீங்கள் ஒரு தலைவர்தான். அதாவது நீங்கள் உங்களது சொந்த விதியையோ அல்லது மேலும் சில உயிர்களின் தலைவிதியையோ உங்கள் கைகளில் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது ஒருவிதமான பொறுப்பு. ஏதாவது மக்கள் கூட்டத்தை நீங்கள் வழிநடத்த விரும்பினால், அவர்கள் வாய்ப்பு பெற்றவர்களாக இருக்கின்றனரே அன்றி, நீங்கள் அல்ல என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், நீங்கள் ஒரு தலைவர் என்றாகிவிட்டால், மற்றவர்களுக்கு எதையும் தேர்வு செய்யும் உரிமை உள்ளது. உங்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. நீங்கள் ஏற்கெனவே தேர்வு செய்துவிட்டீர்கள். தினமும் நீங்கள் மாற்றிக்கொண்டும், தாவிக்கொண்டும் இருக்க முடியாது. நீங்கள் தேர்வு செய்தது என்னவாக இருப்பினும், நீங்கள் அதில் நிலைத்திருக்க வேண்டும். நாடோடிகள் தினமும் மாற முடியும். ஆனால் நீங்கள் ஒரு தலைவராகிவிட்டால் - உங்களது சொந்த வாழ்க்கைக்கோ அல்லது மற்றும் சில உயிர்களுக்கோ - அதன்பிறகு தினமும் மாறிக்கொண்டிருப்பது என்பது கிடையாது. அது மிகவும் அழகானது. உங்களது தொழில் ஒரு வரையறைக்கு உட்பட்டது. மேலும் அவர்களுக்காக நீங்கள் வாழ்நாள் முழுவதும் பொறுப்பேற்பதில்லை. ஆனால் அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் அவர்களுடன் இணைந்து பணியாற்றும்போது, நீங்கள் அவர்களை அரவணைத்துச் செல்ல வேண்டும்.

ஒரு நாளில் இத்தனை மணிகள் என்ற அடிப்படையில் பார்க்கும்போது, உங்கள் வாழ்வின் பெரும்பகுதியும், பெரும்பாலும், பணியிடத்தில்தான் கழிகிறது. நீங்கள் உங்கள் குடும்பத்துடனோ அல்லது வேறு எங்குமோ இருப்பதைவிட அதிக மணி நேரங்களை, உங்களுடைய பணியிடத்தில் கழிக்கிறீர்கள். இப்படி இருக்கும்போது, இதை ஒரு அழகான அனுபவமாக உருவாக்குவது முக்கியமானது, இல்லையா? மற்றவர்களை நீங்கள் உங்களுக்கு உரியவர்களாகப் பார்த்தால், மக்களை வழி நடத்துவது உங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்காது. ஒரு கோழிக்குஞ்சை வழி நடத்துவது, கோழிக்குப் பிரச்சனையல்ல. தாய்க் கோழி எங்கே போனாலும் குஞ்சுகள் பின்தொடர்ந்து போகும். ஏனெனில் தாய்க்கோழி குஞ்சுகளின் மீது அக்கறையும், அன்பும் கொண்டிருப்பதில் ஒருவிதமான நிச்சயத்தன்மை இருக்கும். அந்த நிச்சயத்தன்மை அங்கே இல்லையென்றால், அந்தக் குஞ்சுகள் பின் தொடர்ந்து செல்லும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்களும் அதைத்தான் செய்ய வேண்டும்.

சத்குருவின் கருத்தாழமிக்க செய்தியை குருவாசகமாக உங்கள் மொபைலில் பெற்று, தினசரி உங்கள் நாளினை புதுத் தெளிவுடன் துவங்க சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.