வசீகரம் மிக்க மனிதர்கள் தலைவர்களாக உருவாவது இயல்பான விஷயம்தான்! ஆனால், வசீகரம் மட்டுமே இருந்து விழிப்புணர்வு இல்லையென்றால் என்னென்ன அபத்தங்கள் நிகழும்? தலைவர்கள் ஏன் விழிப்புணர்வுடன் உருவாக வேண்டும்? விடை சொல்கிறது சத்குருவின் பதில்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: தலைவர்கள் பிறப்பிலேயே உருவாகிறார்கள் என்றுசிலர் சொல்கின்றனர். வேறுசிலரோ, தலைவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்கின்றனர். இதில் எது சரி, அல்லது இரண்டுமே சரிதானா?

சத்குரு:

தலைவர்கள் எப்போதுமே உருவாக்கப்படுகிறார்கள். பிறப்பிற்கு முன்பே உருவாக்கப்படுகிறார்களா அல்லது பின்னர் உருவாக்கப்படுகிறார்களா என்பது இப்போது முக்கியமில்லை. ஆனால் தலைவர்கள் எப்போதுமே உருவாக்கப்படுகிறார்கள். சிலருக்கு இயற்கையாகவே ஒரு வசீகரமும், இயல்பான திறமையும் இருக்கும். அதனால் பெரும் முயற்சியில்லாமலே மக்களை எளிதாய் வழிநடத்திச் செல்வார்கள். ஆனால் ஆக்கப்பூர்வமாய் ஏதேனும் செய்ய வெறும் வசீகரம் மட்டும் போதாது. வெறும் வசீகரம் மக்களை அழிவிற்குத்தான் வழிநடத்திச் செல்லும். ஒரு தலைவன் என்பவன், போதுமான அறிவுடன் மக்களை வழிநடத்தக் கூடியவனாக இருக்கவேண்டும். அப்படிப்பட்டவன் வசீகரமாய் இருக்கவேண்டும் என்று எப்போதும் கட்டாயமில்லை. கொஞ்சம் கவனித்துப் பார்த்தால், மக்களுக்கு உண்மையிலேயே நன்மை தரும் செயல்களைச் செய்பவர்கள், வசீகரமானவர்களாய் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை என்பதை நீங்களே அறிந்து கொள்வீர்கள். அது போன்ற செயல்களைச் செய்பவர்கள், எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்பதெல்லாம் புரிந்த, அறிவுள்ள மனிதர்கள்.

‘இப்படித்தான் நான் இருக்கவேண்டும்’ என்றெண்ணி, விழிப்புணர்வோடு உங்களை நீங்கள் அப்படி செதுக்கிக் கொண்டீர்களா, அல்லது விழிப்புணர்வே இல்லாமல் அவ்வகையில் உருவானீர்களா என்பது தான் கேள்வி.

நீங்கள் இப்போது யாராக இருந்தாலும், எப்படிப்பட்டவராக இருந்தாலும், அவ்வகையில் உங்களை நீங்கள் தான் உருவாக்கிக் கொண்டீர்கள். ‘இப்படித்தான் நான் இருக்கவேண்டும்’ என்றெண்ணி, விழிப்புணர்வோடு உங்களை நீங்கள் அப்படி செதுக்கிக் கொண்டீர்களா, அல்லது விழிப்புணர்வே இல்லாமல் அவ்வகையில் உருவானீர்களா என்பது தான் கேள்வி. விழிப்புணர்வே இல்லாமல் உங்களை நீங்கள் உருவாக்கி இருந்தால், நீங்கள் ஒரு குழப்பக் கலவையாக இருப்பீர்கள். சில சமயங்களில் இந்தக் குழப்பக்கலவை வெற்றிகரமாக செயல்படலாம், சில சமயங்களில் தோல்வியைச் சந்திக்கலாம். ஆனால் விழிப்புணர்வின்றி உங்களை நீங்கள் உருவாக்கி இருந்தால், மற்றவர்களின் பார்வையில் நீங்கள் வாழ்வில் வெற்றிகரமானவராகத் தோன்றலாம். ஆனால் உங்கள் சொந்த அனுபவத்தில் நீங்கள் வெற்றியான மனிதராக இருக்கமாட்டீர்கள். விழிப்புணர்வோடு உங்களை நீங்கள் செதுக்கி இருந்தால் மட்டுமே, உங்கள் அனுபவத்தில் நீங்கள் முன்னேறி இருப்பதாக உணர்வீர்கள். ஒப்பீடு காரணமாக, சமூகத்தின் பார்வையில், நீங்கள் வெற்றி பெற்றவராக இருப்பது முக்கியமல்ல. உங்கள் அனுபவத்திலேயே நீங்கள் வெற்றி பெற்றவராக உணர்வது முக்கியம்.

ஒரு குழுவை வழிநடத்தும் தலைவன், தன் குழுவில் மட்டுமல்ல, தனக்குள்ளும் மிக உயரியநிலையில் இருக்கவேண்டும். ஒரு தலைவன் தன்னை சரியாக நிர்வகித்துக் கொள்ளவில்லை என்றால், அவன் பிறரை வழிநடத்துவதெல்லாம் தற்செயலான நிகழ்வுகளாகவே இருக்கும். அப்படித் தற்செயலாக நிகழும் எதுவும், எந்த நொடியில் வேண்டுமானாலும் தறிகெட்டுப் போகலாம். தலைமைப்பொறுப்பு என்றால் அனைவருக்கும் மேல், உயர்ந்த நிலையில் உட்காருவது என்று அர்த்தமல்ல. தலைமைப் பொறுப்பின் அடையாளம், உங்களுக்குள் நீங்கள் உயர்நிலையில் இருப்பதுதான். அப்படி உங்களுக்குள் நீங்கள் உயர்நிலையில் இருக்கும்போது, உங்கள் திறன் முழுவீச்சில் வெளிப்படும்போது, செயல்கள் நடக்கும். திறன் என்று பார்க்கும்போது, எந்தவொரு மனிதருக்கும் எந்தத் திறனிலும் பயிற்சியளித்திட முடியும். ஆனாலும் சிலர் இயல்பிலேயே விஷயங்களைக் கையாளும் திறன் பெற்றிருப்பார்கள். அப்படி இயல்பிலேயே இருக்கும் திறமைகளும் அவர்களே விழிப்புணர்வின்றி தங்களுக்கு உருவாக்கிக் கொண்டதுதான்.

ஒப்பீடு காரணமாக, சமூகத்தின் பார்வையில், நீங்கள் வெற்றி பெற்றவராக இருப்பது முக்கியமல்ல. உங்கள் அனுபவத்திலேயே நீங்கள் வெற்றி பெற்றவராக உணர்வது முக்கியம்.

விழிப்புணர்வுள்ள ஒரு தலைவராக உங்களை நீங்கள் வளர்த்துக் கொண்டால், நீங்கள் விவேகத்துடன் செயல்படுவீர்கள். வசீகரத்தின் துணையுடன் செயல்படுவதை விட, இது மேலானது. வசீகரம் உங்களையும், மற்றவரையும் மதியிழக்கச் செய்யலாம். இதனால் கேடுகளே அதிகம் விளையும். வசீகரத்தால் ஆயிரமாயிரம் மனிதர்களை தம்பால் ஈர்த்த பலதலைவர்கள், இவ்வுலகிற்கு நாசம் விளைவித்தது தான் அதிகம். அப்படிப்பட்ட தலைவர்கள் தங்களை பின் பற்றியவர்களைப் போர் புரியவும், பல கலவரங்களுக்குமே வழிநடத்திச் சென்றார்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் வசீகரப் பேச்சால், தோற்றத்தால், தோரணையால் வழிநடத்தினார்கள். மதியின் துணையோடும், விழிப்புணர்வின் துணையோடும் அல்ல.