கேள்விகளுக்கு சத்குரு அளிக்கும் பதிலென்பது, நேரடியான விடையாக அல்லாமல், உண்மையை நோக்கி நம்மை உந்துவதாய் அமையும்! அந்த வகையில், யோகா குறித்த இந்த இரண்டு கேள்விகள் நமக்கு யோகா குறித்த புதிய தரிசனங்களை வழங்குகின்றன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: நீங்கள் யோகா புரிதலுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் யோகாவின் மூலம் படைத்தவனை அடையலாமென்றும் கூறினீர்கள். அப்படியானால் யோகாவை பயிற்சி செய்யாதவர்கள் படைத்தவரை அடைய இயலாதா?

சத்குரு:

அடைய முடியாது. ஏனெனில் யோகாவைப் பயிற்சி செய்யாதவர்கள் என்று எவருமில்லை. ஒவ்வொருவருமே தற்செயலாக நோக்கமின்றி யோகா செய்கிறார்கள். யோகா என்றால் குறிப்பிட்ட ஒரு பயிற்சி அல்ல. இந்த பிரபஞ்சத்தில் யோகா இல்லாமல் எதுவுமில்லை. யோகா என்றால் அனைத்தும் ஒன்றாதல் என்று பொருள். யோகா என்ற வார்த்தைக்கு இணைதல் என்று பொருள். நாம் யோகா என்று கூறும்போது இந்த பிரபஞ்சம் முழுவதையும் ஒன்றாக பார்க்கக்கூடிய புரிதலைப் பற்றிப் பேசுகிறோம். ஓர் இடத்தில் அமர்ந்திருப்பது ஒரு வகையான யோகாவாகும். வெறுமனே ஒரு இடத்தில் அமர்ந்திருப்பதே ஒருவகையான யோகாவாகும். இதைத்தான் அநேக யோகிகள் செய்திருக்கிறார்கள். உங்கள் மூச்சு வேறொரு வகையான யோகாவாகும். ஆனால் யோகாவை முறைப்படி செய்கிறீர்களா? அல்லது தற்செயலாக செய்கிறீர்களா என்பது மட்டும் தான் கேள்வி. எப்படியோ நீங்கள் ஏதோவொரு வகையில் யோகா செய்கிறீர்கள். உங்கள் இதயம் அடித்துக் கொண்டிருப்பது கூட ஒருவகையான யோகாதான். ஆனால் அது நல்லமுறையில் நிகழ்கிறதா என்பதுதான் கேள்வி.

Question: சத்குரு, ஈஷாவில் எதற்கு இத்தனை வகுப்புகள்? எல்லாவற்றையும் சேர்த்து ஒரே வகுப்பாகச் செய்யக்கூடாதா?

என்னுடைய ஆசை எல்லா வகுப்புகளையும் ஒன்றிணைத்து 7 நாட்களில் செய்ய வேண்டும் என்பதுதான். 7 நாட்கள் கூட வேண்டாம். 7 நிமிடங்கள் முழுமையாக கொடுக்க இயலுமென்றால் இதை உலகம் முழுவதும் வழங்கிவிட முடியும். ஆனால் மக்கள் முற்றிலும் திறந்த மனதுடன் இருந்தால் மட்டுமே இது சாத்தியப்படும். யோகா வகுப்பில் முதல் நாள் ‘ஆமாம், இல்லை’ என்று கூட பதில் சொல்லாமல் இருந்தீர்கள். 2ம் நாள் கொஞ்சம் சிரித்தீர்கள். 7ம் நாளுக்குள் கண்களில் நீர் வருவது போல் ஆகிவிட்டீர்கள். முதல் நாளிலேயே உங்கள் கண்களில் நீர் வந்திருந்தால் அடுத்த வகுப்பிற்கு கூட போக வேண்டாம். ஆனால் உங்களுக்கு தவணை முறையில் கற்றுக் கொள்வதில்தான் ஆசை. மக்கள் பயம், சந்தேகம் போன்றவை இல்லாமல் வகுப்புடன் இணைந்து வந்தால் சில வருடங்களில் பாவ ஸ்பந்தனாவை அகற்றி விடலாம்.

பாவ ஸ்பந்தனா என்றால் எந்த ஒரு போதனையோ பயிற்சியோ இல்லாமல் ஆனந்த நிலையில் இருப்பது. 24 மணி நேரமும் நீங்கள் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதற்கு நீங்கள் இன்னும் சில படிநிலைகள் எடுப்பது நல்லது. நீங்கள் தயாராக இருந்தால் எல்லா வகுப்புகளையும் ஒரேநேரத்தில் நடத்திவிடலாம்.

ஆனால் நீங்கள் அதற்குத் தயாராகவில்லை என்பதால் படிப்படியாக நிகழ்த்த வேண்டியுள்ளது. மனித உயிர் என்பதும், ஆயுள் என்பதும் மிகவும் குறுகியகால அளவுதான். 50 வருடங்கள் என்பது நினைப்பதற்குள் முடிந்துவிடும். நாம் இந்த உடலை விட்டுப் போவதற்குள் இந்த உயிருக்கு எத்தனை பரிமாணங்கள் உள்ளதோ அத்தனையும் உணர்ந்துவிட்டுத்தான் போகவேண்டும். இந்த உலகம் அனைத்தையுமே நாம் உணரமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை. இந்த உயிரின் அத்தனை பரிமாணங்களையும் உணர்ந்த பிறகே நாம் போக வேண்டும். அதற்குத்தான் இத்தனை வகுப்புகள்.