ஈஷா க்ரியா பயிற்சியின் சூட்சுமங்கள் குறித்து விளக்கும் சத்குரு, "நான் உடல் அல்ல, நான் மனமும் அல்ல" என்பது ஒரு கோஷமோ, தத்துவமோ, கொள்கையோ அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறார். அதோடு, சுவாசத்தை நம் கவனத்திற்குள் கொண்டுவருவதற்காக அதில் சேர்க்கப்படும் மென்மையான நறுமணமிது என்றும் விளக்குகிறார்.

Question: ஷாம்பவி பயிற்சியின்போதும், தினமும் செய்யும் ஈஷா க்ரியா பயிற்சியின்போதும், என் உடலும் மனதும் எனதல்ல என்று உணரத் துவங்கியுள்ளேன். எனக்கும், உடலுக்கும், மனதுக்கும் இடையிலான இந்த இடைவெளியை எப்போதும் தக்கவைத்துக்கொள்வது எப்படி?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

ஈஷா க்ரியா பயிற்சி செய்யும்போது, "நான் உடல் அல்ல, நான் மனமும் அல்ல" என்று நீங்கள் மனதில் சொல்வது ஒரு தத்துவமாகவோ, கோட்பாடாகவோ அல்ல. உங்களுக்குள் நீங்கள் ஒரு கோஷம் போல சொல்லிக்கொண்டே இருந்து, ஒருநாள் அப்படியே மாறிவிடும் முயற்சியல்ல. உங்கள் சுவாசத்துடன் சேர்த்துக்கொள்ளும் சூட்சுமமான நினைவூட்டலிது. "நான் உடல் அல்ல, நான் மனமும் அல்ல" என்பதைப் பயன்படுத்தி, மனோரீதியாக உங்களை மாற்றிக்கொள்ள முயற்சிக்காதீர்கள். இதை வைத்து உங்கள் சுவாசத்திற்கு ஒரு குறிப்பிட்ட அம்சத்தை மட்டுமே சேர்க்கிறீர்கள். இதன் உதவியின்றி உங்கள் சுவாசத்தை உங்களால் இப்போது கவனிக்க முடிவதில்லை. காற்றின் அசைவினால் ஏற்படும் உணர்ச்சியை மட்டுமே கவனிக்க முடிகிறது, சுவாசத்தையே உங்களால் இப்போது கவனிக்க முடியவில்லை.

சுவாசத்தை எடுத்துவிட்டால், நீங்களும் உங்கள் உடலும் தனித்தனியே விழுந்துவிடுவீர்கள். சுவாசத்துடன் பயணிப்பது, இந்த பரிமாணத்திற்குள் நுழைய ஒரு சாவியைத் தருகிறது.

நீங்கள் உள்மூச்சு எடுக்கும்போது, உள்மூச்சு மட்டுமே நடக்கிறது என்று கிடையாது, கொஞ்சம் வெளிமூச்சும் நடந்திருக்கலாம். அதேபோல வெளிமூச்சு விடும்போது, வெளிமூச்சு மட்டுமே நடக்கிறது என்று கிடையாது, கொஞ்சம் உள்மூச்சும் நடந்திருக்கலாம். ஆனால் சுவாசம் செயல்படும் விதத்தை நீங்கள் கவனிக்கும் வரை இதைக் கண்டுணர மாட்டீர்கள். காற்று உள்ளே செல்வதையும் வெளியே வருவதையும் மட்டுமே கவனிப்பவர்கள் என்னென்னவோ மாற்றங்கள் நடந்ததாகச் சொல்கிறார்கள், அவை அனைத்தும் உண்மைதான். உங்கள் உணர்ச்சிகள் உங்களின் வெளிப்புற தோல் போன்றது. உணர்ச்சிகளை அறிவது அடிப்படையானது. எதை நீங்கள் தொட்டாலும், உட்கார்ந்தாலும் நின்றாலும், உணர்ச்சிகள் உள்ளன. சுவாசம் என்பது சுலபமாக நீங்கள் அனுபவித்துணர முடியாத ஆழமான, சூட்சுமமான ஒரு பரிமாணம்.

சுவாசத்தை கூர்மநாடி என்று சொல்லும்போது, ஆக்சிஜன் - கார்பன்-டை-ஆக்சைடு பரிமாற்றம் பற்றி நாம் பேசவில்லை. சுவாசத்தின் விளைவாக அது நிகழ்கிறது. வெளியே வந்து உள்ளே போகும் காற்றோடு, உடலியக்க செயல்முறை நிகழ்வதற்கு இன்னொரு பரிமாற்றம் தேவைப்படுகிறது. ஒருவர் இறந்துவிட்டார் என்று மருத்துவரீதியாக அறிவித்தாலும், காற்றுப் பரிமாற்றம், இதயத்துடிப்பு, மற்றும் மூளை செயல்முறை நின்ற பிறகும், சற்று காலத்திற்கு அவர் சுவாசிக்கிறார். அதாவது கூர்மநாடி அப்போதும் இயங்குகிறது. கூர்மநாடி இயங்கிக்கொண்டு இருந்தாலும், காற்றை உள்ளே இழுத்து கரியமில வாயுவை அதனால் வெளியேற்ற முடிவதில்லை. இதற்கு உதாரணம் சொல்லவேண்டும் என்றால், தொடர்ந்து பம்ப் செய்துகொண்டு இருந்தாலும், கொஞ்சம் ஓட்டை ஏற்பட்டுவிட்டதால் தண்ணீர் இறைக்காத பழைய அடிபம்ப் போன்றது இது. கூர்மநாடி துடித்துக்கொண்டு இருந்தாலும், ஆக்சிஜன் - கார்பன்-டை-ஆக்சைடு பரிமாற்றம் நின்றுவிட்டது. ஒருவேளை பங்குச்சந்தையை நிறுத்தத்திற்கு கொண்டுவந்தால், பெரும்பாலான மனிதர்கள் பொருளாதாரமே முடிந்துவிட்டது என்று நினைப்பார்கள். ஆனாலும் அருகில் இருப்பவரிடம் நீங்கள் ரொட்டி வாங்கிக்கொள்ளலாம். நீங்கள் பணம் கொடுக்காவிட்டாலும், பொருளாக கொடுப்பீர்கள். பொருளாதாரம் தொடர்ந்து நடக்கத்தான் செய்யும், ஆனால் அதை அளந்திடமுடியாத விதத்தில் நடக்கும். அதேபோல, காற்று பரிமாற்றம் நின்றபிறகும், கூர்மநாடி துடித்துக்கொண்டிருக்க முடியும்.

சுவாசத்தை கவனத்தில் கொண்டுவருவது குறித்து நாம் பேசுகிறோம். அதாவது உங்களையும் உடலையும் இணைக்கும் இணைப்பை உங்கள் கவனத்திற்குள் கொண்டுவருவது பற்றி பேசுகிறோம். சுவாசத்தை எடுத்துவிட்டால், நீங்களும் உங்கள் உடலும் தனித்தனியே விழுந்துவிடுவீர்கள். சுவாசத்துடன் பயணிப்பது, இந்த பரிமாணத்திற்குள் நுழைய ஒரு சாவியைத் தருகிறது. உங்கள் உடலை உங்களிடமிருந்து சற்று தூரமாக வைத்துக்கொள்ள கற்றுக்கொண்டால், நீங்கள் உடல் அல்ல என்பதை அறிவீர்கள். தளர்வான உடைகளை நீங்கள் அணிந்தால், இந்த உடைகள் நீங்கள் அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். மிகவும் இறுக்கமான உடைகளை அணிந்தால், சிறிது காலத்திற்குப் பிறகு, அவை வேறு நீங்கள் வேறாக உங்களுக்குத் தெரியாது. இந்தத் தோலை "நீங்கள்" என்று உணர்கிறீர்கள். உங்கள் தோலில் சில பகுதிகள் வெகுசீக்கிரத்தில் அழிந்துவிடும், ஆனாலும் நீங்கள் "நீங்கள்" தான். உடலின் ஆழமான அடுக்குகளுக்குள் சென்றாலும், நீங்கள் "நீங்கள்" தான்.

"நான் உடல் அல்ல, நான் மனமும் அல்ல" என்பதை ஒரு கோஷம் போல பயன்படுத்தாதீர்கள், அது அப்படி வேலை செய்யாது. கூர்மநாடி அல்லது சுவாசம் மீது விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு உதவியாக இது வழங்கப்பட்டது. கோஷங்கள் எழுப்புவது, தெருக்களில் இருக்கும் கூட்டங்களின் கவனத்தை ஈர்ப்பதற்கானவை. உள்நிலையில் கோஷமிட்டு நீங்கள் எதுவும் உணரமுடியாது. வட இந்தியாவில் புதிய இடங்களுக்கு நான் போகும்போது, "சத்குரு மஹராஜ் கீ ஜே!" என்று மக்கள் கோஷமிட முயல்வார்கள். உடனே அவர்களை நான் தடுத்து நிறுத்தி, "முதலில் கோஷம் வரும், பிறகு சின்னம் வரும், பிறகு ஒரு தனி தேசம் வரும், பிறகு தேசியப் பறவை வரும்! இது வேண்டாம்." என்பேன்.

சுவாசத்தை உங்கள் விழிப்புணர்விற்குள் எடுத்துவருவதற்கு, "நான் உடல் அல்ல, நான் மனமும் அல்ல" என்பது சூட்சுமமாக நிகழவேண்டும். இந்த எண்ணத்தின் மூலம், உங்கள் சுவாசத்திற்கு சற்று நறுமணம் சேர்க்கிறீர்கள். அப்போது அதை சுலபமாக கவனிக்க முடியும். இது காற்று செல்லும் திசையை கவனிக்க ஊதுபத்தி ஏற்றுவது போன்றது. மென்மையாக காற்றசைந்தால் கவனிக்கமுடியும், இல்லாவிட்டால் கவனிக்கமுடியாது. அப்படித்தான் இதுவும்.

ஆசிரியர் குறிப்பு: யோக அறிவியலின் காலம் கடந்த ஞானத்தில் வேரூன்றியிருக்கும் ஈஷா க்ரியா, சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு சக்திவாய்ந்த செயல்முறை. வழிகாட்டுதலுடன் கூடிய தியானமாக, குறிப்புகள் தரும் வீடியோவுடனும், டவுன்லோடு செய்யக்கூடிய குறிப்புகளுடனும் இலவசமாக இது வழங்கப்படுகிறது. அதோடு, உலகெங்கும் நடத்தப்படும் இலவசப் பயிற்சி நிகழ்ச்சிகளிலும் இது வழங்கப்படுகிறது. விருப்பத்துடன் இதற்கு ஒருவர் தினமும் 12 நிமிடங்கள் ஒதுக்கினால், இது வாழ்க்கையையே மாற்றவல்லது. சத்குரு செயலி மூலமாகவும், இணையத்திலும் ஈஷா க்ரியா கற்றுக்கொள்ள முடியும்.