கேள்வி:  நமஸ்காரம் சத்குரு, ஒரு உறவில் Possessive ஆக இருப்பதைக் கடப்பது எப்படி?

சத்குரு: Possessive ஆக இருப்பதை கடந்துவர முயற்சி செய்யாதீர்கள். ஏதோ ஒன்றை முழுமையாக கைக்குள் வைத்துக்கொள்ள முயற்சி செய்து பாருங்கள். ஏதோ ஒன்றை அப்படி வைத்துக்கொள்ள முயற்சி செய்வதில் உள்ள வலியை நீங்கள் உணர்ந்துவிட்டால், அந்த வலியே நீங்கள் possessive ஆக இருப்பதை குணப்படுத்திவிடும். நீங்கள் possessive ஆக இருக்கக்கூடாது என்று முயற்சி செய்தால் அது வேலை செய்யாது. ஏனென்றால் நீங்கள் ஏற்கனவே முயற்சி செய்துவிட்டீர்கள், இல்லையா? நீங்கள் முயற்சி செய்து தோற்றுப் போனீர்கள், அதனால்தான் என்னை கேட்கிறீர்கள். முழுமையாக possessive ஆக இருங்கள். உங்கள் கணவனோ, குழந்தையோ, உங்கள் வீடோ, இல்லை உங்கள் நாயாக இருந்தாலும் முழுமையாக உங்களோடு வைத்துக்கொள்ளப் பார்த்தால், அது தாங்கமுடியாத வலியை ஏற்படுத்தும். அது அவ்வளவு வலியை ஏற்படுத்துவதால் அது உங்களைக் குணப்படுத்திவிடும்.

பிடித்து வைத்துக்கொள்ள நினைப்பது (Possessiveness in Tamil) எதனால்…

உங்கள் கணவனோ, குழந்தையோ, உங்கள் வீடோ, இல்லை உங்கள் நாயாக இருந்தாலும் முழுமையாக உங்களோடு வைத்துக்கொள்ளப் பார்த்தால், அது தாங்கமுடியாத வலியை ஏற்படுத்தும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எதனால் நீங்கள் கைக்குள் பிடித்து வைத்துக்கொள்ள நினைக்கிறீர்கள்? இந்தியாவிலும் உலகத்தில் எல்லாப்பக்கமும் ஒருவரை ஏதோ பிடித்திருக்கிறது என்று சொன்னால், என்ன அர்த்தம் என்று தெரியுமா? யார் பிடிக்கப்பட்டிருக்கிறாரோ அவர் பாதிக்கப்பட்டவர், ஆனால் பிடிப்பது யார் என்று தெரியும்தானே? நீங்கள் அதுதான். நீங்கள் பிடித்துக்கொள்ள முயற்சிக்கும் போது நீங்கள் பேயாக ஆகிறீர்கள். 'இல்லை இல்லை, உன் மீது மிக அன்பு, ஆனால்...' ஆம், நல்ல எண்ணங்களோடு நீங்கள் பேயாக போவீர்கள். இதுதான் possessive ஆக இருப்பதில் இருக்கும் பிரச்சனை. ரொம்ப நல்ல எண்ணம். பேய்க்கு உங்கள் மீது நல்ல நோக்கம் இல்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும்? யாருக்கு தெரியும், கடவுளுக்கு உங்கள் மீது நல்ல நோக்கம் இருக்கிறது என்று உங்களுக்கு எப்படி தெரியும்? பிரச்சாரங்கள் தான் அப்படி சொல்கிறது, ஆனால் உங்களுக்கு உறுதியாக தெரியாது, இல்லையா? இதெல்லாம் கடவுள் உருவாக்கினது என்றால், உங்கள் வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றையும் பார்த்தால், அவருக்கு உண்மையாகவே உங்கள் மீது நல்ல நோக்கம் இருக்கிறதா இல்லையா என்று உங்களுக்குத் தெரியாது, இல்லையா? உங்களுக்கு உறுதியாக தெரியுமா? தெரியுமா? உங்களுக்குத் தெரியாது. பேய்க்கு உங்கள் மீது கெட்ட நோக்கம் இருக்கிறதா என்று உங்களுக்குத் தெரியாது.

ஆனால் யார் பிடித்துக் கொள்கிறாரோ அவர் சாதாரணமாக பேயாகத் தான் இருப்பார். அதனால் நல்ல எண்ணங்களோடு யாரையோ பேய் என்று சொல்லும்போது அவர்கள் நோக்கத்தைப் பற்றி நாம் கேள்வி கேட்கவில்லை. அவர்கள் செயலுடைய விளைவைப் பற்றிதான் நாம் பேசுகிறோம், இல்லையா? நாம் அவர்கள் நோக்கத்தை கேள்வி கேட்கவில்லை. பேய் காற்று என்றால், காற்று நல்ல நோக்கத்தில் அடிக்கலாம். ஆனால் அது உங்கள் வீட்டை சின்னா பின்னமாக்குவதால் பேய் என்று சொல்கிறீர்கள். அதனுடைய விளைவினால், இல்லையா? அதனால் நீங்கள் உருவாக்கும் விளைவுகள் வலியை ஏற்படுத்தினால் நீங்கள் பேய்தான். உங்கள் நோக்கம் நல்லதாக இருக்கலாம், ஆனால் விளைவு சுற்றியிருக்கும் ஒருவருக்கு வலியானதாக இருந்தால், நீங்கள் பேய்தான். அதனால் நீங்கள் பிடித்துக்கொண்டால் நீங்கள் பேயாகத்தான் இருக்கவேண்டும். நீங்கள் பிடித்துக்கொள்வதால் பாதிப்புக்கு ஆளாகிறவர்கள் அவர்களைச் சுற்றியிருக்கும் எல்லோருக்கும் நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்த முடியும். அவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? 

முழுமை ஆக்கிக்கொள்ளும் முயற்சி

நான் உங்களிடம் பிடித்துக்கொள்ளாதீர்கள் என்று சொன்னால் நீங்கள் எதையும் நிறுத்தப் போவதில்லை. ஏனென்றால் இது மிக ஆழமான பிரச்சனை. "தயவுசெய்து யாரையும் பிடித்துக்கொள்ள வேண்டாம்" என்று யாரோ ஒருவர் கூறும் அறிவுரையினால் இது போய்விடாது. அது அப்படி போகாது. நீங்கள் எதைப் பிடித்துக்கொள்கிறீர்கள் என்பதை வேண்டுமானால் இதிலிருந்து அதற்கு மாற்றலாம். ஆனால் ஏதோவொன்றை பிடித்துக்கொள்ள வேண்டும் என்கிற ஏக்கமோ தேவையோ இன்னும் போகவில்லை. நீங்கள் இதைப் பிடித்துக்கொள்ளாமல் வேறு எதையோ பிடித்துக்கொள்ளலாம். ஏனென்றால், ஏதோவொன்றை பிடித்துக்கொள்ள வேண்டும் என்ற உங்கள் ஆசை, அடிப்படையாக ஒரு நிறைவில்லாத வாழ்க்கை அனுபவத்தில் இருந்து வருகிறது. ஒரு முழுமையில்லாத உணர்வில் இருந்து வருகிறது. 

நீங்கள் உங்களைத்தான் முழுமை ஆக்கிக்கொள்ள முயல்கிறீர்கள். நீங்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும், நீங்கள் செல்வந்தராக முயற்சி செய்யவில்லை, நீங்கள் லட்சியவாதியாக முயற்சிக்கவில்லை, நீங்கள் possessive ஆக முயற்சிக்கவில்லை. பேராசை, கோபம், வெறுப்பு எல்லாவற்றிற்கும் இது பொருந்தும். நீங்கள் அதுவாக எல்லாம் ஆகப் பார்க்கவில்லை. நீங்கள் எப்படியோ நிறைவை உணரப் பார்க்கிறீர்கள். இவரை அணைத்துக்கொள்வது மூலமாகவோ, இவரை கொல்வது மூலமாகவோ, அவரிடம் இருப்பதை எடுத்துக்கொள்வது மூலமாகவோ, அவரை எடுப்பது மூலமாகவோ, எப்படியோ உங்களை முழுமை ஆக்கிக்கொள்ளப் பார்க்கிறீர்கள். ஏனென்றால், நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அதனுடைய முழுமையற்ற தன்மையை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முயற்சி செய்யுங்கள், அது உங்களை எங்கேயும் கொண்டு சேர்க்காது. 

எது உங்களுக்கு வேலை செய்யும்?

அதனால் நான் உங்களுக்கு சொல்வதெல்லாம், நீங்கள் எல்லாமே செய்து பாருங்கள். பேராசையாக இருந்து பாருங்கள், possessive ஆக இருந்து பாருங்கள், அன்பாக இருந்து பாருங்கள், காமமாக இருந்து பாருங்கள், எல்லாமே செய்து பாருங்கள். அது உங்களை எங்கேயும் கொண்டு போகவில்லை என்று நீங்கள் உணர்ந்தால், உங்களை மாற்றிக்கொள்ளும் புத்திசாலித்தனம் உங்களுக்கு இருக்க வேண்டும். ஏதோ ஒன்று வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் அதையே செய்து கொண்டிருக்கப் போகிறீர்கள் என்றால், நீங்கள் மீட்க முடியாத அளவு அடிமுட்டாள், இல்லையா? என்னுடைய அறிவுரையை கேட்க வேண்டாம், ஏதோ ஒன்றை முயற்சி செய்து பாருங்கள், அது வேலை செய்தால் அந்த பாதையில் போங்கள், அது வேலை செய்யவில்லை என்றால், அந்த அபத்தத்தை விட்டுவிட்டு வேறு ஒன்றை முயற்சி செய்து பார்க்க வேண்டும், இல்லையா? அப்போது என்ன கவனிப்பீர்கள் என்றால், இது எதுவுமே வேலை செய்யாது. எல்லாமே வேலை செய்வது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும், ஆனால் பிறகு ஏமாற்றிவிடும். 

கஷ்டப்பட்டு முயற்சி செய்து பாருங்கள், லேசாக முயற்சி செய்யக்கூடாது, முழுமையாக செய்து பாருங்கள். முழுமையாக செய்து பார்த்தால், 24 மணி நேரத்தில் உங்களுக்கு தெரிந்துவிடும். நீங்கள் அவ்வப்போது லேசாக முயற்சி செய்தால், இதை உணர வாழ்நாள் முழுக்க எடுக்கும். அப்போது 24 குணங்கள் இருந்தால், இதை உணர 24 பிறவிகள் எடுக்கும். இது வேலை செய்யாது, இது வேலை செய்யாது, இது வேலை செய்யாது. நீங்கள் கஷ்டப்பட்டு முயற்சி செய்தால், அது வேலை செய்யாது என்று 24 மணி நேரத்தில் தெரிந்துவிடும். 

உங்கள் பிரச்சனை என்னவாக இருந்தாலும், அதில் முழுமையாக இறங்குங்கள். அப்போது 24 மணி நேரத்தில் அது பிரயோஜனம் இல்லை, அது வேலையே செய்யாது என்று பார்ப்பீர்கள், அது உங்களுக்கு 100% தெளிவாகும். அது உங்களுக்கு தெளிவானது என்றால், உங்கள் புத்திசாலித்தனத்தை நான் நம்புகிறேன். நான் நம்பும் ஒரே விஷயம் உங்கள் புத்திசாலித்தனம். ஏனென்றால், உயிர் என்றால் புத்திசாலித்தனம். ஒரு மரம் மலர்கள் தருகிறது, அது ஒரு புத்திசாலித்தனம். நீங்கள் நடமாடும் மண்ணே புத்திசாலித்தனமானது, நீங்கள் சுவாசிக்கும் காற்று புத்திசாலித்தனமானது. வாழ்க்கையை இப்படி பார்க்கலாம். வாழ்க்கை என்பது புத்திசாலித்தனத்துடைய ஒரு வெடி. நீங்கள் படைப்பு என்று சொல்வதும், படைத்தவன் என்று சொல்வதும், உச்சபட்ச புத்திசாலித்தனம், இல்லையா? இப்போது நீங்கள் நம்பக்கூடிய ஒரே விஷயம், அதுதான். அதில் நீங்கள் முழுமையாக போனால்தான் அது வேலை செய்யும். நீங்கள் இப்படி போனால் அது உங்களுக்கு பொய்யான சுகத்தையும் ஆறுதலையும் தரும். இந்த முட்டாள்தனமான விஷயங்களோடு வாழ்நாள் முழுக்க போகலாம், அது வேலை செய்யாது என்று உங்களுக்கு தெரியும், ஆனால் போதுமான தீவிரத்தில் உணரவில்லை. 

படைப்பின் மூலத்தை உணர்வதன் அவசியம்

அதனால் நீங்கள் என்ன முட்டாள்தனம் செய்து கொண்டிருந்தாலும், அதற்கு முழுமையாக உங்களைக் கொடுங்கள். சீக்கிரமே, ஒரு நாளிலேயே அது வேலை செய்யாது என்று உங்களுக்கு தெரிந்துவிடும். அது வேலை செய்யாது. அது வேலை செய்யாது என்று நீங்கள் உணர்ந்தால் நீங்கள் மாறுவீர்கள் என்று நான் நம்புகிறேன். நான் தவறாக சொல்கிறேனா? நீங்கள் மாறுவீர்கள் என்று நான் நம்பலாமா?

பங்கேற்பாளர்கள்: ஆம்

ஏதோ ஒன்று வேலை செய்யவில்லை என்றால், அது வேலை செய்யாது என்று உங்களுக்கு உறுதியாக தெரிந்தால், நீங்கள் மாறுவீர்கள். 

நிறைவும் முழுமையும் இது கிடைத்தாலோ அது கிடைத்தாலோ வராது. அது, இந்த உயிர்த்துளி முழு உயிர்ப்பாக இருந்தால்தான் நடக்கும். உங்களுக்குள் இருக்கிற படைப்புடைய மூலத்தையே நீங்கள் உணர்ந்தால்தான் நடக்கும். நீங்கள் அதை தொட்டால் மட்டும்தான் எல்லாமே நன்றாக இருப்பதை உணர்வீர்கள். நீங்கள் இப்போது வாழ்க்கையை கால்பந்து விளையாட்டு போல விளையாடலாம். விளையாட்டு நடக்கும்போது நீங்கள் அதை விளையாடலாம், நீங்கள் நிறுத்த நினைக்கும்போது அது நின்றுவிடும். அப்போது எதுவும் பிரச்சனையாக இருக்காது.