கேள்வி: சத்குரு, நீங்கள் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பற்றி கொஞ்சம் பேச முடியுமா? மேலும், உண்மையை உணர்வதற்கு குரு தேவையில்லை என்று அவர் நிராகரித்து வந்தது பற்றி உங்கள் கருத்து என்ன?

சத்குரு: ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி மதனப்பள்ளி எனும் கிராமத்தில் பிறந்தார். அவர் பிறந்து வாழ்ந்த அந்த நூற்றாண்டு வயதான வீட்டிற்கு நாம் சென்றிருக்கிறோம். மிக அழகான சிறிய வீடு, ஒரு நல்ல இடம். தற்போது அவரது நினைவிடம் போல பராமரிக்கப்பட்டு வருகிறது. மதனப்பள்ளி ஒரு மிகச்சிறிய கிராமமாக இருந்தாலும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அங்கே ஒரு பள்ளிக்கூடம் ஒன்றை கட்டியதால் அந்த பள்ளிக்கூடத்திற்காகவே இப்போது எல்லாவிதமான மக்களும் அங்கே செல்கிறார்கள்.

மேடம் பிளாவட்ஸ்கியும் தியாசபிகல் சொசைட்டியும்

Helena_P._Blavatsky_wikipediaஒரு நேரத்தில், 19ஆம் நூற்றாண்டின் இறுதிவாக்கில், இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், உலகம் முழுவதும் தியாசபி (இறை ஞானம்) மிகப்பெரிய அளவில் பரவியது. இதைத் தோற்றுவித்த மேடம் பிளாவட்ஸ்கி, மறைஞானத்திலும், மந்திர தந்திரங்களிலும் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார். அந்த காலகட்டத்தில் மறைஞானம் பற்றிய தேடலுடன் பெரும்பாலான பிரிட்டிஷார் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்து மேக்ஸ்முல்லர், பால்பிரண்டன் மற்றும் பலரும் இந்தியாவுக்கு பயணம் செய்து பல புத்தகங்களை எழுதினார்கள். அவர்களையெல்லாம் முந்திக்கொண்டு மேடம் பிளாவட்ஸ்கி இங்கே வந்திருந்தார்.

அவர்களது கனவு ஒரு "துல்லியமான உயிரை/மனிதரை" உருவாக்குவதாக இருந்தது.

அந்த நாட்களில், ஏதோ ஒரு இடத்திற்குப் போனால் கற்றுக்கொள்ளலாம் என்பது போன்ற சூழ்நிலை இல்லை. நீங்கள் குதிரை மீது கடினமான ஒரு சவாரி செய்து, அறிமுகமில்லாத ஒரு நாட்டுக்கு சென்று எல்லாவிதமான சூழ்நிலைகளிலும் போராடிய பிறகே சரியான குருவை சந்திக்க முயற்சிக்க முடியும் என்பதாக இருந்தது. இதுவே ஒரு சாகச பயணமாக இருந்தது. ஒருவித தீவிரமும், உள்ளார்ந்த தேடலும் இல்லையென்றால் உங்கள் உயிரை பணயம் வைத்து இதுபோன்ற ஒரு சாகச பயணத்தில் உங்களால் ஈடுபட முடியாது.

மேடம் பிளாவட்ஸ்கி எல்லாவிதமான இடங்களுக்கும் பயணம் செய்திருந்தார். முதலில் திபெத் சென்றார். அடுத்து இந்தியா முழுவதும் பயணித்த பிறகு தமிழகம் திரும்பி தியாசபிகல் சொசைட்டியை துவங்கினார்‌ - இது இன்றும் இருக்கிறது.

மைத்ரேயா அல்லது உலகின் ஆசான்

அவர்கள் எந்த அளவுக்கு அதில் ஈடுபட்டிருந்தார்கள் என்பது நமக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் யோக கலாச்சாரத்தில் சுனைரா எனும் யோகி இருந்தார். சுமார் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் அவர். மனித விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக ஒரு சரியான மனிதனை உருவாக்கினால், அவர் மூலமாக இதை மக்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்துவிட முடியும் என்று‌ அவர் நம்பினார். ஒருவகையில் அவர் சிவனின் பாரம்பரியத்தில் வந்தவராக இருந்ததால் அவரது கனவு அதேபோன்று இன்னொரு உயிரை உருவாக்க வேண்டும் என்பதாக இருந்தது. வாழும் சிவனை இன்னொரு முறை அவர் உருவாக்கிட நினைத்தார் - முழுமையாக பன்முக ஆற்றல் கொண்டவராக இந்த உலகத்துக்கு மிகச்சரியான ஆசானாக அவர் இருப்பார் என நம்பினார். எந்த ஒரு குறிப்பிட்ட பயிற்றுவிக்கும் முறையிலும் சிக்கிக் கொள்ளாதவராகவும் இருப்பார். எந்தெந்த வழிகளில் எல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் மனித உடலையும் மனித விழிப்புணர்வையும் சிவன் முழுமையாக ஆராய்ந்து பார்த்திருந்தார். எனவே அப்படிப்பட்ட ஒருவர் வேண்டும் என சுனைரா விரும்பினார்.

எந்தெந்த வழிகளில் எல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் மனித உடலையும் மனித விழிப்புணர்வையும் சிவன் முழுமையாக ஆராய்ந்து பார்த்திருந்தார். எனவே அப்படிப்பட்ட ஒருவர் வேண்டும் என சுனைரா விரும்பினார்.

அப்படிப்பட்ட ஒரு உயிருக்கான சக்தி உடலை கட்டமைக்க துவங்கினார் சுனைரா. அதற்குப் பிறகு, அதன் மீது ஒரு பொருள் உடலை உருவாக்கி, அந்த உயிரை சில நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகள் ஆயுளோடு தயார் செய்து இந்த உலகில் சுதந்திரமாக விட்டுவிட்டால் அவர் இந்த உலகையே மாற்றி அமைத்துவிடுவார் என நம்பினார்.

இந்த நோக்கத்தில் சுனைரா தமது பணியை துவங்கினார் - மனிதகுலத்தின் உச்சபட்ச நண்பன் என்ற பொருளில் இதற்கு மைத்ரேயா என அவர் பெயர் சூட்டியிருந்தார் - ஆனால் திட்டம் நிறைவேறாமலே அவர் இறந்தார். இப்படியே கடந்த 40,000 ஆண்டுகளில் அங்கும் இங்குமாக ஆர்வமிக்க பல யோகிகள் இதே திட்டத்தை கையில் எடுத்தார்கள். மனித விழிப்புணர்வை மாற்றியமைக்கவல்ல ஆசானாக திகழக்கூடிய அந்த உயிருக்கான சக்தி உடலை உருவாக்கிட முனைந்தார்கள். இது நடந்தது, மீண்டும் கைவிடப்பட்டது, மீண்டும் நடந்தது, மீண்டும் கைவிடப்பட்டது. இப்படியாக தொடர்ந்து பல்வேறு யோகிகள் இதை கையில் எடுத்து இதே விஷயத்தை உருவாக்கிட பலமுறை முனைந்தார்கள்.

தியோசபி - இறைஞானம்

 

charles-webster-leadbeater-&-annie-besant-wikipedia

மேடம் பிளாவட்ஸ்கி, லீட்பீட்டர் மற்றும் அன்னிபெசன்ட் என அனைவரும் இணைந்து இந்த தியாசபி இயக்கத்தை உலகம் முழுவதும் பரப்பிட முனைந்தார்கள். அதில் அவர்கள் பெருமளவு வெற்றியும் கண்டார்கள். உலகிலேயே மந்திர தந்திரங்களில் முன்னோடியான மிகப்பெரிய ஒரு நூலகத்தை அவர்கள் சேகரித்தார்கள். அது இன்றும் தியாசபிகல் சொசைட்டி ஆஃப் இந்தியாவில் இருக்கிறது. மந்திர தந்திரம் பற்றிய எல்லாவகையான புத்தகங்களையும் சேகரித்து, ஒரு முழுமையான வாசிக்கும் குழுவை அவர்கள் உருவாக்கினார்கள்.

இன்றும்கூட ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் குழுவினர் வாசிக்கும் வட்டம் அல்லது வாசிக்கும் குழுவினர் என்றே குறிப்பிடப்படுகிறார்கள். ஏனென்றால் இம்மாதிரியான வாசிக்கும் வட்டத்தை உருவாக்கியவர்கள் அன்னிபெசன்ட் மற்றும் லீட்பீட்டர் ஆவார்கள். அன்னிபெசன்ட் மற்றும் லீட்பீட்டர் இருவருமே புத்திசாலித்தனம் மிளர்பவர்களாக இருந்தார்கள், அதுபற்றி கேள்வியே இல்லை, ஆனால் அவர்களுக்கு என்று ஒரு உள் அனுபவம் நிகழ்ந்திருக்கவில்லை.

பயிற்சி

இது பற்றிய தகவல்களை அவர்கள் பெருமளவில் சேகரித்தார்கள். இந்த தகவல்கள் மற்றும் அவர்களது புத்திசாலித்தனம் மூலமாக தங்களால் இதை மீண்டும் மறு-உருவாக்கம் செய்திட முடியும் என நம்பினார்கள். எனவே அவர்கள் இந்த அகிலத்திற்கே ஆசானாக இருக்கக்கூடிய உயிருக்கு தகுந்த உடலை தேடத் துவங்கினார்கள். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியை தேர்ந்தெடுத்து, கடும் பயிற்சிகளில் ஈடுபடுத்தி, உடலளவிலும் மனதளவிலும் அவரை தயார்செய்யத் துவங்கினார்கள்.

...அவர் ஒரு மலரை போல் இருந்தார் - அவரது நறுமணத்தை யாராலும் தவிர்க்க முடியவில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

லீட்பீட்டர் இந்தியாவில் இருந்து கிருஷ்ணமூர்த்தியை அழைத்துக்கொண்டு இங்கிலாந்து சென்றார். அங்கே ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி மேற்கத்திய நாகரிகத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். மிகச் சிறப்பான கோட் சூட்களை அணிவதில் விருப்பம் கொண்டவராக, பிக்காடிலியின் மிக சிறப்பான 'டை'களை அணிந்தார். ஒரு 'டை'-யை தேர்வு செய்வதற்கே பல மணி நேரம் எடுத்துக்கொள்வார் - அவ்வளவு கவனம் செலுத்துவார். அங்கே அவர் பிஎஸ்ஏ மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கி வண்டி ஓட்டுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.

அவரது தியானத்தன்மை சார்ந்த பயிற்சிகள் தொடர்ந்தது, அற்புதமான ஒரு மனிதராக அவர் மாறினார். லண்டனில் இருந்தபோது அவர் எப்படி இருந்தார் என்பது நமக்கு தெரியவில்லை, ஆனால் குறைந்தபட்சம் பிற்காலத்தில் அவரது இருப்பு யாராலும் அனுமானிக்க முடியாததாக இருந்தது. ஆனால் அவர் ஒரு மலரை போல் இருந்தார் - அவரது நறுமணத்தை யாராலும் தவிர்க்க முடியவில்லை.

உலகின் ஆசான் நானல்ல

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு சுமார் 32 - 33 வயது இருந்தபோது தியாசபிகல் சொசைட்டியினர் இவர்தான் உலகின் ஆசான் என உலக மக்களுக்கு அறிமுகப்படுத்த விரும்பினர். நெதர்லாந்தில் ஒரு பெரும் கூட்டத்தை ஏற்பாடு செய்தனர், அதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள் என்றும் சொல்கிறார்கள்.

மேடைக்கு வந்த ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, "நான் இந்த உலகத்திற்கு ஆசான் இல்லை, நான் ஒன்றுமில்லாதவன்" என்று அறிவித்தார்.

மேடைக்கு வந்த ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, "நான் இந்த உலகத்திற்கு ஆசான் இல்லை, நான் ஒன்றுமில்லாதவன்" என்று அறிவித்தார். மொத்த தியாசபிகல் சொசைட்டியும் அவர்களது திட்டமும் அத்தோடு கரைந்தது. அவரது வாழ்நாள் முழுவதற்கும் அவரை இதற்காகவே தயார் செய்திருந்தார்கள், அதன்பிறகு அவர் மேடையில் தோன்றி "நான் ஆசான் இல்லை; நான் ஒன்றுமே இல்லை" என்றார். பெரும்பாலான முட்டாள்கள், "ஆமாம், நான்தான் இந்த உலகத்திற்கு ஆசான், நான்தான் இயேசு, புத்தரின் மறு அவதாரம்" என்று சொல்லியிருப்பார்கள். அவரிடம் அந்த ஞானமும், தெளிந்த பார்வையும், "இவர்கள் என்னைப் பற்றி உருவாக்க நினைக்கும் முட்டாளாக நான் இருக்கப்போவதில்லை" என்ற தெளிவும் இருந்தது.

அதன் பிறகு அவர் தியாசபியிலிருந்து வெளியேறி பொதுக்கூட்டங்களில் மக்களிடையே பேசத் துவங்கினார். அவர் மிக அற்புதமான பேச்சாளராக இருந்தார். மக்கள் அவரைச் சுற்றி குழுமினார்கள். அவர் எப்போதுமே ஒரு குருவை சார்ந்து இருக்கக் கூடாது என்பது பற்றியே பேசினார், ஏனென்றால் அவரது ஆசிரியர்களைப் பற்றிய அவரது சொந்த அனுபவமே அவ்வளவு கொடூரமாக இருந்தது.

அவரது அபாரமான அறிவாற்றலாலும் உணர்வாலும், அவர் பேசினாலே மக்கள் அப்படியே அசைவின்றி அமர்ந்திருந்தார்கள். அவர் பேசும் விதமே ஏதோ மாயாஜாலம் போல் இருந்தது. இந்த ஒரு விஷயத்தை அவரிடம் நீங்கள் கவனித்து பார்க்க முடியும், அவர் எப்போதுமே கூர்மையாகவும் தெளிவாகவும் இருந்தார். அவரது பொருள் தன்மையான இருப்பே அப்படி இருந்தது. நீங்கள் அமர்ந்து அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தால், உங்கள் கையை நீங்கள் அசைத்தால் கூட, அந்த அளவு அசைவிருந்தால் கூட அவர் எழுந்து சென்று விடுவார்!

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி வகுப்பில் சத்குரு

எனக்கு பதினேழு பதினெட்டு வயது இருக்கும்போது, கிருஷ்ணமூர்த்தி வாசிப்பு வட்டம் என்பது ஃபேஷனாக இருந்தது. இந்திய அறிவாளிகள் மத்தியில், நீங்கள் ஜே கிருஷ்ணமூர்த்தி, கீர்கேகார்ட், தஸ்தாவ்ஸ்கி - இவர்களின் எழுத்துகளையெல்லாம் படிக்காமல் இருந்தால் உங்களுக்கு மூளையே இல்லை என்பது போல இருந்தது -அப்போது அப்படித்தான் இருந்தது!

இந்த மனிதர் நேர்மையானவராக இருந்தார். மிக நேர்மையாக இருந்தார். அந்த மனிதரின் நேர்மை அவரை சுற்றிலும் பொங்கி பிரவகித்துக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு சனிக்கிழமை மதியமும் அவர்கள் வாசிப்பு வட்டத்தை ஏற்படுத்தி இருந்தார்கள். அதில் அவரது சில ஒலிநாடாக்களை ஒலிபரப்பி, பிறகு அவரது புத்தகங்களை வாசிப்பார்கள். எனது நண்பர்கள் சிலர் என்னை அழைத்ததால் நானும் அதில் கலந்து கொண்டேன். அப்போது அவர் உயிரோடு இருந்தார். ஒரு சிறிய வீடியோவை அன்று ஒளிபரப்பினார்கள், அவர் பேசிக்கொண்டிருந்தார். அதில், அவர் முன் அமர்ந்திருந்த கூட்டத்திலிருந்து யாரோ ஒருவர் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் உடனே, "என்னை அப்படி பார்க்காதீர்கள்" என்றார். அந்த மனிதர், "நான் என்ன செய்வது? என் கண்கள் அப்படி இருக்கிறது" என்றார். "இல்லை ஐயா, தயவு செய்து நீங்கள் என்னை அப்படிப் பார்க்காதீர்கள்" என்றார். இதற்கு, "நான் என்ன செய்வது? நான் என் கண்களை மூடிக்கொள்ள வேண்டுமா? நான் வெறுமே உங்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன், அவ்வளவுதான்" என்றார். "இல்லை, நீங்கள் என்னை அப்படி பார்க்கக் கூடாது; இந்த மனிதரை வெளியே அழைத்துச் செல்லுங்கள்" என்றார் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி.

முதன்முதலாக அவரது வகுப்பிற்கு சென்ற நாளில் இதை பார்க்க நேர்ந்தது, இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த மனிதர் நேர்மையானவராக இருந்தார். மிக நேர்மையாக இருந்தார். அந்த மனிதரின் நேர்மை அவரை சுற்றிலும் பொங்கி பிரவகித்துக் கொண்டிருந்தது. இந்த மனிதரின் தூய்மையான நேர்மை தவிர்க்கவே முடியாததாக இருந்தது. அவரைப்பற்றி நான் அதிகம் வாசிக்கவில்லை, ஆனால் அவரது சில ஒலி நாடாக்களை கேட்டிருக்கிறேன், வீடியோக்களை பார்த்திருக்கிறேன். நான் அவரை இரசித்தேன், ஆனால் யார் சொல்வதையும் கேட்கும் ஒரு நிலையில் நான் இல்லை. வாழ்க்கை என்னை எப்போதும் அழைத்துக்கொண்டே இருந்தது. எனவே எனக்கு எனது பெற்றோர்களையோ, ஆசிரியர்களையோ, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியையோ கேட்க நேரம் இல்லை. எனக்கு எதற்கும் நேரமில்லாததால் அந்த வாசிப்பு வட்டத்தை விட்டுவிட்டு தொடர்ந்து என் பாதையில் பயணித்தேன்.

ஞானத்தின் பாதை

தொடர்ந்து ஐந்து வாரங்கள், ஒவ்வொரு சனிக்கிழமை மதியமும் அங்கே சென்று கலந்து கொண்டிருந்தேன். அவர்கள் ஒரு அரை மணிநேர வீடியோ அல்லது ஆடியோவை ஒலிபரப்பி விட்டு பிறகு கலந்துரையாடலில் இறங்குவார்கள். அது ஒரு மிகப்பெரிய குழப்பமாகவே இருந்தது, ஏனென்றால் அவரை சுற்றி இருந்த யாருக்குமே அவர் என்ன பேசுகிறார் என்பது புரியவில்லை. அவர் வெறுமனே இது, இது மற்றும் இது என்றே பேசுவார். "அந்த இது என்ன?" அதற்கு அவர், "இதுதான் இது" என்பார், ஏனென்றால் அவர் எந்த ஒரு வழிமுறையையோ, எந்த ஒரு எடுத்துக்காட்டையோ, எந்த ஒரு உவமையையோ, நகைச்சுவையையோ பயன்படுத்த மறுத்தார். இது வெறுமே அறிவுக்கூர்மையை கொண்டு பிரித்துப் பார்ப்பதாக இருந்தது. இதுதான் தூய்மையான ஞானமார்க்கம். ஞானமார்க்கம் என்றால் அறிவின் பாதை.

...ஏனென்றால் அவர் எந்த ஒரு வழிமுறையையோ, எந்த ஒரு எடுத்துக்காட்டையோ, எந்த ஒரு உவமையையோ, நகைச்சுவையையோ பயன்படுத்த மறுத்தார். இது வெறுமே அறிவுக்கூர்மையை கொண்டு பிரித்துப் பார்ப்பதாக இருந்தது.

நீங்கள் என்னை கேட்டால், இந்த உலகில் இருக்கும் 700 கோடிக்கும் மேற்பட்ட மக்களில் (2010ல் பேசுகையில்), இந்த விதமான ஒரு செயல்முறைக்கு ஏற்ற ஒரு பத்தாயிரம் பேரைக்கூட உங்களால் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு அதி கூர்மையான புத்திசாலித்தனத்துடன் எந்த ஒரு அர்த்தமும் இல்லாமல் எதையும் தொடர்ந்து துண்டுதுண்டாக கூறுபோடும் தெளிவு எத்தனை பேரிடம் இருக்கிறது. ஒருவேளை நீங்கள் ஒரு ஆயிரம் பேரை கண்டுபிடிக்கலாம், ஆனால் அந்த ஆயிரம் பேரும் கூட இந்த ஒரு ஆன்மீக செயல்முறையில் ஆர்வம் காட்டமாட்டார்கள், தங்கள் அறிவுக்கூர்மையைக் கொண்டு பங்குச்சந்தை அல்லது வேறு ஏதோ ஒன்றை கூறுபோட்டு பிரித்துப்பார்க்க முயற்சி செய்வார்கள்.

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியை சுற்றியிருந்த ஒவ்வொருவருமே இந்த மனிதர் சிறப்பானவர் என்பதை உணர முடிந்தது, ஆனால் யாராலும் அவர் என்ன பேசுகிறார் என்பதையே நெருங்க முடியவில்லை. ஏனென்றால் அவர் ஒரு குருவாக செயலாற்ற மறுத்தார். யாருக்கும் எந்த ஒரு செயல்முறைக்கும் தீட்சை வழங்கவோ, எந்த ஒரு வழிமுறையையோ, செயல்முறையையோ வழங்க மறுத்தார்.

ஒற்றைச் சக்கரத்தில் உங்கள் காரை ஓட்டினால்

"அது எப்படியும் நடக்கும்" என்றே அவர் சொல்லி வந்தார். இது உண்மைதான். எப்படியிருந்தாலும் இது நடக்கும், ஆனால் ஒருவேளை இதற்கு பத்து லட்சம் பிறவிகள் தேவைப்படலாம். எனவே நீங்கள் அவசரத்தில் இருந்தால், ஒன்று உங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு புத்திக்கூர்மை இருக்கவேண்டும் - இது அரிது - அல்லது உங்களது மற்ற கருவிகளான உடல், உணர்ச்சி, சக்தி ஆகியவற்றை பயன்படுத்த விருப்பத்தோடு இருக்க வேண்டும். அவர் தனது காரின் ஒரே சக்கரத்தில் தொடர்ந்து பயணம் செய்துகொண்டே இருந்தார். அவர் அதில் திறமைசாலிதான், ஆனால் வேறு யாரும் அப்படிச் செய்ய முடியவில்லை.

அவர் எங்கே இருந்தாரோ, அங்கே ஒரு நறுமணம் இருந்தது. அவர் நீங்கியதும், புத்தகங்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறது. ஏனென்றால் உயிரோட்டமான செயல்முறை என எதுவுமில்லை.

உங்களில் எத்தனை பேரால் உங்கள் காரை இரண்டு சக்கரங்களில் ஓட்ட முடியும்? அப்படி ஓட்டிச் செல்லக்கூடிய மக்களும் இருக்கிறார்கள், ஆனால் அதுவா ஒரு காரை மிகச் சிறந்த முறையில் இயக்குவதற்கான வழி? அந்த மனிதர் உங்களுக்கு இப்படி பரிந்துரைக்கக்கூட செய்வார்: "உங்கள் காரை இரண்டு சக்கரங்களில் மட்டும் ஓட்டினால், டயரின் தேய்மானம் மிக குறையும், அது இடத்தையும் மிகக் குறைவாகவே எடுத்துக்கொள்ளும், நெடுஞ்சாலைகளின் அகலத்தை நீங்கள் இன்னும் குறுகலாக்கிவிடலாம், இப்படி பல பலன்கள் இருக்கிறது" என்பார். ஆனால் எத்தனை மக்களால் இப்படி செய்ய முடியும்? அதைவிட கொடுமை, அவர் தனது காரை ஒற்றை சக்கரத்தில் ஓட்டிச் சென்று கொண்டிருக்கிறார்.

அவர் ஒரு அற்புதமான மனிதர், ஆனால் அவர் ஒரு மலரை போல வாழ்ந்து, மலரைப் போலவே உதிர்ந்தார். அவர் எங்கே இருந்தாரோ, அங்கே ஒரு நறுமணம் இருந்தது. அவர் நீங்கியதும், புத்தகங்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறது. ஏனென்றால் உயிரோட்டமான செயல்முறை என எதுவுமில்லை.

கலீல் ஜிப்ரானும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும்

kahlil-gibran-wikipediaலெபனானில் உள்ள கலீல் ஜிப்ரானின் வீட்டிற்கு நாம் செல்ல நேர்ந்தது. இந்த வீடு பார்க்கத்தகுந்த ஒன்று. மலைகளின் நடுவே மிக அழகான இடம் அது. வீட்டின் வரவேற்பறையின் உள்ளே ஒரு சிறு ஓடையும் ஓடிக்கொண்டிருந்தது. ஒருமுறை ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி வேறு எங்கோ ஓர் இடத்தில் இருந்தார், அவரை சந்திப்பதற்காக கலீல் ஜிப்ரான் சென்றிருந்தார்.

பிறகு ஜிப்ரான் இப்படி பகிர்ந்து கொண்டார், "நான் அந்த அறைக்குள் நுழைந்த போது, அன்பின் சுவர்களுக்குள் இருந்தேன்." உங்களால் எப்போதுமே ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியை அன்போடு இணைத்துப் பேச முடியாது. அவரை பார்ப்பதற்கும் நிச்சயம் அன்பானவராக தெரிய மாட்டார், ஆனால் அவர் மிக அன்பானவர். அவரது சக்திநிலை முழுமையாக அன்பில் திளைத்திருக்கும், ஆனால் அவரது வார்த்தைகள் கூர்மையான கத்தி போலிருக்கும்.

அவரைச் சுற்றியிருந்த மக்கள் எதையோ உணர்ந்தார்கள், ஆனால் அதை அவர்களால் பிடித்துக்கொள்ள முடியவில்லை, ஏனென்றால் அவர்களுக்கு அவர் பிடியே கொடுக்கவில்லை. "இதை நீங்கள் பற்றிக் கொண்டால், நீங்கள் இதனுடனே சிக்கிப் போய்விடலாம், எனவே இதை பிடித்துக் கொள்ளாதீர்கள்" என்றார். இது ஒருவகையான வழிமுறை. நாம் இதை தவறு என்று சொல்லவில்லை. இது ஒரு அழகான வழி. லட்சக்கணக்கில் அதிகூர்மையான மனங்கள் இந்த உலகத்தில் இருந்தால் அது ஒரு அற்புதமான வழியாக பல வேலைகளையும் செய்திருக்கும். ஆனால் மனிதகுலம் இப்போது இருக்கும் நிலையில், லட்சக்கணக்கான விஷயங்களில் மக்களின் புத்திசாலித்தனம் முடங்கிப் போய் கிடக்கும் நிலையில், அந்த வழிமுறை பெரும்பாலான மக்களை எங்கேயும் எடுத்துச் செல்லாது. அது ஒரு அழகான செயல்முறை தான், ஆனால் அதை ஜீரணித்துக் கொள்ளுமளவுக்கு மக்கள் இருக்க வேண்டுமே.

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஒரு நறுமணமிக்க மலரை போலிருந்தார். அவர் வாழ்ந்தவரையில் அந்த மலரின் நறுமணம் உணரக்கூடியதாக இருந்தது. அவரது வார்த்தைகள் நன்றாக இருந்தது. அதை பயன்படுத்தி சில விஷயங்களை நீங்கள் உதிர்க்க விரும்பினால் அது பயனுள்ள ஒரு அறிவார்ந்த செயல்முறையாக இருக்கும். அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் அவரது புத்திக்கூர்மை சர்வசாதாரணமாக வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது.

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஏற்படுத்திய தாக்கம்

ஐந்து சனிக்கிழமை மதியப் பொழுதுகளில் ஒன்றரை மணிநேரம் நாம் கலந்து கொண்டதில், ஒருநாள் அவர் கல்விமுறையைப் பற்றி பேசினார். அது என்னை வெகுவாக ஈர்த்தது. ஏனென்றால், அதுவரையில் மக்களுக்கு மாற்றுக் கல்வி முறையில் கல்வி கற்பிப்பது பற்றி நான் யோசிக்கவே இல்லை. என் மனதில், இந்த கல்வி முறைகள் எல்லாவற்றையும் எப்படி கலைத்துப் போடுவது என்பதைப் பற்றி மட்டுமே அதுவரை நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். இந்த கல்விமுறைகள் எல்லாமே இருப்பதிலேயே மிகக் கொடுமையானவை என்றே நான் நினைத்திருந்தேன். ஒரு மாமரத்தின் மேலேயோ அல்லது மாமரத்தின் கீழேயோ - மாம்பழம் விளையும் பருவத்தைப் பொருத்து - இருந்தாலே நான் பள்ளிக்கூடத்தில் இருப்பதை விட நன்றாகவே வளர்ந்திருப்பேன்.

இப்படித்தான் அந்த ஐந்து சனிக்கிழமை மதியங்களின் அந்த ஒன்றரை மணி நேர பேச்சு என் மீது அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. எனது மகளை ஒரு வகையில் அவரது பொறுப்பில் விட்டுவிட என்னால் முடிந்தது.

கல்வியைப் பற்றி அவர் பேசும் போது, திடீரென்று எனக்குள் இதை செய்வதற்கு இதைத் தவிர வேறு வழி இருக்கிறதே என்று தோன்றியது. அப்போது எனக்கு பதினேழு அல்லது பதினெட்டு வயது இருக்கும், எனது வாழ்க்கை முறை தாறுமாறாக இருந்தது, வேறு எங்காவது ஓடிப் போய்விடலாமா என்றுகூட நான் அப்போது கனவு கண்டுகொண்டிருந்தேன். அவர் பேசுவது போன்ற ஒரு கல்வி முறையில்தான் குழந்தைகளை நாம் ஈடுபடுத்த வேண்டும் என்றும் நான் கனவு கண்டு கொண்டிருந்தேன்.

இப்படித்தான் என் மகளின் வாழ்விலும் அவள் பள்ளிக்கு செல்லும் வயதில் நடந்தது. ஊட்டியில் இருந்த மிகச்சிறந்த பள்ளி ஒன்றில் அவருக்கு இடம் கிடைத்திருந்தது, அங்கேதான் அனைவரும் தங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அப்போது திடீரென்று என் மனதில் பளிச்சிட்டது, "சரி, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி பள்ளி இருக்கே, பிள்ளையை ஏன் அங்கே அனுப்பக்கூடாது?" அதன்படியே அவரது பள்ளிக்கு அனுப்பி வைத்தோம், அங்கேதான் எட்டு வருடங்கள் தங்கி பள்ளிக்கல்வியை முடித்தார் ராதே.

இப்படித்தான் அந்த ஐந்து சனிக்கிழமை மதியங்களின் அந்த ஒன்றரை மணி நேர பேச்சு என் மீது அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. எனது மகளை ஒரு வகையில் அவரது பொறுப்பில் விட்டுவிட என்னால் முடிந்தது. வெறும் ஏழரை மணி நேரம் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியோடு தொடர்பில் இருந்ததற்கே அவர் அவ்வளவு தாக்கத்தை என்னில் ஏற்படுத்தியிருந்தார்.