மக்களின் அறிவை வளர்ப்பதற்கு நவீன சமூகங்கள் நிறைய விஷயங்களை செய்து வருகின்றன. இருப்பினும் பெரும்பான்மை மக்களுக்கு இன்னமும் உணர்ச்சிதான் தீவிரமான அனுபவமாக இருக்கிறது. அவர்களது உடல், அறிவு மற்றும் அவர்களின் சக்தி நிலைகள் கூட அவ்வளவு தீவிரத்தை அவர்களுக்குத் தருவதில்லை. அவர்கள் அனுபவத்தில், அவர்களுடைய உணர்ச்சிகள்தான் - அது கோபமாகவோ, வெறுப்பாகவோ, அன்பாகவோ, கருணையாகவோ அல்லது வேறெந்த உணர்ச்சியாகவோ இருக்கலாம் - மிகவும் தீவிரமாக இருக்கின்றன.

உணர்ச்சியால்தான் உங்கள் வாழ்க்கையில் சுவை கூடுகிறது. உணர்ச்சி என்பது இயற்கையின் தந்திரம். இயற்கை, உணர்ச்சியை உருவாக்கி உங்களை வாழத் தூண்டுகிறது.

எண்ணமும், உணர்ச்சியும் உண்மையில் வெவ்வேறானவை அல்ல. எண்ணம் என்பது வறண்ட தன்மை கொண்டது, காரணரீதியுடன் இருப்பது. உணர்ச்சியும் அதே காரண அறிவிலிருந்துதான் வருகிறது. ஆனால் காரண அறிவுக்குப் புறம்பானது போலப் பாவனை செய்கிறது. உணர்ச்சியானது எண்ணத்தின் நீர்ப்பு பகுதியாக இருக்கிறது. அப்படி இல்லையென்றால், உங்கள் வாழ்க்கை வறண்டு போய்விடும். உணர்ச்சியால்தான் உங்கள் வாழ்க்கையில் சுவை கூடுகிறது. உணர்ச்சி என்பது இயற்கையின் தந்திரம். இயற்கை, உணர்ச்சியை உருவாக்கி உங்களை வாழத் தூண்டுகிறது. ஏனெனில் உங்கள் வாழ்வை நூறு சதவிகிதம் காரண அறிவின் வழியே நகர்த்தினால், விரைவில் சலிப்பு ஏற்படும். வாழ்வதற்கான எந்தக் காரணமும் உங்களுக்கு இருக்காது. “இருப்பதா, இறப்பதா?” என்ற கேள்விதான் உங்கள் முன் நிற்கும். இப்போதெல்லாம் இப்படிப்பட்ட கேள்விகள் நிறைய வருகின்றன. ஏனென்றால் நாம், நம்மைக் காரண அறிவிற்கு மிக அதிகமாக ஒப்புக் கொடுத்துள்ளோம். வாழ்வை அனுபவபூர்வமாக உணரத் தவறிவிட்டோம். உணர்ச்சி, காரண அறிவின் எல்லையைக் கடந்தும் செயல்படுகிறது. எனவே அது உங்களை வாழ அனுமதிக்கிறது. தொடர்ந்து வாழ்வதற்கான காரணத்தை அது உங்களுக்கு அளிக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆகவே, எண்ணம் வறண்ட தன்மையுடனும், உணர்ச்சியானது நீர்ப்புத் தன்மை கொண்டதாக இருந்தாலும், அவைகள் வெவ்வேறு அல்ல. அதாவது மனமும் இதயமும் வெவ்வேறல்ல. பிறகு எதற்காக மனதையும் இதயத்தையும் இணைப்பதைப் பற்றி இவ்வளவு அதிகமான தத்துவம் பேசப்படுகிறது என்பது எனக்குத் தெரியவில்லை. எப்படியிருப்பினும் அவைகள் தனித்திருப்பவை அல்ல, இரண்டும் சேர்ந்தே இருப்பவைதான். ஒரு குறிப்பிட்ட நபரை, இவர் அற்புதமானவர் என்று நீங்கள் எண்ணுவதாக வைத்துக்கொள்வோம். உங்களுக்குள் அந்த நபர் குறித்த இனிமையான உணர்ச்சிகளையே நீங்கள் கொண்டிருப்பீர்கள். வேறு ஒரு நபரை, இவர் மோசமானவர் என்று நீங்கள் எண்ணினால், அவர் குறித்து நீங்கள் இனிமையற்ற உணர்ச்சிகளுடன்தான் இருப்பீர்கள். ஒருவரை மோசமானவர் என்று நீங்கள் நினைக்கும் அதேநேரத்தில் அவரைப் பற்றி இனிமையான உணர்ச்சிகள் நீங்கள் கொண்டிருக்க முடியாது. அதேபோல் ஒருவரை அற்புதமானவர் என்று நீங்கள் நினைக்கும் அதேநேரத்தில் அவரைப் பற்றி மோசமான உணர்ச்சிகள் கொண்டிருக்க முடியாது. மக்கள் தங்களது மூளைக்கும், இதயத்திற்கும் இடையில் இருக்கும் முரண் பற்றிப் பேசுகின்றனர். ஆனால் உண்மையில் அங்கே எந்த முரண்பாடும் இல்லை. ஆனால் உணர்ச்சிகள் சற்று மெதுவாக வெளிப்படும், அவ்வளவுதான்.

அவசியமான தருணங்களில் ஒருவர் தனது உணர்ச்சிகளைக் கையாளவில்லை என்றால், பிறகு அவை மிகவும் பைத்தியக்காரத்தனமாக தெரியும். உங்கள் உணர்ச்சிகள் உங்கள் கட்டுப்பாட்டை மீறிவிட்டால், பிறகு எதையுமே உள்ளது உள்ளபடி பார்க்கமுடியாது, எல்லாம் மாறுபட்டே தெரியும்.

நீங்கள் யாரோ ஒருவரை எப்போதும் அற்புதமானவராக எண்ணியிருந்தீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அவரைச் சுற்றி அளவு கடந்த உணர்ச்சிகளைக் கட்டமைத்திருப்பீர்கள். ஆனால் அந்த நபர் உங்களுக்கு பிடிக்காத ஏதோ ஒன்றைச் செய்துவிட்டால், உடனடியாக உங்கள் தர்க்க மனமானது, “இவர் மோசமான ஒரு நபர்” என்று கூறத் தொடங்கிவிடுகிறது. எண்ணம் இந்த முடிவை எடுத்துவிட்டாலும், அதே முடிவை எடுப்பதற்கு, உணர்ச்சிக்கு ஒரு குறிப்பிட்ட காலமாகிறது. உணர்ச்சியால் சட்டென்று மாற முடிவதில்லை. தனக்கே உரிய சில இயல்புகளைக் கடந்தே அது அந்த முடிவுக்கு வரும். இந்த நபரின் சகவாசம் வேண்டாம் என்று மனம் தெளிவாக உங்களுக்குக் கூறுகிறது. ஆனால் அதே முடிவுக்கு வர உணர்ச்சி நேரம் எடுத்துக் கொள்கிறது. இது எப்படியென்றால் எண்ணம் என்பது இரயில் வண்டியின் என்ஜின் போலவும், உணர்ச்சி என்பது கடைசிப் பெட்டி போலவும் இருக்கிறது. ஒரு புள்ளியை என்ஜின் சீக்கிரம் கடந்து விடுகிறது. ஆனால் அதே புள்ளியை கடப்பதற்கு கடைசிப் பெட்டி சிறிது நேரம் எடுத்துக் கொள்கிறது. ஆனாலும் இரண்டும் ஒன்றாகத்தான் பயணிக்கின்றன. ஆக, நீங்கள் சிந்திக்கும் விதமும் உணரும் விதமும் ஒன்றுதான்.

உணர்ச்சிகளை எப்படி செலுத்துவது, அதேநேரத்தில், தேவைப்படும்போது, நெகிழ்வுடன் அதை எப்படிக் கையாள்வது என்று அறிந்துகொண்டால், பிறகு அவை உங்களுக்கு ஒரு ஆற்றல் வாய்ந்த சக்தியாக இருக்கும். அவசியமான தருணங்களில் ஒருவர் தனது உணர்ச்சிகளைக் கையாளவில்லை என்றால், பிறகு அவை மிகவும் பைத்தியக்காரத்தனமாக தெரியும். உங்கள் உணர்ச்சிகள் உங்கள் கட்டுப்பாட்டை மீறிவிட்டால், பிறகு எதையுமே உள்ளது உள்ளபடி பார்க்கமுடியாது, எல்லாம் மாறுபட்டே தெரியும்.

ஒரு பெண்மணி, சமீபத்தில் இறந்துவிட்ட தனது கணவனின் ஈரம் காயாத கல்லறையின் அருகில் அமர்ந்து, விசிறியால் வீசிக் கொண்டிருந்தார். அந்த வழியே சென்றவர்கள் இதைப் பார்த்து மிகவும் நெகிழ்ந்து போயினர். “இறந்துவிட்ட தன் கணவனிடம் அவள் எவ்வளவு அர்ப்பணிப்பாக இருக்கிறாள்!” அவர்கள் அவளை நெருங்கி வந்து, “உங்கள் கணவர் இறந்துவிட்டதை நாங்கள் அறிகிறோம். உங்களது அர்ப்பணிப்பு எங்கள் கண்களில் நீரை வரவழைக்கிறது. ஆனால் கவலைப்படாதீர்கள், தயவு செய்து மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள். இறந்தவர் மீண்டும் வரமாட்டார், எழுந்திருங்கள்” என்று சமாதானம் கூறினர். அந்த விதவை அதற்கு, “இல்லையில்லை, கல்லறை காயும்வரை நான் மறுமணம் செய்யமாட்டேன் என்று என் கணவருக்கு உறுதி அளித்திருந்தேன்” என்றார்.

உங்களிடம் உணர்ச்சி மட்டுமே இருந்தால், ஒருவேளை உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்பவராக இருக்கலாம்.

உணர்ச்சிகள் தன்னளவில் அழகானவை; அவைகள் வாழ்வின் சாரமாக இருக்கின்றன. அதேநேரத்தில், அதன் சுவையிலேயே நீங்கள் அதிகம் மூழ்கியிருந்தால், உங்கள் அனைத்து அறிவையும் நீங்கள் இழந்துவிடுவீர்கள். இதைத்தான் கௌதம புத்தர் கூட, ‘ஈரமில்லாத ஆன்மாதான், ஞானம் உள்ள ஆன்மா’ என்றார். அவர் சரியாகத்தான் கூறுகிறார். அதே வேளையில், உங்கள் உணர்ச்சியின் மீது போதுமான கட்டுப்பாடு உங்களுக்கு இருந்தால், நீங்கள் விரும்பும்போது அதற்குள் செல்லவும் அதிலிருந்து விடுபடவும் முடிந்தால், பிறகு அது ஒரு மிக அற்புதமான பரிமாணமாக உங்களுக்கு இருக்கும். அப்படி இல்லாமல், உணர்ச்சிகள் உங்கள் கட்டுப்பாட்டை மீறி ஆட்சி செய்தால், அவை பைத்தியக்காரத் தனத்திற்குத்தான் உங்களை இட்டுச் செல்லும்.