மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள்... என்னென்ன அபாயங்கள்?
நமக்கு நாமே செய்துகொள்ளும் கேடுகளைப் பார்க்கையில் இரசாயன விவசாயம், உணவுக் கலப்படம், ஃபாஸ்ட் புட் என பட்டியல் நீள்கிறது! அந்த வரிசையில் தற்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளும் சேர்ந்துள்ளன. இதனால் விளையப்போகும் அபாயம் என்னென்ன என்பதை சத்குரு எடுத்துக்கூறி எச்சரிக்கிறார்!
நமக்கு நாமே செய்துகொள்ளும் கேடுகளைப் பார்க்கையில் இரசாயன விவசாயம், உணவுக் கலப்படம், ஃபாஸ்ட் புட் என பட்டியல் நீள்கிறது! அந்த வரிசையில் தற்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளும் சேர்ந்துள்ளன. இதனால் விளையப்போகும் அபாயம் என்னென்ன என்பதை சத்குரு எடுத்துக்கூறி எச்சரிக்கிறார்!
சத்குரு:
Subscribe
மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளை இந்தியாவுக்குள் நுழைக்கப்பார்ப்பது உண்மையில் நமக்கெல்லாம் ஒரு சோதனையான காலம்தான். இப்போது இந்த வகையில் கத்தரிக்காயை நுழைக்கப் பார்க்கிறார்கள். ஆனால், இந்த நாட்டில் கடந்த 4,000 வருடங்களாக ஆயிரக்கணக்கான கத்தரி வகைகளைப் பயிரிட்டு வருகிறோம். கடந்த 10 முதல் 15 வருடங்களாகத்தான் கத்தரியில் அதிகப் பூச்சித் தொல்லை இருக்கிறது. அதற்காக மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதையை அறிமுகம் செய்வது பொறுப்பற்ற செயல்.
பூச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால், இயற்கை விவசாயத்தைத் தீவிரப்படுத்தலாம். அதை விடுத்து, இதுபோன்று அறிமுகம் செய்வது பல நிலைகளிலும் கெடுதல் தரும். மரபணு மாற்றப்பட்ட கத்தரியை பூச்சி சாப்பிடும்போது அஜீரணத்தால் இறந்துவிடுகிறது. எனவே, நாளடைவில் இது விஷம் என்று அந்தப் பூச்சி சாப்பிடுவதில்லை. பூச்சி சாப்பிடாத உணவு மனிதன் மட்டும் ஏன் சாப்பிட வேண்டும்? புழு, பூச்சிக்கு வயிறு கெடும்போது, மனிதனுக்கு வயிறு கெடாதா?
மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் பயிரிடுவது மக்களின் ஆரோக்கியத்துக்கும் கெடுதல், சுற்றுச் சூழலுக்கும் கெடுதல். சுற்றியுள்ள மற்ற தாவரங்களும் பாதிக்கப்படுகின்றன. மேலும், மண்ணில் உள்ள உயிரினங்கள் அழிந்துவிடுகின்றன. மரபணு மாற்றப்பட்ட பருத்தி நடைமுறைக்கு வந்தபோது அதை உபயோகித்தவர்கள் மற்றும் சுற்றியிருந்த மக்களுக்கு பலவிதமான நோய், ஒவ்வாமை ஆகியவை வந்தன. இவை விஞ்ஞானப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்கா, ஜப்பான் போன்ற வெகு சில நாடுகளில்தான் மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பயிர் செய்கிறார்கள். அங்கேயும் இது மக்களின் விருப்பத்தால் நடக்கவில்லை. அங்கே தனியார்கள், அரசாங்கத்தைவிட சக்தி படைத்தவர்களாக இருப்பதால்தான் இது நடக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் இது உபயோகப்படுத்தப் படவில்லை. பெரும்பாலான விஞ்ஞானிகளும் இதை எதிர்க்கத்தான் செய்கிறார்கள்.
நம் நாட்டில் மிக அதிகமான சதவீதத்தினர் காய்கறி உணவு உண்பவர்கள். ஏற்கெனவே நிறையக் காய்கறி வகைகளின் உபயோகம் நம் நாட்டில் மறைந்து வருகிறது. கம்பு, சோளம், ராகி போன்றவற்றின் உபயோகமும் மறைந்து தற்போது மக்கள் தீட்டப்பட்ட அரிசிதான் பெரும்பாலும் சாப்பிடுகிறார்கள். இப்படி இருக்கும்போது ஒரு மனிதனுக்குத் தேவையான சக்தி வேண்டுமென்றால், பல காய்கறி வகைகள் தேவை. இப்போது இயற்கை உருவாக்கியவற்றை எல்லாம் அழித்து விட்டு நாம் ஏதோ புது இயற்கையை உருவாக்கப் போகிறோம் என்பது மிகவும் தவறான அணுகுமுறை. எனவே, நிரந்தரத் தீர்வாக இயற்கை விவசாயத்தை முயற்சிக்க வேண்டுமே தவிர, இதுபோல மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை அறிமுகப்படுத்துவது தவறு.
மேலும், இந்தத் தொழில்நுட்பத்தால் விவசாயிக்கு அதிக லாபம் கிடைக்கும் என்ற கண்ணோட்டமும் தவறு. ஏனெனில் மரபணு மாற்றப்பட்ட பருத்தியை மூன்று முறை பயிரிட்டபின் நிலத்தின் விளைச்சல் மிகவும் பாதிக்கப்படுவதாகத் தற்போது சொல்கிறார்கள். எனவே, மனிதனுக்கு நிச்சயமாகக் கெடுதல் வராது என்று பரிசோதனை மூலம் நிரூபிக்காமல் அறிமுகப்படுத்துவது சரியல்ல. மேலும், விவசாயின் கையில்தான் எப்போதும் விதை இருக்க வேண்டுமே தவிர, ஏதோ ஒரு கம்பெனியின் கையில் இருக்கக் கூடாது. நம் நாட்டில் 100 கோடி மக்களுக்கு மேல் இருக்கிறோம். ஆயிரக்கணக்கான பயிர்கள் விளைவிக்கிறோம். இத்தனை பேருக்கும் உணவு தயாரிக்க கடைசியில் விதைகளை வெளிநாட்டில் இருந்து எதிர்பார்ப்பது என்பது இறுதியில் அடிமைத்தனத்தைத்தான் கொண்டுவரும்!