"நா இந்த மலையை பத்தி பேசுனா எல்லாரும் தியானலிங்கத்துக்கு வர மாட்டீங்க, அந்த மலைக்கு போய்டுவீங்க," இப்படி சொல்பவர் வேறு யாருமல்ல சத்குருவே தான்.

அப்படி எந்த மலை அது...

சத்குரு சொல்வதைப் போல் இம்மலைக்கு பயணித்து திரும்பும் மக்களும் அதனுடைய பிரம்மாண்டத்தை உணர்ந்து திரும்பியுள்ளனர். இது மலைதான் ஆனால் உயிரோட்டமாய்.

இந்த மலையின் பிரம்மாண்டத்தை உணர, அதில் உள்ள சுயம்பு லிங்கத்தை தரிசிக்க மாதா மாதம் கூடுவோர் ஏராளம்.

நாள் சித்திரா பௌர்ணமி. இடம் வெள்ளியங்கிரி மலை. கூடியிருந்தோர் லட்சத்திற்கும் மேல்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மௌனமாக ஓர் அமைதிப் புரட்சி வருடா வருடம் இங்கே அரங்கேறி வருகிறது. பத்திரிக்கையில் விளம்பரம் இல்லை... டிவியில் பார்த்ததில்லை, செய்தித்தாளிலும் விஷயம் இல்லை.

இம்மலை ஏறி வீடு திரும்புவோர், மலையேற பயன்படுத்தும் கைத்தடியைக் கூட வருடம் முழுவதும் வழிபடுகின்றனர் என்கிறது இத்தல வரலாறு.

இத்தனை பேரை, அப்படி என்ன செய்துதான் ஈர்க்கிறது இந்த மலை? இது சிவன் அமர்ந்த மலை - பக்தர்கள் பெருமிதத்தோடு கொண்டாடும் தென்கைலாயம்! ஆம் தென்கைலாயம். சிவனவன் அமர்ந்த மலையனைத்தும் கைலாயம் என அழைக்கப்பட, கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலையும் தென்கைலாயம் என தென்நாட்டாரால் வழிப்படப்படுகிறது.

இங்கே நிலவும் சக்தி வாய்ந்த சூழ்நிலை பலரது வாழ்க்கையின் போக்கையே மாற்றியுள்ளது. இதனால்தான் "தென்கைலாய பக்தி பேரவை" என்னும் இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டு விருப்படுவோருக்கு வழிகாட்டி அழைத்துச் செல்லும் புதுமுயற்சி ஈஷாவில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மண்ணின் கலாச்சாரத்தில் பற்பல யாத்திரைகள் இருந்து வந்தாலும், கைலாய யாத்திரை என்பது மிக உயர்வாகக் கருதப்படுகிறது. இங்கு சென்று வருவதன் மூலம் ஆதியோகியாம் சிவனையே உணர்ந்து வருவதாக நம்பப்படுகிறது.

வெள்ளியங்கிரி மலைக்கு முறையாக தீட்சை பெற்று, தங்களைத் தயார்படுத்தி வந்து யாத்திரை மேற்கொள்பவர்கள் வளம் அடைவதுடன் திருக்கைலாயம் சென்ற பலனையும் பெறுவர் என்று நம்பப்படுகிறது.

தை மாதம் 1ம் தேதி முதல் வைகாசி விசாகம் வரை (ஜனவரி 14ம் தேதி முதல் மே மாதம் வரை) இம்மலைக்கு யாத்திரை செல்வதற்கு மிகவும் உகந்த காலமாகும். யாத்திரை காலத்தில் முக்கிய நாட்களான அமாவாசை, பௌர்ணமி தினங்களில் பெருந்திரளாக பக்தர்கள் யாத்திரை செல்கின்றனர். பயணக் களைப்பு தெரியாமல் இருக்க, இரவு நேரத்தில் பௌர்ணமி நிலவில் யாத்திரை செல்வது ஓர் அற்புதமான அனுபவம்!

தென்கைலாய யாத்திரையில் 45 வயதிற்கு மேற்பட்ட பெண்களும், அனைத்து வயதுடைய ஆண்களும் கலந்து கொள்ளலாம்.


இந்த யாத்திரையில் கலந்து கொள்ள விருப்பப்படுவோர் 89038 16448 அல்லது 94425 04646 என்கிற எண்களை தொடர்பு கொள்ளலாம்