எங்கிருந்தாலும் தரிசனம்
இன்றைய சத்குரு தரிசன நேரத்தில் சிவாங்கா சாதனாவின் முக்கியத்துவத்தை நாம் உணரும் விதத்தில் பேசினார் சத்குரு. பொங்கல் காலத்தில் பருவங்கள் பற்றி பேசாமல் இருந்தால் எப்படி? பருவங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றும் பேசினார்... மேலும் படியுங்கள்
மாலை மலர்ந்தது
தரிசனம் கிடைத்தது
சற்று நேரம் காத்திருங்கள்
நீங்களும தரிசிக்கலாம்
இன்று சத்குரு தர்ஷன்
மாலை சரியாக 6.20 மணிக்கு தீர்த்தகுண்டத்தில் தரிசனம் நடைபெறும் பகுதிக்குள் பிரவேசித்தார் சத்குரு, 'பூதேஷ, யோகீஷ சர்வேஷ...' மந்திர உச்சாடனையில் தியான அன்பர்கள் அவருடன் சங்கமித்தனர். பிறகு மேலும் கீழும் சுற்றிலும் வானிலை பார்ப்பதுபோல் பூமியின் நிலையை வேறுவிதமாகப் பார்த்துவிட்டுப் பேசத் துவங்கினார் சத்குரு.
இன்றைய தரிசனத்தில் சத்குருவின் உரையின் சாராம்சம், ஆண்களுக்கான சிவாங்கா சாதனா பற்றி இருந்தது.
நாம் இப்போது இருக்கும் பருவம் உணவிற்கும் பழங்களுக்கும் தானியங்களுக்கும் மட்டும் அறுவடைக் காலம் கிடையாது. ஒரு மனிதனாக நம் ஆன்மீக வளர்ச்சியிலும் இது அறுவடைக் காலம் என்றார். மற்ற நேரங்களில் மிகவும் கடினமாகக் கிடைப்பது மிகச் சுலபமாக இந்த பருவத்தில் கிட்டும் என்றார்.
Subscribe
தண்ணீர் தேசம்...
"நம் உடலின் பெரும்பகுதி தண்ணீராக இருக்கிறது. டிசம்பரில் வரும் சங்கராந்தியிலிருந்து (சங்கராந்தி என்பது இரவும் பகலும் சரிசமமாக இருக்கும் நாள்) அதன்பின் இரண்டு அமாவாசைகள் தாண்டி வரும் பௌர்ணமி வரை உள்ள காலத்தில் பூமியில் தண்ணீர் அதிகப்படியாக இருக்கிறது. வெயில் காலத்தில் இந்த நீரெல்லாம் மேலே மேகமாகத் தொங்கத் துவங்கிவிடும். எனவே இப்பருவம் நாம் நம்மைச் சுற்றியுள்ள சூழலுடன் இணைய அற்புதமான தருணமாகும். மேலே மிதக்கும் வெண்ணையை அப்படியே வழித்துக்கொள்வதைப் போல் வருடம் முழுவதும் செய்த சாதனாவின் பலனை உணரும் தருணமிது. இது வெண்ணையக் கடைவதைப் போல் கடினமான பருவம் அல்ல.
இந்த சிவாங்கா, சிவாங்கி சாதனாக்களை உருவாக்கி இருப்பதே இதற்காகத்தான். மிகச் சுலபமாக ஆன்மீக சாதனாவின் பலனை இதன்மூலம் நாம் அறுவடை செய்யமுடியும். நாம் மிகவும் இயல்பான நிலையில் இருப்பதற்கு, எந்த இறுக்கமும் இல்லாமல் மிகவும் தளர்வாக இருப்பதற்கு இந்த சாதனா உறுதுணையாக இருக்கும். அப்போதுதான் இந்த பிரபஞ்சத்தோடு இணைந்திருப்பீர்கள், இல்லாவிட்டால் உங்கள் மனம் உருவாக்கும் உலகத்தில் இருப்பீர்கள்.
பவதி பிக்ஷாந்தேஹி!
சிவாங்கா சாதனா செய்யும் ஆண்கள், குறைந்தது 21 பேரிடமாவது பிட்சை பெற வேண்டும். பிட்சை பெறும்போது சட்டை போடாமல் இருக்க வேண்டும். அதிகப்படியாக எத்தனை பேரிடம் வேண்டுமானால் பிச்சை பெறலாம். 'என்ன போடுகிறார்கள்?', 'இவ்வளவுதானா?', என்றெல்லாம் மனத்தில் கணக்குப் போட்டுக்கொண்டு வாங்குவதல்ல. என்ன போடுகிறார்கள் என்றே பார்க்காமல் நன்றியுணர்வோடு பெறும்போதுதான் அதனால் நமக்குள் வளர்ச்சி நிகழ வாய்ப்பிருக்கிறது.
சாதுஸ்தானம்...!
முன்பெல்லாம் ஆன்மீக சாதானாவில் இருக்கும் சாதுக்கள் வட இந்தியாவிலிருந்து இராமேஷ்வரம் வரை நடைபயணம் மேற்கொள்வார்கள். சுமார் 3000 கி.மீட்டருக்கு மேல் பயணிக்க வேண்டிய இந்த யாத்திரையில் அவர்கள் தங்குவதற்கும் உண்பதற்கும் ஏற்றவாறு ஆங்காங்கே பல இடங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இவையெல்லாம் இல்லாமலேயே போய்விட்டன. பழங்காலத்தில் இருந்ததை போன்ற ஒரு அமைப்பை ஈஷாவில் நாம் மீண்டும் உருவாக்க உள்ளோம். ஆன்மீகப் பாதையில் உள்ள சாதுக்கள் இங்கு வந்து இவ்விடத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்களுக்கு தேவையான தங்கும் இடமும் உணவும் நாம் இங்கே வழங்கும்விதமாக 'சாதுஸ்தான்' என்ற இந்த கலாச்சாரத்தைத் துவங்குவோம்.
மீண்டும் மற்றுமொரு தரிசன நேரத்தில் உங்களுடன் இணைவோம்.