ஆரோக்கிய வாழ்விற்கு சில டிப்ஸ்..
உடலைச் செம்மையாகப் பயன்படுத்துவதும், செயலைப் படிப்படியாக அதிகப்படுத்துவதும் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான முக்கிய காரணிகள் என்பதை சத்குரு தன் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்ய சம்பவங்களைக் கூறி விளக்குகிறார்.
சத்குரு:
இளம் மருத்துவர் ஒருவருக்கு, ஒரு நோயாளியிடம் வியாதியைக் கண்டறிவதில் பிரச்சனை ஏற்பட்டது. ஆகவே அவர் மூத்த மருத்துவர் ஒருவரை அணுகி ஆலோசனை கேட்டார். “இவருக்கு மிதமிஞ்சிய வருத்தமும், வாந்தியும் ஏற்படுகிறது, ஆனால் இதற்கான மருத்துவ ரீதியான காரணம் எதையும் என்னால் காணமுடியவில்லை”. மூத்த மருத்துவர் சிறிது நேர யோசனைக்குப் பிறகு, “அவர் கோல்ஃப் விளையாடுபவரா என்று விசாரியுங்கள். அவர் விளையாடுபவர் என்றால், அதை நிறுத்தச் சொல்லுங்கள். அவர் விளையாடுவதில்லை என்றால், விளையாடச் சொல்லுங்கள். விரைவில் சரியாகிவிடுவார்!” ஆரோக்கியம் அப்படிபட்டதுதான்!
சிலர் அளவுக்கு மிஞ்சி வேலை செய்வதால் ஆரோக்கியம் சீர்கெடுகிறது. ஆனால் பெரும்பாலான மக்கள் வேலையே செய்யாமல் ஆரோக்கியத்தைக் குலைத்துக்கொள்கின்றனர். நீங்கள் 200-வருடங்களுக்கு முன் வாழ்ந்திருந்தால், இப்போது செய்வதை விட 20-மடங்கு அதிகமாக உடலை உபயோகித்து செயல் செய்திருப்பீர்கள். எல்லா இடங்களுக்கும் நடந்துசெல்வது மட்டுமின்றி, ஒவ்வொரு செயலையும் கைகளைப் பயன்படுத்திச் செய்திருப்பீர்கள். நீங்கள் அவ்வளவு செயல் செய்திருந்தால், உங்களுக்குச் சற்று இடைவேளை கொடுத்து ஓய்வெடுக்குமாறு கூறியிருப்பேன். ஆனால் இன்று பெரும்பாலான மக்களுக்கு, உடலானது போதுமான அளவு பயன்படுத்தப்படுவதில்லை. உடல் ரீதியான செயல்பாட்டைப் பொறுத்தவரை, 100-வருடங்களுக்கு முன்னால் 60-வயதான ஒருவர் செய்த செயலை, இன்றைக்குப் பல 20-வயதானவர்கள் செய்யக்கூடிய திறன் இல்லாமல் இருக்கின்றனர். அப்படியென்றால் நாம் மனித குலத்தை பலவீனப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். உடலைப் பயன்படுத்துவதன் மூலமாகத்தான், நீங்கள் இதை நன்றாக வைத்திருக்கமுடியும். நீங்கள் எந்த அளவுக்கு உடலைப் பயன்படுத்துகிறீர்களோ, அந்த அளவுக்கு அது நன்றாக இருக்கிறது.
Subscribe
அடர்ந்த காட்டில் ஈர்த்த சமையல் வாசம்!
இந்தப் பகுதியினூடாக நாங்கள் சுமார் 35-40 பேர் நடந்துகொண்டிருந்தோம். அங்கு மழை பொழிந்துகொண்டிருந்ததால் எங்களுக்குச் சமைப்பதிலும், மற்ற ஒவ்வொன்றுக்கும் சிரமப்பட்ட நிலையிலேயே ஒரு நாள் முழுவதும் நடந்தவாறிருந்தோம். அந்தச் சூழலில், அங்கு தென்பட்ட படைவீரர்களின் முகாம்-ஒன்றினுள் அழையா விருந்தாளிகளாக நுழைந்தோம் ஏனென்றால் அங்கிருந்து கிளம்பிய உணவின் வாசம் அப்படியிருந்தது! நீங்கள் உடலை அளவு கடந்து பயன்படுத்தியிருந்தால், அப்போதுதான், உணவின் மதிப்பை நீங்கள் உண்மையில் உணர்வீர்கள். அந்த கமாண்டிங் ஆஃபீசர் மிகவும் பரந்த மனப்பான்மையானவர் எங்களை வரவேற்று உபசரித்ததுடன், எங்களுடைய வரவால் மிகவும் அகமகிழ்ந்தார்.
அந்தப் படைப்பிரிவின் படைத்தலைவர்களுள் ஒருவர் நாங்கள் எதற்காக நடைப்பயணம் செய்கிறோம் என்று கேட்டதற்கு, நடக்கவேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாக நடக்கிறோம் என்று கூறினோம். அவரால் இதை நம்பமுடியவில்லை. “விரும்பி நடக்கிறீர்களா?” என்றவராக மேலும் தொடர்ந்து, “இந்தப் பணி எப்போது முடியுமோ என்று பல வாரங்களாகக் காத்துக்கொண்டு இங்கிருக்கிறோம். எங்களால் கண்டுபிடிக்க முடியாத இந்தப் பாழாய்ப்போன ஹெலிகாப்டரைத் தேடியவாறு தினமும் 20 – 30 கிமீ நடக்கவேண்டியுள்ளது, நீங்கள் ஆனால் வேடிக்கைக்காக நடந்துகொண்டிருக்கிறீர்களே! “அவர் எங்களை நம்பமுடியாமல் பார்த்து, “யாராவது வேடிக்கைக்காக மட்டும் நடப்பது என்பது சாத்தியம்தானா? அதுவும் கால்களில் கொப்பளங்கள் மற்றும் பல சிரமங்களுடன்? “என்று ஆச்சரியப்பட்டார். எதைக் கட்டாயப் பயிற்சியாக அவர் செய்துகொண்டிருக்கிறாரோ, அதுதான் அவரை ஆரோக்கியமாகவும், நன்றாகவும் வைத்திருக்கிறது என்பது அவருக்குப் புரியவில்லை.
வாழ்வை முழுமையாகச் செயல்பட அனுமதியுங்கள்
ஆரோக்கியம் நமது கருத்து என்பது போலவும், நாம் தான் ஆரோக்கியத்தை உருவாக்கினோம் என்பது போலவும் மக்கள் செயல்படுகின்றனர்.ஆரோக்கியம் என்பது நீங்கள் கண்டுபிடிக்கும் ஏதோ ஒரு விஷயமல்ல. அது உங்களுடைய கருத்து அல்ல. உயிரின் செயல்பாடு நன்றாக நிகழும்போது, அதுவே ஆரோக்கியம். உயிர் முழுமையாகச் செயல்படுவதற்கு நீங்கள் அனுமதித்தால், அது ஆரோக்கியமாக இருக்கிறது.
பாவ ஸ்பந்தனாவில் சத்குரு பெற்ற அனுபவம்
ஆகவே உங்களது உடலை, உங்களது மூளையை மற்றும் உங்களது சக்திகளை நீங்கள் பயன்படுத்தத்தான் வேண்டும். இந்த மூன்று விஷயங்களும் நன்றாகச் செயல்படுவதுடன், சமநிலையிலும் இருந்தால், நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். எனக்கு ஒருமுறை இப்படி நிகழ்ந்தது. வெகு காலத்திற்கு முன்பு, என்னுடைய இரண்டாவது அல்லது மூன்றாவது பாவ ஸ்பந்தனா வகுப்பின்போது இது நிகழ்ந்தது. ஒரு சிறிய இடத்தில் வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், எண்ணற்ற முறைகள் நான் மாடிக்கும், கீழ்த்தளத்துக்கும் ஏறி இறங்கவேண்டியிருந்தது. அங்கே சமையலையும் நான் நிர்வகிக்கவேண்டியிருந்தது. ஒரு குறிப்பிட்ட நாளில் நான் நிகழ்ச்சி நடத்தியபோது, எனது ஓட்டத்தைக் கணக்கீடு செய்ததில் நான் மேலும் கீழுமாக 125 முறை நடந்திருந்தேன். அத்துடன் நிகழ்ச்சியின் முடிவில் நான் மிகுந்த ஆரோக்கியமாக உணர்ந்தேன்.
திடீரென்று அதிகமான செயல் செய்வது உங்களைச் சுகவீனப்படுத்தலாம், ஆனால் நீங்கள் உடலளவில், மனதளவில் மற்றும் சக்தி நிலையில் உங்களது வாழ்க்கைக்குள் படிப்படியாகச் செயல்பாடுகளை அதிகப்படுத்தினால், ஆரோக்கியம் உண்டாகும். உங்களது உடல் நன்றாகச் செயல்படுகிறது, உங்கள் மனம் நன்றாகச் செயல்படுகிறது மற்றும் உங்களது சக்தியானது இரண்டுக்கும் உறுதுணையாக நின்று எதுவும் தவறாகிவிடாமல் கவனித்துக்கொள்கிறது என்றால் அதுதான் ஆரோக்கியம். வாழ்க்கை முழு வீச்சில் நிகழ்கிறது, அதுவே ஆரோக்கியம்.