கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ள ஆறு கற்பலகைகள் தியானலிங்கத்தின் உள்பிரகாரத்திலுள்ள இருபுற சுவர்களையும் அலங்கரிக்கின்றன. இவை ஞானோதயமடைந்த ஆறு தென்னிந்தியத் துறவிகளின் கதையைச் சித்தரிக்கின்றன. அற்புதமான அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவமொன்றை ஒவ்வொரு கற்பலகையும் சித்தரிக்கின்றது. அக்கா என்று அழைக்கப்பட்ட அக்க மஹாதேவி, இறையன்பில் உடலோடு உள்ள பற்றுதலைக் கடந்த நிலையில், அரசரின் கட்டளையை ஏற்று தன் உடைகள் உட்பட அனைத்தையும் துறந்து உடலற்ற நிலையை எய்தும் நெகிழ்ச்சியான காட்சி முதல் பலகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பலகையில், குழந்தையைப் போன்ற தன் அப்பழுக்கற்ற பக்தியால் தன் கண்களையே சிவனுக்கு அர்ப்பணிக்கும் கண்ணப்ப நாயனார் சித்தரிக்கப்பட்டுள்ளார். சிவபக்தரான மெய்ப்பொருள் நாயனார் சிவனின் சின்னத்தைக்கூட தன் உயிரினும் மதிப்பானதாகக் கருதும் உள்ளத்தை உருக்கும் காட்சி மூன்றாவது பலகையில் இடம்பெற்றுள்ளது. தன் கைகள் துண்டிக்கப்பட்ட நிலையைக் கூட பொருட்படுத்தாது நடந்துசெல்லும் உடல்கடந்த யோகியான சதாசிவ பிரம்மேந்திரர் நான்காவது பலகையில் சித்தரிக்கப்பட்டுள்ளார். ஐந்தாவது பலகையில், பூசலார் தனது உள்ளத்தில் எழுப்பிய கோயிலில் இறைவன் எழுந்தருளிய காட்சி இடம்பெற்றுள்ளது. ஆறாவது பலகையில், சத்குருவின் இரண்டு பிறவிகளுக்கு முன்பு, தெய்வீக குரு ஒரு தடைப்பட்ட சாதகனுக்குத் தனது அருளாற்றலை வழங்கி ஈஷா தோன்றியதைக் காட்டுகிறது.