தன்னார்வத் தொண்டு
சத்குரு தன்னார்வத் தொண்டு குறித்தும், அதன்மூலம் ஒருவர் தன்னை முழுமையாக வழங்கும் வாய்ப்பு குறித்தும் பேசுகிறார்!
சத்குரு: எதிலும், எதற்கும் நம்மை முழுமையாய் வழங்குவதற்கு நாம் தயாராய் இருப்பதில்லை. அப்படி நம்மை வழங்குவதற்கு தயார்செய்து கொள்ளத்தான் யோகா எனும் செயல்முறை. ஒன்றும் செய்யாமல் சும்மா கண்களை மூடி அமர்ந்திருக்கும் நிலையிலேயே, உங்களை நீங்கள் இவ்வுலகிற்கு அர்ப்பணிக்க முடியும். ஆனால் அதற்குத் தேவையான அளவு விழிப்புணர்வு பலரிடம் இருப்பதில்லை. செயல்களின் உதவியின்றி தங்களை எப்படி அர்ப்பணிப்பது என்று பெரும்பான்மையோருக்குத் தெரிவதில்லை. 'தங்களை'க் கொடுப்பதென்றால், அதை அவர்களால் செயல் மூலம் மட்டுமே செய்யமுடியும். அவ்வழியில், தன்னார்வத்தொண்டு என்பது மிகப்பெரிய வாய்ப்பு. நீங்கள் செய்யும் செயலின் மூலம் உங்களை நீங்கள் அர்ப்பணிப்பதற்கான இணையற்ற வழி அது.
பொதுவாக நாம் செய்யும் சிற்சிறு செயல்களையும் கூட நாம் கணக்கிட்டே செய்கிறோம். "நான் ஏன் செய்யவேண்டும்? எவ்வளவு செய்யவேண்டும்? இதனால் எனக்கு என்ன கிடைக்கும்?" என்ற கணக்கீடுகளில் நீங்கள் செய்யும் செயலின் அழகு காணாமற் போகிறது.
இக்கணக்கீடுகளால் வாழ்க்கை என்பது அழகிழந்து நிற்கிறது. உங்கள் வாழ்வில் நீங்கள் செய்யும் பெரும்பாலான செயல்கள், நீங்கள் தேர்ந்தெடுத்து செய்வதுதான். இருந்தாலும் தினசரி வாழ்வில் சராசரி விஷயங்களைச் செய்வதும்கூட பெரும் போராட்டமாக இருக்கிறது. காரணம், யாருக்கும் எதையும் கொடுப்பதற்கு உங்களுக்கு மனமில்லை. விருப்பத்துடன்தான் வாழ்வில் பலவற்றை ஆரம்பித்தீர்கள் என்பதையே நீங்கள் மறந்துவிட்டீர்கள். வாழ்வில் வேலையோ, திருமணமோ, குடும்பமோ அல்லது வேறெதுவாக இருந்தாலும், அதை விருப்பத்துடன் தான் ஆரம்பித்தீர்கள். அதை வேண்டும் என்று எண்ணிதான் ஆரம்பித்தீர்கள். ஆனால் அதைத் துவங்கியதுமே, அதை எதற்காகத் துவங்கினோம் என்பதை மறந்து, கொடுப்பதற்கு மனமில்லாமல் வேறுவழியின்றி கொடுக்கும் நிலையில் வாழ்கிறீர்கள். அதனால்தான் வாழ்க்கை துன்பம் நிறைந்த ஒன்றாய் மாறி நிற்கிறது.
கொடுப்பது மட்டும்தான் வாழ்க்கை என்பதுபோல், வாழ்வையே ஒரு அர்ப்பணிப்பாய் மாற்றிக்கொள்வதற்கான வழி இந்தத் தன்னார்வத்தொண்டு. 'தன்னார்வத்தொண்டர்' என்றால் முழு விருப்பத்தோடு (அ) திறந்த மனநிலையில் இருப்பவர்... குறிப்பிட்ட ஏதோவொரு செயல் செய்வதற்கு மட்டுமல்ல, எதற்கும் எல்லா நேரத்திலும் திறந்த மனநிலையோடு இருப்பவர். இத்திறந்த மனநிலை இல்லாமல் ஒருவருக்குள் ஆன்மீகம் நிகழ வாய்ப்பேயில்லை.