சனாதன தர்மம்

சத்குரு: மதங்களின் அடிப்படைகளை ஆராய்ந்து பார்க்கும் அளவிற்கு இந்த உலகில் போதுமான அறிவுத்திறன் உள்ளது. மதம் என்பது உள்நோக்கி எடுத்து வைக்கும் முதல் அடி. அது ஒரு மனிதன் தன்னுள் மிக அந்தரங்கமாக செய்யும் ஒரு விஷயம். கூட்டாக சேர்ந்து, ஒழுங்கு படுத்தி தெருவில் செய்யும் செயல் அல்ல. படைத்தவனை நோக்கி வைக்கும் காலடி. நீங்கள் உங்கள் உடலை சிறிது கவனித்துப் பார்த்தால் உங்களைப் படைத்தவன் உங்கள் உள்ளே இருக்கிறான் என்று புரியும். படைத்தவனை நோக்கி அடி வைப்பது என்றால், அது உள் நோக்கித்தானே போக முடியும்? அது உங்கள் ஒருவரால்தான் முடியும். கூட ஒரு கும்பலையே கூட்டிப் போக முடியாது.

இப்பொழுது உலகில் எல்லோருக்கும் பொதுவான மதம் தேவை. பொதுவான மதம் என்றால் எல்லோரும் ஒரு மதம் அல்ல, ஒவ்வொருவரும் ஒரே மதத்தை சேர்ந்தவரே, நம் எல்லோருக்கும் ஒரே மதம்.

700 கோடி மக்கள் இவ்வுலகில் உள்ளனர், 700 கோடி மதங்கள் வைத்துக் கொள்ளலாம். அதில் என்ன கஷ்டம்? அதை ஒழுங்குபடுத்தியதால்தான், அழகான ஒரு செயலாக இருக்கக் வேண்டிய ஒன்று கண்மூடித்தனமான வெறியாக மாறி விட்டது.

இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில்தான்இந்திய கலாச்சாரம் வளர்ந்தது. இதை சனாதன தர்மம் என்றோம் – அதாவது எப்பொழுதும் இருக்கக் கூடியது, எல்லா சமயத்திற்கும் பொருந்தக் கூடியது. இந்த கலாசாரத்தில்தான் இவ்வளவு சுதந்திரம் : உங்கள் கடவுளை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம் – ஆண்கடவுள் பெண் கடவுள், மிருகக் கடவுள், மரக் கடவுள் – எது வேண்டுமானாலும். இதை நாம் இஷ்ட தேவதை என்போம், அதாவது உங்களுக்கு இஷ்டமான கடவுள்.

ஒவ்வோர் தனி மனிதனுக்கும் தன் வாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களில் எதனுடன் தொடர்பு கொள்வது என்பது அவரவரின் விருப்பம். தனக்கென்று ஒரு கடவுளை உருவாக்கிக் கொண்டு அதில் தன்னையே அர்ப்பணித்துக்கொள்ளலாம், ஏனென்றால் இது கடவுளைப் பற்றியது அல்ல, தனக்குள் வாழ்க்கையின்பால் ஒரு பக்தி, வினயம் போன்ற தன்மைகளை உருவாக்கிக் கொள்வதற்காகத்தான்.

இதுவே மதம் உருவாக ஒரு காரணமாக இருந்தது. நீங்கள் ஒரு குரங்கையும் நான் ஒரு யானையையும் பூஜிக்க முடியும். அதில் என்ன தவறு? உங்களுக்கு குரங்கு பிடிக்கும் எனக்கு யானை, இரண்டுமே சரிதானே? நாளை இதை நாம் மாற்றிக்கொள்ள நினைத்தால் அதுவும் சரி. அந்த அளவுக்கு சுதந்திரம் இருந்தது இந்த கலாச்சாரத்தில். அதனால்தான் இதை சாஸ்வதமான – நிரந்தரமான மதம் என்றார்கள் ஏனென்றால் இதில் கட்டுப்பாடுகள் இல்லை, மாற்றிக் கொள்ள முடியும். உருவமுள்ள கடவுள், உருவமற்ற கடவுள் அல்லது கடவுளே இல்லை – எல்லாமே சரி, நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

முக்கியாமான விஷயம் என்னவென்றால் உங்களைச் சுற்றி இருக்கும் உயிர்த்தன்மையை நோக்கி பக்தியுடன் கூடிய பணிவு உண்டாகும். நீங்கள் உயிர் வாழ அடிப்படையான - உங்களை ஊட்டி வளர்க்கும் ஒவ்வொரு உயிரின்பாலும் மதிப்புடன் தலை வணங்கும் தன்மை உண்டாகும். எப்பொழுது எல்லோரும் தன் மத்ததை தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சுதந்திரம் கிடைக்கிறதோ, இந்த மதம் என்று மற்றவரால் அவன் மேல் திணிக்கப்பட மாட்டாதோ, அப்பொழுதுதான் மத ஈடுபாடு அதிகமாகும், மத-வெறி இருக்காது.