ஒற்றுமை மற்றும் முழுமை
ஒருவர் இந்த முழுமையையும் ஐக்கியத்தையும் உணரவேண்டுமெனில் உடல் மனம் அதற்கும் மேலாக அவரின் சக்தி நிலை ஒருவித திண்மையில் அவருக்குள் செயலாற்ற வேண்டும்.
சத்குரு: அடிப்படையாக "ஹெல்த் (health) (ஆரோக்கியம்)" என்னும் சொல் "ஹோல் (whole) முழுமை" என்னும் சொல்லில் இருந்து பிறந்ததாகும். "ஆரோக்கியமாய் உணர்கிறேன்" என்பது நமக்குள் முழுமையை உணர்ந்ததற்கான அறிகுறியே ஆகும். மருத்துவமுறைப்படி நோய்களற்று இருப்பது ஆரோக்கியமாகிவிடாது. நாம் ஒரு முழுமையான உடல் மனம் ஆன்மாவாய் உணர்ந்தால் தான் முழு ஆரோக்கியத்தோடு இருக்கின்றோம் என்று பொருள். இங்கு நிறைய பேர் மருத்துவ முறைப்படி ஆரோக்கியமாய் உள்ளனர். ஆனால் உண்மையில் அவ்வாறாக இல்லை. ஏனெனில் அவர்கள் தமக்குள் ஒரு முழுமையான நல்வாழ்வை உணர்வதில்லை
ஒருவர் இந்த முழுமையையும் ஐக்கியத்தையும் உணரவேண்டுமெனில் உடல் மனம் அதற்கும் மேலாக அவரின் சக்தி நிலை ஒருவித திண்மையில் அவருக்குள் செயலாற்ற வேண்டும்.
உடல்ரீதியாக மருத்துவமுறைப்படி ஒருவர் ஆரோக்கியமாய் இருக்கலாம். ஆனால் சக்தி நிலையில் அவர் மந்தமாய் இருக்கக்கூடும். அவருக்கு வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகள் - உள்ளிலும் வெளியிலும் -ஏற்புடையதாய் நிகழாமல் போகலாம். அவர் தனது சக்திநிலையின் நலனை பேணிக் காக்காததே இதற்கு காரணம்.
நீங்கள் கடந்து செல்லும் உடல்ரீதியான அல்லது மனரீதியான சூழ்நிலைகள் ஒவ்வொன்றுக்கும் அடிப்படையான ஒரு சக்தி நிலை உள்ளது. அது ஒரு வேதிப்பொருளாக வெளிப்படும். ஒரு வழியில் பார்த்தால் நவீன அலோபதி மருந்துகள் வெறும் வேதிப்பொருளாய் மட்டுமே மாறியுள்ளன. உங்கள் உடம்பில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஏதோ ஒரு மருந்தை - வேதிப்பொருளை - உட்கொள்கிறீர்கள். அதன் மூலம் ஒரு வித சமநிலையை அடைகிறீர்கள். ஒரு தன்மையை குறைக்கவோ அல்லது கூட்டவோ வேதிப்பொருளை உபயோகித்தால் அதற்கு பக்கவிளைவுகளும் உண்டு. அந்த பக்கவிளைவிற்கு ஒரு மாற்று மருந்து உண்டு. அந்த மாற்று மருந்துக்கு இன்னொரு மாற்று மருந்து உண்டு. இது ஒரு முடிவில்லாத தொடர் சங்கிலி.
ஒரு மனிதனுக்கு தேவைக்கதிகமாக அமிலம் (acid) சுரப்பதால் காரத்தன்மையுடைய (alkaline) மருந்தை அவனுக்கு அளிக்கிறீர்கள். ஆனால் அவனுக்கு ஏன் அமிலம் அதிகமாக உள்ளது? அவனுடைய உடல், மனம் மேலும் சக்திநிலை செயல்படும் விதத்தினால் தான் இவ்வாறு நிகழ்கிறது.
உங்கள் உடம்பின் வேதியிலில் நிகழும் அனைத்தும் உங்கள் சக்திநிலையால் கட்டுப்படுத்தப்படும். யோகமுறையில் ஆரோக்கியம் என சொல்லும் பொழுது உங்கள் உடலையோ மனதையோ நாம் பார்ப்பதில்லை. மாறாக உங்களின் சக்திநிலையையே பார்ப்போம். உங்களின் சக்திநிலை சரியான சமநிலையில் முழுமையாய் செயற்பாட்டில் இருந்தால் உங்களின் உடலும் மனமும் சந்தேகமே இல்லாமல் மிகச்சரியான ஆரோக்கியத்தில் இருக்கும்.
சக்திநிலையை முழு செயற்பாட்டில் வைத்திருப்பதென்பது ஏதோ ஒரு பரிகாரம் செய்வதோ வேறெதுவோ அல்ல. அது உங்களின் சக்தி மண்டலத்தின் அடித்தளத்திற்கு சென்று அதை சரியான முறையில் செயற்படுத்துவதாகும். அடிப்படையான யோக நடைமுறையை அமைப்பதன் மூலம் உங்களின் உடலும் மனமும் இயற்கையாகவே நல்முறையில் இயங்கும் வண்ணம் உங்களின் சக்திநிலை அமையும்.
ஆரோக்கியத்தை நோக்கினால் ஒரு மனிதன் கூட நிறைவான சூழ்நிலையில் வாழ்வதில்லை. வாழ்க்கையின் அழுத்தங்கள் நாம் உட்கொள்ளும் உணவு சுவாசிக்கும் காற்று அருந்தும் நீர் என பல வழிகளும் நம்மை பாதிக்கும். ஆனால் நம் அமைப்பில் சக்திநிலை சரியாக அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு இருந்தால் இந்த விஷயங்கள் ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்காது.