இசை மற்றும் ஆன்மீகம்
ஒருகாலத்தில் இந்திய கலாச்சாரத்தில் இசை மற்றும் நடனம் உட்பட அனைத்து செயல்முறைகளும் ஆன்மீகத்தை நோக்கியே அமைந்திருந்தது என்பதை சத்குரு விளக்குகிறார்!
இசை மற்றும் ஆன்மீகம்
சத்குரு: இந்தியா, என்ற சொல்லை வெகுகாலமாக பலரும் ஒரு சாத்தியமாகவே பார்த்திருக்கிறார்கள். இது ஏனென்றால், நாம் தினசரி வாழும் விதத்தை, நம் கலாச்சாரத்தையே ஒரு ஆன்மீக செயல்முறையாய் மாற்றிடும் மாபெரும் பரிசோதனை, இங்குதான் நடந்திருக்கிறது. இந்த மண்ணில் பிறந்துவிட்டால், பின்னர் நீங்கள் எது செய்தாலும் - அது தொழிலோ, வேலையோ, குடும்பப் பராமரிப்போ, இல்லை வேறெதுவாக இருந்தாலும் சரி, அடிப்படையில் உங்கள் வாழ்க்கை மட்டும் முக்தியை நோக்கியே இருக்கும். யாராகவே இருந்தாலும் சரி, இம்மண்ணில் பிறந்தவருக்கு வாழ்வில் ஒரே குறிக்கோள்தான் - அதுவும் முக்தி மட்டும்தான். இந்தக் கலாச்சாரம் இப்படித்தான் வடிவமைக்கப்பட்டது. செய்யும் ஒவ்வொரு செயலும் விழிப்புணர்வை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடனேயே செய்யப்பட்டது
அதனால் இந்தக் கலாச்சாரத்தில், இசை, நடனம் மற்றும் பிற கலைகளும் வெறும் பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்டவையல்ல. அவை ஒரு ஆன்மீக செயல்முறையும்தான். நம் பாரம்பரிய இசையில் சப்தம் பயன்படுத்தப்படும் முறை... அந்த ராகம், தாளம் என எல்லாம் அமைக்கப்பட்டிருக்கும் விதத்தில், அதில் நீங்கள் ஆழமாக ஈடுபட்டால், இயல்பாகவே நீங்கள் தியானநிலையை அடைவீர்கள். அதே போல்தான் நடனமும். அதன் ஒவ்வொரு நிலையையும், முத்ராவையும் சரியாகப் பயன்படுத்தினால், அதன்மூலம் நீங்கள் தியானநிலையை அடைவீர்கள். பாரம்பரிய இசையில் மிக ஆழமான ஈடுபாடு கொண்டவரைப் பார்த்தால், அவர் துறவி போன்று இருப்பார். அதற்குக் காரணம் இதுதான். இங்கு இசை வெறும் பொழுதுபோக்கல்ல. அதோடு இங்கு பொழுதுபோக்கு மட்டுமே வாழ்க்கையுமல்ல. இங்கு பின்பற்றப்பட்ட ஒவ்வொன்றும், உயர்ந்த விழிப்புணர்வு நிலையை அடைவதற்கான கருவியாய் உருவாக்கப்பட்டன.