தெய்வீகத்தின் பாதையில் - சுவாமி பதங்கா
ஆசிரமத்தின் பட்டாம்பூச்சி என சத்குருவால் அழைக்கப்பட்ட ஸ்வாமி பதங்கா அவர்களின் இந்த அனுபவப் பகிர்வு, எனக்கு எல்லாம் தெரியும் என்ற நிலையிலிருந்து உள்நிலை ஆனந்தத்தை உணர்ந்த உன்னத நிலைக்கு மாறிய அவரது வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறது. தியானலிங்க பிரதிஷ்டை தருணத்தில் சத்குரு நிகழ்த்திய அதிசயங்கள் முதல் ஈஷா யோகா வகுப்புகளை ஒருங்கிணைப்பதில் தனக்கு கிடைத்த அனுபவங்கள், மஹா சத்சங்கத்திற்காக பேனர்கள் வைத்து சென்னையை கலக்கியது என பல்வேறு சுவாரஸ்ய அனுபவங்களை ஸ்வாமி பதங்கா நம்முடன் பகிர்கிறார்.
சுவாமி பதங்கா: “எனக்குத்தான் தெரியுமே” விலிருந்து “எனக்கு எதுவும் தெரியவில்லை” யை நோக்கிய பயணம் இது.
ஆனந்தமும் வெற்றிகரமான வாழ்க்கை குறித்த தேடலும் துவங்காத பதின் வயதுகளில் “அதான் தெரியுமே,” அல்லது “நான் எப்பவும் சரியாத்தான் செய்வேன்,” என்பதிலேயே மூழ்கிக் கிடந்தேன். இன்னும் சிறப்பான மனிதனாக வாழவேண்டும் என்ற தாகம் என்னுள் தீயாக பரவி இருந்தாலும், அப்போது ஆன்மீகப் பயணமாக இதை நான் பார்க்கவில்லை.
11ம் வகுப்பில் இருந்தபோதே, என் வாழ்க்கையில் இரண்டு விஷயங்கள் நடக்கவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். முதலில் ஒரு பாதுகாப்பான தொழில் துவங்கவேண்டும், அடுத்து மக்களுக்கு நல்ல விஷயங்களை கொண்டு சேர்க்கவேண்டும். ஆனால், மக்களுக்கு எதைக் கொண்டு சேர்க்கப் போகிறோம் என்பது பற்றி எதுவும் தெரியாமல் இருந்தது.
பள்ளிப் பருவத்தில் சாதாரணமாக இருந்த நான், கல்லூரியில் கால் பதித்ததும் சிறகு விரித்து பறக்க துவங்கினேன். கல்லூரியில் நடக்கும் எல்லா நிகழ்வுகளிலும் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன், மிகப்பெரிய நண்பர்கள் வட்டம் உருவாகி இருந்தது. ஒருநாள் எனது நண்பர் ஒருவரின் வற்புறுத்தலில் “Achieving Results and Nurturing Relationships,” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டேன். என்னை உலுக்கியெடுத்த அந்த வகுப்பு, இன்னும் ஆழமாக என்னை பார்க்க வைத்தது. அந்த அமைப்பில் தன்னார்வத் தொண்டராக என்னை ஈடுபடுத்திக்கொண்டு, நிகழ்ச்சிக்கு பிறகு வகுப்புகள் எடுக்கவும் தயாரானேன்.
கல்லூரி படிப்பை முடித்த ஒரு வருடத்திற்கு பிறகு, 1994ம் ஆண்டில், நண்பர் ஒருவருடன் இணைந்து துவங்கிய கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் மெல்ல விரிவடைந்து வளரத் துவங்கியது. இன்னும் நிறைய மக்களை சேர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அதே காலகட்டத்தில் செய்தி பத்திரிக்கை ஒன்றையும் துவங்கி, நேர்மறையான, நம்மை சுற்றிலும் நடக்கும் உற்சாகமூட்டும் தகவல்களை அதில் பகிர்ந்துகொண்டோம். “The human within you,” (உனக்குள் இருக்கும் மனிதன்) என்ற தலைப்பில் நடத்திய பயிற்சி பட்டறைகளும், கருத்தரங்குகளும் மக்கள் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன்மூலம், பலவகைகளிலும் வாழ்க்கை குறித்து நான் அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்த அதே சமயம், “எனக்கு மட்டுமே தெரியும்” என்ற அபாயகரமான நிலைக்கும் என்னை இது அழைத்துச் சென்றிருந்தது.
உள்ளே உருக்கொண்ட புயல்
நான் பெரிதானவன் என எனக்குள் இருந்த எண்ணத்தை ரசித்தவாறே 1996ல், 13 நாள் ஈஷா யோகா வகுப்பிற்குள் காலடி எடுத்து வைத்தேன். சில பாடங்களை கற்றுக்கொண்டவனாய் வகுப்பை நிறைவுசெய்த எனக்கு, அதன் ஆழம் இன்னும் அதிகம் என்பதும் புரிந்திருந்தது,
அவ்வளவுதான். அதன்பிறகு பயிற்சியை தொடரவில்லை.
ஒன்றரை வருடத்திற்கு பிறகு, மௌனமாக என்னுள் மாற்றம் நிகழ்ந்தது. ஏன் எதற்கு என்று தெரியாமலே தினமும் இருமுறை சக்திசலன க்ரியா, சூன்யா பயிற்சியை 40 நாட்கள், மண்டல சாதனாவாக செய்யத் துவங்கினேன், முடித்தும்விட்டேன்! அந்த 40 நாட்களில் எனக்குள் என்ன நிகழ்ந்தது என்பதே எனக்கு தெரியவில்லை.
பெருவெள்ளமா... புயல்மழையா... சுனாமியா...
என்ன இது என்று தெரியாமலே மூழ்க துவங்கினேன் “சத்குரு” எனும் ஈர்ப்புவிசையில்.
பல வகையிலும் இதற்குப்பிறகு என் வாழ்க்கை என் கைகளில் இருக்கவில்லை. இந்த நாற்பது நாட்களில், நான் நடத்தி வந்த தொழிலை ஏறக்கட்டினேன். ஈஷா யோகா ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தேன், சென்னை தி.நகரில் ஈஷா யோகா வகுப்புகளை ஒருங்கிணைப்பதில் பங்கெடுத்துக் கொண்டேன். தியானலிங்க பிரதிஷ்டை முன்னேற்பாடுகளுக்காக சத்குருவுடன் கடப்பா செல்லும் பாக்கியம், தியான யாத்திரை செல்லும் வாய்ப்பு எனத் தொடர்ந்தது.
தியான யாத்திரையின்போது, 1998 செப்டம்பர் 3ம் தேதி சத்குருவின் பிறந்தநாள் அன்று சத்குருவுக்கு பரிசளிக்க வேண்டும் என்ற ஆசை ஒரு பக்கம், தயக்கம் ஒரு பக்கம். எப்படியோ ஒருவழியாக சிறு கவிதை குறிப்புடன், புத்தர் உருவம் செதுக்கப்பட்ட சாவி கொத்தை அவரிடம் கொடுத்தேன். அந்தக் கவிதை...
என்ன கொடுத்துவிட முடியும் என்னால்?
அன்பும் நன்றியும் நிறைந்த
கண்ணீர் துளிகளை தவிர...”
என்று எழுதியிருந்தேன். சில காலம் வரை தமது கார் சாவியில் சத்குரு இதை பயன்படுத்தினார் என்பதை பின்னர் தெரிந்துகொண்டேன்!
இரு சந்திப்புகள்
இந்த சமயத்தில் சத்குருவுடன் இருமுறை சந்தித்து பேசும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.
முதல்முறை குழப்பத்தின் உச்சியில், உணர்ச்சி குவியலாக, உலக பந்தங்களை விடவும் முடியாமல், ஈஷாவில் சத்குருவுடன் இருக்க வேண்டும் என்ற தாகத்தையும் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். “ஈஷாவைத் தவிர வேறு எங்கும் இருக்க முடியவில்லை என்று எப்போது தோன்றுகிறதோ, அப்போது வாருங்கள்,” பளிச்சென சத்குருவிடமிருந்து வந்தது பதில்.
இரண்டாவது முறை அவரைச் சந்தித்தபோது, நிறைவாய் மலர்ந்த ஒற்றை மலரை சத்குருவின் பாதத்தில் சமர்ப்பித்து, “எனக்கு முழுமையாக ஈஷாவிற்கு வரவேண்டும்,” என கண்கள் பொங்க வேண்டி நின்றேன்.
Subscribe
“என்” வாழ்க்கை முடிவுக்கு வந்தது
என்னை என் குரு
தனதாக்கிக்கொண்ட அந்தக் கணம்
நான் எனது என எதுவும் எஞ்சவில்லை
அவர், அவர், அவர்
அவர் மட்டுமே இருந்தார்.
தெய்வீகத்தின் அருளில் திளைத்து நிறைந்திருந்தேன்.
திரும்பச் செலுத்தப்பட்ட கடன்
சில நடைமுறை அம்சங்களை பற்றிய ஆலோசனைகளுக்கு பிறகு, 1998 டிசம்பர் வாக்கில் முழுநேரமாக ஈஷா வந்துவிட சொன்னார் சத்குரு.
எனது தொழிலை ஏற்கனவே நிறுத்தி இருந்தாலும், பெரும் கடன்சுமையை வைத்திருந்தேன். எந்த வேலையும் இல்லை, ஆனால் எப்படியாவது டிசம்பரில் ஈஷாவில் இருக்கவேண்டும் என்ற தீவிரம் உள்ளே ஓடிக்கொண்டே இருந்தது. கைகளில் இருந்ததோ வெறும் மூன்றோ அல்லது நான்கோ மாதங்கள்தான். பகுதிநேர வேலை, ஷேர் மார்க்கெட், கடன் தள்ளுபடி கேட்பது, இருப்பதை விற்பது, பிச்சை எடுப்பது என எல்லாவித முயற்சிகளையும் செய்தேன் - ஈஷாவிற்கு திரும்பும் பறவையாக.
1998 டிசம்பர் வந்தது... நானும் வந்து சேர்ந்தேன்.
மாயம் செய்தாய்
தியானலிங்க பிரதிஷ்டையின்போது கர்ப்பக் கிரகத்தில் இருக்கும் பேறுபெற்ற ஒரு சில ஆசிரமவாசிகளில் நானும் ஒருவன். சுவற்றை பார்த்தபடி நாங்கள் அமர்ந்திருப்போம். என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இருந்தாலும் எல்லாமே மாயமாக நடக்கிறது எனத் தோன்றும். அந்நாட்களில் மாயம் சாதாரணமாக தினமும் நடப்பது போலிருந்தது - ஆவுடையார் இன்றி தனியாக கீழே கிடத்தப்பட்டிருந்த லிங்கத்தின் முன்னிலையில் நீளும் ஆழ்ந்த தியானநிலை, ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் சத்குருவை பார்ப்பது எல்லாமே சாதாரணமாக இருந்தது.
ஒருநாள் நான் முக்கோணக் கட்டிடத்தில் இருந்து தியானலிங்கம் செல்லும்போது சூன்யா குடிலுக்குள் சத்குரு சென்று கொண்டிருந்தார். நான் தியானலிங்க வடக்கு வாசலை நெருங்கியபோது, சத்குரு தியானலிங்க வளாகத்திற்குள் காலடி எடுத்துவைத்துக் கொண்டிருந்தார். “எப்படி இங்கும் இருக்கிறார்..?” என்கிற எண்ணம் எழுந்தது. எனக்கு முன்பாக அவர் தியானலிங்கத்திற்கு வருவது நடைமுறையில் சாத்தியமில்லை. சரி அவசரமாக பிரதிஷ்டை சம்பந்தமாக ஏதோ தேவையிருக்கும் என நானாக நினைத்துக்கொண்டே உள்ளே சென்றேன். காரண அறிவோடு இதனைப் பார்ப்பவர்களுக்கு இது பிரம்மை. ஆனால் அந்த நாட்களில் இப்படிப்பட்ட நிகழ்வுகள், ஈஷாவில் இருந்தவர்களுக்கு சர்வசாதாரணமானதாக இருந்தது.
மற்றொரு சமயம் சம்யமா வகுப்பின்போது கடைசி நாள் வரை “அஉம் நம ஷிவாய” மந்திர உச்சாடனத்தை என்னால் நிறுத்த முடியவில்லை. இப்படியே கடைசி நாளிலும் “அஉம் நம ஷிவாய” உச்சரித்துக் கொண்டே கண்களை மூடியபடி உணவுண்ணும் இடத்தில் குதித்துக்கொண்டு இருந்தேன். சுற்றிலும் எதைப் பற்றிய கவனமும் இல்லாதவனாய் இருந்த என்னை, திடீரென ஏதோவொன்று என்னுள்ளிருந்து அப்படியே நிறுத்தி கண்களை திறக்க வைத்தது. அடுத்த அடியை எடுத்து வைத்திருந்தால் கொதிக்கும் பாயாச பக்கெட்டுக்குள் என் கால்களை நுழைத்து நன்றாக வேக வைத்திருப்பேன். ஒரு கணம் அப்படியே நின்று பார்த்துவிட்டு, எந்த யோசனையும் இல்லாமல், எதிர்திசையில் திரும்பி மீண்டும் “அஉம் நம ஷிவாய” வையும் குதிப்பதையும் தொடர்ந்தேன். பித்தேறிய நாட்கள் அவை.
2000 ஆண்டு மஹாசிவராத்திரி அன்று, எனக்கு பிரம்மச்சரிய தீட்சை வழங்கினார் சத்குரு.
ஏற்கமுடியாத கருத்துக்கள்
பிரம்மச்சரிய தீட்சை பெற்ற மூன்றாவது நாள், மீண்டும் யோகா வகுப்புகளுக்கு ஆசிரியராக பயணமானேன். ஒவ்வொரு வகுப்பிற்கான அட்டவணையையும் கடவுளைப் போலவே ஆசிரியர்களான நாங்கள் பாவித்தோம். எங்கள் வாழ்க்கை அந்த வகுப்பை சுற்றியே இருக்கும். வகுப்பு துவங்கிய முதல் நாளில் இருந்து, பங்கேற்பாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள், இருக்க இடம் தந்துதவும் மக்கள் என இவர்களே எங்கள் உலகமாக இருப்பார்கள். இந்த வகுப்பு முடியும்போது எங்கள் வாழ்க்கையும் முடிந்துவிடும் என்பது போன்ற தீவிரம் இருக்கும். வகுப்பு நிறைவடைந்ததும், அடுத்த வகுப்பு புதுப்பிறவி எடுத்ததுபோல - புதிய இடம், புதிய மக்கள், புதிய தங்குமிடம், என புதிய பங்கேற்பாளர்களுக்கு மத்தியில் புதிதாய் பிறந்தவர்கள் போன்ற ஒரு உணர்வு மேலிடும். எனக்கு மிக நிறைவாக இருந்த நாட்களில் 13 நாள் வகுப்புகளுக்கு துணை ஆசிரியராக சென்ற நாட்கள், மிகுந்த நிறைவளித்த நாட்கள்.
ஆசிரியராக இருந்தபோது என்னுடைய வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்தது, “Feedback.” தமது கருத்துக்களை பின்னூட்டமாக பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் ஈஷா ஆசிரியர்களிடம் உண்டு. எந்த இடத்தில் தவறு நிகழ்ந்தது, எங்கு நாம் சிறப்பாக செயல்பட்டோம் என்பதை கவனித்துச் சொல்வது நோக்கம் என்றாலும், பெரும்பாலும் குறைகளாகவே இருக்கும். குறைகள் சுட்டிக்காட்டப்படும் போதெல்லாம் எனக்குள் இருக்கும் மகிழ்ச்சி வறண்டு, போராட்ட குணம் தலைதூக்கும். “நான் தவறு செய்திருக்கவே முடியாது,” என்ற எண்ணம் எனக்குள் உறுதியாக இருந்தது. தவறு நிகழாமல், மிகச் சரியாக இருக்க எந்த எல்லைக்கும் செல்ல துணிந்தவனாய் இருந்தேன். ஆனால், ஒவ்வொரு வகுப்பு முடியும்போதும், நான் எதையெல்லாம் விட்டேனோ சரியாக அதை குறிப்பிடுவார்கள் - தரைவிரிப்பு சீராக இல்லை, ஜன்னல் திரைச்சீலை மூடப்படவில்லை, ஒரே ஒரு அடையாள அட்டை சரியாக எழுதப்படவில்லை... இப்படி முடிவில்லாமல் பட்டியல் நீண்டது.
மகிழ்ச்சி தப்பிச்சென்றது...
ஒரு சமயம், துணை ஆசிரியராக இருந்து, தன்னார்வத் தொண்டர்களின் உதவியுடன் மயிலாப்பூரில் காலை மற்றும் மதிய வகுப்புகளையும், மாலையில் குரோம்பேட்டை வகுப்பையும் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. இரண்டுக்கும் இடையே கிட்டதட்ட 25 கி.மீ தூரம். மயிலாப்பூர் வகுப்பு நடைபெறும் இடத்தை, மதிய வகுப்பு முடிந்த பிறகு, மாலையில் ஒரு இசை நிகழ்ச்சிக்கும், அதை தொடர்ந்து இரவு விருந்திற்கும் வேறு யாரோ பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். இரவு குரோம்பேட்டையில் வகுப்பு முடிந்து, ஒவ்வொரு முறை நாங்கள் மயிலாப்பூர் வரும்போதும், அறை முழுவதும் ஆங்காங்கே பேப்பர், பிளாஸ்டிக், உணவு துணுக்குகள் என குப்பை நிரம்பிக் கிடக்கும். மொத்த அரங்கையும் சுத்தம்செய்து, அடுத்த நாள் காலை வகுப்புக்கான சூழலுக்கு தயார் செய்துமுடிக்க அதிகாலை 2 மணி வரை ஆகிவிடும். மீண்டும் காலையில் 5.15 மணிக்கு வகுப்பிற்கு வந்துவிடுவோம். 13 நாட்களும் இது தொடர்ந்தது! நான் செய்ததிலிருந்து தினமும் இரண்டு தவறுகளையாவது சுட்டிக் காட்டுவார், வகுப்பு நடத்திய ஆசிரியர். ஒவ்வொரு நாளும் கவனமாக எந்த தவறும் நிகழக் கூடாதென முயற்சி செய்வேன். எவ்வளவு கவனமாக முயற்சித்தாலும், ஒவ்வொரு நாளும் நான் படுமோசமாக தோற்றுப் போனேன்.
நிறைவு நாள் வகுப்பு சனிக்கிழமையன்று நிகழ இருந்தது. மூன்று வகுப்புகளையும் சேர்ந்த, 140 பங்கேற்பாளர்களுக்கும் வேறு இடத்தில், பெரிய அரங்கில் வகுப்பு நடத்த முடிவு செய்திருந்தோம். பெரியப் பெரிய கண்ணாடி ஜன்னல்களுடன் எட்டாவது மாடியில் அரங்கம் இருந்தது. பலத்த மழை காரணமாக எங்களால் வெள்ளிக்கிழமை இரவு அரங்கில், வகுப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியவில்லை. சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு அரங்கிற்கு சென்று பார்த்தால் திறந்தே இருந்த ஜன்னல்கள் வழியாக மழைநீர் உள்ளே வந்து நிறைந்திருந்தது. எப்படியோ சமாளித்து தண்ணீரை துடைத்து, ஏற்பாடுகளை முடித்து 6 மணி வகுப்பிற்கு 5.35 மணிக்கு கதவுகளை திறந்தோம்.
5.45 மணிக்கு அரங்கிற்குள் வந்த வகுப்பு ஆசிரியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஒலி அமைப்புகளுக்கான மின்சாரத்தை அவசர சூழ்நிலைக்காக வைத்திருந்த பேட்டரியில் இருந்து கொடுத்திருந்தோம். மின்னிணைப்பு சற்று தொலைவில் இருந்ததால் ஒலியமைப்புக்கு தேவையான மின்சாரம் எடுக்க முடியவில்லை, நாங்களும் எக்ஸ்டென்ஷன் பாக்ஸ் எடுத்துவர மறந்திருந்தோம். இதைக்கூட கவனிக்கவில்லையா என ஆசிரியர் கடிந்து கொண்டார். பிறகு யோசித்து பார்த்தபோது அவரது நியாயத்தை உணர்ந்துகொள்ள முடிந்தது. ஒருவேளை மைக் ஏதாவது தகராறு செய்திருந்தால் சமாளிக்கவே முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால், அப்போது அவர் சொன்ன அந்த விஷயம் என்னை உள்ளுக்குள் உடைத்தது. ஒரு எக்ஸ்டென்ஷன் பாக்ஸ் ஏற்பாடு செய்து இணைப்பை சரி செய்தோம், நிறைவு நாள் வகுப்பும் நல்லமுறையில் நடந்தேறியது. ஆனால், எனக்குள் சுக்குநூறாக நொறுங்கிப்போனவனாய் “என்னிடம் என்ன குறைபாடு உள்ளது?” என்ற கேள்வியில் தொலைந்திருந்தேன்.
வகுப்பு முடிந்த உடனே நடக்கவிருந்த பிரம்மச்சாரிகள் சந்திப்பில் கலந்துகொள்ள சொல்லி எனக்கு சொல்லியிருந்தார்கள். இம்முறை சத்குருவுடன் எல்லோரும் மங்களூர் கடற்கரைக்கு பயணமானோம். அலைகளின் நடனத்தை வேடிக்கை பார்த்த நிலவொளிக்கு துணையாக, விறகுகளை கொண்டு சிறு நெருப்பை கடற்கரை மணலில் மூட்டியிருந்தோம். நெருப்பைச் சுற்றி எங்கள் மத்தியில் அமர்ந்திருந்த சத்குருவிடமே கேள்வியை கேட்கும் வாய்ப்பும் அந்த இரவில் வந்தது. கை உயர்த்தி, சன்னமான குரலில் “சந்தோஷம் என்றால் என்ன?” என்றேன். சிறு யோசனையுடன் காணப்பட்டவர், என்னைப் பார்த்து சற்றே திகைத்தவராய், “சந்தோஷத்தை நான் எப்படி விளக்குவது..? உன் அனுபவத்தில் ஏற்கனவே இது நிகழ்ந்திருந்தால் உனக்கு இது தெரிந்திருக்கும்... இதுவரை உன் வாழ்க்கையில் ஒரு கணத்திலாவது ஆனந்தமாக இருந்திருக்கிறாயா?” என்றார். “இருந்திருக்கிறேன்,” என்றேன். “சூரிய உதயம் பார்க்கும்போது ஆனந்தமாக இருக்கிறதா?” “இருக்கிறது.” “சூரிய அஸ்தமனம் பார்க்கும்போது ஆனந்தமாக இருக்கிறதா?” “இருக்கிறது.” “பறவைகளின் கீச்சுக்குரல் கேட்க ஆனந்தமாக இருந்திருக்கிறதா?” “இருக்கிறது.” “எதுவுமே நடக்காதபோதும் உன்னால் ஆனந்தமாக இருக்க முடியுமா?” நீண்ட மௌனத்தின் முடிவில், எந்த யோசனையும் இன்றி “முடியும்” என என் உதடுகள் உச்சரித்திருந்தது.
இதற்காகவே காத்திருந்ததுபோல எந்தக் காரணமும் இன்றி அடுத்த பல மணிநேரங்களுக்கு, கடலுடன் விளையாடிய படியே எங்களுக்குள் மீண்டும் மீண்டும் ஆனந்தத்தை உருவாக்கத் துவங்கினோம். தொலைவில் அமர்ந்து எங்களையே பார்த்துக்கொண்டிருந்தவர் நீண்டநேரத்திற்கு பிறகே தமது டென்டிற்கு திரும்பினார். இந்தச் சந்திப்பு அதிசயத்தக்க வகையில் என்னை பல விதங்களில் மாற்றியமைத்தது. “தவறு நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்,” என்ற மனநிலையில் இருந்து “சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதற்கு முழுமையாக என்னை அர்ப்பணிப்பது,” என்ற நிலைக்கு அழைத்துச் சென்றது. இது மற்றவர்களின் கருத்துக்களை உள்வாங்கி என்னை வளர்த்துக்கொள்ளவும், அவர்களின் பார்வையில் சூழ்நிலையை புரிந்துகொள்ளவும் உதவியது. முழுமையான விடுதலை உணர்வுடன், உற்சாகமும், நன்றியும் என்னுள் நிறைந்தது.
வாழ்க்கை நோக்கம் நிறைவேறியது
2003ம் ஆண்டு சென்னையில் மஹாசத்சங்கம் நடத்த திட்டமிடப்பட்டது. சென்னை மக்கள் அனைவருக்கும் சத்குருவை எடுத்துச் செல்லும் வாய்ப்பாகவே இது எங்களுக்கு தெரிந்தது. ஈஷாவின் வரலாற்றில் முதன்முறையாக ஒருங்கிணைந்த முறையில் செயல்பட்டு, பொதுமக்களிடம் விளம்பரம் செய்யத் துவங்கினோம். சென்னையில் பிறந்து வளர்ந்ததால் ஏற்பட்டிருந்த நெருக்கம் மஹாசத்சங்க ஏற்பாடுகளில் நாம் இருக்கவேண்டும் என்ற ஏக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியது. நிகழ்ச்சிக்கு மூன்று வாரங்கள் முன்னரே சென்னைக்கு கிளம்பச் சொன்னார்கள். சென்னையில் கால் வைப்பதற்கு முன்பே, நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பர போர்டுகளை நகர் முழுவதும் வைத்து மக்கள் திரும்பிய பக்கமெல்லாம் சத்குருவின் முகம் தெரியவேண்டும் என முடிவு செய்திருந்தேன். இதற்கு முன்புவரை ஈஷாவில் இப்படி எதுவுமே செய்ததில்லை, இதற்கு எந்தளவு தயாராக இருந்திருக்க வேண்டும் என்ற புரிதலும் என்னிடம் இல்லை. அங்கேதான் ஆச்சரியங்கள் எனக்காக காத்திருந்தன.
ஒரு பேனர் வைப்பதற்கு மூன்றுவித செலவுகள் இருக்கிறது என்பதை அப்போது புரிந்துகொண்டேன் - பேனர் அச்சடிக்கும் செலவு, போர்டுக்கான வாடகை, பேனர் கட்டும் தொழிலாளர்களுக்கான சம்பளம். ஒரு பேனர் வைப்பதற்கு வாடகையும், அச்சடிக்க ஆகும் செலவையும் கேட்டதும் நம்மால் ஒரு பேனராவது வைக்க முடியுமா எனத் தோன்றியது. அந்த காலகட்டத்தில், ஒரு பேனர் வைப்பதற்கான செலவினை ஈஷா அறக்கட்டளைக்கு நன்கொடையாக கிடைக்கும் தொகையிலிருந்து வைத்திருக்க முடியாத நிலையில்தான் இருந்தோம். நமது விளம்பரதாரர்களுடன் சந்திப்புகள், செலவை எங்கெல்லாம் குறைக்க முடியும் என்ற ஆலோசனைகள், மற்றும் சில மாயாஜாலங்களுக்கு பிறகு நாம் அப்போது நிறுவியது 112 பேனர்களை. இப்போதைய சென்னை நகருக்கு இது ஒரு துளியாக தெரியும், ஆனால் அப்போதைய சென்னை நகரையே ஒரு கலக்கு கலக்கினோம் எனலாம்.
தி.நகரின் பரபரப்பான மையப்பகுதியில், இரு சாலைகளுக்கு இடையே, 12X10 அடியில் ஒரு ஹோர்டிங் வைத்தோம். நாள் முழுவதும் நெரிசலாக இருக்கும் அந்தச் சாலை வழியாக யார் சென்றாலும், சத்குருவை பார்க்காமல் செல்லமுடியாத வகையில் அதன் அமைப்பு இருந்தது. அந்த பேனர் வைக்கும்போது, சத்குரு சென்னை மக்களை தொடும் வகையில் இருப்பதாக தோன்றியது. எல்லா பேனர்களும் வைத்து முடித்துவிட்டு திரும்பியபோது ஆசிரியர்கள் சந்திப்பு நடந்துகொண்டு இருந்தது. எனக்குள் பொங்கிக்கொண்டு இருந்த உற்சாகத்தினால், திடுமென உள்ளே நுழைந்து கைகளை உயர்த்தி, “என் பிறவிப் பயனை அடைந்தேன்!!” என கூவினேன்.
இந்த முயற்சிகள் அனைவரது கவனத்தை கவர்ந்தது போலவே பத்திரிகையாளர்களது கவனத்தையும் ஈர்த்தது. “எந்த விளம்பர நிறுவனம் மூலம் இவ்வளவு பேனர்களை வைத்தீர்கள்?” என்று ஒரு நிருபர் சத்சங்கத்திற்கு பிறகு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், சத்குருவிடமே கேட்டார். பேனரில், சத்குரு மேல்முகமாக வானம் பார்ப்பது போன்ற புகைப்படத்தை பயன்படுத்தி இருந்தோம். இது மக்களை வெகுவாக கவர்ந்ததால் “வானம் பார்த்த குருஜி,” என்ற செல்லப் பெயரிலேயே சில மாதங்கள் வரை சத்குருவை அழைத்தனர்.
துவங்கியது ஒரு நாள் போட்டிகள்
தொடர்ந்த அடுத்த சில ஆண்டுகளுக்கு ஈஷா தகவல் பிரிவில் (Isha Commînication Center - ICC) இருந்தேன். இதில் பொது நிர்வாகம், ஊடகம், நிதி திரட்டுதல் எல்லாமும் இணைந்திருந்தது. நிர்வாக வசதிக்காக தனித்தனியாக பிரிக்கப்பட்ட இந்த துறையிலிருந்த, நிதி திரட்டும் பிரிவை வழிநடத்தும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது. நிதி திரட்டுவது மட்டுமின்றி சத்குருவுடன் 7% கூட்டு மூலம் ஈஷாவின் அங்கமாக - ஈஷாங்காவாக மக்களுக்கு வழிவகுப்பது முதல், தங்கள் இல்லங்களுக்கு யந்திர வடிவில் தேவியை எடுத்துச்செல்லும் மக்களுக்கான ஏற்பாடுகள் என பல செயல்களில் பங்கெடுத்தோம். தேவி யந்திரங்கள் அதை தங்கள் இல்லங்களில் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பயன்களை வழங்குவதில்லை, உலகைப் பிரதிஷ்டை செய்யவேண்டும் எனும் சத்குருவின் கனவிற்கும் உறுதுணையாய் இருக்கின்றன.
நிதி திரட்டுவதிலுள்ள பெருஞ்சவால் என்று பார்த்தால், அது சத்குரு அறிவிக்கும் திடீர் மெகா திட்டங்கள்தான். சமீபத்தில் நிகழ்ந்த “நதிகளை மீட்போம்“ இயக்கமும் இப்படி ஒரு சவாலை கொடுத்தது. நாடு முழுவதும் இயக்கத்துடன் இணைந்து செயல்பட விரும்பும் நிறுவனங்கள், விளம்பரதாரர்கள் என அனைவரையும் ஒருங்கிணைக்க நமக்கு அறுபதுக்கும் குறைவான நாட்களே இருந்தன. முதலில் இதற்கென தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆனால், மீண்டும் நமது துறையிடமே இந்தப் பொறுப்பு வந்து சேர்ந்தது - இப்போது நம் கைவசம் இருந்தது இன்னும் குறைவான நாட்களே!
முதன்முறையாக தனித்தனி நிதி திரட்டும் குழுக்களை ஒவ்வொரு ஊரில் உள்ள ஈஷா மையங்களில் ஏற்படுத்தினோம். இதனால், பெரியளவில் தன்னார்வத் தொண்டர்கள் இதில் கலந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. நேரம் குறைவாக இருந்த நிலையில் நமது இலக்கை நோக்கிய பயணம் ஒவ்வொரு நாளுமே பரபரப்பான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போலானது. நேரத்துடன் போட்டிப் போட வேண்டியிருந்தது.
வெளிச்சூழ்நிலை எப்படி இருந்தாலும் சரி, இறுதியில் எல்லாமே அவர் அருளால் வழக்கம்போல அதனதன் இடத்தில் வந்துசேரும் என்பது நமக்கு தெரிந்திருந்தது. ஆனால், முழுமையாக நம்மை கொடுத்து சூழ்நிலைக்கு என்ன வேண்டுமோ அதை செய்யத் தேவையிருந்தது. ஒட்டுமொத்த ஈஷாக்களும் “நதிகளை மீட்போம்,” இயக்கத்திற்காக ஒன்றிணைந்து, நாடு முழுவதும் 140திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டினர். இதனால், இந்த நிகழ்ச்சிகளுக்கும், நாடு முழுவதுமான விழிப்புணர்வு பேரணிக்கும் தேவையான நிதியையும் நம்மால் ஒருங்கிணைக்க முடிந்தது.
மௌனத்தின் குரல்
ஈஷா அறிமுகமான முதல் நாளில் இருந்து இந்த உடல் மற்றும் மனம் தாண்டி உயிரை உணர வழி உள்ளது என பலமுறை சத்குரு தொடர்ந்து சொல்லியே வந்திருக்கிறார்கள். சிந்தனை ஓட்டத்திலேயோ அல்லது உடல்தன்மையுடன் மட்டுமோ சிக்கிக்கொள்ளாமல், சும்மா இருப்பதற்கு மற்றொரு வழி இருக்கிறது என்பதை சமீபத்தில் மூன்று மாதங்கள் மௌனத்தில் இருந்தபோதுதான் உச்சந்தலையில் ஓங்கி அடித்ததுபோல உணர்ந்து கொண்டேன்.
மௌனத்தில் இன்னும் சில நாட்கள் கழிய, “எனக்கு எதுவுமே தெரியவில்லை,” என்பது அனுபவமாக ஏற்பட்டது. “உண்மையிலேயே எனக்கு எதுவுமே தெரியவில்லை,” என்பதை தெளிவாக பார்க்க முடிந்தது. இதுவரை என் மனதில் சேகரித்து இருப்பது தூசி அளவுக்குக்கூட சமானம் இல்லை. இதை உணர்ந்ததும் பார்க்கும் எல்லாவற்றையும் வணங்கும் சுதந்திரமான நிலையும் நன்றியும் என்னுள் நிறைகிறது.
இந்த உணர்வில் எழுந்த சில வரிகள்...
உயர்ந்து நிற்கும் வெள்ளியங்கிரியை பார்க்கிறேன்
எல்லா மலைகளுக்கும் மலைமடியில் தவழும்
நிலங்களுக்கும் தலைவணங்குகிறேன்
எப்போதும் உற்சாகமாக எனைத் தீண்டும்
சூரியக்கதிரை உணர்கிறேன்
கதிரின் கருணையில் உயிர்க்கும்
எல்லா உயிர்களுக்கும்
தலைவணங்குகிறேன்
மயக்கமூட்டுகிறது நாகலிங்க மலர்களின் நறுமணம்
தாவர உயிர்களே உங்கள் அனைவருக்கும்
தலைவணங்குகிறேன்
மெல்ல காதில் விழுகிறது
முகமறியா பறவைகளின் செல்லக்கீச்சுகள்
ஊர்ந்தும், பறக்கவும், தாவவும்
விலங்குயிர்களே உங்கள் அனைவருக்கும்
தலைவணங்குகிறேன்
உயிர்பெருக்கி உமிழ்ந்த தேனை சுவைக்கிறேன்
எல்லா வண்டினங்களுக்கும், பெயரறியா வாழினங்களுக்கும்
தலைவணங்குகிறேன்
ஓ! சக மனிதரே...
உங்கள் ஒவ்வொருவருக்கும்
தலைவணங்குகிறேன்
வணங்கும்போதும் வெறுமனே இருக்கும்போதும்
உடலின் தளைகளிலிருந்து விடுபடுகிறேன்
நன்றியும் பேரானந்தமும் நிறைந்து
இங்கே... இப்போதே...
உயிர்த்தழுவ காத்திருக்கிறேன்
இது நீயா ஷம்போ?