செம்பருத்திப் பூ தரும் செழிப்பான ஆரோக்கியம் (Semparuthi Poo Benefits in Tamil)
சினிமா பாடல்கள் முதல் இலக்கிய பதிவுகள்வரை செம்பருத்தி பூவினை பாடாத புலவர்களும் கவிஞர்களும் இல்லையென்றே சொல்லலாம். சாலையோரங்களிலும் வீட்டின் கொல்லைப் புறங்களிலும் தோட்டக்கால்களிலும் சகஜமாக நம்மைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும் இந்த செம்பருத்திப் பூக்களிலுள்ள ஆரோக்கிய பலன்கள் என்னென்ன என்பதை உமையாள் பாட்டி கூற கேட்கலாம். வாருங்கள்!
கொல்லைப்புற இரகசியம் தொடர்
ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு பிடிப்பதற்காக உடலைத் தயார் செய்ய பல்வேறு டிப்ஸ்களை உமையாள் பாட்டியிடம் கேட்டறிந்து கடந்த ஒரு வருடமாக அதற்காக என்னை தயார்செய்து கொண்டிருந்தேன். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களத்தில் இறங்கி சில பல மாடுகளைப் பிடித்து, எங்கள் ஊரில் கெத்துகாட்ட வேண்டுமென்ற எனது நெடுநாள் ஆசையை நிஜமாக்க இதோ கிளம்பிவிட்டேன்!
ஆனால், டிப்ஸ் வழங்கிய பாட்டியிடம் ஆசி வாங்காமல் சென்றால், ஒருவேளை மாடுகள் நம்மை பதம் பார்த்துவிட்டதென்றால், என்னிடம் சொல்லாமல் சென்றதால்தான் இப்படி மாடு உன்னை பந்தாடிவிட்டது என பாட்டி பகடி பேசுவாள். எதற்கு வம்பு, போய் விடைபெற்று வந்துவிடுவோம்!
“பாட்டி… பாட்டி…! எங்க இருக்கீங்க!” பாட்டியை கூப்பிட்டுக்கொண்டே வீட்டின் தலைவாசல் வழியாக அடுப்பங்கரை, பின்வாசல் என எல்லா இடங்களிலும் பாட்டியை தேடினேன். அரை மணிநேரம் கழித்து ஆயாசமாக வந்த பாட்டியின் கைகளில் கூடைநிறைய செம்பருத்திப்பூக்கள் இருப்பதைப் பார்த்தேன்.
“வாப்பா, எப்ப வந்தே?! ரொம்ப நாளாச்சு இந்த பக்கம் வந்து?! செத்த நேரம் முன்னாடி வந்திருந்தேன்னா உன்ன பூப்பறிக்க தோட்டத்துக்கு கூப்பிட்டு போயிருப்பேன்” பாட்டி சொல்லிக்கொண்டே செம்பருத்தி பூ இதழ்களை லாவகமாக ஆயத் துவங்கினாள்.
“என்ன பாட்டி சொல்றீங்க… நான் போய் பூப் பறிக்கிறதா?! இந்த கைகள் அடுத்த வாரம் வர்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் அடங்காத பல காளைகளையெல்லாம் அடக்கி பரிச ஜெயிக்கப் போகுது பாட்டி. அப்புறம் பாருங்க, நம்ம ஊர் பொண்ணுங்க மத்தியில நாந்தான் ஹீரோ!” உள்ளுக்குள் ஒரு மரணபீதி இருந்தாலும் பாட்டியிடம் அதைக் காட்டிக்கொள்ளாமல் கெத்தை மெய்ண்டெய்ன் செய்தேன்.
Subscribe
“ஹீரோவா இருக்கணும்னா மாட்டை அடக்குறது முக்கியம்தான், ஆனா தலைமுடியும் கருகருனு இருந்தாதானே நல்லா சரியா இருக்கும்.” பாட்டி என் தலையில் உள்ள இளநரைகளை கோதிவிட்டபடி சுட்டிக் காண்பித்தாள்.
“ஆமாம் பாட்டி நீங்க சொல்றது சரிதான் பேசாம டை அடிச்சிக்கலாம்னு பாக்குறேன்.”
“டை அடிச்சேனா தலைமுடி பாழாப்போயிடும். அதுல கெமிக்கல்ஸ் இருக்குறதால ஆரோக்கியமும் கெடும். அதனால நீ இயற்கை வழியில சரி செய்யப்பாரு. நான்கூட இப்போ செம்பருத்தி பறிச்சிட்டு வந்தது கருமையான அடர்த்தியான கூந்தலுக்கான ஒரு தைலம் தயாரிக்கறதுக்காகத்தான்.”
“சொல்லுங்க பாட்டி, நான் அதை ஃபாலோ பண்றேன். ஜல்லிக்கட்டுக்கு போகும்போது செமயா கருகருன்னு ஹேர் ஸ்டைல்ல போகணும்” பாட்டி தைலம் தயாரித்துக்கொண்டே செம்பருத்தி பற்றிய பல்வேறு மருத்துவ பலன்களை கூறத் துவங்கினாள்.
செம்பருத்திப் பூ பயன்கள் (Semparuthi Poo Benefits in Tamil)
கருப்பான அடர்த்தியான தலைமுடி பெற:
“செம்பருத்தி பூ நம்ம உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. பொதுவா நம்ம உடல் சரியான வெப்பநிலையில் அதிக சூடு இல்லாம இருந்ததுனா அவ்வளவா முடி கொட்டாது. அதனால செம்பருத்தி பூ இதழ்களை அப்படியே கூட நாம சாப்பிடலாம். குறிப்பா செம்பருத்தி பூவை அரைத்து அந்தச் சாறை எடுத்து அதோட சமஅளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி அந்த எண்ணெயை தொடர்ந்து தலையில தடவிக்கொண்டு வந்தா கருப்பான அடர்த்தியான கேசம் கிடைக்கும்.”
“ஓ இவ்வளவு சிம்பிளா பாட்டி! இன்னையில இருந்தே இதை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிடுறேன்”
“செம்பருத்தி பூவுல இது மட்டுமில்லாமல் இன்னும் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு சொல்றேன் கேளு…!”
“கண்டிப்பா பாட்டி… சொல்லுங்க ப்ளீஸ்!”
நீர்க்கடுப்பு சரியாக:
“நாலு செம்பருத்தி இலைகளை எடுத்து அதை இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி, அதுகூட கற்கண்டு சேர்த்து குடிச்சுவந்தா, உடல் சூட்டினால வரும் நீர்க்கடுப்பு சரியாகும். இதுல நாலு செம்பருத்தி இலைகளுக்கு பதிலா நாலு செம்பருத்தி மொட்டுகள கூட பயன்படுத்தலாம்.”
முறையற்ற மாதவிடாய் சுழற்சி சரியாக:
“அப்புறம் பெண்களுக்கு வர்ற முக்கியமான பிரச்சனையா முறையற்ற மாதவிடாய் (irregular periods) சுழற்சி இருக்கு. நாலு செம்பருத்தி பூவை அரைச்சு அதை பேஸ்ட் மாதிரி பண்ணி தினமும் காலையில வெறும் வயிற்றில் ஒரு வாரம் சாப்பிட்டு வந்தா முறையற்ற மாதவிடாய் சுழற்சி சரியாகும். அல்லது செம்பருத்தி பூக்களை நிழல்ல உலர்த்தி அதை பொடியாக்கி தினமும் காலையில வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம்.”
இருமல் தீர:
“தீராத இருமல் பிரச்சனை இருக்கிறவங்க 15 செம்பருத்தி இலையை எடுத்து அதுகூட 3 ஆடாதோடை தளிர் இலைகளை சேர்த்து நசுக்கி, அதை இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி, அரைத் தேக்கரண்டி தேன் கலந்து தினமும் காலை மற்றும் மாலை என 3 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தா இருமல் பிரச்சனை தீரும்.”
இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் தீர:
“பொதுவா இதயநோய் பிரச்சனை உள்ளவங்களுக்கு செம்பருத்தியை பரிந்துரைப்பாங்க. ஏன்னா செம்பருத்தி பூவுல அவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கு. செம்பருத்தி பூவை உலர்த்தி அதை பொடியாக்கி அதை தினமும் பாலில் கலந்து குடிச்சுவந்தா இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு அது துணைபுரியும்.”
பாட்டி செம்பருத்தி பூவின் பல்வேறு மருத்துவ குணங்கள் பற்றி தொடர்ந்து சொல்லிக்கொண்டே போக, நான் அவள் தயாரித்து வைத்த அந்த செம்பருத்தி பூ தைலத்தை சிறிது பாட்டிலில் எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.
“பாட்டி நான் போயிட்டு வர்றேன்… அடுத்தவாரம் ஜல்லிக்கட்டுல நான் சிறப்பா விளையாடணும்னு வாழ்த்துங்க!” புறப்படுவதற்கு முன் பாட்டியிடம் விடைபெற்றேன்.
“என்னோட வாழ்த்து உனக்கு நிச்சயம் உண்டு. ஆமா நீ மாட்ட கையால புடிச்சு அடக்கப்போறியா, இல்லேன்னா எதாவது பாட்டு பாடியே மாட்ட படிய வைக்கப்போறியா?” பாட்டி நையாண்டி செய்தது காதில் கேட்காததைப்போல பாட்டிக்கு நன்றி சொல்லிவிட்டு அப்படியே அங்கிருந்து எஸ்கேப் ஆனேன்.