கொல்லைப்புற இரகசியம் தொடர்

வீட்டின் முற்றத்தில் கையிலிருந்த கீரையை கவனத்துடன் ஆய்ந்து கொண்டிருந்த உமையாள் பாட்டியிடம் சென்று வழக்கம்போல புன்னகைத்தேன். ஆனால், பாட்டியோ என்னை அடையாளம் தெரியாதது போல் ஏற இறங்க திகைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இந்த கீரைக்கு கரிசாலை, பிருங்கராஜம், தேகராஜம் அப்படின்னு வேறு சில பெயர்களும் இருக்கு. கரிசலாங்கண்ணி கீரையில வெள்ளை, நீலம், மஞ்சள், சிவப்பு அப்படின்னு நான்கு வகை இருந்தாலும், இப்போ நம்ம புழக்கத்துல இருக்கிறது மஞ்சள் கரிசலாங்கண்ணி மட்டும்தான்.

“என்ன பாட்டி நாலு மாசமா லாக்டவுன்ல என்னை மறந்துட்டீங்களா… அடையாளம் தெரியாத அளவுக்கு நான் வெயிட் போட்டேனா?” என கேட்டபோது, “முதல்ல முகத்தில இருக்கிற மாஸ்க்க கழட்டுப்பா… அப்பதான் நீ என் பேரனா, இல்ல முகமூடி திருடனான்னு பாக்க முடியும்!” என்று சொல்லி தனது ட்ரேடு மார்க் நையாண்டியை பதிவுசெய்தார்.

“உங்கக்கிட்ட திருடிட்டு போகறதுக்கு அப்படி என்ன இருக்கு பாட்டி?! அப்படியே திருடன் வந்தாலும் உங்க வீட்டில இருக்கிற நிலவேம்பு கசாயத்தை குடிச்சுட்டு, உங்கக்கிட்ட கொஞ்சம் ஹெல்த் டிப்ஸ் கேட்டுட்டுதான் போக முடியும்.”

நான் சொன்னதும் பாட்டி, “அதென்னவோ உண்மைதாம்ப்பா!” என்று சொல்லி கலகலவென சிரித்தாள்.

karisalankanni keerai image, manjal karisalankanni images, கரிசலாங்கண்ணி, மஞ்சள் கரிசலாங்கண்ணி

“இது என்ன செடி பாட்டி?” பாட்டியின் கையிலிருக்கும் கீரை பற்றி கேட்டு, வந்த வேலையை ஆரம்பித்தேன்.

“இது மஞ்சள் கரிசலாங்கண்ணி… இந்த கீரைக்கு கரிசாலை, பிருங்கராஜம், தேகராஜம் அப்படின்னு வேறு சில பெயர்களும் இருக்கு. கரிசலாங்கண்ணி கீரையில வெள்ளை, நீலம், மஞ்சள், சிவப்பு அப்படின்னு நான்கு வகை இருந்தாலும், இப்போ நம்ம புழக்கத்துல இருக்கிறது மஞ்சள் கரிசலாங்கண்ணி மட்டும்தான். இந்த மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரையில நிறைய ஆரோக்கிய நன்மைகள் இருக்கு.”

“ம்… சொல்லுங்க பாட்டி முழுசா…! நான் பொறுமையா கேக்குறேன். எனக்கென்ன வேலையா வெட்டியா?!” என்று பாட்டியின் அருகில் சோஷியல் டிஸ்டண்ஸ் கடைபிடித்தபடி அமர்ந்து கேட்கலானேன்.

கரிசலாங்கண்ணி கீரை (Karisalankanni Keerai) வழங்கும் நன்மைகள்:

“நம்ம முன்னோர்கள் கரிசலாங்கண்ணி இலைய காய வச்சு பொடியாக்கி பல் துலக்குறதுக்கு பயன்படுத்தி வந்திருக்காங்க. நம்ம அன்றாட உணவில துவையலா, கடைசலா, பொறியலா இருந்துவந்த இந்த கீரை, இப்போ மருந்தா மட்டுமே பயன்படுத்தப்படுது.

karisalankanni keerai image, manjal karisalankanni images, கரிசலாங்கண்ணி, மஞ்சள் கரிசலாங்கண்ணி

கரிசாலை தைலம்:

இதோட இலைச்சாறு 70 மி.லி எடுத்து, நல்லெண்ணெய் 700 மி.லி சேர்த்து சிறு தீயாக எரிச்சு பக்குவமா தைலமா காய்ச்சிக்கலாம். அந்த தைலத்த காலையிலும் மாலையிலும் 5 மி.லி சாப்பிட்டு வந்தா இருமல் குணமாகும். கரிசாலை தைலத்த தலைக்கு தேச்சி குளிச்சி வந்தா உடல் குளிர்ச்சியாகி, கண் எரிச்சல் குறையும், காதுவலி நீங்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஜலதோஷம்:

இந்த இலைச்சாற 2 துளி எடுத்து தேன்ல கலந்து கை குழந்தைகளுக்கு கொடுத்தோம்னா, ஜலதோஷம் சரியாகும்.

காதுவலி:

காதுவலி உள்ளவங்களுக்கு இந்த இலைச் சாற்ற விட்டோம்னா வலி தீரும்.

யானைக்கால் நோய்:

கரிசலாங்கண்ணிய நல்லெண்ணெயில அரைச்சி யானைக்கால் நோயுள்ளவங்களுக்கு மேல்பூச்சா பூசலாம்.

சிறுநீரில் இரத்தம்:

சிறுநீரில் இரத்தம் வந்தா இலைச்சாற கால் முதல் அரை ஆழாக்கு தினமும் இருவேளை கொடுக்கலாம்.

தேள் கடி:

இலைய அரைச்சு தேள் கடிச்ச இடத்துல தேச்சு, அதை அப்படியே அங்க கட்டி வச்சா நஞ்சு நீங்கும். இலையை வேக வச்சு ஆவி பிடிச்சா மூல நோய் குணமாகும்."

தலைமுடி கருமையாக வளர கரிசலாங்கண்ணி எண்ணெய் (karisalankanni hair oil in tamil):

இப்படியே பாட்டி பலன்களை அடுக்கிக்கொண்டே போக “கரிசலாங்கண்ணியில பியூட்டி டிப்ஸ் ஏதும் இல்லையா பாட்டி?” என மனதுக்குள் இருந்த என் கேள்வியை ஒரு கட்டத்தில் இடைமறித்துக் கேட்டுவிட்டேன்.

"ஏன் இல்ல... கரிசலாங்கண்ணி இலைச்சாற நல்லெண்ணெய், இல்லைனா தேங்காய் எண்ணெயில காய்ச்சி தலைக்கு தேச்சி வர தலைமுடி நல்லா கருமையா வளரும்.

கல்லீரல், மண்ணீரல், தோல் நோய்கள்:

கரிசலாங்கண்ணி வேருக்கும் மருத்துவ குணமிருக்கு. இதோட வேர்ப்பொடிய கல்லீரல், மண்ணீரல் நோய்களுக்கும், தோல் சம்பந்தமான நோய்களுக்கும் மருந்தா எடுத்துக்கலாம்."

பாட்டி சொல்லிக்கொண்டே கரிசலாங்கண்ணி இலைச்சாறு தயார் செய்து முடித்தாள். நான் வழக்கம்போல அதிலிருந்து ஒரு 100 மிலியை பாட்டியிடம் வாங்கிக்கொண்டு புறப்பட்டேன். இ-பாஸ் இல்லாமல் இடம் விட்டு இடம் போய் வருவது எவ்வளவு ஆனந்தம் என்று மனதுக்குள் ஒரு புது சந்தோஷம் இருந்த அதே வேளையில், மாஸ்க்கை மறக்காமல் போட்டுக்கொண்டு கிளம்பினேன்.

மருத்துவ குறிப்பு: டாக்டர். S.சுஜாதா MD (S)
ஆரோக்யா க்ளினிக், சேலம்.

மஞ்சள் கரிசலாங்கண்ணி (Manjal Karisalankanni) மூலிகை மகத்துவம்!

karisalankanni keerai image, manjal karisalankanni images, கரிசலாங்கண்ணி, மஞ்சள் கரிசலாங்கண்ணி

‘உணவே மருந்து!’ என்ற சொல்லாடல் நமது பாரம்பரியத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. நாம் எதை உண்கிறோமோ அதுதான் நமது உடலாக மாறி, நம்மை ஜீவிக்க வைக்கிறது. அந்த வகையில் பல அரிய மூலிகைச் செடிகள் நம் பாரம்பரியத்தில் சித்தர்களாலும் யோகிகளாலும் கண்டறியப்பட்டு, அன்றாட வாழ்வில் உணவாகவே இருந்து வந்துள்ளன. அப்படிப்பட்ட ஒரு அற்புத தாவரம்தான் கரிசலாங்கண்ணி கீரை.

மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரையைப் பற்றி வடலூர் மகான் வள்ளலார் சுவாமிகள் மிக உயர்வாக கூறுகிறார். உரைநடையாக அமைந்துள்ள இவரது 6ஆம் திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு மூலிகைகளின் சிறப்புகளை அனைவரும் எளிதில் படித்து புரிந்துகொள்ளமுடியும். இதில், மஞ்சள் கரிசலாங்கண்ணியை உணவில் சேர்த்து வரும்போது நமது ஆன்ம பலம் பெருகுவதோடு உடற்கழிவுகள் வெளியேறி கண்ணொளி பிரகாசிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரிசலாங்கண்ணி வகைகள்:

வெள்ளை, மஞ்சள், நீலம், சிவப்பு என பூக்களின் நிறங்களின் அடிப்படையில் நான்கு வகையான கரிசலாங்கண்ணி செடிகள் இருந்துவந்துள்ளன. இதில் வெள்ளைக் கரிசலாங்கண்ணியை நாம் வர்ப்போரங்களிலும் தோட்டப் பகுதிகளிலும் எளிதில் பார்க்கலாம். மஞ்சள் கரிசலாங்கண்ணியை பார்ப்பது சற்று அரிது. சிவப்பு மற்றும் நீல பூப்பூக்கும் கரிசலாங்கண்ணி செடிகள் கிட்டத் தட்ட அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

white karisalankanni keerai image, கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி

மஞ்சள் கரிசலாங்கண்ணியின் மகத்துவம்!

மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரையைப் பற்றி வடலூர் மகான் வள்ளலார் சுவாமிகள் மிக உயர்வாக கூறுகிறார். உரைநடையாக அமைந்துள்ள இவரது 6ஆம் திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு மூலிகைகளின் சிறப்புகளை அனைவரும் எளிதில் படித்து புரிந்துகொள்ளமுடியும். இதில், மஞ்சள் கரிசலாங்கண்ணியை உணவில் சேர்த்து வரும்போது நமது ஆன்ம பலம் பெருகுவதோடு உடற்கழிவுகள் வெளியேறி கண்ணொளி பிரகாசிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நுரையீரல் சளியையும் மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை நீக்கவல்லது. மஞ்சள் கரிசலாங்கண்ணி பொன் நிறத்தில் பூக்கும் மஞ்சள் நிற பூவின் காரணமாக “பொற்றலை கையாந்தகறை” எனும் பெயரில் இன்றும் ஊர்ப்புறங்களில் அழைக்கப்படுவதைக் காணலாம்!

ஆஸ்டியேசி குடும்பத்தை சேர்ந்த இந்த கரிசலாங்கண்ணியில் பாஸ்பரஸ் சத்து நிறைந்து காணப்படுகிறது. நம் முன்னோர்கள் கரிசலாங்கண்ணி இலையை காயவைத்து பொடியாக்கி பல் துலக்குவதற்கு பயன்படுத்தி வந்துள்ளனர். நம் அன்றாட உணவில் துவையலாக, கடைசலாக, பொறியலாக இருந்துவந்த இத்தகைய கீரை வகைகள், இன்று மருந்தாக மட்டுமே பார்க்கப்படுகிறது.

விதை மூலமாக அல்லாமல் தண்டினை வெட்டி வைப்பதன் மூலமே உற்பத்தி செய்யப்படும் இந்த மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை ஈஷா பசுமைக் கரங்களின் நர்சரிகளில் தற்போது கிடைக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் வீட்டு வாசலிலோ அல்லது கொல்லைப் புறத்திலோ வீட்டிற்கு தேவையானதை நட்டு வைத்து, உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளலாம்.

karisalankanni keerai image, manjal karisalankanni images, கரிசலாங்கண்ணி, மஞ்சள் கரிசலாங்கண்ணி

மொட்டை மாடி மூலிகைத்தோட்டம்!

நமது வீட்டைச்சுற்றி மூலிகைச் செடிகளை வளர்த்தால் நமக்கு நல்ல சுகாதாரமான காற்றை அவை வழங்குவதோடு, உடல் நலன் காக்கும் மருந்தாகவும் அவை பயன்படும். ‘எங்கள் வீட்டைச் சுற்றி இடமில்லையே... நாங்கள் எங்கே போய் வைப்பது?!’ என்ற கேள்வி சிலருக்கு எழலாம். அவர்களுக்காகவே இருக்கிறது மொட்டை மாடி! ஆம்... நாம் மொட்டை மாடிகளில் இந்த மூலிகைச் செடிகளை தொட்டிகளிலோ அல்லது பாக்கெட்டுகளிலோ வைத்து வளர்த்து, மொட்டை மாடி மூலிகைத் தோட்டத்தினை உருவாக்கமுடியும்.

ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம்

ஈஷா அறக்கட்டளை பசுமைக் கரங்கள் திட்டம் மூலம், தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு செயல்களை மேற்கொண்டு வருகின்றன.

தமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ள பசுமைக் கரங்களின் தன்னார்வத் தொண்டர்கள், எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் பிரத்யேகமாக தயார் செய்து வழங்குகிறார்கள். புங்கன், வாகை, தேக்கு, கல்தேக்கு, செஞ்சந்தனம் மற்றும் மலைவேம்பு போன்ற மரப்பயிர் வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் மிகக் குறைந்த விலையில் (ரூ.7) விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஈஷா நாற்றுப்பண்ணைகளில் மூலிகைச் செடிகள் பதியமிடப்பட்டு, விநியோகிக்கப்படவுள்ளன. ஒரு சில குறிப்பிட்ட ஈஷா நாற்றுப்பண்ணைகளில் மூலிகைச்செடிகள் விநியோகம் துவங்கியுள்ளது. எனினும் மற்ற நாற்றுப்பண்ணைகளில் செடிகள் உற்பத்தி நிலையில் உள்ளன. கூடிய விரைவில் அனைத்து ஈஷா
நாற்றுப்பண்ணைகளிலும் மூலிகை நாற்றுகளைப் பெற முடியும்.

உங்கள் ஊரின் அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் குறைந்த விலையில் பல அரிய வகை மரக்கன்றுகளைப் பெறுவதற்கு 94425 90062 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

Image courtesy: Bob Peterson @ flickr