நெல் ஜெயராமன் நினைவு நாளை முன்னிட்டு காவேரி கூக்குரல் சார்பில் ஈரோட்டில் ’மரம் நட விரும்பு’ நிகழ்ச்சி
பாரம்பரி நெல் ரகங்களை மீட்டெடுப்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த மாமனிதர் திரு.நெல் ஜெயராமன் அவர்களின் நினைவைப் போற்றும் விதமாக, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ‘மரம் நட விரும்பு' எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி மாணவர்கள் மற்றும் ஈஷா தன்னார்வலர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வு குறித்து விரிவாக இங்கே படித்தறியலாம்!

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் பணியில் தன் வாழ்நாளை அர்ப்பணித்த திரு.நெல் ஜெயராமன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் ‘மரம் நட விரும்பு’ நிகழ்ச்சி டிசம்பர் 6ம் தேதியன்று சிறப்பாக நடைபெற்றது.
மொடக்குறிச்சி வட்டம், குளூர் அருகே உள்ள சிவலிங்கபுரத்தில், விவசாயி திரு. கே.எஸ்.ராஜேஸ்வரன் அவர்களுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில் சுமார் 3,500 மரங்களை நடும் விதமாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவர் திரு.நல்லசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் தன்னார்வ தொண்டு அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மரக்கன்றுகளை நடவு செய்தனர். குறிப்பாக, சுற்றுச்சூழல் மேம்பாட்டுடன் சேர்த்து விவசாயியின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக தேக்கு, கருமருது, செம்மரம், சந்தனம், ரோஸ்வுட் போன்ற விலைமதிப்புமிக்க டிம்பர் மரங்கள் நடப்பட்டன.
காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.தமிழ்மாறன் அவர்கள் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார். இந்நிகழ்ச்சி தொடர்பாக அவர் கூறுகையில், “நெல் ஜெயராமன் ஐயா அவர்கள் ஈஷாவின் சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று ஆதரவு அளித்துள்ளார். அவர் ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தும் போது மரக்கன்றுகளை நட்டு வைத்துதான் நிகழ்வை தொடங்குவார். மேலும், ஈஷா பசுமை கரங்களுடன் இணைந்து 10,000 டிம்பர் மரக்கன்றுகளை உருவாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கினார்.
அத்துடன், சத்குரு நடத்திய ’நதிகளை மீட்போம்; பாரதம் காப்போம்’ என்ற சுற்றுச்சூழல் பேரணியின் போது திருச்சியில் பங்கேற்று ஆதரவு அளித்து பேசினார். விவசாயிகள் நலனுக்காக தொடர்ந்து சேவையாற்றிய அவருக்கு நன்றி கூறும் விதமாக இன்றைய மரக்கன்று நடும் நிகழ்வை நடத்துகிறோம்” என்றார்.
காவேரி நதியை மீட்டெடுப்பதற்காக சத்குரு அவர்களால் கடந்தாண்டு தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம், தமிழ்நாடு மற்றும் கர்நாடக விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதன் விளைவாக, இவ்வியக்கத்தின் மூலம் இதுவரை 86 லட்சம் மரக்கன்றுகள் விவசாயிகள் தங்கள் நிலங்களில் நட்டு வளர்த்து வருகின்றனர்.
Subscribe