சித்திரை மாதத்தில் வரும் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகின்றது. தமிழ் பஞ்சாங்கத்தில் (காலண்டரில்) ஒரு சுற்று என்பது 60 வருடம், மற்றும் ஒவ்வொரு வருடமும் தனித்துவமிக்க பெயர் கொண்டது. இந்த சுற்றில் இந்த வருடம், 30வது வருடமாக துர்முகி என்ற பெயருடன் ஆரம்பமாகிறது. இத்திருநாளில் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் வழங்கிய நிகழ்ச்சிகளை பற்றி படித்து மகிழுங்கள்.

இவ்வருடம், தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் வகையில், ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளை தியானலிங்க வளாகத்தில் வெகு சிறப்பாக அறங்கேற்றினர். நிகழ்ச்சியில் முதலாவதாக, தித்திக்கும் சில தேவார, திருப்புகழ் பதிகங்களை மாணவர்கள் பாடினர். சங்க இலக்கியத்தில் இப்பாடல்கள் மிக முக்கிய பங்கு வகுக்கிறது. இரண்டாவதாக, லய விந்யாஸம் எனும் நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மிருதங்கம், கடம், மோர்சிங், நட்டுவாங்கம் போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன. லயம் அல்லது ரிதம் என்பது தென்னிந்திய பாரம்பரிய இசையில் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறது. லயம் என்றால் ஒன்றாய் கலத்தல். விந்யாஸம் என்பது தாளத்தோடு ஒன்றி அத்தாளத்தின் நுண்ணிய அம்சங்களை வெளிப்படுத்தும் முயற்சி. மிருதங்கம் என்ற இசைக்கருவி, சிவபெருமானின் உடுக்கையிலிருந்து தோன்றியதாகக் கூறுவார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கடம் என்பது குறிப்பிட்ட வகையில் செய்த மண்பானையாகும். இது ஆரம்ப காலத்தில் கிராமிய இசையில் பயன்படுத்தப்பட்டது. பிற்காலத்தில், கர்நாடக சங்கீதத்தில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது.

மோர்சிங் என்பது பழங்குடியினரால் பயன்படுத்தப்பட்டு வந்த மூங்கிலால் செய்யப்பட்ட ஒரு இசைக்கருவி. தற்போது, இது உலோகத்தால் செய்யப்பட்டு, கர்நாடக இசையில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது.

லய ஜதி என்பது அனைத்து பக்க வாத்தியங்களுக்கும் அடிப்படையானது. இது வாத்தியங்களில் வாசிப்பதை சொற்களாக வெளிப்படுத்துவதாகும். இதனை ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் வழங்கினர்.

நிகழ்ச்சியின் இறுதியாக வள்ளி திருமண நாட்டிய நாடகம் நடைபெற்றது.

மறவர்குல மகள் வள்ளியை மணக்க முருகன் வேடனாய், முதியவராய் வேடம் தரித்து, தனது அண்ணன் விநாயகனை காட்டு யானையாய் வரவழைத்து, வள்ளியை பயமுறுத்தி, பின் மணந்ததை குறவஞ்சி பாணியில், நாட்டிய நாடகமாக மாணவிகள் அரங்கேற்றினர்.

தொழில்முறை கலைஞர்களைப் போல் நிகழ்ச்சியை மிக தத்ரூபமாக, உயிரோட்டமாக, அழகாக மாணவர்கள் படைத்தனர். கலையுடன் பக்தியும் அதனோடு இழைந்த பாவமும் வேறெங்கும் காணக் கிடைக்காத பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். நடனத்தையும் இசையையும் வழங்கியதோடு மேடை அமைப்பு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு போன்ற பல விஷயங்களை மாணவர்களே கவனித்துக் கொண்டது, கண்டோரை வியப்பில் ஆழ்த்தியது.

மாணவர்களின் முகபாவங்கள், நாட்டியம் மற்றும் இசைநிகழ்ச்சியை மக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தது மட்டும் இல்லாமல், கரகோஷங்கள் எழுப்பி அரங்கத்தை அதிர வைத்தனர்.