"நான் இந்த நாட்டின் இளைஞர்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன். எனக்கு 3 வருடங்களுக்கு 100 இளைஞர்கள் வேண்டும். உங்களுக்கான ஒரே தகுதி இந்த மூன்று ஆண்டுகளுக்கும் உங்களுக்குள் ஒரு குறிப்பிட்ட எண்ணம் மட்டும் தோன்றக் கூடாது. “எனக்கு என்ன கிடைக்கும்” என்பதுதான் அது. இந்த ஒரு எண்ணத்தை மட்டும் புறந்தள்ளி வைத்தால், பெரும்பான்மையானவர்கள் மூன்று ஜென்மங்களில் அடையாத வளர்ச்சியை நீங்கள் மூன்று வருடங்களில் அடைந்திருப்பதைக் காண்பீர்கள். இதுதான் வாய்ப்பு. இந்திய இளைஞர்களுக்கு இதுதான் என் அழைப்பு. இந்த நதிகளை நாம் மீட்டெடுத்துக் காட்டுவோம்" – சத்குரு

புது வருடம் துவங்கியபோது, காவேரி கூக்குரல் குழுவினருக்கான செயல்திட்டம் வரையறுக்கப்பட்டது: 2020க்கான முதலாவது நடவுப் பருவம் வரையிலான விவசாயிகளை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகளுடன் கூடிய கச்சிதமான கால அட்டவணை.

கடந்த 10 ஆண்டுகளாகவே ஈஷா விவசாய இயக்கம் மூலம் 70,000க்கும் அதிகமான விவசாயிகளை வேளாண் காடுகளுக்கு மாற்றும் செயல்பாடு தமிழ்நாட்டில் மிகவும் சிறப்பாக நிகழ்ந்திருந்ததால், தற்போதைய செயல்திட்டம் எளிமையாக, முழுவீச்சுடன் செல்கிறது. தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் முழுமையான செயல்பாட்டில் இருந்த 36 ஈஷா நாற்றுப் பண்ணைகளிலிருந்து உருவான 40 லட்சம் மரக் கன்றுகளை, விவசாயிகள் எளிதாக சிறப்பான விதத்தில் எடுத்துச் சென்றனர்.

blog_alternate_img

ஊரடங்கு முடிவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகள் பேணி வளர்க்கப்பட்டன.

இதற்கு நேர்மாறாக, கர்நாடகம், புதிய களமாக இருந்தது. இந்த நடவுக்காலத்தில், காவேரி வடிநிலப் பகுதியைச் சார்ந்த 9 மாவட்டங்களிலுள்ள 54 தாலூக்காக்கள், ஒவ்வொன்றிலும் இருந்து 500 விவசாயிகளை மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டு இருந்தது. நம்முடைய முயற்சிகளுக்கு மகத்தான ஒத்துழைப்பு கர்நாடக அரசின் வனத்துறையிடமிருந்து வந்தது. உயிரோடிருக்கும் ஒவ்வொரு மரத்திற்கும் அளிக்கப்படும் ஊக்கத் தொகையை ரூ.125 ஆக உயர்த்தியதோடு, கிருஷி ஆரண்ய புரோட்சாஹ யோஜனே (KAPY) திட்டத்தின் மூலம் 90 நாற்றுப் பண்ணைகளிலிருந்து 70 லட்சம் மரக்கன்றுகளையும், கர்நாடக வனத்துறை முதல் நடவுப் பருவத்திற்கென தயார்செய்து வைத்திருந்தது. தென்மேற்குப் பருவ மழைக்காலத்தின் 4 மாத காலத்திற்குள்ளாக அந்த மரக்கன்றுகளை, நாற்றுப் பண்ணைகளிலிருந்து விளை நிலங்களுக்கு கொண்டு செல்லும் பணி நதி வீரர்களின் கரங்களுக்கு வந்தது.

blog_alternate_img

கனகபுரா தாலூக்கா, சாத்தனூர் வனச்சரகத்தின் நாற்றுப் பண்ணையில், துணை வனச்சரக அலுவலர் திரு.ராஜூ அவர்களின் உதவியோடு காவேரி கூக்குரல் தன்னார்வலர்கள் நாற்றுக்களை கணக்கெடுக்கின்றனர்.

கொரோனாவுடன் ஒரு பயணம்

விவசாயிகளை ஒன்று திரட்டி, இந்த குறுகிய கால நடவுப் பருவத்தையே பயன்படுத்திக்கொள்வதற்கு, 9 மாவட்டங்களிலும் மிகப்பெரிய அளவிலான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிகள், அதனைத் தொடர்ந்து 54 தாலூக்காக்களில் சிறிய அளவிலான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இருந்தபோதிலும், களத்தில் ஒருங்கிணைப்பு திட்டங்களுக்கு நோய்த்தொற்று ஒரு முட்டுக்கட்டையாகவே இருந்தது. இப்போது, அதே குறிப்பிட்ட காலக் கெடுவிலேயே நம் குறிக்கோளை எட்டிட, நேரடியாக களத்தில் இறங்காமலே தகவல் பரிமாற்றங்களை முடுக்கிவிட வேண்டியிருந்தது. நோய்த்தொற்று இருக்கிறதோ இல்லையோ, நடவுப் பருவம் காத்திருக்கப் போவதில்லை.

மீண்டும் தங்களது திட்ட வரைபடத்தை கையிலெடுத்த நதி வீரர்கள், புதிதாக 4 வகையான, விளக்கமான செயல்திட்டங்களையும் தகவல் தொடர்பு வழிமுறைகளையும் உருவாக்கினார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
  1. விவசாயிகளை ஒன்றிணைப்பது (டிஜிட்டல் தளத்திலும், களநிலையிலும்)
  2. அரசுத் துறைகளை ஒன்றிணைப்பது
  3. விவசாயிகளுக்கான தகவல் ஹெல்ப் லைன் எண் 80009 80009-ஐ மேம்படுத்துவது
  4. பொது ஊடகம் வழியாக தகவல் பரிமாற்றம்

ஆனால், விவசாயிகளை சென்றடைவது, KAPY திட்டம் பற்றி எடுத்துரைப்பது, அருகிலுள்ள நாற்றுப்பண்ணையை அடையாளம் காட்டுவது, இருப்பில் இருக்கும் மரக்கன்றுகள் குறித்த விவரங்கள் தருவது, மரக்கன்றுகளை எடுத்துச் செல்ல உதவுதல், அவை முறையாக விநியோகிக்கப்பட்டதை உறுதிசெய்தல் என்று இலக்கு மட்டும் மாறவில்லை. இதற்கு தேவையாக இருந்தது ஒரு செயல்வீரர் படை மட்டுமே.

நதி வீரர்களின் போர்ப்படை

மிகவும் செயல்துடிப்பு மிக்க நதி வீரர்களும், தன்னார்வலர்களும் மைசூரு வந்தடைந்தனர். 54 தாலூக்காக்களையும் சென்றடைவதற்கு ஒவ்வொரு நதி வீரரும், குறைந்த கால அவகாசத்துக்குள் கணிசமான நிலப்பரப்பை நிர்வகிக்க வேண்டியிருக்கும். தகவல் தொடர்பு செயல்முறைகள் மாறியிருந்தாலும், நேரடியான தொடர்பையும் தவிர்க்க முடியாது. இதற்கு தீவிரமான இடையறாத முயற்சி தேவைப்பட்டது. ஏனென்றால், இந்த செயலின் வெற்றிக்கு முக்கிய காரணியாக இருப்பது, சரியான சமயத்தில் தகவல் தொடர்பு மேற்கொள்வதாகும்.

நேரத்திற்கு எதிரான ஓட்டம்

54 தாலூக்காவிலும் முன்னதாக மேற்கொள்ளப்பட்ட அவுட்ரீச் செயல்பாடுகள் மூலம் பெறப்பட்ட 19000 விவசாயிகளின் சுயவிபர தகவல்களிலிருந்து, ஒவ்வொரு தாலுகாவிலும் 10 செல்வாக்கு மிகுந்த விவசாயிகளை தேர்ந்தெடுத்தனர். மொத்தத்தில் 540 பேர்கள். அவர்கள் அனைவரையும் அடையும் வகையில் மிகவும் சிறப்பான தகவல் தொடர்பு முறை உருவாக்கப்பட்டது. அவர்கள் விவசாயத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளையும், விவசாயிகளையும், உழவர் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களையும், சமுதாயத் தலைவர்களையும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நெடுந்தூரம் பயணத்துச் சென்று சந்தித்தார்கள். ஏனென்றால், 54 தாலூக்காக்களில் உள்ள தனியார் விளைநிலங்களுக்கு மரக்கன்றுகளை கொண்டு சேர்க்கும் இலக்கை அவர்கள் கொண்டிருந்தனர். சவாலான நிலப்பரப்புகளிலும் நோய்த்தொற்றுக்கான விதிமுறைகளுக்கு உட்பட்டு மிகவும் கவனமாக பல்வேறு சந்திப்புக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

blog_alternate_img

சென்னப்பட்னா தாலூக்கா பஞ்சாயத்து மஹா சபை கூட்டத்தில், காவேரி கூக்குரல் இயக்கத்தை நதி வீரர்கள் அறிமுகப்படுத்துகிறார்கள். பஞ்சாயத்து தலைவர், செயல் அலுவலர் மற்றும் அந்தத் தாலூக்காவின் பஞ்சாயத்து மேம்பாட்டிற்கான அலுவலர் ஆகியோர் பங்கேற்றனர்.

குழுவினர் செய்த கள ஆய்வில் விவசாயிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப்தான் சிறந்த ஊடகம் என்பதைக் கண்டறிந்தார்கள். அடுத்தது ஃபேஸ்புக். எனவே 3000 விவசாயிகளை உள்ளடக்கிய, 69 விவசாயிகள் வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டன. அவர்கள் தங்கள் பங்கிற்கு, தங்களது தொடர்பு பட்டியல்கள் மூலம் அதிகமான நபர்களுக்கு சென்று சேரச் செய்தனர். ஃபேஸ்புக்கில் 2,00,000க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் விவசாயிகளின் குழுக்களைக் கண்டறிந்து அவை பட்டியலிடப்பட்டன.

டிஜிட்டல் ஊடக குழுக்கள் சமீபத்திய அப்டேட்களை சேகரிக்கவும், அவற்றை பரப்பவும் நெருப்பென செயலாற்றினார்கள். இதுபோன்ற செயல்கள் அச்சு ஊடகங்களிலும் நடந்தன. KAPY - யின் பலன்கள், வேளாண் காடுகள், வெற்றி பெற்ற விவசாயிகளின் அனுபவங்கள், விலை மதிப்பு மிக்க மரங்களின் வகைகள் போன்ற தகவல்கள் உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு செய்தித் தாள்கள், துண்டுப் பிரசுரங்கள், விளக்கக் கையேடுகளில் இடம்பெற்றன. எல்லாவற்றிலும் இடம்பெற்ற ஒரே மையக் கருத்து: KAPY-ன் கீழ் வேளாண் காடுகள் திட்டத்தில் இணையுங்கள், அருகிலுள்ள நாற்றுப் பண்ணையிலிருந்து மரக்கன்றுகளை எடுத்துச் செல்லுங்கள் என்பதே ஆகும்.

KAPY மற்றும் வேளாண் காடுகளின் பயன்கள் குறித்த தகவல்கள், வேளாண் துறையின் பிரசித்தி பெற்ற ரைத்தா சம்பர்க்க கேந்த்ரா (RSK), கிருஷி விக்யாண் கேந்த்ரா (KVK), உழவர் உற்பத்தியாளர் சங்கம் (FPO), இதர விவசாயிகள் சங்கங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் (NGO) மூலமாகவும் கொண்டுசேர்க்கப்பட்டன.

blog_alternate_img

பிரச்சார விளம்பர போஸ்ட்டர் 2020 – விவசாயிகள் தாங்கள் எப்படி KAPY திட்டத்தின் பயன்களை பெறுவது என்பது குறித்து அறிந்துகொள்ளும் விதமாகவும், மேலும் மரங்கள் சார்ந்த விவசாயத்தின் பொருளாதார மற்றும் புவியியல் சார்ந்த பலதரப்பட்ட பலன்களை விவசாயிகள் அறிந்துகொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டது.

அதே நேரத்தில், விவசாயிகளுக்கான காவேரி கூக்குரல் தகவல் ஹெல்ப் லைன் எண் 80009 80009 தரம் உயர்த்தப்பட்டது. குழுவினர் பல்வேறு தகவல்களை ஒப்பிட்டுப் பார்க்கவும், ஒருங்கிணைக்கவும் உதவும் வகையில் ஒரு அலைபேசி செயலி உருவாக்கப்பட்டது. அந்தச் செயலியை உருவாக்க சாதாரணமாக 6 மாதங்கள் பிடிக்கும். ஆனால், வியக்கத்தக்க வேகத்தில் அது வெறும் மூன்று வாரங்களில் உருவாக்கப்பட்டது. 400க்கும் அதிகமான தன்னார்வலர்கள் வந்து குவிய இருக்கின்ற அழைப்புகளுக்கு பதிலளிக்கும் விதமாக முழுமையான பயிற்சிகளையும், ஒத்திகையையும் மேற்கொண்டனர்.

blog_alternate_img

400க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஹெல்ப்லைன்-ஐ நிர்வகிக்க முன்வந்தனர். அவர்களுக்கு அழைப்புகளை எப்படி கையாள்வது, எப்படி சந்தேகங்களுக்கு பதிலளிப்பது மற்றும் விவசாயிகளுக்கு, அவர்களுக்கு அருகிலுள்ள நாற்றுப் பண்ணைகளுக்கு எவ்வாறு வழிகாட்டுவது என்பது குறித்த வழிமுறைகளை நதி வீரர்கள் விளக்கினர்.

தகவல்களை வழங்கும் பிரச்சாரம் வேலை செய்ய ஆரம்பித்து ஹெல்ப்-லைன் தெறித்தது. தினமும் 100 முதல் 150 வரை வந்து கொண்டிருந்த அழைப்புகள் 2000 வரை அதிகரித்தது. அதனால் மரக்கன்றுகளும் வெளியே செல்லத் துவங்கின. விரைவிலேயே ஹெல்ப்-லைன் live roadmap ஆக மாறி, அருகாமையில் உள்ள நாற்றுப் பண்ணைகள் குறித்தும், சரியான மரக்கன்றுகள் குறித்தும் விவசாயிகள் அறிந்துகொள்ள உதவியது.

விவசாயிகள் மரக்கன்றுகளை பெறுவதை உறுதி செய்தல்

விவசாயிகளின் ஏகோபித்த ஆதரவு களநிலையிலான பணிகளை பலப்படுத்த வேண்டியதின் தேவையை சுட்டிக் காட்டியது. பெருந்தொற்று காரணமாக மரக்கன்றுகளின் இருப்பை சரிபார்க்கவும், விநியோகிக்கவும், நிர்வாக ஊழியர்களின் முயற்சிக்கு துணை நிற்கவும் 90 நாற்றுப் பண்ணைகளிலும் தன்னார்வலர்கள் தேவைப்பட்டனர்.

ஈஷா யோக மையத்தில் இருந்து கூடுதலாக 50 தன்னார்வலர்கள் நதி வீரர்களோடு இணைய வந்து சேர்ந்தனர். அவர்களது அந்த பயணம் அவர்களது உடல் மற்றும் மன உறுதியை சோதிக்கும் விதமாக அமைந்தது. அவர்கள் தங்களின் கடுமையான சாதனாக்கள் மூலமாக தங்களுக்கு முன்னால் உள்ள சவாலை சந்திக்க தயார்செய்து கொண்டனர். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் நில வேம்பு கஷாயம், வேம்பு மற்றும் மஞ்சள் மாத்திரைகள், பயணத்திற்கு தேவையான உடைகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் அடங்கிய பைகள் இவற்றின் உதவியோடு பாதையில் பயணிக்கத் துவங்கினர்.

blog_alternate_img

மடிக்கேரி தாலூக்காவின் ஒரு காவேரி கூக்குரல் தன்னார்வலர், பாகமண்டலாவில் உள்ள கரிக்கே நாற்றுப் பண்ணையை நோக்கிச் செல்லுதல்

அவர்கள் இன்னும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்...

தொலைதூரத்தில் இருக்கும் இருப்பிடங்களில் உணவு மற்றும் தங்குமிடம் போன்ற தனிப்பட்ட சவால்கள், கொட்டும் மழை, குறைந்த அளவிலான இணைய வசதி இவற்றுக்கிடையேயும் இந்தக் குழுவினரின் ஒரே நோக்கம், 90 நாற்றுப் பண்ணைகளிலும் உள்ள ஒவ்வொரு மரக்கன்றும் விளைநிலங்களை அடைய வேண்டும் என்பதுதான்.

இந்த நடவுப் பருவத்தின் இலக்குகளை எட்டியதும், அடுத்த நடவுப் பருவத்திற்கான தேவைகள் குறித்து திட்டமிட தொடங்கிவிடுவார்கள். அடுத்தப் பருவத்தில் விவசாயிகள் எந்த வகை மரக்கன்றுகளை நடுவார்கள், எத்தனை மரக்கன்றுகளை நடுவார்கள் என்பது குறித்து அறிந்துகொள்ள மீண்டும் ஒரு மாபெரும் விவசாயிகள் ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. அடுத்த வருடத்தின் மரக்கன்றுகள் உற்பத்திக்கு இந்த தகவல்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

சமயோஜிதமாக சிந்தித்து செயல்படுதல், முன்நிற்கும் சவால்களை எதிர்கொள்ளுதல், தனிமனிதர்களுக்கு இடையேயான திறன்களை வளர்த்தல், பலதரப்பட்ட பங்கேற்பாளர்களோடு ஒருங்கிணைதல், தங்கள் உணர்வுகளை தங்களைச் சுற்றிலுமுள்ள அனைவரிடத்திலும் விதைத்தல், விவசாயிகளின் நலம் மற்றும் சுற்றுச்சூழல் நலம் என்னும் காவேரி கூக்குரல் திட்டத்தின் தொலைநோக்குப் பார்வையில் சமுதாயத்தை இணைத்தல் ஆகியவை காவேரி கூக்குரல் குழுவினருக்கும், நதி வீரர்களுக்கும் மாபெரும் வளர்ச்சிக்கான அனுபவமாகவே அமைந்துள்ளது.

சுய விருப்பம் மற்றும் அர்ப்பணிப்பு இவை இரண்டும்தான் இந்த ஆற்றல் மிகுந்த தன்னார்வ இளைஞர்கள் குழுவிடம் மேலோங்கி இருப்பது. மற்ற அனைத்தையும் தங்கள் பாதையில் அவர்கள் உருவாக்கிக் கொள்வார்கள்.

CC-ISO-WebBanner