தடைகளைக் கடந்து வெற்றி… முதல் வருட காவேரி கூக்குரல் செயல்பாடுகள்
காவேரி கூக்குரல், வரலாற்றுப் பெருமைமிக்க காவேரி ஆற்றின் உண்மையான பொலிவை மீட்டெடுக்கும் 12 ஆண்டுகளுக்கான செயல்திட்டம். கடந்த ஆண்டு துவக்கப்பட்ட இந்த இயக்கம் உள்நாட்டிலும் உலக அளவிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது. மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளன, விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர், ஐக்கிய நாடுகள் சபை, பொருளாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் இணைக்கும் இந்த முன்மாதிரி திட்டத்திற்கு பக்க பலமாக இருக்க முன்வந்துள்ளது. இந்த நடவு பருவத்தின் தொடக்கத்தில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? பெரும் நோய்தொற்று எந்த வகையில் காவேரி கூக்குரலை பாதித்துள்ளது? அதைத் தாண்டி காவேரி கூக்குரல் எவ்வாறு முன்னேற்றம் கண்டது? வாருங்கள், படித்து தெரிந்து கொள்வோம்

“என்னுடைய உடம்பில் ஓடும் பெரும்பங்கு ரத்தம் காவேரி. பெரும்பான்மையான தமிழ் மற்றும் கன்னட மக்களின் ரத்தமும் சதையுமாக இருப்பது காவேரி. இந்த ஆற்றின் அருகே பல காலம் வாழ்ந்திருக்கிறேன். இந்த ஆற்றை இயற்கை வளமாக நான் எப்போதும் உணர்ந்ததில்லை. என்னுடைய வாழ்வைக் கடந்த ஒன்றாக, என்னைவிட மிகப்பெரிய உயிராக, நிரந்தரமான ஒன்றாகவே இதைப் பார்த்தேன். என்னையும் உங்களையும் போன்ற மனிதர்கள் வருவார்கள் போவார்கள், ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவள் ஓடிக்கொண்டே இருக்கிறாள்.” – சத்குரு
காவேரி ஆறு மற்றும் அதன் வடிநிலம் ஆகியவற்றை மீட்டெடுக்கும் மாபெரும் பணிக்காக செப்டம்பர் 2019ல் சத்குரு காவேரி கூக்குரல் என்னும் 12 ஆண்டுகால செயல்திட்டத்துடன் கூடிய இயக்கத்தை துவங்கினார். காவேரியின் பிறப்பிடமான தலைக்காவேரியில் துவங்கி, அவள் கடலில் சங்கமிக்கும் திருவாரூர் வரை மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டு, நம் தலைமுறையினர் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டிய செயல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
நோக்கம்
இந்திய நதிகளுக்கு புத்துயிரூட்ட, நாடு முழுமைக்கும் மேற்கொள்ளப்பட்ட நதிகளை மீட்போம் பிரச்சாரப் பயணத்தின் ஓர் அங்கம்தான் காவேரி கூக்குரல் இயக்கம். 2017-ல் துவங்கிய இந்த ஒருமாத பிரச்சாரப் பயணம், 16.2 கோடி மக்களின் பங்களிப்போடு, இந்தியா மட்டுமல்லாது, உலகத்தின் பல பாகத்தையும் சேர்ந்த மக்களின் பேராதரவையும் பெற்றது. காவேரி நதியின் நீர்வளமானது, கடந்த 70 ஆண்டுகளில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமாக குறைந்துவிட்டது. வற்றிவரும் காவேரியின் மீது நம் கவனத்தை செலுத்தி, இந்த ஆற்றையும், அதனை அடிப்படையாகக் கொண்டு வாழும் உயிர்களையும் மீட்டெடுப்பதை, மக்களின் பேராதரவு பெற்ற இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. காவேரி வடிநிலப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் பருவகால பயிர்களை விளைவிக்கும் விவசாய முறைகளை மாற்றி நிலையான மரப்பயிர் வேளாண்மைக்கு மாறுவதற்கான அவசியத்தை வலியுறுத்தி, காவேரி வடிநிலப்பகுதிக்கு புத்துயிரூட்ட இந்த திட்டம் எண்ணியுள்ளது.
வடிநிலப் பகுதிகளில் 242 கோடி மரங்களை நட்டு மண் வளத்தையும் நீரை தக்க வைக்கும் திறனையும் அதிகரிக்க துணை நிற்பதோடு, விவசாயிகளின் வருமானத்தை 5-லிருந்து 7 வருடங்களுக்குள், 3-லிருந்து 8 மடங்காக உயர்த்தி 8.4 கோடி மக்களின் வாழ்வை மேம்படுத்துவது இந்த திட்டத்தின் நோக்கம்
உலகளவிலான ஆதரவு
நதிகளை மீட்பதற்கான அடிப்படையான வழிமுறையாக பொருளாதார முன்னேற்றத்தை தரக்கூடிய வேளாண்காடுகள் அல்லது மரங்களை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்தை, நதிகளை மீட்போம் இயக்கம் முன்னிறுத்துகிறது. மேலும் இது உலக அளவில் முக்கியமாக சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பலன்களை ஒன்றிணைத்து வழங்கும் விதமாக சத்குருவால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாதிரி திட்டம் UNCCD, UNEP, நியூயார்க்கின் ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றத்திற்கான மாநாடு மற்றும் உலக பொருளாதார அமைப்பு(WEF) ஆகிய அமைப்புகளில் சமர்ப்பிக்கப்பட்டு, பாராட்டுதலைப் பெற்றுள்ளது. பாலைவனமாதலுக்கு இயற்கை வழியிலான தீர்வுகளுக்கான ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் கூட்டமைப்பு, ஈஷாவின் சுற்றுச்சூழல் திட்டங்களுக்கான முன் மாதிரியை ஏற்றுக்கொண்டு உள்ளது.
ஜூலை 2020ல், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) ஈஷா அறக்கட்டளையை ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் சபையிலும் (UNEA), அதன் துணை அமைப்புகளிலும் பார்வையாளராக அங்கீகரித்துள்ளது.
அனைவரின் கரங்களும் உயர்ந்தே இருந்தன
மோட்டார் சைக்கிள் பேரணி காவேரியின் வழித்தடத்தில் பயணித்த அதே வேளையில், விவசாயிகளுக்கான ஒரு மாபெரும் அவுட்ரீச் திட்டம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2019-ல் மேற்கொள்ளப்பட்டது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் 7000 கிராமங்களிலுள்ள 2,70,000 விவசாயிகளை நம் தன்னார்வத் தொண்டர்கள் சந்தித்து இவ்வியக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். டிசம்பர் 2019-ல் துவங்கி பிப்ரவரி 2020 வரையிலான மாதங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டன.

Subscribe
இதே காலகட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள 140 நாடுகளைச் சார்ந்த 6 லட்சம் தனிநபர்கள் தங்கள் ஆதரவையும் நன்கொடைகளையும் வழங்கியதோடு, இந்த திட்டம் நிறைவேறுவதற்காக தாங்கள் ஒன்றிணைந்து பங்கேற்போம் என்பதை உறுதிப்படுத்தினர்.
ஆனால், 2020 தொடங்கிய சில மாதங்களிலேயே கொரோனா பெருந்தொற்று வடிவில் இடையூறு வந்ததால், இந்த குழுவினர் தங்களது இலக்கை அடைய பல புதிய வழிகளை தேட வேண்டியிருந்தது. முதலில் காவேரி வடிநிலங்களில் உள்ள 9 மாவட்டங்களிலும் மாபெரும் பயிற்சி வகுப்புகள் மூலமாக விவசாயிகளை அதிக அளவில் திரட்டவும், பின்னர் தாலுகா அளவிலான நிகழ்ச்சிகளையும், மாதிரி பண்ணைகளுக்கு நேரடியாக சென்று தெரிந்து கொள்வது போன்ற திட்டங்களும் இருந்தன. இவை அனைத்தையும் இதனால் தள்ளி வைக்க நேர்ந்தது
முக்கிய குழுவினர் தங்களின் செயல்திட்டத்தையும் பார்வைகளையும் விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பதற்கு டிஜிட்டல் தளங்கள் மற்றும் வழக்கமான ஊடகங்கள் உட்பட எல்லா வழிமுறைகளையும் ஆராய்ந்தார்கள்.
விவசாயிகளின் வாட்ஸ்அப் குழுக்கள், விவசாய சமூகத்தின் முகநூல் குழுக்கள், மெசேஜ் வாயிலான பிரச்சாரங்கள், உள்ளூர் ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள், தனிப்பட்ட விவசாயிகளின் தலைவர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள் என அனைத்து வழிகளிலும் தகவல்கள் சென்றன. இந்த முழுமையான பிரச்சாரம் 50 லட்சம் பேர் வரை சென்றடைந்தது.
12 மணி நேரத்திற்கான விவசாயிகளின் ஹெல்ப் லைன் மூலமாக நேரடியாக தகவல் பெறும் வழிமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. 80009 80009 என்ற எண் வழங்கப்பட்டு 120க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை விவசாயிகளின் சந்தேகங்களுக்கு கன்னடத்திலும் தமிழிலும் விளக்கம் அளித்தனர். இன்று வரை 26 ஆயிரத்திற்கும் அதிகமான அழைப்புகள் வந்துள்ளன. தன்னார்வலர்கள் விவசாயிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர், விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தினர். மேலும் விவசாயிகள், அவர்களுக்கு அருகே உள்ள நாற்றுப் பண்ணைகளின் இருப்பிடம் அறியவும் உதவினர்.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள 29 வடிநிலப்பகுதி மாவட்டங்களில் உள்ள 166 தாலுகாக்களில் உள்ளவர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு இந்த வழிமுறை பேருதவியாக இருந்தது.
மரக்கன்றுகள், மரக்கன்றுகள், மரக்கன்றுகள்!
வேளாண்காடுகளுக்கான மிகப்பெரிய ஆதரவு கர்நாடக அரசின் வேளாண்மைத் துறையில் இருந்து வந்தது. அரசிடம் ஏற்கனவே நடைமுறையில் இருந்த கிருஷி ஆரண்ய புரோட்சஹ யோஜனே (KAPY), காவேரி கூக்குரலின் வேளாண்காடுகள் திட்டத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் கச்சிதமாக பொருந்தியது.

திட்டத்தின் தொழில்நுட்ப குழு வழங்கிய பட்டியலிலிருந்து விலைமதிப்புள்ள மற்றும் லாபகரமான 70 லட்சம் மரக்கன்றுகளை உருவாக்குவதில் KAPY ஈடுபட்டது. கர்நாடக மாநில அரசு மிகவும் பாராட்டத்தக்க வகையில், விவசாயிகள் தங்கள் நிலத்தின் ஒரு பகுதியில் மரங்களை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்திற்கு மாறுவதை ஊக்குவிக்கும் விதமாக, வளர்ந்திருக்கும் ஒரு மரத்திற்கு வழங்கப்படும் உதவித் தொகையை ரூபாய் 100ல் இருந்து 125 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றது. இந்த உதவித்தொகை விவசாயிகள் மரங்களை நட்டு அவை பலன்கொடுக்கும் காலம் வரை 3 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

டிசம்பர் 2019 முதல், தமிழ்நாட்டில் உள்ள 15 வருட அனுபவம் பெற்ற நாற்றுப் பண்ணைகள், எதிர்வரும் பருவமழையின் போது நடவு செய்வதற்கான மரக்கன்றுகளை உருவாக்க முழுமூச்சுடன் ஈடுபட்டனர். 36 நாற்றுப் பண்ணைகள் அனைத்திலும் சேர்த்து 23 லட்சம் மரக்கன்றுகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 2020க்குள் 17 லட்சம் கூடுதல் மரக்கன்றுகள் தயாராகிவிடும்

நோய்த்தொற்று காலத்திலும் நாற்றுப்பண்ணை பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. அரசு நெறிமுறைகளுக்கு ஏற்ப மரக்கன்றுகள் வினியோகம் நிறுத்தப்பட்டிருந்த போதிலும், ஈஷா நாற்றுப் பண்ணைகளில் தங்கியிருந்த ஒன்றிரண்டு தன்னார்வலர்கள் மரக்கன்றுகளை கவனித்துக் கொண்டனர். அனுமதி கிடைத்த பிறகு நாற்றுப்பண்ணைகள் தற்போது முழுவீச்சில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
மர வேலைகளுக்கு பயன்படும் மரங்களான தேக்கு, சந்தனம், செஞ்சந்தனம், மஹோகனி, ஆப்ரிக்கன் மஹோகனி, ஈட்டி மற்றும் மலை வேம்பு ஆகியவை விவசாயிகளுக்கு பரிச்சயமானவை. மற்ற மரவகைகளான வேம்பு, பாதாம், பலா, நெல்லி, மாதுளை மற்றும் ஜகரண்டா ஆகியவையும் விவசாயிகளால் விரும்பிக் கேட்டுப் பெறுவதாக உள்ளன.
விவசாயிகளின் ஏகோபித்த வரவேற்பு
மரக்கன்றுகளின் எண்ணிக்கையில் பார்த்தால் காவேரி கூக்குரல் குழுவினர் மெதுவான ஒரு துவக்கத்திற்கே திட்டமிட்டிருந்தனர். மரக்கன்றுகளை உருவாக்குவதிலும் முதலாம் ஆண்டிற்காக ஒரு நடுத்தரமான எண்ணிக்கையிலேயே திட்டமிடப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக இது மேலும் தடைப்பட்டது.
இருந்தபோதிலும், களத்தில் இறங்கிய தன்னார்வலர்கள், கர்நாடக அரசு அதிகாரிகள், தனிமனிதர்கள், அறிஞர்கள் என அனைவரும் அளித்த அபரிமிதமான ஒத்துழைப்பு, எல்லாவற்றிற்கும் மேலாக விவசாயிகள் காட்டிய அளவுகடந்த உற்சாகம், எல்லா கணிப்புகளையும் பொய்யாக்கியது
50 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் கர்நாடக வனத்துறை நாற்றுப் பண்ணைகளிலிருந்து பெறப்பட்டதாலும், தமிழ்நாட்டில் ஈஷா நாற்றுப் பண்ணைகளில் இருந்து மரக்கன்றுகள் பெறப்பட்டதாலும், நம் இலக்கை எட்டும் திசையில் நாம் எளிதாக செல்கிறோம். 1.1 கோடி மரக்கன்றுகள் காவேரி வடிநிலப் பகுதியில் இந்த முதல் பருவம் முடிவதற்குள் நடப்பட்டுவிடும்.
This is what it takes on the ground. Undaunted by torrential rains and the pandemic, #CauveryCalling team has been working in the Cauvery Basin districts to support sapling distribution for farmers. Their relentless commitment is Inspiring. Congratulations. –Sg pic.twitter.com/wtMAMxXaOH
— Sadhguru (@SadhguruJV) August 8, 2020
சவால்களும் இழப்புகளும்
பெருந்தொற்று, வாழ்வில் அனைத்து மட்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியது போல, காவேரி கூக்குரல் குழுவினரையும் பாதித்தது. களத்தில் இறங்கி பணியாற்றுவது நிறுத்தப்பட்டு டிஜிட்டல் முறையில் கையாளப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் நதி வீரர்கள் பொன்னான 15 நாட்களை தனிமைப்படுத்தலில் கழித்த பின் பல மாவட்டங்களுக்கும் சென்று நாற்றுக்களை கையாளும் முறைகளை மேற்கொண்டார்கள்.

மற்ற சவால்களைப் பொறுத்தவரையில், சமீபத்தில் சிக்மகளூரில் பெய்த கனத்த மழையின் காரணமாக சில மரக்கன்றுகள் சேதமடைந்தன. தன்னார்வத் தொண்டர்கள் கடும் சிரமத்திற்கு இடையேயும் அவற்றை காப்பாற்றி, உடனடியாக அதிக தேவை உள்ள இடங்களுக்கு அனுப்பினர்.
சரியான துவக்கம் பாதி வெற்றி
முதல் வருடத்தில் நேர்ந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு இடையே, நிறைய கற்றுக் கொள்ளும் நேரமாகவும் இது அமைந்தது. நமது குழுவினர் விவசாயிகளின் தேவைகளைப் பற்றியும் அவர்களது விருப்பங்கள் மற்றும் முடிவுகளை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளைப் பற்றியும், இதுபோன்ற பெரிய இயக்கத்தை வெற்றிகரமாக்க மேற்கொள்ள வேண்டிய புவி சார்ந்த மற்றும் சமூக விளக்கங்களையும் பெற்றனர்.
தடைகளுக்கு இடையேயும் நினைத்துப் பார்த்திராத முதல் பருவத்தின் இந்த வெற்றி, இந்த இயக்கம் சிறகுகள் விரித்து பறக்க தேவையான ஊக்கத்தை தந்துள்ளது. இரண்டாவது பருவத்தில் அதிகப்படியான வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் ஏற்கனவே தயாராக உள்ளது.
