அவல் தரும் அளவில்லா நன்மைகள்!
இன்று பலரும் மறந்துவிட்ட ஒரு அற்புத பண்டம், அவல். அன்றாட உணவில் அவல் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கியம் குறித்து உமையாள் பாட்டி சொல்ல கேட்டறியலாம் வாங்க!

கொல்லைப்புற இரகசியம் - பகுதி 39
உமையாள் பாட்டியை சந்தித்து தைப்பொங்கல் வாழ்த்து பெற்று வரலாமென, பாட்டிக்கு பிடித்த கண்டாங்கி சேலையை வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் கடைத்தெரு வழியாகப் பயணித்தேன். தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நெருங்கும் வேளையில் கரும்பு, வாழை இலை, சர்க்கரை, பழங்கள், மலர்கள் என உள்ளூர் சந்தை களைகட்டியிருந்தது!
“ண்ணே கொஞ்சம் நில்லுங்கண்ணே” என்று கனத்த குரலில் என்னை அழைத்தார் ஒரு கடைக்காரர்.
பலசரக்கு கடையில் நான் ஏதும் பாக்கி வைக்கவில்லையே... என யோசித்தபடியே வண்டியை நிறுத்தி என்னவென்று அருகில் சென்று கேட்டேன்.
“பாட்டி வீட்டுக்குத் தான போறீக, அப்படியே இந்த அவல் பைய கொஞ்சம் அங்கன டெலிவரி பண்ணிருங்க!”
அது ஒன்றும் அவ்வளவு பெரிய பையில்லை என்பதால், நானும் மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக்கொண்டேன்.
Subscribe
பாட்டியைப் பார்த்து சேலையையும் அவலையும் கொடுத்தேன். தனக்கு பிடித்த கத்தரிப்பூ கலரில் சேலை வாங்கி வந்திருப்பதை பார்த்ததும் பாட்டியின் முகத்தில் கூடுதல் சந்தோஷம். அவல் பையை பார்த்ததும் அதைவிட கூடுதல் மகிழ்ச்சி தெரிந்தது!
“என்னப்பா... பகவான் கிருஷ்ணருக்கு அவரது நண்பர் குசேலர் பரிசா அவல் குடுத்தது மாதிரி, எனக்கு நீ அவல் குடுக்குறியா?” பாட்டி பகடி செய்தாள்.
“இல்ல பாட்டி பலசரக்கு கடை செல்வம் இந்த பைய குடுத்துவிட்டாப்ல! என்னோட பரிசு சேலை மட்டும்தான்” என்றேன் சிரித்துக்கொண்டே.
“குடு குடு! நல்லதா போச்சு, இந்த வருஷம் தைப்பொங்கலுக்கு அவல் பாயாசம்தான் நம்ம வீட்டு ஸ்பெஷல்!” என்று சொல்லியபடியே அவல் பையை பிரித்து பார்த்து, கொஞ்சத்தை எடுத்து அப்படியே வாயில் போட்டு சுவைத்துப்பார்த்தாள் பாட்டி.
“என்ன பாட்டி வெறும் வாய்க்கு அவல் கிடைச்சிருச்சா?” வேடிக்கையாக கேட்டேன்.
“அவல அப்பப்போ வாயில போடக் கூடாதுப்பா... அன்றாட உணவாக்கணும். அவல் சீக்கிரமா செய்யப்படக் கூடிய ஒரு காலை உணவா இருக்கும். இப்பல்லாம் ஏதேதோ விளம்பரமெல்லாம் பண்றாங்களே... 2 மினிட்ஸ்ல ரெடியாகிடும்னு! ஆனா... அதெல்லாம் ஆரோக்கிய கேடுதான்! ஆனா அவல் நம்ம பாரம்பரிய உணவாகவும் சீக்கிரமா செய்றதுக்கு ஏற்றதாவும் இருக்குது!” அவல் பற்றி பாட்டி சொல்வது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
பெரும்பாலான வீடுகளில் எப்போதாவது பண்டிகைக்கு வாங்கி பயன்படுத்தும் ஒன்றாக அவலை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், அவல் அன்றாட உணவில் பலவித சுவைமிகு பதார்த்தங்களாக செய்து சாப்பிடத்தக்கது என்பதை பாட்டி சொல்ல அறிந்துகொண்டேன். அவல் என்பது நெல்லைப் பதப்படுத்தி இடித்து பெறப்படக் கூடியது. தற்போது நாம் சாப்பிடும் வெள்ளை அரிசி என்பது, நெல்லை உமியெடுத்து நன்கு தீட்டி அதன் சத்தான முனைப்பகுதிகளெல்லாம் தீட்டப்பட்ட பிறகு வருவது! ஆனால் அவல் என்பது அப்படியே அரிசியின் முழுமையான சத்துக்களையும் உள்ளடக்கியதாக உள்ளது!
அவலை எப்படி சாப்பிடலாம் என்பதையும் எப்படி சாப்பிடக் கூடாது என்பதையும் கேட்பதற்கு வேறு எனக்கு புகலிடம் ஏது? பாட்டியிடமே தொடர்ந்து அதையும் கேட்டறிந்தேன். அதுபற்றி பாட்டி சொன்னபோது...
“பொதுவா அவல தண்ணியிலயோ, பால்லயோ ஊறவச்சு சாப்பிடலாம்! அவலோட பாலும் நெய்யும் சேத்து சாப்பிட்டா உடல் பலமாகும். அவலும் மோரும் கூட சேத்து சாப்பிடலாம். அப்படி சாப்பிட்டா அதிக தாகம் உண்டாவது தீரும். ஆனா... அவலும் தயிரும் சேத்து சாப்பிடக் கூடாதுப்பா! அப்படி சாப்பிட்டா மந்தம் உருவாகும்.” என்று எடுத்துரைத்த பாட்டி அவல் உப்புமா, அவல் கேசரி, அவல் பாயசம் போன்ற ரெசிபிகளை எப்படி செய்வது என்பதையும் வக்கனையாக சொல்லி விவரித்தாள்.
பாட்டியின் அவல் பையிலிருந்து சில படி அவல்களை எடுத்துச் செல்லலாம் என்ற ஆவல் எனக்கு உடனே பிறந்துவிட்டது!
“தைப்பொங்கல் வேற நெருங்குது பாட்டி, ஜல்லிக்கட்டு மாடுங்கல்லாம் தயாராகிட்டிருக்குதுக! நானும் அவல் சாப்பிட்டு தெம்பானாதான் பாட்டி மாடு பிடிக்கமுடியும்?” என்று ஒரு சாக்கு சொல்லி பாடியிடம் அவலைப் பெற்றுச்சென்றேன்.
ஆனால்... நான் அவலை சாப்பிட்டுவிட்டு அமைதியாக ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்ப்பவன் என்பது பாட்டிக்கு தெரியாதா என்ன?!