வறட்டு இருமலை குணமாக்கும் அருமருந்து அதிமதுரம் (Athimathuram - A home remedy for dry cough in tamil)
வறட்டு இருமல் குணமாக அதிமதுரம் (Athimathuram - A home remedy for dry cough in tamil) என்னும் அற்புத மருந்தை எப்படி பயன்படுத்துவது என்று உமையாள் பாட்டி தன் பேரனுக்கு கூறியதை நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்...
கொல்லைப்புற இரகசியம் - பகுதி 21
மார்கழி மாதம் ஒருவழியாக விடைபெற்றாலும், சீதோஷ்ண மாற்றம் காரணமாக காய்ச்சலும் சளியும் வறட்டு இருமலும் பாதித்த எனக்கு, வறட்டு இருமல் மட்டும் விடாப்பிடியாக பிடித்துக்கொண்டது.
“ம்கும்... ம்கும்...” செருமியபடியே உமையாள் பாட்டியின் வீட்டு முற்றத்தில் நுழைந்தேன்.
“நான் இங்கே இருக்கேன்!” பாட்டி கொல்லைப் புறத்திலிருந்து அறிவித்தாள்.
“எப்படி பாட்டி, நான் வந்ததை அங்கே இருந்தே கண்டுபிடிச்சீங்க?!” ஆச்சரியத்துடன் கேட்டேன்.
“மஹாபாரதப் போருக்கு கிருஷ்ணனோட சேனையக் கேக்க வந்த துரியோதனன் இப்படி செருமிக்காட்டித்தான் அவன் வந்திருப்பத கிருஷ்ணனுக்கு அறிவிச்சானாம். அதுமாதிரி உன்னோட இருமல் சத்தம்தான் நீ வந்திருக்கிறத எனக்கு அறிவிச்சது” பாட்டி இதிகாச சம்பவத்தை உதாரணமாகக் காட்டிப் பேசி, தனது ஆழ்ந்த கேள்வி ஞானத்தை வெளிப்படுத்தினாள்.
“ஐயோ பாட்டி, நான் துரியோதனனெல்லாங் கிடையாது! ச்சும்மா அறியோதனன்னு வேண்ணா வெச்சுக்கோங்க!”
“அதென்னப்பா அறியோதனன்?”
“இந்த சளியும் இருமலும் போகுறதுக்து சரியான யோசனைய கேட்டு அறிய வந்திருக்கறதால அறியோதனன்.”
Subscribe
“சரி சரி... எதையாவது உளறாத, நான் சொல்றேன் உனக்கு ஒரு நல்ல வழி!”
“சொல்லுங்க பாட்டி... ஐ எம் வெய்ட்டிங்”
“அதிமதுரம் தெரியுமா?!”
“யாரு பாட்டி அது... சினிமா நடிகையா?”
“ம்... இவ்வளவு அழகா நடிகை பேர் இருந்தா நல்லாதான் இருக்கும். ஆனா... இது நம் ஊர்ல வளர்ற செடியோட வேர்! அதுதான் அதிமதுரம்னு நாம சொல்றோம். அந்த அதிமதுரம் (licorice in tamil) இப்ப உனக்கு நல்ல மருந்தாகப்போகுது.
அதிமதுரம் பயன்கள் (Athimathuram Benefits):
வறட்டு இருமல்:
அதிமதுரத்த பொடி செஞ்சு 1-2 கிராம் அளவு எடுத்து தேன்ல கலந்து சாப்பிட்டு வந்தா சளி குணமாகும். இந்த அதிமதுரப் பொடி நம்ம ஈஷா ஆரோக்கியாவிலயே கிடைக்கும், போய் வாங்கிக்கோ! அப்புறம்... அதிமதுரம், கடுக்காய், மிளகு இந்த மூனையும் சம அளவு எடுத்து, இளம் வறுப்பா வறுத்து, பொடி செஞ்சு 2-4 கிராம் அளவு தேன்ல கலந்து சாப்பிட்டு வந்தா, சூட்டுனால வர்ற இருமல் குணமாகும். அதுமதுரத் துண்டு ஒன்னு எடுத்து, ச்சும்மா வாயில போட்டு சுவைச்சு விழுங்கிட்டா கூட வறட்டு இருமல் குணமாகும்.”
“ஓ... அப்படியா. சூப்பர் பாட்டி!”
உடல் உஷ்ணம்:
“அது மட்டுமில்ல, உடல் சூடு பிரச்சனை உள்ளவங்க ஒரு 17 கிராம் அதுமதுரம் எடுத்து வெந்நீர் விட்டு கலக்கி, பிறகு வடிகட்டி தினமும் ரெண்டு வேள குடிச்சா உடல் உஷ்ணம் தணியும்!”
அக்குள் நாற்றம், சொறி, சிரங்கு:
“அப்புறம் நீ இந்த டியோடரண்ட் சென்ட்டோ டெய்லி அடிச்சுக்கிறியே... அதெல்லாம் இல்லாம, இந்த அதிமதுர இலைய அரைச்சு உடம்புல பூசி குளிச்சு வந்தா, அக்குள்ல ஏற்படுற கற்றாழை நாற்றம் இருக்காது. சொறி சிரங்கு கூட இதனால சரியாகும்!”
பாட்டி அதிமதுரத்தின் அற்புத பலன்களை அடுக்கிக் கொண்டே போக, நான் இயற்கை நமக்கு அளித்திருக்கும் மூலிகை எனும் கொடையைப் பற்றி எண்ணி பிரம்மிப்பில் ஆழ்ந்தேன்.
குறிப்பு:
- சுளுக்கு பிடிப்பு உள்ள இடங்களில் முதலில் சிற்றாமணக்கு எண்ணெயை தடவி, பின் அதிமதுர இலையை பற்று வைத்தால், அவ்விடத்தில் ஒருவித விறுவிறுப்பு உண்டாகி வலி நீங்கும்.
- எந்த ஒரு மூலிகையையும் உட்பிரயோகமாக உபயோகிக்கும் முன் முறைப்படி மருத்துவ ஆலோசனை பெறுதல் அவசியம்!
அதிமதுரம் டீ!
ஈஷா ருசி
தேவையான பொருட்கள்
அதிமதுரம் தூள் - 1 ஸ்பூன்
தண்ணீர் - 200 மில்லி
தேன் அல்லது நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி - சுவைக்கேற்ப
செய்முறை
அதிமதுரம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வாங்கி நிழலில் காய வைத்து, சுத்தம் செய்து பொடி செய்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். பொடியை நீரில் போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து தேன் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து வடிகட்டி பருகவும். இது தீராத தாகத்தை தணிக்கவல்லது, சளிக்கு நல்லது. தொண்டை புண்ணை ஆற்றும் வல்லமை கொண்டது.