ஆடாதோடை வழங்கும் அற்புத மருத்துவப் பயன்கள்! (Adathodai Plant Uses in Tamil)
உமையாள் பாட்டி கதைக் கேட்டு ரொம்ப நாளாச்சு என்கிறீர்களா? போன கட்டுரையில நம்மகிட்ட அருகம்புல்ல பத்தி பேசுன பாட்டி, குளிர்காலம்கிறதால இந்தவாட்டி ஆடாதொடைய எப்படி பயன்படுத்தறதுன்னு சொல்றாங்க. பாட்டி வைத்தியம் பலிக்காம போகுமா என்ன? இதோ உமையாள் பாட்டி டிப்ஸ் உங்களுக்காக...
கொல்லைப்புற இரகசியம் - பகுதி 2
டாக்டர். சாட்சி சுரேந்தர், ஈஷா ஆரோக்யா:
உமையாள் பாட்டியின் வீட்டிற்கு மழை நாள் மாலையில் ஒரு விசிட்...
“பாட்டி... நேத்து மழையில நனைஞ்சு, இன்னிக்கு ரொம்ப ஜலதோஷம், மூக்கடைப்பு, இருமல்... ஒரு ஆன்டிபயாடிக்க போட்டாதான் சரியா வரும்னு நெனக்கிறேன்” என நான் கூறியதும், பாட்டியிடம் இருந்து ஏதாவது கை வைத்திய குறிப்பு தலையெடுக்கும் என நினைத்தால், ஆங்கில மருத்துவத்தின் சூட்சுமத்தை அவர் கதைத்தது ஆச்சர்யமாக இருந்தது.
“தம்பி.. சளி, இருமல்னா மருத்துவர் ஆலோசனை இல்லாம, உடனே நீயா ஒரு ஆன்டிபயாடிக் கோர்ஸ முடிவ பண்ணி, அதையும் அரகொறையா எடுக்குறதுனால நோய்க் கிருமிகள் இந்த ஆன்டிபயாட்டிக்கு கட்டுப்படாம போயிடுது. உன்னப்போல எல்லாரும் அரைகுறை வைத்தியத்த பண்ணிக்கிட்டா எந்த ஆன்டிபயாட்டிக்காலயும் நோய்க்கிருமிகள அழிக்க முடியாத நிலைமை வந்து இந்த சமூகத்துக்கே பெரிய பிரச்சனையா முடியும்.
ஆங்கில மருத்துவங்கிறது கத்தி மாதிரி, அதை சரியான முறையில சுழற்றனும்... இல்ல, ஆபத்து நமக்குதான்!” என அவர் போட்ட போடு என்னை நிறையவே சிந்திக்க வைத்தது!
Subscribe
மருத்துவரை பார்த்து சிகிச்சையைத் தொடங்க நான் பொறுமையாய் இருந்தாலும், என் மூச்சை அடைக்கும் மூக்கடைப்பும், கர்சீஃப் நனைக்கும் ஜலதோஷமும் பொறுமையாய் இல்லை என்பதை உணர்ந்தவராய், உமையாள் பாட்டி தன் அடுக்களையில் பாத்திரங்களை உருட்டிக்கொண்டே பேசத்தொடங்கினார்...
“சாதாரண சளி ஜலதோஷத்திற்கு நீ பண்ணிக்கிற அரைகுறை ஆன்டிபயாடிக் வைத்தியத்திற்கு, நம்ம கை வைத்தியம் எவ்வளவோ மேல். ஆடாதோடை, துளசி, சுக்கு, மிளகு, திப்பிலி, தூதுவளைன்னு ஒரு வண்டி சரக்கு இருக்குப்பா!” என பேசிக்கொண்டே, கொதிக்கும் நீரில் சில இலைகளையும் பொடியையும் கலந்தார். அருகில் அமர்ந்திருந்ததால், அந்த நீராவியின் கார நெடி என் மூக்கடைப்பை துளைத்திருந்தது.
ஆடாதோடை பயன்கள் (Adathodai Plant Uses in Tamil)
“இது ஆடாதோடை இலையும், மிளகுப்பொடியும் கண்ணு! ஈட்டி வடிவ இலை, வெள்ளை பூக்கள் உடைய சின்ன செடிதான் இது. ஆனா, ‘ஆடாதோடைக் கொண்டால், ஆடாத உடலும் ஆடும், பாடாத குரலும் பாடும்’ னு ரொம்ப உயர்வா சொல்றாங்க.”
கபம் சம்பந்தப்பட்ட நோய்கள்:
“மேல் சளி, மூக்கடைப்பு, தொண்டை வலி, நெஞ்சில் கபம், அலர்ஜி, ஆஸ்துமா என எல்லா விதமான கபம் சம்பந்தப்பட்ட நோய்க்கும் நல்ல முதலுதவியா இருக்குது,” என்றவர் சுடச்சுட டம்ளரில் பரிமாறிய ஆடாதோடை-மிளகு கசாயத்தை மட, மட வென மூக்கைப் பிடித்துக் குடித்து முடித்தேன்.
தொண்டையில் இறங்கிய அந்த காரமும், சூடும் உள்ளிருந்த நீரை முன்பை விட வேகமாய் வெளியேற்றிக்கொண்டே இருக்க... “குட் பாட்டி... இட்ஸ் வொர்க்க்க்க்கிங்க்! ம்.. எப்டி தயாரிக்கிறது?” என்றேன்.
ஜலதோஷம்:
“ஆடாதோடை இலை 8-10 இருந்தா நல்லது, இல்லையா, ஆடாதோடை கசாயப் பவுடர் கடைகள்ல கிடைக்கும், அதுல ரெண்டு ஸ்பூன். அதை ரெண்டு டம்ளர் தண்ணில போட்டு கொதிக்க வெச்சு, அரை டம்ளரா சுண்ட வெச்சுக்கணும். வடிக்கட்டின கசாயத்த, சாப்பாட்டுக்கு முன்னாடி மூணு வேளை, இன்னிக்கும், நாளைக்கும் குடிச்சா, நாளான்னைக்கு ஜலதோஷம் இருந்த இடம் காணாம போயிடுந்தம்பி!” என்றவர்...
“வாழை, திராட்சை, பால், பால் பதார்த்தம் சாப்பிடாம, சாப்பிடுற பொறியல், ரசம்னு எல்லாத்துலயும் கொஞ்சமா மிளகுப்பொடி தூவி சாப்பிட்டா நல்லாருக்கும்பா!” என டியட் அட்வைசும் கொடுத்தார்.
இரத்தக் கொதிப்பு, பெண்கள் பிரச்சனைகள்:
“கபம் மட்டும் இல்லாம, இரத்தக் கொதிப்பு, பெண்களின் மாதவிடாய் கால அதிக உதிரப்போக்கு, பிரசவித்தப்பின் உதிரப்போக்கு குறையவும், கர்ப்பப்பை வலுப்படவும் கூட ஆடாதோடை ரொம்ப உதவியா இருக்கு கண்ணு!” என ஆடாதோடையின் பிற பயன்களையும் ரத்தின சுருக்கமாய் விளக்கி ஆடாதோடைக் கசாயப் பொடியைக் கொடுத்து வழியனுப்பி வைத்தார்.
வாசற்படி தாண்டி வந்த பின்னும் மூக்கடைப்போடு சேர்ந்து அந்தக் கேள்வியும் என் மண்டையைக் குடைந்து கொண்டே இருக்க பாட்டியிடம் கேட்டே விட்டேன்... “பாட்டி... ஆடாதோடை பத்தி சொல்றீங்க, அதுக்கு உங்க அனுபவம்ங்க்ற லாஜிக் இருக்கு, ஆனா, ‘ஆன்டிபையாடிக்’ எப்டி பாட்டி?”
வெள்ளந்தி சிரிப்புடன் உமையாள் பாட்டி, “பக்கத்து தெரு, ராசேந்துரன் டாக்குடரு சொன்னதுதேன், பசுமரத்தாணியா நெஞ்சுல நின்னுது.. அத உம்ம கிட்ட சொன்னேன் கண்ணு,” என்றார்.
அதைக் கேட்டவுடன், “என்னுடைய கேள்வி போலவே, நான் சார்ந்த இந்த தலைமுறை காம்ப்ளிகேட்டட்.. ஆனால், பாட்டியின் பதில் போலவே அவர் சார்ந்த அந்தத் தலைமுறை சிம்பிள் இல்ல?” என என் மைண்ட் வாய்ஸ் தந்தியடித்தது!
குறிப்பு:
குளிர்க்கால ஜலதோஷம் குறித்த சித்த மருத்துவ தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சைகள் ஈஷா ஆரோக்யா மையங்களில் வழங்கப்படுகின்றன.