ஜென்னல் பகுதி 50

அந்த ஜென் குருவைச் சுற்றி அவருடைய சீடர்கள் அமர்ந்தனர்.

"குருவே, இன்றைக்கு எங்களுக்கு ஒரு கதை சொல்லுங்களேன்..!" என்று கேட்டான் ஒருவன். "சொல்கிறேன்.. ஆனால், கதையின் முடிவில் ஒரு கேள்வி கேட்பேன்.." என்றார் குரு.

கதை கேட்கும் சுவாரஸ்யத்தில் எல்லோரும், "அதற்கென்ன..? தயார்..!" என்று சொல்லிவிட்டார்கள்.

குரு கதையைச் சொல்ல ஆரம்பித்தார். "ஒரு கிராமத்தில் உடல் பருத்த ஒரு எருமை மாடு இருந்தது. அது தினமும் புல் மேயப் போகும் வழியில் ஒரு குடிலைத் தாண்டிச் செல்லும். அந்தக் குடிலின் கூரையில், உள்ளே வெயில் தெரியாமல் இருக்க நிறைய வைக்கோல் பிரிகளைத் தூக்கிப் போட்டிருந்தார்கள்.

எருமை கழுத்தை முடிந்தவரை அண்ணாந்து, அவற்றில் ஏதாவது ஒரு வைக்கோல் பிரியை இழுத்துச் சாப்பிடும். ஒரு கட்டத்தில் அதற்கு வைக்கோல் பிரி எட்டாமல் போனது.

'கூரையிலேயே இவ்வளவு வைக்கோல் பிரியை அள்ளிப் போட்டிருந்தார்கள் என்றால், அந்தக் குடிலுக்குள் இன்னும் எத்தனை இருக்கும்..?' என்று எருமைக்கு ஓர் எண்ணம். ஆனால், உள்ளே என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க முடியாமல் அந்தக் குடிலின் ஜன்னல் எப்போதும் சாத்தியே இருந்தது.

ஒருநாள் அது தனது வழியில் நடக்கும்போது, அதன் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. காரணம், அன்றைக்கு அந்தக் குடிலின் ஜன்னல் திறந்திருந்தது. எருமை மிக ஆர்வமாக ஜன்னலை அடைந்தது. உள்ளே தலையை மட்டும் மெள்ள நுழைத்தது. அதன் நீண்ட கொம்புகள் தடையாக இருந்தபோது, தன் முகத்தை இப்படியும், அப்படியுமாகச் சாய்த்து, எப்படியோ முகத்தை உள்ளே நுழைத்துவிட்டது. குடிலின் உள்ளே அது எதிர்பார்த்தபடியே ஓர் ஓரத்தில் நிறைய வைக்கோல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

எருமை தன் முகத்தை எவ்வளவோ நீட்டியும் வைக்கோலை அதனால் எட்ட முடியவில்லை. இப்போது அதே ஜன்னல் வழியே மேலும் நுழைய தன் உடலை வருத்திக்கொண்டது. கொம்புகள், முகம் தாண்டி இப்போது கழுத்துவரை உள்ளே வந்துவிட்டது. இன்னும் வைக்கோல் எட்டியபாடில்லை.

அடுத்ததாக, முன்னங்கால்களை ஒவ்வொன்றாக உள்ளே கொண்டுவந்துவிட்டது. அதன்பின், அந்தக் கால்களைச் சுவரில் அழுத்திக்கொண்டு தன் உடலையும் உள்ளே அழுத்தியது. கொஞ்சம் கொஞ்சமாக, அதனுடைய பருத்த உடல், ஜன்னல் சட்டங்களை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தது. உடலின் பெரும் பகுதியான வயிறும், முதுகும் கூட ஜன்னலுக்குள் நுழைந்துவிட்டன.

இப்போது பாக்கி இருப்பது பின்னங்கால்கள் மட்டும்தான். எருமை மெள்ள பின்னங்கால்களில் ஒன்றை உள்ளே கொண்டு வந்தது. பிறகு, தன்னை நிலைப்படுத்திக்கொண்டு அடுத்த காலையும் உள்ளே கொண்டுவந்துவிட்டது.

தான் முழுவதும் உள்ளே வந்துவிட்டோம் என்று நிம்மதியுடன் அது கனைத்தது. குரல் கொடுத்தது. பின்பு, கழுத்தை மீண்டும் எட்டி வைக்கோலைப் பிடிக்க முயன்றது. முடியவில்லை. காரணம், அதன் வால் இன்னும் ஜன்னலைத் தாண்டி வரவில்லை..!"

குரு, கதையை இங்கே நிறுத்தினார்.

"இந்தக் கதை சாத்தியமா..? இல்லையா..?" என்று கேட்டார்.

"சாத்தியமே இல்லை.." என்றார்கள் சீடர்கள்.

"ஏன்..?"

"எருமை மாட்டின் உடலிலேயே மிகவும் மெல்லியதாக இருக்கக்கூடியது அதனுடைய வால் பகுதிதானே..? தலையை நுழைத்து, வயிற்றையும் நுழைத்தபின், வாலை நுழைக்க முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்..?" என்று கேட்டார்கள் சீடர்கள்.

குரு சொன்னார்: "உங்களில் எத்தனையோ எருமைகள் இருக்கிறீர்கள்..!"

சத்குருவின் விளக்கம்:

(தமிழில் சுபா)

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பாகுபலி பற்றி ஓர் அற்புதமான கதை உள்ளது. பாகுபலி பல போர்களைச் சந்தித்தவன். ஒரு கட்டத்தில் சொந்த சகோதரனுடனேயே போர் மூண்டது. அந்தப் போரில் ஆயிரக்கணக்கான வீரர்கள் தலைசாய்க்கப்பட்டார்கள். போர்க்களம் எங்கும் மரித்த உடல்கள்..! ரத்த ஓடைகள்..!

உலகையே ஆள நினைத்த அந்த மனிதன் இப்போது ஒரு கழுதைக்குக்கூட தலைவணங்கத் தயாராக இருந்தான். ஆனாலும், அவனுக்கு ஞானோதயம் நடக்கவில்லை.

எல்லாவற்றையும் பார்த்ததும் பாகுபலிக்கு திடீரென்று தொண்டை அடைத்தது. அவனுள் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. 'எதற்காக இத்தனை உயிர்களை பலி வாங்கினேன்..?' என்று பதிலில்லாத ஒரு கேள்வி முளைத்தது. அடுத்த கணம், எல்லாவற்றையும் துறந்துவிட்டு தியானத்தில் நின்றுவிட்டான்.

முழுமையான கவனத்துடன் அங்குலம் கூட அசையாமல் பாகுபலி பதினான்கு வருடங்கள் தியானத்தில் ஆழ்ந்தான். அந்தச் சாதனையின் மேன்மையில் அவன் பற்று கொண்டிருந்த எத்தனையோ விஷயங்கள் தகர்ந்து விழுந்தன.

உலகையே ஆள நினைத்த அந்த மனிதன் இப்போது ஒரு கழுதைக்குக்கூட தலைவணங்கத் தயாராக இருந்தான். ஆனாலும், அவனுக்கு ஞானோதயம் நடக்கவில்லை.

பதினான்கு வருடங்கள் நின்றவன் யாருடனும் பேசவில்லை. எதற்காகவும் தன் நிலையை மாற்றிக்கொள்ளவில்லை. அப்படியிருக்கையில், 'ஏன் இன்னும் தனக்கு ஞானோதயம் கிடைக்கவில்லை..?' என்று புரியாமல் அவன் நின்றிருந்தபோது, அந்தப் பக்கம் ஒரு குரு கடந்து போனார்.

'இன்னும் நான் என்ன செய்ய வேண்டும்..? என்னுடைய அத்தனையையும் துறந்துவிட்டேனே..!' என்று பாகுபலிக்கு அந்த குருவிடம் கேட்க வேண்டும் போல் இருந்தது. ஆனால், பதினான்கு வருடமும் யாருடனும் பேசாமல் இருந்தவனுக்கு குருவிடம் மட்டும் வாயைத் திறந்து கேள்விகள் கேட்க மனம் வரவில்லை.

குரு அவனைத் திரும்பிப் பார்த்தபோது, பாகுபலியின் இடது கண்ணிலிருந்து ஒரே ஒரு கண்ணீர்ச் சொட்டு வெளியில் வந்து புரண்டது.

'என்னுடைய ராஜ்ஜியத்தை இழந்துவிட்டேன்..! என் குடும்பம், அரண்மனை, வசதிகள் எல்லாவற்றையும் விட்டெறிந்துவிட்டேன். ஒரு பூச்சிக்குக்கூட தலைவணங்கும் அளவு உள்ளே உருகிவிட்டேன். இன்னும் என்னுள் நடக்க வேண்டியது என்ன இருக்கிறது..?' என்ற கேள்வி அந்த கண்ணீர்த் துளியில் பொதிந்திருந்ததை குரு புரிந்துகொண்டார்.

குரு நின்றார். "நீ அற்புதமான மனிதனாக மாறிவிட்டாய்..! ஒரு புழுவுக்கோ, பூச்சிக்கோ கூட அடிபணியும் அளவு உனக்குள் மாற்றம் நிகழ்ந்துவிட்டது. ஆனால், இதே விருப்பத்துடன் உன்னுடைய சகோதரனிடம் உன்னால் பணிந்து போக முடியுமா..? இயலாது..! அதுதான் உன்னை இழுத்துப் பிடித்திருக்கிறது.." என்றார்.

பாகுபலிக்கு தன்னுடைய நிலை புரிந்தது. சகோதரனிடம் இருந்த வெறுப்பு காரணமாகக் கொண்ட பற்றைக் களைந்தான். அந்தக் கணமே ஞானோதயம் பெற்றான். இப்படித்தான் பலர், வீடு, வசதிகள், பணம், மனைவி, கணவன் என்ற உறவு, குழந்தைகள் மீதுள்ள பற்று, எல்லாவற்றையும் விட்டெறிந்துவிட்டு ஆசிரமத்தை நாடுவார்கள். ஆனால், ஏதோ ஒன்றை விடமுடியாமல் பிடித்து வைத்துக்கொள்வார்கள்.

எவ்வளவோ பேர் சிறிய வயதிலேயே அந்த வயதுக்குரிய சுகங்களை எல்லாம் துறந்துவிட்டு, ஆசைப்பட்டதைச் சாப்பிடாமல், போதைப் பழக்கம் இல்லாமல், காமத்துக்கு அடிமையாகாமல், இரவு, பகல் பாராமல், தான் என்கிற அகங்காரம் இல்லாமல் வேலை செய்வார்கள். ஆனால் ஏதோ ஒன்று அவர்களை அறியாமல் அவர்களிடம் தங்கியிருக்கும்!

சமயத்தில் பார்க்கும்போது, ரத்தக் கண்ணீர் வரும். 'அர்த்தம் இல்லாத ஏதோ ஒன்றை எதற்கு இவர்கள் பற்றிக் கொண்டிருக்கிறார்கள்..?' என்று கவலைப்படுவேன்.

ஒரு பரிமாணத்திலிருந்து இன்னொரு பரிமாணத்துக்கு மாறும்போது, முன் பின் அனுபவமற்ற ஒரு பிரதேசத்துக்குள் நுழையும்போது, தன்னிச்சையாக ஏற்படுகிற அச்சம் காரணமாக, தனக்கு ஏற்கெனவே பழக்கமான ஏதோ ஒன்றை விட்டுவிட முடியாமல் மனம் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறது. அவர்களுடைய இறந்த காலத்திலிருந்தோ, அல்லது அவர்கள் கற்றறிந்த விஷயத்திலிருந்தோ, அல்லது அவர்கள் ரசித்த ஏதோ ஒன்றையோ பிடித்து வைத்துக்கொள்வார்கள்.

சொர்க்கத்துக்கே அழைத்துச் சென்றாலும், அவர்களுடைய சுண்டுவிரல் மட்டும் இன்னும் ஏதோ ஒன்றைச் சுற்றி பற்றிக்கொண்டிருக்கும். அது, பணமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிலருக்கு அவர்கள் பயன்படுத்தும் போர்வையாகக் கூட இருக்கலாம். அல்லது ஒரு செல்ஃபோனைப் பிடித்து வைத்துக்கொள்வார்கள். அல்லது தனக்கான இடம் என்று ஓரிடத்தைப் பார்த்து, அங்கே உட்கார்ந்துதான் தியானம் செய்வார்கள்.

உடல் முழுவதும் வந்துவிட்டாலும், வால் மட்டும் சிக்கிப் போவது இப்படித்தான்! அந்த வாலை, சரியான நேரம் பார்த்துக் கத்தரித்துவிட்டால், அவர்களுக்கு ஞானோதயம் ஏற்பட்டுவிடும்.

இதைத்தான் அந்த ஜென் குரு தனது சீடர்களுக்கு, கதையாக விளக்கிச் சொன்னார்.

(முற்றும்)


ஆசிரியர்:

என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418