யோகிகள் ஏன் மலைக்குகையைத் தேர்ந்தெடுத்தார்கள்?
யோகிகள் தங்கள் தவத்திற்கு பொதுவாக குன்றுகளையோ மலைகளையோ ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்?
சத்குரு:
Subscribe
உங்களையெல்லாம் தவிர்ப்பதற்காகத் தான்... (சிரிக்கிறார்). அவருக்கு உங்களுடன் தொடர்பில் இருக்க விருப்பமில்லை. உங்களையும், உங்களைப் போன்ற மக்களிடமிருந்தும் தள்ளி இருப்பதையே விரும்புகிறார்... .ஏன் மலைகளை தேர்ந்தெடுக்கிறார்கள்? ஏன் சமவெளிகளையோ, கடற்கரையையோ தேர்வு செய்யவில்லை? நீங்கள் இதை புரிந்து கொள்ளவேண்டும். அவர்களுக்கு சுற்றிலும் மூடியிருப்பது போன்ற சிறிய இடங்கள் தான் வேண்டும்.
யோகி என்றால், மற்றவரால் பொதுவாக முடியாத அளவு, தன் உடலை முன்னும் பின்னும் வளைப்பவர் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். யோகி என்றால் உயிரை, தனக்குள்ளே மற்றும் தனக்கு வெளியே இருக்கும் உயிரை, மறு உருவாக்கம் செய்பவர். அவருக்கு எப்போதுமே சிறிய இணக்கமான இடம் வேண்டும். தனக்கே உரிய சக்திநிலையை, தனக்கே உரிய உலகத்தை உருவாக்க ஏதுவாக அந்த இடம் இருக்க வேண்டும். அந்த குகையைப் பார்த்தால், உங்கள் கண்ணோட்டத்தில், அது சிறியது போல் தோன்றும். தாழ்வான கூரையுடன் இந்த 10அடி X 10அடி புறாக்கூடு போன்ற இடத்தில் தவழ்ந்தல்லவா உள்ளே போக வேண்டும் என்றெல்லாம் நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவர் அனுபவத்தில் அது பெரியது; உலகத்தை விட மிகவும் பெரியது. ஏன் தெரியுமா? ‘இடம்’ மற்றும் ‘காலம்’ என்பவை உங்கள் மனம் ஏற்படுத்தியுள்ள தோற்றங்கள். சிறியது, பெரியது, இப்போது, அப்போது என்பவை எல்லாம் உங்கள் மனத்தோற்றங்கள் தான்.
ஒருவர் இந்த இடம், காலம் போன்ற எல்லைகளைக் கடந்து விட்டால், ஒரு முழு பிரபஞ்சத்தையே தன் குகைக்குள் உருவாக்க முடியும். ஒரு சிறிய வாய்ப்பகுதி தவிர மற்ற பகுதிகள் மண்மூடிய நிலையில் இருக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். அதற்காக நிலத்தில் குழி தோண்டி உட்கார்ந்தால் அது அவ்வளவு வசதியாக இருக்காது. மலை என்பது வேறென்ன? நிலம் சற்று மேலெழும்பிய பகுதி, அவ்வளவுதானே? எனவே மலையிலேயே குகை போன்ற பகுதியைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்.
எனவே, நிலத்தால் சூழப்பட்ட வசிப்பிடம் வேண்டும் என்றால், அது மலைகளில் மட்டுமே இருக்கிறது. எனவேதான் அவர்கள் மலைக் குகைகளை தேர்ந்தெடுக்கின்றனர். சமவெளிகளை தேர்ந்தெடுப்பதில்லை. அவர்கள் செய்யும் செயல்களுக்கு, அந்த இடம், நிலத்தால் சூழப்பட்டு இருப்பது மிகவும் அத்தியாவசியமானது.. தியானலிங்கம் யோகக் கோவிலை நீங்கள் கவனித்திருந்தால் தெரியும். அதன் அமைப்பு மண்குவியல் போல் இருக்கிறது. அது சுற்றிலும் மண்ணால் சூழப்பட்டது போல் இருக்கிறது. இயற்கையான குகைக்கு நெருக்கமான வடிவமாக அதை வடிவமைத்து இருக்கிறோம்.
அமெரிக்காவில் உள்ள கென்டகி என்னும் இடத்திற்கு சென்ற போது, அங்கே மேமோத் குகைகளுக்குச் சென்றிருந்தோம். அதன் அளவைப் பார்த்தால் இருபதாயிரம் பேர் அமரலாம் போல் அத்தனை பெரியதாக இருந்தது. அத்தனை விசாலம். அதை தாங்கிப் பிடிக்கும் தூண்கள் எதுவும் இல்லை. அது இயற்கை குகை. ஒரு பத்து ஏக்கர் இடம் இருக்கும், அல்லது அதற்கு மேலும் இருக்கும். எனக்கு அந்த குகையைப் பார்க்கும் போது, இப்படி ஒரு குகை நம் ஊரில் இருந்தால், அதை மிகவும் சக்தி வாய்ந்த முறையில் பிரதிஷ்டை செய்திருக்கலாம் என்று தோன்றியது. (சிரிக்கிறார்). எனவே தான், தியானலிங்கத்தின் கூரையை அரைக்கோள வடிவில் ஒரு குகை போல் வடிவமைத்தோம். லிங்கம் நிலத்தால் சூழப்பட்டு இருப்பது போல் உள்ளது. ஒரு லிங்கத்தை சுற்றி இத்தகைய அமைப்பு தான் மிகவும் பொருத்தமானதும் கூட.
ஒரு யோகி, தானும் இது போலவே நிலத்தால் சூழப்பட்டு இருப்பதை விரும்புகிறார். அதற்கு மலைகள் தான், குகை என்னும் வாய்ப்பை, இயற்கையாகவே வழங்குகின்றன.