யோகி, ஞானி, முனிவர் - என்ன வித்தியாசம்?

நம் கலாச்சாரத்தில் எப்போதுமே காவி உடை அணிந்தவர்களை வணங்கி மரியாதை செய்வது வழக்கம். காவி உடை அணிந்தவர்களையே கூட பல பெயர்களில் அழைக்கிறார்கள். முனிவர்கள், சாதுக்கள், தீர்க்கதரிசிகள், யோகிகள், ஞானிகள் - இவர்கள் எல்லோருமே ஒன்று தானா? அல்லது இவர்களுக்கு இடையே வித்தியாசம் இருக்கிறதா?
 

Question:நம் கலாச்சாரத்தில் எப்போதுமே காவி உடை அணிந்தவர்களை வணங்கி மரியாதை செய்வது வழக்கம். காவி உடை அணிந்தவர்களையே கூட பல பெயர்களில் அழைக்கிறார்கள். முனிவர்கள், சாதுக்கள், தீர்க்கதரிசிகள், யோகிகள், ஞானிகள் - இவர்கள் எல்லோருமே ஒன்று தானா? அல்லது இவர்களுக்கு இடையே வித்தியாசம் இருக்கிறதா?

சத்குரு:

முனிவர்கள் எல்லாம் ‘அ’ பிரிவு, ஞானிகள் எல்லாம் ‘ஆ’ பிரிவு. இப்படி வகைபடுத்தி விடலாமா? (சிரிக்கிறார்).

முனிவர் எப்படிப்பட்டவர்?

முனிவர் என்பவர் தனக்குள் ஒருவித இனிமையை உணர்ந்தவர். அவர்கள் அன்பானவர்கள், இனிமையானவர்கள்,

யோகப் பயிற்சிகள் செய்பவரெல்லாம் 'யோகி'கள் கிடையாது.

இனிமையான சக்திநிலை கொண்டவர்கள். அவர்களைச் சுற்றி எப்போதும் நல்ல அதிர்வுகள் இருக்கும். அவர் ஆசி கூறும் போது, அது உங்கள் வாழ்வில் பல நன்மைகளைச் சேர்க்கும். இதனால் தான் நம் இந்தியக் கலாச்சாரத்தில், புனிதமான மனிதர்களையோ, முனிவர்களையோ பார்த்தால் வணங்க வேண்டும் என்று கூறினார்கள். அவரை வணங்கும் போது, அவரிடமிருந்து ஆசி பெற விரும்புகிறீர்கள், அவ்வளவுதான். அவருடைய ஆசிகள் தொடர்ந்து உங்களை நல்வழிப்படுத்தும். ஆனால் அவர்கள் சிறந்த 'குரு'வாக இருக்க மாட்டார்கள். அவர்களால் உங்களை வழிநடத்த முடியாது. மனிதனின் உச்சகட்ட நிலையான முக்திக்கு அவர்களால் உங்களை வழிநடத்திச் செல்ல முடியாது.

யோகி என்பவர்...

ஆனால் யோகிகள் வித்தியாசமானவர்கள். அவர்கள் யோகத் தொழில்நுட்பத்தில் தேர்ந்தவர்கள். அதற்காக யோகப் பயிற்சிகள் செய்பவரெல்லாம் 'யோகி'கள் கிடையாது. 'இந்த பிரபஞ்சம் முழுவதுமே ஒன்று' என்று தன் அனுபவத்தில் உணர்ந்து தெளிந்தவர் தான் 'யோகி'. இந்த உயிரின் தன்மையை முழுமையாய் அறிந்து, அதைக் கையாளவும் அறிந்தவர் அவர். இருந்தாலும், அவர் ஞானோதயம் அடைந்திருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. அந்த ஒருமை நிலையை, யோக நிலையை ஒரு யோகி பலமுறை உணர்ந்திருப்பார் என்றாலும், அதில் முழுவதுமாக திளைத்திருக்கும் பேறு அவருக்கு கிடைக்காமல் இருக்கலாம்.

தீர்க்கதரிசி என்ன செய்வார்?

தீர்க்கதரிசிகளுக்கு கூர்மையான உணரும் திறன் உண்டு. அவர் ஆன்மீகப் பாதையில் இருக்கவேண்டும் என்றில்லை. அவரை ஒரு விதமான மாந்திரீக வகையில் சேர்க்கலாம். பெரும்பாலும் முனிவர்களுக்கும்

உண்மையில், தன் உள்நிலையில் உச்சகட்ட வளர்ச்சியை அடைந்தவர்தான் ‘ஞானி’.

இவர்களுக்கும் அதிக வேறுபாடு இருப்பதில்லை. பொதுவாக, தீர்க்கதரிசி என்பவர் நீங்கள் பார்க்க முடியாததை, ஆழமாக பார்த்துச் சொல்பவர். எனவே அவரது உணரும் திறன் உங்களுடைய திறனை விட அதிகமாக இருக்கிறது. எந்த அளவிற்கு என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. உங்களை விட ஒரு படி அதிகமாக பார்க்க முடியும் என்றாலும், உங்களைப் பொறுத்தவரை அவர் தீர்க்கதரிசி தானே?

யார் ஞானி?

இப்போது ஞானி என்ற சொல்லை பார்ப்போம். ஞானி என்ற சொல்லை அதன் ஆழம் புரியாமல் இப்போது பரவலாக பயன்படுத்துகிறார்கள். உண்மையில், தன் உள்நிலையில் உச்சகட்ட வளர்ச்சியை அடைந்தவர்தான் ‘ஞானி’. பொதுவாக அந்த உச்சத்தை அடைந்தவரால், தன் உடலில் நீடித்து இருக்க முடியாது. அவர் தன் உடலை தக்க வைத்துக் கொள்வது பெரிய சவால் தான். அவ்வாறு ஞானம் அடைந்த பின்னும், ஒருவர் தன் உடலில் இருக்க விரும்பினால், அவர், இந்த உடல், உயிர், எல்லாவற்றையும் அக்கு வேறு, ஆணி வேறாக புரிந்து வைத்திருக்க வேண்டும். அதன் நுட்பங்கள் எல்லாமே தெரிந்திருந்தால் தான், அவர் தொடர்ந்து தன் உடலில் இருக்கமுடியும். இல்லாவிட்டால் அவரால், தன் உடலில் நீடித்திருக்க முடியாது.

எனவே கிரியா யோக முறையில் ஞானமடையும் ஞானிகள் மட்டும் தான், பொதுவாக, ஞானமடைந்த பின்னும் தன் உடலில் தொடரும் திறன் பெற்றிருப்பார். பிற வழிகளில் ஞானமடைந்தவர்கள் தங்கள் உடலில் மேலும் சிறிது காலம் நிலைக்க விரும்பினால், விழிப்புணர்வுடன் ஆசையை உருவாக்கி, அதன் வழியாக தங்கள் உடலில் நீடித்திருக்கலாம். அவர்களுக்கு வேறு வழி இருக்காது.

 

 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1