யோகாசனம் - சில அடிப்படை விளக்கங்கள்
ஆசனப் பயிற்சியின் நோக்கம் உடல்நலம் அடைவது மட்டுமே அல்ல என்றாலும் பயிற்சி மேற்கொள்பவர் பல விதங்களில் உடல்நலம் அடைகிறார், பல நோய்களில் இருந்தும் தன்னைக் காத்துக் கொள்கிறார். இப்படி உடல் அளவிலும் மன அளவிலும் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்கள் கிடைக்கின்றன. மகிழ்ச்சி, அமைதி, உடல் ஆரோக்கியம் போன்றவை கிடைக்கின்றன.
சத்குரு:
ஆசனா என்பது உடல் இருக்கும் நிலை. ஒருவிதமாக நின்றால், அது ஓர் ஆசனா. வேறொரு விதமாக நின்றால், அது இன்னோர் ஆசனா. இப்படி நூற்றுக்கணக்கான ஆசனங்கள் உள்ளன. இந்த ஆசனங்களில் ஒரு சில மட்டும் உங்கள் தன்மையின் உச்ச நிலையை அடைய உதவுகின்றன. அந்த ஆசனங்களை யோகாசனா என அழைக்கிறோம். யோகாசனாவை ‘ஹடயோகா’ என்ற பெயரிலும் அழைப்பார்கள். இவற்றை சிலர் வெறும் உடற்பயிற்சிகள் போன்று ஆக்கிவிட்டார்கள். ஆனால் இவை உடற்பயிற்சிகள் மட்டுமே அல்ல. உங்கள் சக்தி நிலையைக் குறிப்பிட்ட வழியில் செலுத்தவல்லவை இந்த யோகாசனப் பயிற்சிகள். உங்கள் மனம் வெவ்வேறு உணர்ச்சி நிலைகளில் இருக்கும்போது உங்கள் உடலும் இயல்பாகவே அதற்கேற்றபடி மாறுகின்றது. மகிழ்ச்சியாக இருந்தால், ஒரு மாதிரியாக உட்காருகிறீர்கள், ஒரு மாதிரியாக நிற்கிறீர்கள். அதுவே துன்பமாக இருந்தால் வேறு மாதிரியாக உட்காருகிறீர்கள், வேறு மாதிரியாக நிற்கிறீர்கள். ஒருவர் நின்றுகொண்டோ அல்லது உட்கார்ந்தோ இருக்கும் நிலை பார்த்து அவருடைய மனநிலையை நீங்களும் பல நேரங்களில் புரிந்துகொள்கிறீர்கள்தானே!
ஆசனாவின் அடிப்படையே இதுதான். நமக்கு எந்த மாதிரி மனநிலை வேண்டுமோ அதற்குத் தகுந்த ஆசனாவில் பயிற்சி செய்வது. அந்த ஆசனாவில் தொடர்ந்து பயிற்சி செய்யும்போது அதற்குரிய மனநிலை நமக்கு கிடைக்கிறது. தொடர்ந்து பயிற்சி செய்யும்போது, உங்கள் விழிப்பு உணர்வையும் உயர்த்திக்கொள்ள முடிகிறது. அப்படி உங்கள் தன்மையின் உச்சநிலை அடைவதற்காக நீங்கள் ஆசனப் பயிற்சி செய்யும்போது, கூடவே நல்ல உடல் நலமும் பெறுகிறீர்கள். ஆசனப் பயிற்சியின் நோக்கம் உடல்நலம் அடைவது மட்டுமே அல்ல என்றாலும் பயிற்சி மேற்கொள்பவர் பல விதங்களில் உடல்நலம் அடைகிறார், பல நோய்களில் இருந்தும் தன்னைக் காத்துக் கொள்கிறார். இப்படி உடல் அளவிலும் மன அளவிலும் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்கள் கிடைக்கின்றன. மகிழ்ச்சி, அமைதி, உடல் ஆரோக்கியம் போன்றவை கிடைக்கின்றன. எனவேதான் மேற்கத்திய நாடுகளில் யோகாசனா மிகவும் பரவியுள்ளது.
ஹட யோகாவை புத்தகத்தைப் பார்த்துக் கற்கக் கூடாது. புத்தகத்தில் படிக்கும்போது மிகவும் சுலபமாகத்தான் தோன்றும். ஆனால் தவறாகச் செய்துவிட்டால் ஆபத்து வர வாய்ப்புகள் அதிகம். ஆசனாவில் நுணுக்கமான அம்சங்கள் அதிகம் உள்ளன. அதைச் சரியாகப் புரிந்து செய்யாதபோது மனக் கோளாறுகள் வர நிறையவே வாய்ப்பு உண்டு. எனவே பயிற்சி பெற்ற ஒரு ஆசிரியரிடம்தான் ஆசனப் பயிற்சிகளைக் கற்க வேண்டும்.
ஈஷா யோக மையத்தில் ஒவ்வொரு மாதமும் 2 நாள் பயிற்சியாக ஹடயோகா கற்றுக்கொடுக்கப்படுகிறது!
Subscribe