யோகா செய்தால் பணத்தின் மீது ஆசை குறைந்து விடுமா?
சத்குரு, யோகப் பயிற்சிகள் பயிற்சி செய்வதால் எனக்கு பணத்தின் மீது ஆசை குறைந்து விடுமா? குடும்பத்தின் மீது பாசம் குறைந்து விடுமா?
 
 

Question:சத்குரு, யோகப் பயிற்சிகள் பயிற்சி செய்வதால் எனக்கு பணத்தின் மீது ஆசை குறைந்து விடுமா? குடும்பத்தின் மீது பாசம் குறைந்து விடுமா?

சத்குரு:

பணத்தின் மீது மிகவும் ஆசை இருப்பதால் பணம் சம்பாதிக்கிறீர்கள் என்று நினைக்க வேண்டாம். பணத்தின் மீது பிச்சைக்காரனுக்கும் ஆசை உண்டு. நீங்கள் பணம் சம்பாதிப்பது ஆசையினால் அல்ல, திறமையினால்தான். ஆன்மீகம் என்பது உங்களை திறமை இல்லாத ஒரு நிலைக்கு இட்டுச் செல்லும் கருவி அல்ல. அது மிகவும் திறமையான நிலைக்கு வருவதற்கான ஒரு வழி. உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் மிகவும் புத்திசாலியா? அல்லது உங்களை உருவாக்கிய சக்தி மிகவும் புத்திசாலியா? நீங்களே இவ்வளவு புத்திசாலியாக இருக்கிறீர்கள் என்றால் உங்களை உருவாக்கிய சக்திக்கு உங்களுக்கு இருப்பதைவிட அதிகமான புத்தி இருக்க வேண்டுமல்லவா? நீங்கள் இன்னொரு மனிதரைப் பார்த்து, "ஐயோ, இந்த முட்டாளை அவன் உருவாக்கியுள்ளானே, அவன் முட்டாளாகத்தான் இருக்க வேண்டும்" என்று நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் உங்களையும் அதே சக்திதானே உருவாக்கியுள்ளது?

ஆன்மீகம் என்பது உங்களை திறமை இல்லாத ஒரு நிலைக்கு இட்டுச் செல்லும் கருவி அல்ல.

ஆன்மீகம் என்றால் பலவிதமான தவறான உணர்வுகள் வந்துவிட்டதால்தான் இந்தக் கேள்வி எழுந்துள்ளது. ஆன்மீகம் என்பது நம்முடைய உள்நிலை விஞ்ஞானம் பற்றியதுதானே தவிர வெளிச்சூழ்நிலை பற்றி அல்ல. தொழில் என்பது வெளிச்சூழ்நிலை பற்றியது. வெளியில் நாம் விரும்பும் வகையிலான சூழ்நிலை உருவாக்குவதற்காக தொழில் செய்கிறோம். இன்னும் பல விஷயங்களில் ஈடுபடுகிறோம். நாம் வீட்டினுள் வாழ்வதற்கான நல்ல சூழல் வேண்டும் என்பதற்காக குடும்பம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறோம். இதுவும் வெளிச்சூழ்நிலைதான். இந்த குடும்ப அமைப்பில் உங்களுடைய வாழ்க்கை வசதியானதாக நடக்க வேண்டும் என்றுதான் தொழில்கள் உருவாக்கப்பட்டன. சமூகம் என்றால் இன்னும் சற்று பெரிய குடும்பம். சமூகமும் சிறப்பாக நடக்க வேண்டும் என்பதுதான் நமது நோக்கம். குடும்பம், தொழில், பணம், தேசம், சமூகம் எல்லாமே வெளிச்சூழ்நிலை வளமாக இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட கருவிகள். ஆனால் ஆன்மீகம் என்பது உள்நிலை வளமாக இருக்க நாம் உருவாக்குகின்ற ஒரு கருவி.

ஆன்மீகத்தில் இருக்கும்போது, தொழில் செய்வதும், குடும்பம் அமைத்துக் கொள்வதும் அல்லது தனியாக இருப்பதும், உங்கள் விருப்பத்தைப் பொறுத்த விஷயங்கள். இதற்கும் அதற்கும் சம்பந்தமே கிடையாது. உங்கள் விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு என்னை எதற்குக் கேட்கிறீர்கள்? உங்களது தேவைக்கேற்ற செயல்களை நீங்கள் தானே செய்து கொள்ள வேண்டும். குடும்பம் தேவையென்றால் குடும்பத்தில் இருந்து கொள்ளலாம். தேவையில்லை என்றால் தனியாக இருக்கலாம். இது உங்களுடைய விருப்பம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான விருப்பம் இருக்கிறது. அவற்றைத் தடுப்பதற்கு எனக்கு விருப்பமில்லை. நீங்கள் குடும்பத்தில் இருக்கலாம் என்றோ இருக்கக்கூடாது என்றோ நான் கூறமாட்டேன். உள்ளம் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே நம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஒரு மனிதருக்குக் குடும்பத்தில் இருந்து கொண்டு பத்து குழந்தை பெற்றுக் கொண்டு வாழ ஆசையிருக்கலாம். இன்னொரு மனிதருக்கு திருமணமே வேண்டாமென்று தோன்றுகிறது. அவர் அப்படி இருப்பதில் நமக்கென்ன துன்பம்? வேறொருவருக்கு அதிகமாக தொழில் செய்து, பணம் சேகரிக்க ஆசை. மற்றவருக்கு எதுமற்றிருக்க ஆசை. அவரவர் விருப்பம் போல செய்வதில் நமக்கென்ன பிரச்சனை?

ஒவ்வொரு உயிருக்கும் ஆனந்தமாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கின்றது. ஆகவே ஆன்மீகம் என்பது அனைவருக்குமானது.

மனிதன் ஆனந்தமாக இருக்க வேண்டும். ஆனந்தமாக இருந்தால் அவன் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஆனந்தமாக இருந்து கொண்டு அவன் எந்த செயலைச் செய்தாலும் இன்னொருவரின் உயிரைப் பறிப்பது போன்ற செயல் ஏதும் செய்ய மாட்டான். அவனுக்குள் ஒரு துன்பமோ, துயரமோ இருக்கும்போதுதான் அதை இன்னொருவருக்கும் கொடுக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறான். இன்னொரு மனிதருக்குத் துன்பம் தராமல் எதையும் செய்யுங்கள்.

ஆன்மீக நோக்கத்தால் குடும்பத்தைக் கைவிடுவது என்பதும், தொழிலை விட்டுவிடுவது என்பதும் கிடையாது. யாரோ ஒருவருக்குக் குடும்பத்தை கைவிட வேண்டுமென்ற ஆசை இருந்திருக்கலாம். காரணமின்றி கைவிட்டால் மற்றவர்கள் கண்டிப்பார்களே என்பதற்காக ஆன்மீகத்தைக் காரணம் காட்டலாம். ஆன்மீகத்தின் காரணமாக இதையும், அதையும், எதையும் கைவிடத் தேவையில்லை. எந்தப் பிரத்தியேகமான ஆடையும் உடுத்தத் தேவையில்லை. அனைத்துமே உங்களுடைய விருப்பத்தைப் பொறுத்தவை. ஆனால் ஆன்மீக நாட்டம் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது. ஒவ்வொரு உயிருக்கும் ஆனந்தமாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கின்றது. ஆகவே ஆன்மீகம் என்பது அனைவருக்குமானது. குடும்பம் மற்றும் தொழில் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தவையாகும்.

அனைவைருமே தொழில் செய்ய வேண்டும், அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும், குடும்பம் அமைக்க வேண்டும், நான்கு குழந்தைகள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சட்டம் இருக்கின்றதா? அப்படி ஒன்றும் இல்லை. அவரவர் விருப்பம் போல் செய்து கொள்ளலாம். அது குறித்து நீங்களோ நானோ கருத்து எதுவும் கூறக்கூடாது. தனி மனிதனுடைய விருப்பம் எப்படியோ அப்படியே செய்து கொள்ளலாம். சமூகத்தில் யாரும் எவருக்கும் எதிராகப் பேசுதல் கூடாது. தங்களை ஆன்மீகத் தலைவர் என்று கூறிக் கொள்பவர்கள் கூட எதையும் கூறக்கூடாது. தனிமனிதனுக்கான ஆர்வம் எப்படி இருக்கிறதோ அவர் அப்படியே செய்து கொள்ள வேண்டும்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1