யோகா செய்தால் இளமையாக இருக்க முடியுமா?
தினமும் மூன்றில் இருந்து நான்கு மணிநேரம் தான் தூக்கம். மற்ற நேரமெல்லாம் இடைவிடாது வகுப்பெடுப்பதும், சமுதாய நலத்திட்டங்களை வகுப்பதும், கருத்தரங்கங்களில் பேசுவதும், இந்தியா மட்டும் அல்லாது உலகமெங்கும் சென்று அனைவரின் நல்வாழ்விற்கும் செயல்படுவது என, ஓயாது ஓடிக் கொண்டிருக்கிறார் சத்குரு. யோகாதான் சத்குருவை இவ்வளவு இளமையாக வைத்திருக்கிறதா? இதோ சத்குருவின் வார்த்தைகளில்...
 
 

தினமும் மூன்றில் இருந்து நான்கு மணிநேரம் தான் தூக்கம். மற்ற நேரமெல்லாம் இடைவிடாது வகுப்பெடுப்பதும், சமுதாய நலத்திட்டங்களை வகுப்பதும், கருத்தரங்கங்களில் பேசுவதும், இந்தியா மட்டும் அல்லாது உலகமெங்கும் சென்று அனைவரின் நல்வாழ்விற்கும் செயல்படுவது என, ஓயாது ஓடிக் கொண்டிருக்கிறார் சத்குரு. யோகாதான் சத்குருவை இவ்வளவு இளமையாக வைத்திருக்கிறதா? இதோ சத்குருவின் வார்த்தைகளில்...

Question:சத்குரு, யோகாதான் உங்களை இளமையாக வைத்திருக்கிறதா? வேறு காரணம் ஏதும் உண்டா? அந்த இரகசியத்தை எங்களுக்கும் சொல்லுங்கள்.

சத்குரு:

(சிரித்தவாறு) நான் ஆறு ஏழு மாதங்களுக்கு முன்னால் ஜெர்மனியில் இருந்தபோது, ஒரு மருத்துவர், ஒரு இயந்திரத்தின் உதவியுடன் சில பரிசோதனைகளைச் செய்துவிட்டு, மருத்துவப் பரிசோதனைகள் படி, என் வயது 25 என்று கூறினார். நீங்களும் இப்போது, 'இதன் ரகசியம் என்ன?' என்று கேட்கிறீர்கள். அந்த ரகசியத்தை நான் கூறிவிட்டால் நீங்களும் அதைப் பயன்படுத்துவீர்களா? தினமும் காலையில் 'ஷாம்பவி மஹாமுத்ரா' செய்வதற்கு முன்பு, மூன்று நிமிடங்கள் நம் ஏழுநாள் ஈஷா வகுப்பில் கூறியது அனைத்தையும் உங்கள் நினைவில் கொண்டு வர வேண்டும்.

தொழில்நுட்பம் புரியத் தேவையில்லை. சரியாக உபயோகிக்கத் தெரிந்து கொண்டால் போதும். எனக்குச் செயல்படுவது போலவே அந்தத் தொழில்நுட்பம் உங்களுக்கும் முழுமையாகச் செயல்படும்.

அதன்பின் ஷாம்பவி மஹாமுத்ரா செய்தால், நிச்சயமாக உங்களுக்குள் ஆரோக்கியம், இளமை, ஆனந்தம் நிகழும். படைத்தவன் உங்களுக்குள் இருந்தால், எப்போதும் தெம்பாக, துடிப்பாக உயிரோட்டமாக வாழ்வீர்களா? அப்படித்தானே வாழ வேண்டும்? படைத்தவன் உங்களுக்குள் தான் இருக்கிறான். மேற்கூறியவாறு ஷாம்பவி மஹாமுத்ரா செய்தால், இந்த உண்மையை நீங்களே உணர்வீர்கள். இங்கே படைத்தவனாக வாழலாமா, அல்லது ஒரு ஜடப்பொருள் போல் வாழலாமா? தினந்தோறும் மூன்று நிமிடங்கள் ஈஷா வகுப்பில் கூறப்பட்டவற்றை படிப்படியாக நினைவில் கொண்டுவந்து, பிறகு ஷாம்பவி மஹாமுத்ரா செய்தால், ஆறு மாதங்களில் இளமை, ஆரோக்கியம், ஆனந்தம் என்பது உறுதியாக உங்களுக்குள் நிகழும்.

இது ஒரு போதனை அல்ல. மதம் அல்ல. கருத்தல்ல. இது ஒரு தொழில் நுட்பம். ஒரு தொழில் நுட்பத்தை செயல்படுத்தவும், உபயோகிக்கவும் நீங்கள் அதிகம் புரிந்து கொள்ளத் தேவையில்லை. நீங்கள் அனைவரும் இப்போது மொபைல் போன் உபயோகிக்கிறீர்கள். அது எப்படி செயல்படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? அதன் அடிப்படை கூட உங்களில் பலருக்கு தெரிந்திருக்காது. ஆனாலும் அதை உங்கள் சவுகரியத்திற்கு உங்களால் உபயோகிக்க முடிகிறது. அதேபோல் இந்த ஷாம்பவி மஹாமுத்ரா என்பதும் ஒரு தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பத்திற்கான அடிப்படையை நீங்கள் புரிந்து கொள்ள முடியாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் அது எனக்குப் புரிவதற்கே மூன்று நான்கு பிறவிகள் ஆகின. அதனால் இந்த ஏழுநாட்களில் உங்களால் அதை புரிந்துகொள்ள முடியாது. என்றாலும் அதை முழுமையாய் உங்கள் நல்வாழ்விற்கு உபயோகிப்பது எப்படி என்று நீங்கள் கற்றுக் கொள்ள முடியும். தொழில்நுட்பம் புரியத் தேவையில்லை. சரியாக உபயோகிக்கத் தெரிந்து கொண்டால் போதும். எனக்குச் செயல்படுவது போலவே அந்தத் தொழில்நுட்பம் உங்களுக்கும் முழுமையாகச் செயல்படும்.

Question:யோகத்தில் பல பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கப் படுகின்றன. இதில் எதை செய்ய வேண்டும்? எதை செய்வது உடலிற்கு நல்லது?

சத்குரு:

யோகா என்பது உடலளவிலான விஷயம் மட்டுமல்ல. உடலளவில் சில பயிற்சிகளை நாம் செய்கிறோம். ஒருவரின் ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்விற்கும் அது உதவும். ஆனால் யோகா என்பது இதையெல்லாம் தாண்டி விரிகிறது. துரதிருஷ்டவசமாக உடல் அளவிலான யோகப்பயிற்சிகளே மேற்கத்திய நாடுகளைச் சென்றடைந்திருக்கின்றன. இந்தியாவிலும் கூட இதுதான் பெருமளவில் இன்று நடைமுறையில் உள்ளது.

இந்த அறிவியல் ஆயிரக்கணக்கான வருடங்களாக நம்மோடு இருந்திருக்கிறது. குறிப்பிட்ட விதமான உடற்பயிற்சிகளை உடலின் ஆரோக்கியத்திற்காக நாம் உருவாக்கினோம் தான். ஆனால் அதற்குக் காரணம், உங்கள் உடல் சௌகரியமாக இல்லையென்றால் நீங்கள் வேறு எதையும் செய்ய விரும்பமாட்டீர்கள். உடலில் பிரச்சனை இருந்தால், அதைத் தாண்டி வேறெதையும் நீங்கள் சிந்திக்கக்கூட மாட்டீர்கள். உங்கள் உடலில் எங்கேனும் வலி இருந்தால் நான் ஞானோதயம் பற்றி பேசினாலும், உங்களுக்கு அதில் சிறிதளவு கூட ஆர்வம் இருக்காது. அதனால் சில பயிற்சிகளை உருவாக்கினோம். ஆனால் இவையெல்லாம் கருவி மட்டும் தான். யோகத்தின் சாரம் இதுவல்ல.

உங்கள் வாழ்வின் ஒவ்வொரு செயலும் உங்கள் வளர்ச்சிக்காக இருக்க வேண்டும். ஈஷா யோகாவில் நீங்கள் கற்றுக் கொள்வது வெறும் பயிற்சிகள் அல்ல. உங்கள் வாழ்க்கையையே யோகத்தன்மையாக மாற்றுவதற்கான கருவிகள்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1