ஜென்னல் பகுதி 30

ஒரு குறிப்பிட்ட ஜென்மத்துக்குப் போய்விட்டுத் திரும்பிக்கொண்டு இருந்தான் ஒரு சீடன்.

வழியில் அவனைச் சந்தித்த ஒருவன் கேட்டான், “அந்த புத்த மடத்தில் உனக்கு என்ன கிடைத்தது?”

“என்னிடம் இல்லாதது எதுவும் அந்த மடத்தில் இல்லை,” என்றான் சீடன்.

“அப்புறம் எதற்காக அங்கே போனாய்?”

“அங்கே போகாவிட்டால், என்னிடம் இல்லாதது எதுவும் அங்கே இல்லை என்பதை எப்படி அறிந்திருப்பேன்?”

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குருவின் விளக்கம்:

(தமிழில் சுபா)

ஞானம் என்பது ஏதோ ஒன்றைக் கைப்பற்றுவதல்ல. ஓர் இலக்கை எட்டிப்பிடிப்பது அல்ல. மலை முகட்டைச் சென்றடைவதல்ல. அது தன்னிலை உணர்தல், அவ்வளவுதான்!

ஒரு நல்ல குருவிடம் போவது புதிதாக ஒன்றைப் பெறுவதற்காக அல்ல; உங்களிடமே இருந்தபோதிலும், நீங்கள் கவனிக்கத் தவறியதை அவர் உதவியுடன் உணர்ந்து கொள்வதற்குத்தான்.

ஏற்கனவே, இங்கே உள்ள உண்மையை உய்த்து உணர்தலைத்தான் ஞானம் (Realization) என்கிறோம். இத்தனை நாட்களாக உங்கள் கண்முன் இருக்கும் ஒன்றை நீங்கள் கவனிக்கத் தவறியிருந்து திடீரென்று கவனிப்பது போல்தான் அது.

முன்பே உள்ள ஒன்றை முட்டாள்தனமாகக் கவனிக்கத் தவறியதாக ஏற்றுக்கொள்ள மேற்கத்திய நாட்டினரால் இயலவில்லை. அப்படிச் சொல்வதில் ஒரு பெருமிதம் கிடைக்க வில்லை என்பதால், அந்த மேன்மையான நிலையை உண்மையாக்கம் (Actualization) என்றே அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பொய்யை உருவாக்கலாம். உண்மையைப் புதிதாக உருவாக்க முடியாது. ஏற்கனவே உள்ள ஒன்றைத்தான் நீங்கள் உய்த்து உணர முடியும். அப்படி உணர்வதே முக்தி நிலை.

புதிதாக ஒன்றை உருவாக்குவதல்ல; ஞானம் என்பதை உணர்வதற்கே அதை முற்றிலும் உணர்ந்த ஒருவரிடம் நீங்கள் போக வேண்டியிருக்கிறது. இல்லையென்றால், நீங்களாக ஏதாவது கற்பனை செய்துகொள்வீர்கள். ஒரு நல்ல குருவிடம் போவது புதிதாக ஒன்றைப் பெறுவதற்காக அல்ல; உங்களிடமே இருந்தபோதிலும், நீங்கள் கவனிக்கத் தவறியதை அவர் உதவியுடன் உணர்ந்து கொள்வதற்குத்தான்.

எனக்குச் சாத்தியமானது உங்களுக்கும் சாத்தியம்தான். உங்கள் பக்கத்தில் இருப்பவருக்கும் சாத்தியம்தான். உங்கள் எதிரிக்கும் சாத்தியம்தான். அப்படித்தான் அந்த சீடன் உணர்ந்தான். தன்னிடம் இல்லாதது என்று எதுவும் இல்லை என்பதை அந்த ஜென் மடம் மூலம் உணர்ந்தான்!


ஆசிரியர்:

என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418