விழிப்புணர்வோடு இருப்பது எப்படி?
அன்புள்ள சத்குரு, நான் விழிப்புணர்வோடு இருப்பது எப்படி? இதற்கு நான் என்ன உதவியை நாடலாம்?
சத்குரு:
துரதிர்ஷ்டவசமாக பலபேர் இன்னும் ஊன்றுகோல் இல்லாமல் நடக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் நடப்பதற்கே ஒரு ஊன்றுகோல் தேவைப்படுகிறது. அது இல்லாமல் அவர்களால் நடக்க இயலாது. உதவி என்பது, பல்வேறு நிலைகளில் உள்ளது. நீங்கள் உடலளவில் ஊனமுற்றிருந்தால், உடலளவில் உதவி தேவைப்படும். உளவியல் அடிப்படையில் பலகீனமாயிருந்தால், உளவியல் உறுதுணை தேவைப்படும். உணர்வு ரீதியாக நீங்கள் சமநிலை இழந்திருந்தால் உணர்வு ரீதியான துணை தேவைப்படும். வேறு தளத்தில் பார்த்தால், பொருளாதாரத்தில் நீங்கள் நலிவடைந்திருந்தால் பொருளாதார உதவி உங்களுக்கு வேண்டியிருக்கும். சமூக நிலையில் பலகீனமாயிருந்தால் சமூகத்தின் உதவி உங்களுக்குத் தேவையாகயிருக்கும். இவையெல்லாம் வெவ்வேறு சூழ்நிலைகள். ஆனால் ஆன்மீக அடிப்படையில் உங்கள் வளர்ச்சிக்கு உதவி என்று சொல்கிறபோது, இவை எல்லாவற்றோடும் ஒருவகையில் தொடர்பு கொண்டதாக அது இருக்கிறது.
சிலருக்கு உளவியல் ரீதியில் உதவி தேவை. சிலருக்கு உடலளவில் உதவி தேவை. சிலருக்கு புறச்சூழலில் உதவி தேவையிருக்கிறது. ஒரு பயிற்சி வகுப்புக்கு வருகிறபோது நன்கு தியானம் செய்கிறார்கள். பிராணாயாமங்கள் நன்கு செய்கிறார்கள். ஆனால் வீட்டில் போய் உட்கார்ந்து விட்டால், கண்மூடி ஒரு 10 நிமிடம் கூட அவர்களால் ஆத்ம சாதனைகளில் ஈடுபட முடிவதில்லை. அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது. புறச்சூழல் அவர்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. வெளிச்சூழலில் உறுதுணையில்லாமல், பலபேருக்கு அவருடைய தன்மைகள் மட்டுமல்ல. அவருடைய விழிப்புணர்வு, அவர்கள் பயிற்சிகள் அனைத்துமே காணாமற் போய்விடுகின்றன. இதுதான் நடக்கிறது.
விழிப்புணர்வுடன் இருப்பதென்பது கடினம். குறைந்தது அந்தப் பயிற்சிகளையாவது நீங்கள் தொடர வேண்டும். நான் கடினமென்று சொன்னால், அது இயலாதென்பது போல் நான் சொல்லவில்லை. அதற்குக் கூடுதல் விழிப்புணர்வுதான் தேவை. விழிப்புணர்வு இல்லாத போது, விழிப்புணர்வோடு இருப்பதற்கான முயற்சி கடினம். ஏனெனில், விழிப்புணர்வு என்பது நீங்கள் பழகிக் கொள்வதல்ல. உங்கள் உள்நிலையின் அடிப்படைத் தன்மையே விழிப்புணர்வுதான். வாழ்க்கை மேலோட்டமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் மேலோட்டமாக வாழ்க்கையை, தங்கள் உடலை, மனதை, உணர்பவர்களுக்கு இந்த விழிப்புணர்வு மிகக் கடினம் போலத் தென்படுகிறது. ஆனால் உள்நிலையின் அடிப்படைத் தன்மையே விழிப்புணர்வுதான். இதற்கு நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் என்ன நிலையில் இருந்தாலும் விழிப்புணர்வோடு தான் இருக்கிறீர்கள்.
Subscribe