வாஸ்து சாஸ்திரம்: இவ்வளவு பயம் தேவையா? (Sadhguru on Vastu Shastra in Tamil)
வளம் கொழிக்கும் வாஸ்து சாஸ்திரம் (Vastu Shastra), உங்கள் சமையல், குளியல், படுக்கை அறை என அத்தனைக்கும் வாஸ்து பெயின்ட்; கட்டிடக் கலையில் முக்கிய இடம் வகிக்கும் வாஸ்து என்று இன்று திசை பார்த்து வீடு கட்டுகிறார்களோ இல்லையோ, வாஸ்து consultantஐ அணுகாமல் வீட்டைக் கட்டுவதே இல்லை. இதில் வாடகை வீட்டில் வசித்துக் கொண்டு வாஸ்து செய்ய முடியாமல் தவிக்கும் ஜனமே ஏராளம். இப்படி நம்மை வாட்டி வதைக்கும் வாஸ்து சாஸ்திரத்தில் அத்தனை உண்மை இருக்கிறதா? சத்குரு என்ன சொல்கிறார்? மேலும் படியுங்கள்...
வாஸ்து சாஸ்திரம் (Vastu Shastra) எதற்காக உருவாக்கப்பட்டது?
சத்குரு :
வாஸ்து என்பது பண்டைய காலத்தில் கட்டிட கலைக்கான ஒரு எளிய வழிகாட்டி. வாஸ்து வெவ்வேறு நிலப்பகுதிகளுக்கு, வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மாறுபடும். மலைப்பகுதியில் வாழ்ந்தால் ஒரு விதமான வாஸ்து, நிலப்பரப்பில் வாழ்ந்தால் ஒரு விதமான வாஸ்து, வெப்பமான பகுதிக்கு ஒரு விதம், குளிர் பிரதேசங்களுக்கு ஒரு விதம் என மாறுபடும்.
அந்த காலத்தில் உங்கள் கிராமத்தில் கட்டிடக் கலை நிபுணர்கள் கிடையாது. எனவே ஒருவர் தன் வீட்டை 80 அடி அகலத்தில், 50 அடி அகலத்தில் கட்டும் வாய்ப்பு உள்ளது. இப்படி சுரங்க வழிப் பாதை போன்ற வீட்டில் ஒருவர் வாழ்ந்தால், அந்த இடம் அழுத்தம் தர ஆரம்பிக்கும். இயல்பாக நீங்களும் இறுக்கமானவராக மாறி விடுவீர்கள்.
எனவே, எளிமையான வழிமுறைகளை வகுத்துச் சென்றார்கள். ஒரு அறையானது இந்த அளவில், இந்த முறையில் இருக்க வேண்டும். குறிப்பிட்ட முறையில் இருந்தால் காற்றோட்டம் நன்றாக இருக்கும். அந்த சூழ்நிலையில் சக்தியும் சிறப்பாக இருக்கும். இது உடல்நலனுக்கும், நல்வாழ்வுக்கும் வழி வகுக்கும். இப்படி அடிப்படையான வழிமுறைகளை நிறுவினார்கள். இல்லாவிட்டால் நீங்கள் நீள் சதுரமான அல்லது வடிவமே இல்லாத வீடுகளைக் கட்டுவீர்கள்.
இன்றைக்கு கட்டிடக் கலை வல்லுனர்கள் இருப்பதால் இப்படிக் கட்ட வேண்டும், இப்படி செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். எத்தனை பழைய வீடுகளில் காற்றோட்டத்துடன் வீடு சரியான முறையில் அமைக்கப்பட்டு இருக்கிறது என்று பாருங்கள். சுவாசிக்க கூட முடியாத வகையில்தானே பலர் கட்டி வைத்திருக்கிறார்கள். அப்படி ஒரு வீட்டில் வாழ்ந்தால் உடல், மன நலம் சீர்கேடும். வேறு சில உபாதைகளும் ஏற்படும். இதற்காகத்தான் சில விதிமுறைகளை ஏற்படுத்தினர்.
நீங்கள் பயத்தில் இருந்தால்...
ஆனால் இன்று உங்கள் பயத்தால் அதை நீங்கள் பெரிதுபடுத்த ஆரம்பித்து விட்டீர்கள். வாயிற்கதவு இங்கே இருந்தால் பணம் போய்விடும், அங்கே இருந்தால் ஏதோ ஒன்று வரும் என்று நம்பத் துவங்கிவிட்டீர்கள். இது முட்டாள்தனம். உங்கள் பயத்தை யாரோ பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவுதான்.
பயம் ஆட்சி செய்தால் எதிலிருந்தும் அறிவியலை உருவாக்கலாம். 20 வருடங்களுக்கு முன் வாஸ்து பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. ஆனால் மக்கள் நன்றாக வாழவில்லையா? இதைப் பற்றி எதுவும் தெரியாத உங்கள் தகப்பனாரை விட உங்கள் தாத்தாவை விட நீங்கள் நன்றாக வாழ்கிறீர்களா என்ன? ஒரு எளிய வழிமுறை, உங்கள் வாழ்க்கையே அதைச் சார்ந்திருப்பது போல செய்து கொண்டீர்கள்.
தென்மேற்கு பகுதி உயரம் குறைந்தால் குழந்தை இறந்துவிடுமா?
உங்களுக்கு ஒரு கதை சொல்ல வேண்டும். 15-20 வருடங்களுக்கு முன் இந்த வாஸ்து விஷயம் புதிதாக இருந்த பொழுது நடந்தது இது. கோவையில் ஒரு குடும்பம். பெரிதாக, அழகாக வடிவமைக்கப்பட்ட வீடு அவர்களுடையது. வீட்டினுள்ளேயே ஒரு சிறிய தோட்டம் இருக்கும். முன்னர் ஒருமுறை அந்த வீட்டிற்குச் சென்றிருக்கிறேன். அன்று மதியம் சாப்பிட அழைத்திருந்தார்கள். வீட்டைச் சுற்றிப் பார்த்து, தோட்டத்திற்கும் சென்றேன், தோட்டத்தின் மூலையில் ஒரு உயரமான சவுக்கு கம்பம் நின்று கொண்டிருந்தது. சிமெண்ட் பீடத்தின் மேலே உரு மரக் கம்பம் அந்த இடத்திற்கு பொருந்தாமல் இருந்தது. உடனே அந்த வீட்டுப் பெண்மணியை அழைத்து இந்த கம்பம் எதற்காக என்று கேட்டேன். அந்தக் கம்பம் கட்டிட வேலைக்கோ, வேறு தேவைக்கோ இல்லாமல் முறையாக நிறுவப்பட்டிருந்தது.
Subscribe
நான் கேட்டது அவருக்கு தர்மசங்கடமாகி விட்டது. அவரால் என்னிடம் காரணம் சொல்ல முடியவில்லை. மீண்டும் கேட்ட பின் சொன்னார். "என் நண்பர் ஒருவர் என் வீட்டு விலாசத்தை வாஸ்து ஆள் ஒருவரிடம் கொடுத்து விட்டார். அவரும் வந்தார். குடும்பத்தில் ஒரு பிரச்சனையும் இல்லையென்றாலும் உள்ளே இருந்த அரிப்பினால் அந்த ஆள் வீட்டைப் பார்க்க அனுமதித்து இருக்கிறார். நண்பர் வேறு அந்த மனிதர் உங்கள் வீட்டைப் பார்த்தால் எது சரியாக இருக்கிறது எது சரி இல்லை என்று சொல்லிவிடுவார் என்றும் சொல்லி இருக்கிறார்.
அந்த மனிதரும் வந்திருக்கிறார். அவருடைய குறிப்பேட்டை திறந்து சில கணக்குகள் போட்டார். பிறகு உங்கள் வீட்டின் தென்மேற்கு மூலைதான் தமிழ் வாஸ்து பிரகாரம் உயரமான இடமாக இருக்க வேண்டும். ஆனால் தென்மேற்கு பகுதி உயரம் குறைந்தும், வடமேற்கு பகுதி உயரமாகவும் இருக்கிறது. இப்படி இருந்தால் உங்கள் குழந்தைகளில் ஒன்று இறந்துவிடும் என்றார். இந்த பெண் அதற்கு "இது என்ன முட்டாள்தனம், எனக்கு இதெல்லாம் பிடிக்காது, நீங்கள் கிளம்பலாம்" என்றிருக்கிறார். பிறகு உங்கள் இஷ்டம் என்று சொன்ன அந்த ஆள் தன அட்டையை அவரிடம் கொடுத்து, வேண்டும் என்றால் என்னைக் கூப்பிடுங்கள் என்று சொல்லி கிளம்பிவிட்டார். எப்படியும் அவருடைய யுக்தி வேலை செய்யும் என்று அவருக்குத் தெரியும்.
என்னுடைய குழந்தைகளில் ஒன்று இறப்பதா? முட்டாள்தனம் என்று அந்தப் பெண்ணுக்கு கோபம். குழந்தைகளும் வீட்டிற்கு வந்தார்கள். அவர்களைப் பார்த்தவுடன் கடவுளே இதில் யார் என்று அவர் மனம் படபடக்க ஆரம்பித்தது. இதற்கு ஏற்றார் போல இளைய மகனுக்கு சளி பிடித்து தும்ம ஆரம்பித்ததும், ஐயோ கடவுளே என் இளைய மகன் இறக்கப் போகிறான் என்று பதற ஆரம்பித்தார். இதை புறக்கணிக்க நினைத்தாலும் முடியவில்லை.
ஒரே வாரத்தில் உடைந்து போகும் நிலைக்கு வந்துவிட்டார். அந்த ஆளைக் கூப்பிட்டு நான் என்ன செய்வது என்று கேட்டார். அவர் ஒரு பரிகாரம் செய்தால் சரியாகிவிடும் என்று கூறியிருக்கிறார். துர்சக்தியை அதன் மூலம் சரி செய்து விட முடியும் என்றும் சொல்லியிருக்கிறார். எவ்வளவு என்று கேட்க, 50,000 என்றார். இந்தப் பெண் அவ்வளவு முடியாது, என் கனவரிடம் கேட்க முடியாது, அவர் இதையெல்லாம் அனுமதிக்க மாட்டார், எனவே குறைவாக சொல்லுங்கள் என்றார்.
பேரம் பேசிப் பேசி 15000 என முடிவானது. ஒரு நல்ல நாளில், நல்ல நேரத்தில், பூமி சரியான வேகத்தில் சுற்றும் நாளில் வந்து கம்பம் நடுகிறேன் என்றார். பெண்ணின் கணவரும் மதிய உணவுக்கு வராமல் இருக்க வேண்டும். கோள்கள், கணவர், மற்ற எல்லாம் அந்த நாளில் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும். அன்றைக்கு அந்த மனிதரும் சவுக்கு கம்பத்தை தென்மேற்கு மூலையில் நட்டு விட்டு, பாருங்கள் இப்பொழுது தென்மேற்கு மூலை உயரமாகி விட்டது, குழந்தைகளும் நன்றாக இருக்கிறார்கள். எனக்கு தெரியும், இது வேலை செய்யும் என்றுச் சொல்லிவிட்டு சென்றார்.
உண்மையில் எதற்காக தென்மேற்கு பகுதி உயரம் அதிகமாக இருக்க வேண்டும்?
நம் நாட்டின் இந்தப் பகுதியில் ஏன் தென்மேற்கு பகுதி வடமேற்கு பகுதியை விட உயரமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் என்றால், இந்தப் பகுதி அதிகமான தென்மேற்கு பருவ மழை பெறுகிறது. காற்றும் மழையும் ஜூன் மாதத்தில் அதிகமாக இருக்கும். மழைக்கு ஒரு மாதம் முன் காற்றும் வேகமாக வீசும். நம் கட்டிடங்களுக்கு இது சோதனைதான்.
ஜூன் மாதம் கூரையைக் காற்று பிய்த்துக் கொண்டு போகும். ஜூலையில் மழை உங்கள் மீது பொழியும். இது இயற்கையின் முறை. எனவே, தென்மேற்கு பகுதி சுவர்கள் உயரமாக இருந்தால் காற்றை அது தடுக்கும். வீடு காற்றால் புரட்டிப் போடப்படாது. ஆனால் இந்த ஆள் கம்பம் நட்டுவிட்டு எல்லாம் சரியாகிவிடும் என்கிறார். இதுபோன்ற முட்டாள்தனமான செயல்கள் வாஸ்துவின் பெயரால் நடக்கிறது. தங்கள் வீட்டையே உடைத்து கொள்கின்றனர். குளியலறையை படுக்கை அறையாகவும், படுக்கை அறையை சமையல் அறையாகவும் மாற்றிக் கொள்கின்றனர்.
எனவே பயம் இருந்தால், உங்களை எப்படி வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் பயத்தில் இருந்தால், உங்களை எதை வேண்டுமானாலும் நம்பச் செய்யலாம்.
பெரிதுபடுத்தப்பட்ட எளிய விதிமுறைகள்
நான் வாழும் வீட்டின் அளவும், வடிவமும்தான் நான் யாரென்பதை தீர்மானிக்கிறது என்றால் அது அவமானம் இல்லையா? உயிரற்ற பொருட்கள் மனிதனின் இயல்பை தீர்மானிக்க வேண்டுமா அல்லது மனித இயல்பு பொருட்களின் தரத்தை தீர்மானிக்க வேண்டுமா, சொல்லுங்கள். துரதிருஷ்டவசமாக உங்கள் இயல்பை உங்களைச் சுற்றி இருக்கும் பொருட்களின் வடிவத்துக்காக, உருவத்துக்காக தொலைத்து விட்டீர்கள். என்ன செய்வது, புத்திசாலித்தனம் இல்லை, பயம்தானே நம்மை ஆட்சி செய்கிறது. பயம் இருந்தால் நீங்கள் புத்திசாலிதனத்தை இழந்து விடுவீர்கள்.
சுமார் 1000 வருடங்களுக்கு முன்னால் வீடு கட்ட வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். எந்த காலகட்டத்திலும், சுவர் எழுப்புவது பிரச்சனை இல்லை. கூரைதான் சவால். இப்பொழுது எஃகு, சிமெண்ட் போன்ற பல கட்டிட சாமான்கள் இருப்பதால், தேவையான வகையில் சௌகரியமாக அமைத்துக் கொள்வதற்கு தேவையான சுதந்திரம் நம்மிடம் இருக்கிறது. ஆனால் முற்காலத்தில் மரம் மட்டுமே மூலதனமாய் இருந்தது.
பண்ணையில் இருக்கும் மரத்தை வெட்டி பயன்படுத்தினால், அந்த குட்டையான மரத்தில் என்ன கட்ட முடியும்? அதன் தண்டு 8 அடிக்கு இருக்கும். அதை வைத்துக் கொண்டு, 8 அடி அகலத்தில் வீடு கட்ட முடியும். ஆனால் 10 குழந்தைகள் உள்ள வீட்டில், 100 அடி நீளத்தில், 8 அடி அகலத்தில் சுரங்க வழிபோலத்தான் ஒருவரால் வீடெழுப்ப முடியும்.
இதற்குத்தான் சில எளிய விதிமுறைகளை வகுத்து வைத்தார்கள். வீடு கட்டினால், சுவர் இந்த அளவில் இருக்க வேண்டும், ஜன்னல் இவ்வளவு இருக்க வேண்டும் என்று சொல்லிச் சென்றார்கள். எனவே கட்டிடக்கலை பொறியியலுக்கு என்று சில விதிகள் இருக்கிறது. சுயமாக யோசித்து செய்ய இயலாதவர்கள், இந்த விதிமுறைகளைப் பின்பற்றலாம். இத்தனை சதுர அடிக்கு இத்தனை ஜன்னல் என்ற விதியைப் பயன்படுத்தலாம். எனவே வாஸ்து என்று நீங்கள் குறிப்பிடுவது இந்த விதிமுறைகளைத்தான். இது இடத்திற்கு இடம் மாறுபடும்.
கடந்த சில வருடங்களில் சிலர் இதைப் பெரிய அளவில் வியாபாரமாக்க முடிவு செய்துவிட்டனர். நம்ப முடியாத விகிதாச்சாரத்தில் இது வளர்ந்து விட்டது. உங்கள் உடல்நலனை நிர்ணயிக்கிறது. உங்கள் வியாபாரத்தை நிர்ணயிக்கிறது.. இப்படி எல்லாம் செய்கிறது. மக்கள் வீடுகளை இடிக்க துவங்கினார்கள். சமையலறை இருக்கும் இடத்தில குளியலறை கட்டுவது, சமைக்கும் இடத்தில் தூங்குவது என்று முட்டாள்தனமாக செயல்பட ஆரம்பித்து விட்டார்கள்.
மக்களுக்கு இதற்காகும் செலவு பற்றி கவலை வரவும், வாஸ்து ஆலோசகர்கள் புதிய தீர்வுகளைத் தரத் துவங்கி விட்டார்கள். ஒரு கல்லை நடுங்கள், எல்லாம் சரியாகிவிடும், ஒரு கண்ணாடி வையுங்கள் அனைத்து துர்சக்திகளும் உங்கள் பக்கத்துக்கு வீட்டுக்காரரை நோக்கித் திரும்பி விடும் என்று புதிய முறைகளை கண்டுபிடித்தார்கள். அடிப்படையில், பயம்தானே மக்களை ஆள்கிறது?
குளியலறையில் உறங்கிய கதை
உங்களுக்கு ஒரு சம்பவம் சொல்ல வேண்டும். நான் சென்னையில் ஒரு வீட்டில் தங்கி இருந்தேன். இரவு அலைபேசியில் பேச வேண்டி இருந்தது. 2 மணி வரை சாதாரணமாக என்னுடைய தொலைபேசி உரையாடல்கள் நீளும். பேசிக் கொண்டே இருந்ததில் பேட்டரி தீர்ந்துவிட்டது. என்னிடம் சார்ஜர் இல்லை. எனவே நான் தங்கி இருந்த வீட்டாரின் அலைபேசிக்காக அவரை எழுப்பலாம் என்று நினைத்தேன். 2 மணி என்றாலும் மிகவும் முக்கியமாக பேச வேண்டி இருந்தது. எனவே அவரை தேடி அவர் அறைக்கு சென்று கதவை தட்டினேன்.
பல முறை தட்டியும் திறக்கவில்லை. ஆனால் கைப்பிடியை அழுத்தியவுடன் கதவு திறந்தது. உள்ளே யாரும் இல்லை. வீடு முழுவதும் தேடியும் யாரும் இல்லை. நான் மட்டும் தனியாக இருக்கிறேன். தோட்டத்திலும் யாரும் இல்லை. எனவே வீட்டில் இருந்த தொலைபேசியில் நம் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, இந்த மனிதர் எங்கே என்று தெரியவில்லை, எனவே அவரது அலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் என்றேன். அவர்களும் அவரை அழைத்து, எங்கே இருக்கிறீர்கள், சத்குரு உங்களை வீடு முழுவதும் தேடிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்கள்.
உங்கள் வாழ்க்கையை நீங்கள் விரும்பிய வகையில் வாழ பொறுப்பெடுத்துக் கொண்டால், எந்த இடத்தில வாழ்ந்தாலும் நல்ல விதமாக இருக்கலாம்.
பிறகு இவர் இறங்கி வருகிறார். எங்கே போனீர்கள் என்றேன். தலையைச் சொறிந்து கொண்டு தர்மசங்கடமாக நின்றார். என்ன என்றேன். ஒரு வாஸ்து ஆலோசகர் வந்தார். என் வியாபாரத்தில் உள்ள பிரச்சனை எல்லாம் தவறான இடத்தில் நாங்கள் உறங்குவதால்தான். நாங்கள் உறங்க சிறந்த இடம் குளியலறைதான் என்றார். அதனால் இந்த மனிதரும் அவர் மனைவியும் குளியலறையில் உறங்குகிறார்கள். நான் அவரிடம் சொன்னேன், இறந்தே போனாலும் படுக்கை அறையில் உறங்கி இறந்து விடுங்கள். அதில் ஒரு மதிப்பாவது இருக்கும். குளியலறையில் உறங்கி பல காலம் வாழ்வதில் என்ன பலன்?
உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை நீங்கள் செய்வதில்லை. உங்கள் கைகளில் இல்லாதவற்றை சரி செய்ய நினைக்கிறீர்கள். வாழ்க்கையில் இதுதான் பிரச்சனை. ஏதோ ஒரு வீட்டில் வாழ்ந்து உங்கள் வாழ்க்கையை நல்ல விதமாக வாழ முடியாதா? உங்கள் வாழ்க்கையை நீங்கள் விரும்பிய வகையில் வாழ பொறுப்பெடுத்துக் கொண்டால், எந்த இடத்தில வாழ்ந்தாலும் நல்ல விதமாக இருக்கலாம். வீடு கட்டும்பொழுது நீங்கள் விரும்பிய வகையில், உங்கள் சௌகரியத்துக்கு, உங்கள் நன்மைக்கு, கட்டுங்கள். யாரோ ஒருவர் நிர்ணயிப்பது போல அல்ல.
எதைப் பற்றியும் அறிந்திராத ஒரு மனிதர், உங்கள் வீட்டின் வடிவம், கதவுகள், ஜன்னல்கள் எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறார். வாஸ்துவின் பெயரால் முட்டாள்தனமான செயல்கள் செய்த பலரை பார்த்து விட்டேன். தயவுசெய்து மதிப்பாக வாழுங்கள். எவ்வளவு நாள் வாழ்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமில்லை. வாழும் வரை நன்றாக வாழ்வது முக்கியம் இல்லையா? நம் வாழ்க்கையை நல்ல விதமாக கையாளாமல், ஜன்னலின் வடிவம் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கப் போகிறது என்று நம்புகிறோம். இது சரியான அணுகுமுறையல்ல.