உண்மையில் நாம் பல பிறவிகள் எடுக்கிறோமா?

'இதுவே என் கடைசிப் பிறவியாக இருக்கவேண்டும் ஆண்டவா!' என்ற வேண்டுதல்களை நாம் கேட்டிருப்போம். உண்மையில் நாம் பல பிறவிகள் எடுக்கிறோமா? இதற்கும் 'கர்மா'விற்கும் என்ன சம்பந்தம்?
 

Question:'இதுவே என் கடைசிப் பிறவியாக இருக்கவேண்டும் ஆண்டவா!' என்ற வேண்டுதல்களை நாம் கேட்டிருப்போம். உண்மையில் நாம் பல பிறவிகள் எடுக்கிறோமா? இதற்கும் 'கர்மா'விற்கும் என்ன சம்பந்தம்?

சத்குரு:

இது பெரும்பாலும் இந்தியர்களின் பிரச்சனை தான். அனுபவத்தில் உணராவிட்டாலும், அவர்கள் பேச்சுவழக்கில் 'பிறவிகள்' சர்வசாதாரணமாக வழங்கப்படுகிறது. இந்நிலையை மாற்றி, அதை அவர்கள் அனுபவத்திலும் கொணர முயன்று கொண்டிருக்கிறோம்... ஏனெனில், அவர்கள் மனதளவிலேனும் இதற்குத் தயாராக இருக்கிறார்கள்.

பிறவி பற்றி இப்போது நீங்கள் எதையும் நம்பவேண்டாம்.

இப்போது நீங்கள் நியுயார்க் நகரில் இருக்கிறீர்கள். மீண்டும் ஒருமுறை பிறந்தால், மறுபடியும் இங்கேயே பிறந்து, இதே தெருக்களில் நடக்க விரும்புவீர்களா? அல்லது அதைத் தாண்டி என்ன உள்ளது என்று அறிய விரும்புவீர்களா? முழுமையான வாழ்வை வாழ்ந்திருந்தால், நீங்கள் எல்லாவற்றையுமே பார்த்திருப்பீர்கள். மீண்டும் பார்ப்பதற்கு ஏதுமிருக்காது. முந்தைய அனுபவங்களுக்கும், இதற்கும் சிற்சிறு வேறுபாடுகள் இருக்கும் தான், ஆனால் அடிப்படையில் எல்லாம் ஒன்றுதான் என்று உங்களுக்குத் தெரிந்து விடும். அதனால், 'அடுத்து என்ன?' என்ற கேள்வி தான் உங்களுக்கு எழும்.

எளிமையாகச் சொல்வதனால், இப்போது நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள். ஆனால் ஒரு நாள் இறந்துவிடுவீர்கள். ஆக, அடிப்படையில் உங்கள் உடல் என்பது, நீங்கள் சேகரித்த ஒன்று. இப்போது நீங்கள் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்திருந்தாலும், அமெரிக்க நாட்டில் உற்பத்தியான உணவை சில வருடங்களாக நீங்கள் உண்டிருந்தாலும், உங்கள் முக அமைப்பு, தோற்றத்தில் எவ்வித வித்தியாசமும் ஏற்படவில்லை. இவ்வளவு ஏன், இன்னும் 50 ஆண்டுகளுக்கு நான் அமெரிக்க நாட்டு உணவினை உண்டாலும், நான் இந்தியனாகவே தோற்றமளிப்பேன். அதில் வித்தியாசம் இருக்காது. ஏன்?

ஏனெனில், இது மரபணு சம்பந்தப்பட்டது. இங்கிருக்கும் பொருட்களை எடுத்து ஒரு கட்டிடத்தைக் கட்டினால், அது ஒரு வகையில் தோற்றமளிக்கும். ஆனால் இங்கிருக்கும் பொருட்களை எடுத்து உடல்கள் உருவாக்க முயன்றால், உணவு உட்கொண்டவரைப் பொருத்து, தோற்றம் இந்தியனாகவோ, ஆஃபிரிக்கனாகவோ, அல்லது வேறு எவராகவோ தோன்றும். அமெரிக்க மண்ணில் விளையும் உணவினை உண்டால், உட்கொள்பவர்கள் மெதுவாக அமெரிக்கப் பழங்குடி மக்கள் போல் தோற்றம் கொள்ளவேண்டும். ஆனால் இங்கு நீங்கள் பல நூற்றாண்டுகள் வாழ்ந்தாலும், கலப்புத் திருமணம் செய்யவில்லை என்றால், உங்கள் வம்சத்தின் தோற்றம் எவ்விதத்திலும் மாறுபடாது. அடிப்படையில் அது உங்கள் தாய்நாட்டின் முக அமைப்பு, தோற்றமாகவே இருக்கும். இதை தர்க்க ரீதியாக அணுகிப் பார்ப்போம். ஒரே உணவை வெவ்வேறு மனித உடல்கள் உட்கொண்டாலும், அவர்கள் தோற்றத்தில் எவ்வித வித்தியாசமும் ஏற்படுவதில்லை. உணவு ஒன்று தான், ஆனால் தோற்றம் முன்பு எப்படி இருந்ததோ அதே வகையில் இருக்கிறது. ஏன்?

காரணம், அவ்வுடல்களில் இருக்கும் ஞாபகக் கட்டமைப்பு. உணவும், மற்ற பிற ஆகாரங்களும் நியுயார்க் நகரில் இருந்து கிடைக்கப் பெறலாம். ஆனால் உங்கள் தோல், மூக்கு, கண், உடல் என எல்லாம் உங்கள் தாய்நாட்டை ஒத்து இருக்கிறது. நீங்கள் பிறப்பதற்கு முன்பே உங்களுக்குள் சில தகவல்கள் வைக்கப்பட்டுள்ளன. அது தான் உங்கள் தோற்றம், சிந்தனை, நீங்கள் நடக்கும் விதம் என எல்லாவற்றையுமே நிர்ணயிக்கிறது. அதற்காக, உடல் சம்பந்தப்பட்ட தகவல் மட்டும் தான் உங்களில் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது என்று எண்ணிவிட வேண்டாம். மகப்பேறு மருத்துவமனையில் சென்று, பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகளைப் பாருங்கள். ஒவ்வொன்றின் குணாதிசயமும் வித்தியாசப்படும். உங்களுக்குள் சேர்த்து வைக்கப்படும் தகவல் வெறும் உடற் சம்பந்தப்பட்டது அல்ல. அது அதையும் தாண்டி நீள்கிறது.

பிறவி பற்றி இப்போது நீங்கள் எதையும் நம்பவேண்டாம். ஆனால் அமெரிக்க மண்ணை எடுத்து உங்கள் உடலை உருவாக்கினாலும், அதை வார்க்கும் தகவல் வேறெங்கோ (தாய்நாடு அமெரிக்காவாக இல்லாவிட்டால்) இருந்து நீங்கள் பெற்றது. அந்தத் தகவலின் பதிப்புத் திறன், நீங்கள் உட்கொள்ளும் உணவிற்கு இருப்பதை விட அதிகமாக இருப்பதால், அது தன்னைப் பதித்து உங்கள் உடலில் வெளிப்படுகிறது என்ற அளவிற்கு தெளிவாக இருக்கிறதா?

ஒரே பெற்றோருக்கு பிறந்திருந்தாலும், பிறந்த அன்றிலிருந்தே குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் வித்தியாசமாகவே நடந்து கொள்கின்றனர்.

இந்த உடல் என்பது நீங்கள் உண்ட உணவின் சேர்க்கை. இந்த உணவு அமெரிக்காவின் டென்னஸி மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டது. அதாவது, ஒரு வகையில் நீங்கள் டென்னஸியின் மண்ணை உட்கொண்டிருக்கிறீர்கள். இப்பகுதியில் தான், முன்பு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக 'செரூக்கி' (Cherokee) பழங்குடியினர் வாழ்ந்தனர். அவர்களின் தோற்றம் ஓர்வகையில் அமைந்தது. ஆப்பிரிக்க மாகாணத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்தவர்கள் வேறு ஒருவகையில் தோற்றம் கொண்டார்கள். இதுபோல், உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்பவர்களின் தோற்றம் ஒருவருக்கொருவர் மிக வித்தியாசமாய் இருக்கும். இது... உலகின் பல்வேறு இடங்களுக்கும் மிக எளிதாக பயணம் மேற்கொண்டு, கலப்புத் திருமணங்கள் நடப்பதற்கு முன்பு இருந்த நிலை. நிலம், நீர், காற்று, அப்பகுதியின் தட்பவெப்பம், வானிலை ஆகியவை மனிதனின் தோற்றத்தை எந்த அளவிற்கு, எப்படி எல்லாம் மாற்றியது, மாற்றவல்லது என்பது மானுடவியலில் தெளிவாய் குறிப்பிடப் பட்டுள்ளது. இப்போது நான் இந்தியாவில் இருந்து டென்னஸிக்குக் குடிபெயர்ந்தாலும், எவ்வளவு தான் இம்மண்ணில் விளைந்த உணவை உண்டாலும், இப்பகுதியின் பழங்குடியினரை என் தோற்றம் பிரதிபலிக்காது. நான் சுமந்து கொண்டிருக்கும் தகவலின் வீரியம், நான் உட்கொள்ளும் உணவின் ஞாபகத்தைவிட வலியது.

இப்படி நாம் உண்ணும் உணவையும் தன் வழியில் மாற்றியமைக்கும் இந்த ஞாபகங்கள் இந்த வாழ்க்கையில் நாம் சேர்த்ததல்ல. நம் பிறப்பிற்கும் முன்பே இவை இருந்தன. இதைத்தான் கர்மா என்றழைக்கிறோம். இது மிகமிக அதிகமான தகவல் கிடங்கு. இப்போது நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் இந்தத் தகவல்கள் உங்கள் உடல் சார்ந்தது மட்டுமல்ல. இதற்கு மற்ற பரிமாணங்களும் உண்டு. உடலைப் பொருத்தவரை, இது மிக வெளிப்படையாகத் தென்படுகிறது. உங்கள் தோல், உங்கள் மூக்கு என இன்னும் பலவற்றில் இது வெளிப்படுகிறது. மற்ற நிலைகளில் இதன் தாக்கம் இவ்வளவு வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், அவற்றிலும் இது செயல்படுகிறது. இப்போது தான் பிறந்த குழந்தையாக இருந்தாலும், ஒரு குழந்தையும் இன்னொரு குழந்தையும் வெவ்வேறு தகவல்களை சுமப்பதால், அவற்றின் குணாதிசயங்களும் வித்தியாசப்படுகின்றன. ஒன்றிற்கு மேல் பெற்ற தாய்மார்களுக்கு இது நிச்சயம் தெரியும். தன் பிள்ளைகள் ஒரே மரபணுக்களை சுமந்தாலும், அவர்கள் முற்றிலும் வித்தியாசமான குணாதிசயங்களைக் கொண்டவர்கள் என்று.

ஒரே பெற்றோருக்கு பிறந்திருந்தாலும், பிறந்த அன்றிலிருந்தே குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் வித்தியாசமாகவே நடந்து கொள்கின்றனர். மரபணு மூலம் நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் தகவல்களைத் தாண்டி, வேறு விதமான தகவல்களையும் அவர்கள் சுமக்கிறார்கள் என்பதற்கு இதுவே சான்று. மரபணுத் தகவல்கள் உடலாக வழங்கப்படுகிறது. ஆனால் அவர்கள் சுமக்கும் மற்றொரு தகவல் கிடங்கு, இதைவிட மிகப் பெரிது. அதை உணர வேண்டுமென்றாலே, கூர்மையான கவனம் வேண்டும். அதற்கும் மேலாக, அது என்ன, அது எப்படி சேகரிக்கப் பட்டுள்ளது, அதை வைத்து என்னென்ன செய்யலாம் என்பதெல்லாம் புரிந்து கொள்ளவேண்டும் என்றாலோ, அது முற்றிலும் வேறு விதமான விஷயம்.

ஆன்மீக செயல்முறைகள் இத்தகவலைப் பற்றி அறிந்திட வழிசெய்கின்றன. இத்தகவற் கிடங்கு இத்தனை வலியது என்றால், அதை கவனிப்பது நல்லதல்லவா! இது எத்தனை வலியது என்றால், நீங்கள் வாழும் சூழ்நிலையை அது ஆள வல்லது. உங்கள் நோக்கம் எதுவாகினும் அதை அமிழ்த்திவிட்டு, தனக்குத் தேவையானதை செய்துகொள்ளக் கூடியது. இப்போது இங்கே உட்கார்ந்து, நீங்கள் தியானம் செய்ய விழைகிறீர்கள். ஆனால் அதுவோ, தனக்குத் தேவையானதை நிகழ்த்திக் கொள்கிறது. உண்மை தானே? இத்தகவல்களின் வீரியத்தைக் குறைக்க நீங்கள் வழி செய்யாவிட்டால், இத்தகவல்களை விலக்கி வைக்க நீங்கள் முயற்சி எடுக்காவிட்டால், உங்களில் மாற்றம் செய்துகொள்வதும், வளர்வதும், மலர்வதும் வெறும் வார்த்தைகள் தான். அது நிகழ்வதற்கு வாய்ப்பே இல்லை, காரணம் அத்தகவல்கள் இந்த எண்ணத்தை அமிழ்த்தி, வீழ்த்திவிடும்.

அத்தகவல்களில் இருந்து உங்களை நீங்கள் விலக்கிக் கொள்ளாவிட்டால், நீங்கள் செய்ததையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்குமாறு, அது உங்களைக் கட்டுப்படுத்தும். இத்தகவற் கிடங்கில் இருந்து உங்களை மெதுமெதுவாக விலக்கிக் கொள்வதற்கு, ஒரு ஏதுவான உடலை, மனதை, உணர்வு மண்டலத்தை நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறை தான் யோக விஞ்ஞானம்!

 
 
 
 
 
 
Login / to join the conversation1
 
 
4 வருடங்கள் 9 மாதங்கள் க்கு முன்னர்

Fantastic. Great explanation.