உண்மையான ஆனந்தம் என்றால் என்ன?
அன்பான சத்குரு! உண்மையான ஆனந்தம் என்றால் என்ன?
 
 

Question:அன்பான சத்குரு! உண்மையான ஆனந்தம் என்றால் என்ன?

சத்குரு:

நான் எவ்வாறு உங்களுக்கு சொல்வது? பலவிதமான தாக்கங்களுக்கு உள்ளானதால் இப்படியொரு கேள்வியைக் கேட்கிறீர்கள். ஏனென்றால் மனநோய்க்கான மருந்துகள் கூட ஆனந்தம் என்ற பெயரில் வெளியிடப்படுகின்றன. நீங்கள் ஆனந்தம் என்று சொல்லும் பொழுது மேற்கத்திய நாடுகளில் ஒரு குறிப்பிட்ட மாத்திரையைப் பற்றி நீங்கள் பேசிக்கொண்டிருப்பதாக அவர்கள் நினைப்பார்கள். எனவேதான் உண்மையான ஆனந்தம் என்றால் என்ன என்ற
கேள்வியைக் கேட்கிறீர்கள்.

இன்பம் என்பது எதையோ அல்லது யாரையோ சார்ந்தே இருப்பது. ஆனந்தம் என்பது எதையும் சாராதிருப்பது.

ஆனந்தத்தில் உண்மையான ஆனந்தம், பொய்யான ஆனந்தம் என்று எதுவுமில்லை. நீங்கள் உண்மையில் நிலைத்திருக்கும்போது நீங்கள் ஆனந்தத்தில் திளைக்கிறீர்கள். நீங்கள் உண்மையோடு தொடர்பு கொள்ளும்பொழுது இயல்பாகவே நீங்கள் ஆனந்தத்தில்தான் இருப்பீர்கள். நீங்கள் உண்மையுடன் இருக்கிறீர்களா அல்லது உண்மையுடன் இல்லையா என்பதைப் பொறுத்தே நீங்கள் ஆனந்தத்தில் இருக்கிறீர்களா அல்லது ஆனந்தத்தில் இல்லையா எனத் தெரிந்துகொள்ள முடியும். இது ஒரு லிட்மஸ் பரிசோதனையைப் போன்றது. இந்தக் கேள்வி ஒரு குறிப்பிட்ட சிந்தனையிலிருந்து வந்திருக்கலாம். உதாரணமாக, நான் சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கும்பொழுது ஆனந்தமடைகிறேன். இது உண்மையான ஆனந்தமா? அல்லது தியானத்தில் இருக்கும் பொழுது நான் ஆனந்தமடைகிறேன். இதுதான் உண்மையான ஆனந்தமா? இப்படி நீங்கள் எப்படி ஆனந்தமடைகிறீர்கள் என்பது முக்கியமல்ல. எப்படியோ இப்பொழுது ஆனந்தத்தில் இருக்கிறீர்கள் அதுதான் முக்கியம்.

எப்படி தக்கவைத்துக் கொள்வது?

அதை எப்படி தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதே இப்போதைய கேள்வி. பெரும்பாலானவர்கள் இன்பத்தை ஆனந்தம் என தவறாக புரிந்துகொள்கிறார்கள். நீங்கள் இன்பத்தை எப்பொழுதும் தக்க வைத்துக் கொள்ள முடியாது. அது பற்றாக்குறையாகவே எப்பொழுதும் இருக்கும். ஆனால் ஆனந்தம் என்பது எதையும் சார்ந்து இருப்பதில்லை. இன்பம் என்பது எதையோ அல்லது யாரையோ சார்ந்தே இருப்பது. ஆனந்தம் என்பது எதையும் சாராதிருப்பது. அது உங்கள் இயல்பான தன்மை. ஆனந்தத்திற்கு உண்மையில் வெளியிலிருந்து எந்தவிதமான தூண்டுதலும் தேவையில்லை. நீங்கள் ஒருமுறை ஆனந்தத்தைத் தொட்டுவிட்டால் உங்களுடைய முந்தைய தேவைகள் அனைத்தும், ஆனந்தம் அடைவதற்கான உங்களுடைய குழந்தைத்தனமான முயற்சிகள் தான் எனத் தெரிந்துகொள்வீர்கள்.

நீங்கள் ஆனந்தத்துடன் இருந்தால், அதுதான் முழுமை. மேலும் ஆனந்தம் என்பது எங்கோ வெளியிலிருந்து சம்பாதிப்பதல்ல. உங்களுக்குள்ளேயே மிக ஆழமாகச் சென்று கண்டுகொள்வது. அது ஒரு கிணறு தோண்டுவது போன்றது. மழை பெய்யும் பொழுது மழைத்துளிக்காக நீங்கள் வாய் திறந்து காத்திருந்தால் சில துளிகள் செல்லக்கூடும். ஆனால் உங்கள் தாகத்தைத் தணிப்பதற்காக மழைநீருக்கு வாய் திறந்திருப்பது ஒரு விரக்தியான மனநிலையை அளிக்கும். மழை எப்போதும் தொடர்ந்து பெய்துகொண்டிருக்கப் போவதுமில்லை. ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ பெய்துவிட்டு நின்றுவிடும். அவ்வளவுதான். அதனால்தான் வருடம் முழுவதும் நீர் கிடைக்கிற மாதிரி உங்களுக்குச் சொந்தமாக ஒரு கிணறு தோண்டிக் கொள்ளுங்கள். நீங்கள் உண்மையான ஆனந்தம் எனக் குறிப்பிடுவதெல்லாம் இதுதான். நீங்களே உங்கள் சொந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து கொள்கிறீர்கள். அது உங்களுக்கு எப்பொழுதும் தண்ணீர் கொடுத்துக் கொண்டே இருக்கும். மழை பெய்யும்பொழுது நீருக்கு வாய் திறந்திருப்பது போல இல்லை இது. எப்போதும் தண்ணீரை உங்களுடன் வைத்திருக்கிறீர்கள். அதுதான் ஆனந்தம்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1